ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – காளிதாஸன் விஷய ம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவர்கள் சொல்கிற ஒரு பாயின்ட் காளிதாஸனை ஆசார்யாளின் கால மூத்தவரான குமாரிலபட்டர் மேற்கொள் காட்டியிருக்கிறாரென்பது. காளிதாஸன் கி.மு. ஆறாம் நூற்றண்டு இல்லை என்கிறார்கள். ரொம்ப முந்தி அவருடைய காலத்தைக்கொண்டு போனால் கூட புஷ்யமித்ர சுங்கனின் பிள்ளையான அக்னிமித்ரனின் ஸமகாலத்தவராகத்தான் அவர் இருந்திருக்க முடியும்; ஏனென்றால் அவருடைய “மாளவிகாக்னிமித்ர”த்தில் கதாநாயகனே இந்த அக்னிமித்ரன்தான் என்கிறார்கள். ‘புஷ்யமித்ரன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுதான். அதனால் காளிதாஸனை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குக் கொண்டுபோக இடமில்லை’ என்கிறார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லும் இந்த கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் கணக்கும் மெகஸ்தனிஸை மையமாக வைத்து மௌர்ய காலத்தை நிர்ணயம் பண்ணி, மௌயர்களில் கடைசியாயிருந்த ராஜாவின் ஸேநாதிபதியாயிருந்த புஷ்யமித்ரனே அப்புறம் அதிகாரத்தைக் கைப்பற்றினான் என்பதில்தான் அநுமானிக்கப்பட்டிருக்கிறது. மௌர்யகால ‘பேஸி’ஸே (அடிப்படையே) தப்பாயிருக்கக்கூடும் என்றுதான் பார்த்தோமே! அதையொட்டி அவர்கள் தங்களுடைய கி.பி. நாலாம் நூற்றாண்டு நிர்ணயம் வரையில் நமக்கு விட்டுக்கொடுக்க ந்யாயமிருக்கிறது என்றும் பார்த்தோமே! இதுவும் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) அந்த காலகட்டத்துக்குள்ளேயே வந்துவிடுவதால், “இப்படித்தான்” என்று அவர்கள் அடித்துச் சொல்வதற்கில்லை.

நம் புராணாதிகளின் கணக்குப்படி கி.மு. 1500-ல் ஆரம்பித்த மௌர்ய வம்சம் அப்புறம் முன்னூறு வருஷத்துக்கு மேல அரசாண்ட பிறகு சுங்க வம்ச ஆட்சியைப் புஷ்யமித்ரன் ஏற்படுத்தியிருக்கிறான். எனவே அது கி.மு. 1200-ஐ ஒட்டியிருக்கும். காளிதாஸன் அவனுடைய ‘காண்டெம்பரரி’ என்றால் அவர் காலமும் அவ்வளவு முற்பட்டுப் போய்விடும். ஆசார்யாள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற நம் நம்பிக்கைப்படியே காளிதாஸன் அதற்கும் ஆறு நூற்றாண்டு முந்தியவர் என்றாகிவிடும்.

ஆனால் சுங்கர்களைப்பற்றி அவர் எழுதியிருப்பதால் அவரே அந்தக் காலத்தவர்தான் என்று சொல்லலாமா? இன்றைக்குங்கூட யாராவது புது ராமாயண காவியம் எழுதலாம். அதனால் இவர் ராமருடைய ஸமகாலத்தவர் என்பதா? சுங்கர் காலமே காளிதாஸன் காலத்துக்கு upper limit என்றுதான் சொல்ல முடியும்; அதற்கு முந்தி அவர் காலம் இருக்கமுடியாது என்றே அர்த்தம். பிந்தி இருக்கலாம். அதைப்பற்றி ஏதாவது தெரிகிறதா?

‘காளிதாஸன் விக்ரமாதித்யனின் காலம், அவர் அவனுடைய ஸபையிலிருந்த நவரத்னங்களில் ஒருத்தர்’ என்று நம் தேசத்திலேயே வெகு காலமாக நம்பிக்கை இருக்கிறது. விக்ரம சகாப்தம் கி.மு. 57-ல் ஆரம்பித்ததாகவே சாஸ்திரஜ்ஞர்களும் சொல்கிறார்கள். இப்படியிருக்க அவரை எப்படி கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குக் கொண்டு போவது?’ என்று கேட்கலாம்.

