கொலையாளிக்கும் கருணை! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ரொம்பவும் முக்யமான ஒரு ஸமயத்தில் பத்மபாதருக்கு நரஸிம்ஹ மூர்த்தியின் ஆவிர்பாவம் ஏற்பட்ட கதையையும் கையோடு சொல்லி விடுகிறேன்: அவர் ஆசார்யாளின் சிஷ்யராகி ரொம்ப நாளானவிட்டு நடந்த ஸம்பவம்!

காபாலிகர்களின் தலைவன் ஒருவன் இருந்தான். சுடுகாட்டில் வாஸம் பண்ணுவது, நரபலி கொடுத்து மாம்ஸத்தையும் மஜ்ஜையையும் பச்சையாகத் தின்னுவது என்றிப்படி க்ரூரமாக ‘வாமாசார’ங்களை பின்பற்றி வந்த காபாலிகர்களின் தப்பையெல்லாம் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி ஸாத்விக வழிக்கு வரும்படி உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார். அநேகம் காபாலிகர்கள் மனஸ் மாறினார்கள். சில பேர் மாறாமல் ஆசார்யாளிடம் ஒரேயடியாக த்வேஷம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் அப்படி ஒருவன். இவனால் அவருக்கு எதிர்வாதம் எதுவும் பண்ணமுடியவில்லை. அவரை எப்படித் தொலைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஒன்று பண்ணலாம். இவரோ மஹா கருணையுள்ளவர். அதனால் அவரிடமே போய் நம் இஷ்டத்தைச் சொல்லுவோம்’ என்று நினைத்து, அவர் தனியாய் இருந்த ஸமயத்தில் அவரிடம் போய் நமஸ்காரம் பண்ணினான்.

“இதுவரை நான் விதவிதமாக பலி கொடுத்தும் கபாலி ப்ரத்யக்ஷமாகவில்லை. ஸாம்ராஜ்ய பட்டாபிக்ஷேகமான ஒரு ராஜாவின் தலையையோ, அல்லது அஷ்ட மஹாஸித்தி பெற்ற ஒரு ஆத்மஞானியின் தலையையோ பலி கொடுத்தால் நிச்சயம் ப்ரத்யக்ஷமாவார். ராஜாவின் தலைக்கு நான் முயற்சி பண்ணினால் அவன் என் தலையை வாங்கிவிடுவான்! தாங்கள் மஹாஞானி, மஹா யோகஸித்தர். அதனால் என் மனோரதப் பூர்த்திக்காகக் கருணாமூர்த்தியான தங்களிடம் வந்தேன்” என்றான்.

இப்படிக்கூட ஒருத்தரிடம் தலையைக் கேட்பதுண்டா என்றால், ஆசார்யாள் அப்படிப்பட்டவராக இருந்திருக்கிறார்!

காபாலிகன் கேட்டதில் அவருக்கு ரொம்பவும் ஸந்தோஷம் உண்டாயிற்று: ‘அட, ஒன்றுக்கும் உதவாதது என்று நினைக்கிற இந்த மநுஷ சரீரங்கூடவா ஒருத்தனுக்கு ஈச்வர தர்சனமே கிடைப்பதற்கு உதவுகிறதாம்! மரம் பட்டுப்போனாலும் விறகாக உபயோகப்படுகிறது. மாட்டுக் கொம்பு ஈச்வர அபிஷேகத்துக்கே உபயோகமாகிறது. யானை தந்தமும் எத்தனையோ ப்ரயோஜனங்களைக் கொடுக்கிறது. மான் தோல், க்ரூரமான புலித் தோல்கூட, த்யானத்துக்கு ஆஸனமாகிறது. மநுஷ்ய சரீரம்தான் எதற்கும் ப்ரயோஜனப்படாதென்று நினைத்தால், இதை ஒருத்தன் கேட்டுப் பெற வருகிறானே!’ என்று ஸந்தோஷித்தார்.

“உன் ஆசைப்படியே ஆகமட்டுமப்பா! ஆனால் என் சிஷ்யர்களுக்கு விஷயம் தெரியப்படாது. அவர்கள் பொல்லாதவர்கள்! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டாக்குவார்கள். ஆகையால் நான் தனியாக த்யானத்தில் இருக்கும் ஸமயத்தில் வந்து சிரஸை எடுத்துக்கொண்டு போ”என்றார்.

அப்படியே அப்புறம் அவன் அவர் தனியாய் த்யானத்திலிருந்தபோது வந்தான். கத்தியை உருவினான்.

எங்கேயிருந்தோ பத்மபாதர் அங்கே வந்து குதித்தார்!

“ஹா ஹா!” என்று பெரிதாகச் சத்தம் கேட்டது.

ஆசார்யாள் கண்ணைத் திறந்து பார்த்தார்.

காபாலிகன் உடம்பு கிழிபட்டு எதிரே ம்ருத சரீரமாக (உயிர் நீங்கிய உடலாக)க் கிடந்ததைப் பார்த்தார்!

பக்கத்திலிருந்த பத்மபாதரிடம், “என்ன ஆச்சு? இது யார் பண்ணிய கார்யம்?” என்று கேட்டார்.

அவர், “எனக்கு ஒண்ணும் தெரியலை. கங்கையில் இருந்தேன். அப்புறம் எனக்கு என்னவோ மாதிரி ஆச்சு. இப்பத்தான ஸ்வய ப்ரக்ஞை வந்திருக்கு” என்றார்.

ஆசார்யாள், “ஓஹோ, உனக்கு நரஸிம்ஹ மந்த்ரம் உபதேசமாயிருந்ததா?” என்று கேட்டார்.

“இருந்தது. ஆனால் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை. ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டு ஒரு வேடனுக்கு தர்சனம் தந்தார். என்னவோ சொன்னார், ‘அவச்யத்திலே வருவேன்’ என்று” – என்று சொல்லும்போதே பத்மபாதருக்குச் சட்டென்று தெளிவாயிற்று. “ஓ, சொன்னபடிதான் இப்போது பண்ணியிருக்கிறார்! அவர் ஆவேசித்துத்தான் இந்தக் கார்யம் நடந்திருக்கிறது. இதைவிட ஆபத்தில் ரக்ஷணம் காட்ட ஸமயமுண்டா?” என்று ஸந்தோஷித்து நரஸிம்ஹர், ஆசார்யாள் இரண்டு பேரையும் நமஸ்காரம் பண்ணினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பத்மபாதரின் கதை;வேடனின் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தாமரை தாங்கிய தாளர்
Next