கடவுட் கொள்கையை நிலைநாட்டியது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இவற்றில் பக்தி என்பது முன்னேயே சொன்னாற்போல் இயல்பாக ஸர்வ ஜனங்களுக்கும் இருப்பது. உலகம் என்று இப்படியொன்று இருந்து இவ்வளவு காரண – கார்ய விதிகளோடு எல்லாம் நடக்கிறதென்றால் இதை ஸ்ருஷ்டித்து நடத்தும் மஹாசக்தனாக ஒரு ஸ்வாமி இருக்கத்தான் வேண்டுமென்று எவருக்குமே தோன்றுவதுதான் இயற்கை. தோன்றாமலிருப்பதுதான் ஆச்சர்யம்! ஸ்வாமி இல்லை என்று சொல்லத்தான் சிக்கலான புத்தி வாதம் செய்யத் தெரிந்திருக்கவேண்டும்! அப்படி பௌத்தர்கள் செய்தார்கள். இந்த வாதத்துக்காக இல்லாமல் வேறு ஸமாசாரங்களுக்காகத்தான் அவர்களை ஜனங்கள் பின்பற்றினார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும்போதும் ஜனங்களுடைய மனஸை விட்டு பக்தியும் ஈச்வர நம்பிக்கையும் போகவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் அப்புறம் பௌத்தர்களும் பக்தி வழிபாட்டுக்கு ஒரு தினுஸில் இடம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இந்த விஷயங்களை முன்னாலேயே சொன்னேன்.

இப்படியிருந்த நிலையில் ஸரியான, வேத வழிப்படியான பக்தியை நிலைநாட்டுவதற்கு ஆசார்யாள் வாதம் எதுவும் அதிகம் பண்ணவேண்டியிருக்கலில்லை. ‘புத்தி ஸமாசாரம் நிறையக் கலக்கும் ஞான விஷயமாக வாதம் நிறையப் பண்ணி எதிர்க்கட்சியை நிராகரணம் பண்ணுவதுபோல், இயற்கையாக ஹ்ருதயத்தில் ஊறுகிற பக்தி விஷயமாக வாதம் ஒன்றும் பண்ணவேண்டாம். ஜனங்கள் பக்தியை நன்றாக திறந்துவிட்டு ஈச்வரனிடத்தில் செலுத்துவதற்கு வழியாக நிறைய ஸ்தோத்ரங்களைப் பண்ணிக்கொடுத்தும், ஆலயங்களை மந்த்ர சக்தியினால் ஸாந்நித்யமுள்ளவையாக்கியும், வழிபாட்டு முறைகளை சுத்தப்படுத்தித் தந்தும் விட்டாலே போதும். ஜனங்கள் இப்போது பௌத்தப்படி பண்ணிக்கொண்டிருக்கும் இரண்டாங்கெட்டான் உபாஸனையை (காபாலிகம், வாமாசாரம் என்றெல்லாம் பண்ணும் க்ரூரமான, ஆபாஸமான உபாஸனைகளையும் தான்) விட்டு விட்டு வைதிக உபாஸனைக்கு வந்துவிடுவார்கள். அறிவாளிகளாக வாதம் செய்கிற பௌத்தர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பதில் வாதம் பண்ணுவதால் ஹ்ருதயத்திலிருந்து ஊற வேண்டிய பக்தியை ஊறப் பண்ண முடியுமா என்ன?’ என்கிற ரீதியில் ஆசார்யாள் செய்துவிட்டுப் போய்விட்டார்.

அதனால் லோகத்திற்கு உபாதான காராணமாகவும் நிமித்த காரணமாகவும் ஒரு ஈச்வரன் உண்டு என்பதைக் காரணங்கள் காட்டி அழுத்தமாகச் சொன்னதற்கதிகமாக இவ் விஷயத்தில் வாதம் என்று அதிகம் செய்யவில்லை.