கி.மு. 57-லிருந்த விக்ரமாதித்யனுக்கு வேறாக இன்னொரு விக்ரமாதித்யன் கலியுகத்தின் 2500-வது வருஷத்தையொட்டி, அதாவது, கி.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தானென்றும், இவனைத்தான் ‘ராஜ தரங்கிணி’யில் சொல்லியிருக்கிறதென்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. காளிதாஸன் அவனுடைய காலத்தவர்தான் என்றும் சொல்கிறார்கள். நம் நம்பிக்கைப்படி ஆசார்யாள் அந்த நூற்றாண்டு முடியும் ஸமயத்தில் (509-ல்) அவதரித்திருக்கிறார். குமாரிலபட்டர் அந்த நூற்றாண்டு மத்தியில் பிறந்திருப்பார்.

நம் தேச நம்பிக்கையே இருந்தாலும் ஸரி, சாஸ்த்ரஜ்ஞர்களின் அபிப்ராயமிருந்தாலும் ஸரி, விக்ரமாதித்தன் என்பவனைப் பற்றி ஒன்றும் நிச்சயப்படுத்திச் சொல்லத் தெரியவில்லை என்றுதான் நடுநிலையிலிருந்து கொண்டு பார்த்தால் ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அவனைப் பற்றி சொல்லும் ‘ப்ருஹத்கதை,’ ‘காதா ஸப்தசதி’ முதலியவை நாவல்கள் மாதிரியான கதைகளாகவே இருப்பவை. புராணங்கள், ராஜதரங்கிணி முதலியவற்றின் ப்ராமாண்யம் (மெய்ம்மை யுறுதி) இவற்றுக்கில்லை. வீர ஸாஹஸங்கள் செய்த ஒருவனுடைய ஆச்சர்யங்கள் நிறைந்த கதைகள் எந்த தேசத்து ஜனங்களுக்கும் வேண்டியிருக்கிற ஒன்று. அப்படி விக்ரமாதித்யன், மதனகாமராஜன் போன்றவர்களுடைய கதைகள் மிகுந்த ப்ரஸித்தி பெற்றுவிட்டன. இவர்களை சரித்ர புருஷர்களாக வைத்துக் கால நிர்ணயம் செய்யப் புறப்பட்டால் குழப்பமாகத்தானிருக்கிறது. ஒரு ஸமயத்தில் ஜனங்களை ரொம்பவும் வசீகரம் செய்யும் ஒருவன் தோன்றினால் அவன்மீது நிறையக் கதைகளை ஏற்றிவிடுவது வழக்கம். அப்படித்தான் உஜ்ஜயினியிலிருந்து ஆட்சி செய்த ஒரு விக்ரமாதித்யன், தாரா நகரத்திலிருந்து ஆட்சி செய்த போஜன் முதலியவர்களைப் பற்றி நடந்திருக்கிறது. போஜனின் காலத்தவனே காளிதாஸன் என்றும் நம் தேச நம்பிக்கையே இருக்கிறது. இப்படி நம் ஊரிலேயே இரண்டு வித நம்பிக்கை இருக்கும்போது ஒன்று தப்பாகத்தானே இருக்கவேண்டும்? நம் ஊர் நம்பிக்கை என்பதாலேயே நிஜம்தான் என்று சாதிக்கமுடியாதல்லவா? இதையெல்லாம் பார்த்துத்தான் சிலர் இரண்டு காளிதாஸர்கள் இருந்ததாக அபிப்ராயம் சொல்கிறார்கள். விக்ரமாதித்ய ஸபையிலிருந்த நவரத்னங்கள் தன்வந்திரி, க்ஷபணகர், அமரஸிம்ஹன், சங்கு, வேதாளபட்டர், கடகர்ப்பரர், காளிதாஸர், வராஹமிஹிரர், வரருசி ஆகிய ஒன்பது பேர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லாரும் ஸம காலத்தவர்கள் இல்லை என்று வேறு source-களிலிருந்து தெரிகிறது. இப்படியிருக்கும்போது எந்த விக்ரமாதித்யனை வைத்து எந்தக் காளிதாஸருக்கு எப்படிக் காலம் கணிப்பது? வல்லாளர் என்பவரின் “போஜ ப்ரபந்த”த்திலோ காளிதாஸரை போஜ ஸபையின் நவரத்னங்களில் ஒருவராகச் சொல்லியிருப்பதோடு, அவர்கூட இருந்த மற்ற ரத்னங்களில் பவபூதி, பாணர், தண்டி, ஸ்ரீஹர்ஷர் முதலிய எல்லாப் பெரிய கவிகளையும் சேர்த்திருக்கிறது! வேறு ஆதாரங்களிலிருந்து இவர்கள் நிச்சயமாக ஸமகாலத்தவரல்ல என்று தெரிகிறது!

