தீதறு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

தீதறு

திருநந்திபுர விண்ணகரம்

கும்பகோணத்திற்குத் தென்மேற்கே சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ளது இந்தத் திவ்விய தேசம். இதற்கு நாதன் கோயில் என்றும் பெயர். இங்குள்ள பெருமாளுக்கு 'ஜகந்நாதன்' என்பது திருநாமம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தியிருண்டநாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்

1438. தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்கெழுவி
சும்பு மவையாய்,

மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை

யாய பெருமான்,

தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட

மார்வர் தகைசேர்,

நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 1

உலகேழும் உண்டவன் உறையும் ஊர்

1439. உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுல கேழுமொழி

யாமை முனநாள்,

மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்

மேவு நகர்தான்,

மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்

கிண்டி யதன்மேல்,

நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 2

மனமே! நந்திபுர விண்ணகரம் சேர்

1440. உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி

யாமை முனநாள்,

தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்த தட

மார்வர் தகைசேர்,

வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி

கங்குல் வயல்சூழ்,

நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 3

அசுரர்களை அழித்தவன் அமரும் இடம் இது

1441. பிறையினொளி எயிறிலக முறுகியெதிர் பொருதுமென

வந்த அசுரர்,

இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல

நின்ற பெருமான்,

சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல

அடிகொள் நெடுமா,

நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 4

பஞ்சாயுதன் உறையும் இடம் இது

1442. மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென

வந்த அசுரர்,

தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி

யாம ளவெய்தான்,

வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை

யங்கை யுடையான்,

நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்

நண்ய மனமே! 5

இராமன் இருக்கும் இடம் இது

1443. தம்பியடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை

யாக முனநாள்,

வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது

மேவு நகர்தான்,

கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலுமெழி

லார்பு றவுசேர்,

நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 6

நந்திவர்மன் பணி செய்த இடம் இது

1444. தந்தைமன முந்துதுயர் நந்தஇருள் வந்தவிறல்

நந்தன் மதலை,

எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ

நின்ற நகர்தான்,

மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்

ஆடு பொழில்சூழ்,

நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 7

மனமே! நந்திபுர விண்ணகரே அடைவாய்

1445. எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி

யாளர் திருவார்,

பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு

கூட எழிலார்,

மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்

தாம லர்கள்தூய்.

நண்ணியுறை கின்றநகர் நிந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 8

நந்திபுர விண்ணகரத்தானே நங்கள் பெருமான்

1446. வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக

மிக்க பெருநீர்,

அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி

யார றிதியேல்,

பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி

யெங்கு முளதால்,

நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்

நண்ணு மனமே! 9

இவற்றைப் பாடினால் வினைகள் அகலும்

1447. நறைசெய்பொழில் மழைதவழும் நிந்திபுர விண்ணகரம்

நண்ணி யுறையும்,

உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை

யானை, ஒளிசேர்

கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை

யைந்து மைந்தும்,

முறையிலிவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்

முழுத கலுமே. 10

அடிவரவு: தீதறு உய்யும் உம்பர் பிறை மூள தம்பி தந்தை எண்ணில் வங்கம் நறைசெய் -- வண்டு.




 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கையிலங்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வண்டுணும்
Next