அங்கண் ஞாலம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

அங்கண் ஞாலம்

சிங்கவேள் குன்றம்

சிங்கம்-வேள்-குன்றம். நரசிம்மப் பெருமான் எழுந்தருளியுள்ள மலை. அனைவரும் இந்த இடத்தை 'அகோபிலம்' என்றே கூறுகின்றனர். எவரும் இம்மலைமீது எளிதில் ஏறி நரசிம்மனை ஸேவிக்கமுடியாது. இந்த எம்பெருமானை ஸேவிப்பவர் தீமை இன்றி வாழ்வர்.

கலி நிலைத்துறை

புனிதன் வாழுமிடம் சிங்கவேள் குன்றம்

1008. அங்கன் ஞால மஞ்சஅங்கோ

ராளரி யாய் அவுணன்

பொங்க ஆகம் வள்ளுகிரால்

போழ்ந்த புனிதனிடம்,

பைங்க ணானைக் கொம்புகொண்டு

பத்திமை யால், அடிக்கீழ்ச்

செங்க ணாளி யிட்டிறைஞ்சும்

சிங்கவேள் குன்றமே.

இரணியனைக் கொன்றவன் வாழுமிடம்

1009. அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்

கோளரி யாய், அவுணன்

கொலைக்கை யாளன் நெஞ்சிடந்த

கூருகி ராளனிடம்,

மலைத்த செல்சாத் தெறிந்தபூசல்

வன் துடி வாய்கடுப்ப,

சிலைக்கை வேடர் தெழிப்பறாத

சிங்கவேள் குன்றமே.

நகங்களால் இரணியனைப் பிளந்தவன் இடம்

1010. ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர்

கோளரி யாய், அவுணன்

வாய்ந்த ஆகம் வள்ளுகிரால்

வகிர்ந்தவம் மானதிடம்,

ஓய்ந்த மாவு முடைந்தகுன்று

மன்றியும் நின்றழலால்,

தேய்ந்த வேயு மல்லதில்லாச்

சிங்கவேள் குன்றமே.

தேவதைகள் செல்லத்தக்க இடம்

1011. எவ்வும் வெவ்வேல் பொன்பெயரோ

னேதல னின்னுயிரை

வவ்வி, ஆகம் வள்ளுகிரால்

வகிர்ந்தவம் மானதிடம்,

கவ்வு நாயும் கழுகுமுச்சிப்

போதொடு கால்சுழன்று,

தெய்வ மல்லால் செல்லவொண்ணாச்

சிங்கவேள் குன்றமே.

எளிதில் சென்று ஸேவிக்கமுடியாத இடம்

1012. மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்

கோளரி யாய், அவுணன்

பொன்ற ஆகம் வள்ளுகிரால்

போழ்ந்த புனிதனிடம்,

நின்ற செந்தீ மொண்டுசூறை

நீள்விசும் பூடிரிய

சென்று காண்டற் கரியகோயில்

சிங்கவேள் குன்றமே.

தேவர்கள்கூட அஞ்சும் இடம்

1013. எரிந்த பைங்க ணிலங்குபேழ்வா

யெயிற்றொடி தெவ்வுருவென்று,

இரிந்து வானோர் கலங்கியோட

இருந்தவம் மானதிடம்,

நெரிந்த வேயின் முழையுள்நின்று

நீணெறி வாயுழுவை,

திரிந்த வானைச் சுவடுபார்க்கும்

சிங்கவேள் குன்றமே.

மூவுலகும் அஞ்ச நரசிம்மாவதாரம் எடுத்தவன்

1014. முனைத்த சீற்றம் விண்சுடப்போய்

மூவுல கும்பிறவும்,

அனைத்து மஞ்ச வாளரியா

யிருந்தவம் மானதிடம்,

கனைத்த தீயும் கல்லுமல்லா

வில்லுடை வேடருமாய்

திளைத்த னையுஞ் செல்லவொண்ணாச்

சிங்கவேள் குன்றமே.

பிரமன் முதலிய தேவர்கள் வணங்குமிடம்

1015. நாத்த ழும்ப நான்முகனு

மீசனு மாய்முறையால்

ஏத்த, அங்கோ ராளரியா

யிருந்தவம் மானதிடம்,

காய்த்த வாகை நெற்றொலிப்பக்

கல்லதர் வேய்ங்கழைபோய்,

தேய்த்த தீயால் விண்சிவக்கும்

சிங்கவேள் குன்றமே.

மனமே சிங்கவேளைத் தொழு

1016. நல்லை நெஞ்சே நாம்தொழுதும்

நம்முடை நம்பெருமான்,

அல்லி மாதர் புல்கநின்ற

ஆயிரந் தோளனிடம்,

நெல்லி மல்கிக் கல்லுடைப்பப்

புல்லிலை யார்த்து, அதர்வாய்

சில்லு சில்லென் றொல்லறாத

சிங்கவேள் குன்றமே.

இவற்றைப் படிப்போர்க்கு தீங்கு வராது

1017. செங்க ணாளி யிட்டிறைஞ்சும்

சிங்கவேள் குன்றுடைய,

எங்க ளீச னெம்பிரானை

இருந்தமிழ் நூற்புலவன்,

மங்கை யாளன் மன்னுதொல்சீர்

வண்டறை தார்க்கலியன்,

செங்கை யாளன் செஞ்சொல்மாலை

வல்லவர் தீதிலரே.

அடிவரவு - அங்கண் அலைத்த ஏய்ந்த எவ்வும் மென்ற எரிந்த முனைத்த நா நல்லை செங்கண் - கொங்கு.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வாணிலா முறுவல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கொங்கலர்ந்த
Next