சரித்ர புருஷனான சந்த்ரகுப்த விக்ரமாதித்யன் காலத்தில் காளிதாஸன் இருந்திருக்கலாம் என்பதுபோலச் சொல்லும் பல அபிப்ராயங்களும் ‘அநுமானம்’ என்று சொல்லக்கூடியவையாகத்தான் இருக்கின்றன; ‘ப்ரமாணம்’ என்றல்ல.

புஷ்யமித்ர சுங்கனுக்கு முன்காலத்தில் காளிதாஸன் இருந்திருக்க முடியாது என்று upper limit சொன்னாற்போல கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அவர் காலம் இருக்க முடியாது என்று lower limit கட்டுவதற்கதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முன்பாதியில் ஹர்ஷரின் ஆஸ்தான கவியாயிருந்த பாணர் “ஹர்ஷ சரித்ர” ஆரம்பத்தில் காளிதாஸனைப் பேர் சொல்லிப் புகழ்ந்திருக்கிறார். அதே காலத்தியதாக உள்ள ஒரு ராஜசாஸனத்திலேயே காளிதாஸனின் பெயர் ஒரு ச்லோகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் புலகேசியின் சாஸனம். ஐஹோளெ என்ற சில்ப முக்யக்வம் வாய்ந்த ஊரைச் சேர்ந்த சாஸனம். சக வருஷம் 556, அதாவது கி.பி. 634 என்று திருத்தமாகத் தேதி குறிப்பிட்டுள்ள சாஸனம். இதில் “ரவி-கீர்த்தி….பாரவி கீர்த்தி” என்று வார்த்தை விளையாட்டுச் செய்திருக்கிறது. கவிதையால் ஆச்ரயிக்கப்பட்ட காளிதாஸர் போலவும் பாரவி போலவும் கீர்த்தியுடன் ரவி கீர்த்தி என்பவர் விளங்குவதாக அந்த சாஸன ச்லோகம் தெரிவிக்கிறது:

ஸ விஜயதாம் ரவிகீர்த்தி:
கவிதாச்ரித காளிதாஸ பாரவி கீர்த்தி:

ஆகையால் காளிதாஸன் கி.பி. 634க்கு முன்னாடி என்று மட்டுமே தெரிகிறது. எவ்வளவு முன்னாடி? தெரியவில்லை!

நிச்சயமாகத் தெரியாத ஒன்றை வைத்து இன்னொன்றை எப்படி நிச்சயப்படுத்துவது? காளிதாஸர் காலத்தைக் கொண்டு குமாரிலபட்டர், ஆசார்யாள் ஆகியோருடைய காலத்தை கணிக்கப் பார்ப்பது இப்படித்தான்!

கோலாப்பூரில் அப்பா சாஸ்த்ரி என்று வித்யா வாசஸ்பதி பட்டம் வாங்கிய ஒருவர் இருந்தார். அவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே ஆரம்பத்தில் காளிதாஸர், மத்தியில் குமாரிலபட்டர், முடிகிற ஸமயத்தில் சங்கரர் என்று மூன்று பேரும் இருந்தார்கள் என்று அநேகப் புஸ்தகங்களைப் பார்த்து முடிவு பண்ணியிருக்கிறார். நம்முடைய புராணம், சமய இலக்கியம் ஆகியவற்றை மட்டுமின்றி ஜைனப் புஸ்தகங்களையும் பார்த்திருக்கிறார். மதம் என்று வரும்போது இரண்டுக்கும் ஒரே சண்டையாயிருந்துகூட, கால நிர்ணயங்களில் அவை எப்படி வித்யாஸமேயில்லாமல் ஒத்துப்போகின்றன என்பதை நாம் கவனிக்கும்போது, இப்படி opposite source-களிலிருந்து கிடைக்கிற ஒன்றேயான அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 9. மையக் கேள்வி:மெகஸ்தனிஸ் சொல்லும் ஸன்ட்ரகோட்டஸ் யார்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  11. கிறிஸ்து சகாப்த பௌத்த நூலாசிரியர்கள் விஷயம்
Next