உந்திமேல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

உந்திமேல்

திருவரங்கம் -- 1

திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று கூறுவது வழக்கம். பூலோக வைகுண்டம் என்று இதைக் கூறுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில் என்றே இதனைச் சிறப்பித்துச் சொல்வார்கள். காவிரி நதிக்கு இடையில் இத்தலம் இருக்கிறது. பெருமாள் ஸ்ரீரங்கநாதர், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பெருமாள் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்குப் பதின்மர்பாடும் பெருமாள் என்றும் ஒரு பெருமை உண்டு.

கலிநிலைத்துறை

பிரமனைப் படைத்தவனது இடம் திருவரங்கம்

1378. உந்தி மேல்நான் முகனைப்

படைத்தானுல குண்டவன்

எந்தை பெம்மான், இமையோர்கள்

தாதைக்கிட மென்பரால்,

சந்தி னோடு மணியும்

கொழிக்கும்புனற் காவிரி,

அந்தி போலும் நிறத்தார்

வயல்சூழ்தென் னரங்கமே. 1

ஆவிலையில் பள்ளிகொண்ட மாயனது இடம்

1379. வையமுன் டாலிலை மேவு

மாயன்மணி நீண்முடிப்,

பைகொள் நாகத் தணையான்

பயிலுமிட மென்பரால்,

தையல் நல்லார் குழல்மா

லையும்மற்றவர் தடமுலை,

செய்ய சாந்தும் கலந்திழி

புனல்சூழ்தென் னரங்கமே. 2

உலகளந்தவன் உறையும் இடம்

1380. பண்டிவ் வைய மளப்பான்

சென்றுமாவலி கையில்நீர்

கொண்ட ஆழித் தடக்கைக்

குறளனிட மென்பரால்,

வண்டு பாடும் மதுவார்

புனல்வந்திழி காவிரி

அண்ட நாறும் பொழில்சூழ்ந்

தழகார்தென் னரங்கமே. 3

வில்லால் இலங்கையழித்த பிரானின் இடம்

1381. விளைத்த வெம்போர் விறல்வா

ளரக்கன்நகர் பாழ்பட,

வளைத்த வல்வில் தடக்கை

யவனுக்கிட மென்பரால்,

துளைக்கை யானை மருப்பு

மகிலும்கொணர்ந் துந்தி,முன்

திளைக்கும் செல்வப் புனல்கா

விரிசூழ்தென் னரங்கமே. 4

இராமபிரான் இருக்கும் இடம்

1382. வம்புலாம் கூந்தல் மண்டோதரி

காதலன் வான்புக,

அம்பு தன்னால் முனிந்த

அழகனிட மென்பரால்,

உம்பர் கோனு முலகேழும்

வந்தீண்டி வணங்கும்,நல்

செம்பொ னாரும் மதிள்சூழ்ந்

தழகார்தென் னரங்கமே. 5

பேய்ச்சி பாலுண்டபிரான் தங்கும் இடம்

1383. கலையு டுத்த அகலல்குல்

வன்பேய்மகள் தாயென,

முலைகொ டுத்தா ளுயிருண்

டவன்வாழுமிட மென்பரால்,

குலையெ டுத்த கதலிப்

பொழிலூடும் வந்துந்தி,முன்

அலையெ டுக்கும் புனற்கா

விரிசூழ்தென் னரங்கமே. 6

கஞ்சனையும் மல்லரையும் அழித்தவன் அமருமிடம்

1384. கஞ்சன் நெஞ்சும் கடுமல்

லரும்சகடமும் காலினால்,

துஞ்ச வென்ற சுடராழி

யான்வாழுமிட மென்பரால்,

மஞ்சு சேர்மா ளிகைநீ

டகில்புகையும், மறையோர்

செஞ்சொல் வேள்விப் புகையும்

கமழும்தென் னரங்கமே. 7

தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்

1385. ஏன மீனா மையோ

டரியும்சிறு குறளுமாய்,

தானு மாய தரணித்

தலைவனிட மென்பரால்,

வானும் மண்ணும் நிறையப்

புகுந்தீண்டி வணங்கும்,நல்

தேனும் பாலும் கலந்தன்

னவர்சேர்தென் னரங்கமே. 8

யாராலும் அறியமுடியாதவன் அமருமிடம்

1386. சேய னென்றும் மிகப்பெரியன்

நுண்ணேர்மையி னாய,இம்

மாயையை ஆரு மறியா

வகையானிட மென்பரால்,

வேயின் முத்தும் மணியும்

கொணர்ந்தார்புனற் காவிரி,

ஆய பொன்மா மதிள்சூழ்ந்

தழகார்தென் னரங்கமே. 9

மண்ணும் விண்ணும் ஆள்வர்

1387. அல்லி மாத ரமரும்

திருமார்வ னரங்கத்தை,

கல்லின் மன்னு மதிள்மங்

கையர்கோன்கலி கன்றிசொல்,

நல்லிசை மாலைகள் நாலி

ரண்டுமிரண் டுமுடன்,

வல்லவர் தாமுல காண்டு

பின்வானுல தாமுல காள்வரே. 10

அடிவரவு: உந்திமேல் வையம் பண்டு விளைத்த வம்பு கலை கஞ்சன் ஏனம் சேயன் அல்லி -- வெருவாதாள்.








 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வென்றி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வெருவாதாள்
Next