ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
எட்டாம் பத்து
தந்தை கால்
திருக்கண்ணபுரம் -- 5
தலைமகனாகிய சௌரிராஜப் பெருமாளின் திருவருள் கிடைக்கப்பெறாத தலைவி இளைத்து ஏங்கிப் புலம்புதல் போல் இப்பாசுரங்கள் அமைந்துள்ளன. அந்திமாலைப் பொழுதில் தனித்திருக்கும் தலைவி தன் ஏக்கத்தைப் புலப்படுத்தும் அகப்பொருள் துறை இப்பகுதி.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!
1688. தந்தை காலில் விலங்கறவந்து
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவல னமுதுறு
பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
தடவந்து வலிசெய்வ தொழியாதே! 1
இருள் பரவிவிட்டதே! யான் என் செய்வேன்?
1689. மாரி மாக்கடல் வளைவணற்
கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்று உலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே! 2
அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!
1690. ஆயன் மாயமே யன்றிமற்
றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்சுடத்
துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே! 3
தென்றல் நின்றால் என் உயிர் நிற்கும்
1691. கயங்கொள் புண்தலைக் களிறுந்து
வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
ஆவியை எனக்கெனப் பெறலாமே! 4
தோழி!அந்தி வருகின்றதே!என் செய்வேன்?
1692. ஏழு மாமரம் துளைபடச்
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
அருளடும் பசுலெல்லை கழிகின்றதால்,
தோழி!நாமிதற் கென்செய்தும்?
துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே! 5
தூக்கமே வரவில்லை:இரவு நீள்கிறதே!
1693. முரியும் வெண்திரை முதுகயம்
தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊழியில்
பெரியன கழியுமா றறியேனே! 6
இராப்பொழுது துன்புறுத்துகிறதே!
1694. கலங்க மாக்கடல் கடைந்தடைத்
திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம்
துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
மாயினி விளைவதொன் றறியேனே! 7
தலைவன் வரவில்லை:இதனினும் கொடிய வினை இல்லை
1695. முழுதில் வையகம் முறைகெட
மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர்
வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
கடியதோர் கொடுவினை யறியேனே! 8
பிரிவுத்துயர் என்னைக் கொல்கின்றதே!
1696. கனஞ்செய் மாமதிள் கணபுரத்
தவனொடும் மனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக
வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
பாவியே னாவியை யடுகின்றதே! 9
இவற்றைப் படிப்போர் தேவரோடு சேர்வர்
1697. வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே! 10
அடிவரவு:தந்தை மாரி ஆயன் கயம் ஏழு முரி கலங்க முழுது கனஞ்செய் வார்கொள் -- தொண்டீர்.