இப்போது இரண்டு வார்ததை சொன்னேனே, உபாதான காரணம் — நிமித்த காரணம் என்று, இந்த இரண்டையும் கொஞ்சம் ‘எக்ஸ்ப்ளெய்ன்’ பண்ணாமல் மேலே போவதற்கில்லை. அத்வைதத்துக்கும் மற்ற வைதிக அவைதிக ஸித்தாந்தங்களுக்கும் உள்ள சில வித்யாஸங்களை முன்னே சொன்னபோதே இதையும் சொல்லியிருக்க வேண்டும்…

ஒரு வஸ்து உண்டாக்கப்பட்டிருக்கிறதென்றால் அது ஏதோ ஒரு மூலப் பொருளைக்கொண்டுதான் உண்டாக்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு நகை இருக்கிறதென்றால் தங்கம், வெள்ளி மாதிரி ஒரு லோஹத்தைக் கொண்டுதான் அதைப் பண்ணியிருக்கணும். வீடு இருக்கிறதென்றால் அதற்குச் செங்கல் வேண்டும். நகைக்குத் தங்கம் உபாதான காரணம். வீட்டுக்குச் செங்கல் உபாதான காரணம்.

தங்கம் எப்படி நகையாச்சு? செங்கல் எப்படி வீடாச்சு? தட்டானால் தங்கம் நகையாயிற்று. கொத்தனால் செங்கல் வீடாயிற்று. தட்டானும் கொத்தனும் நிமித்த காரணம்.

பானை உதாரணத்தைத்தான் பழைய புஸ்தகங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கும். பானைக்கு உபாதான காரணம் களிமண்; நிமித்த காரணம் குயவன்.

ஆதாரமான பொருளாகிய உபாதான காரணத்தைக் கொண்டு யார் அல்லது எது ஒரு வஸ்துவை உண்டாக்குகிறதோ அது நிமித்த காரணம்.

ஜகத் என்று ஒன்று இருப்பதற்கு ஈச்வரனே உபாதானம், நிமித்தம் என்ற இரண்டு காரணங்களும் என்பது அத்வைதத்தின் கொள்கை. ஜகத்தை மித்யை என்று அது சொல்லும். அதாவது நிரந்தர ஸத்யமாயில்லாமல் ஸத்யம் மாதிரித் தோற்றம் மட்டும் அளிப்பது; ஞானம் வந்தால் போய் விடுவது என்று சொல்கிறது. ஆனால் நடைமுறையில் இருப்பதுபோல ‘வ்யாவஹாரிக ஸத்ய’மாக ஜகத் இருக்கிற போது அதைப் பண்ண ஒரு ஆதார ‘மெடீரிய’லும், பண்ணுவிக்கிற ஒரு கர்த்தாவும் இருக்கத்தானே வேண்டும்? அந்த இரண்டுமே ஈச்வரன்தான் என்று அத்வைதம் சொல்கிறது. வேறு மெடீரியலைக் கொண்டு அவன் ஜகத்தைப் பண்ணினானென்றால் அந்த மெடீரியல் எங்கேயிருந்து வந்தது, அது எப்படி உண்டாயிற்று என்று கேள்வி வரும். அதனால் உபாதான மெடீரியலும் அவன்தான், அதை ஜகத்தாக நிர்மாணம் பண்ணிய நிமித்த காரணமாகிய கர்த்தாவும் அவன்தான் என்றே இருக்கவேண்டும். தன்னையே, தன்னுடைய மாயா சக்தியாலேயே, அவன் ஜகத் என்பதாகத் தோற்றம் காட்டும்படிப் பண்ணுகிறான் என்றால் உபாதான – நிமித்த காரணங்கள் இரண்டும் அவன்தானே? ஜகத் அவனுடைய மாயக் கனா. நாம் கனாக் காண்கிறோம் அப்போது அந்த ஸ்வப்ன லோகத்திலிருக்கிற அவ்வளவு வஸ்துக்களுக்கும் மெடீரியல் (உபாதானம்) நம்மிடமிருந்தே தோன்றியதுதானே? ஸ்வப்ன லோகத்தை நிர்மாணம் செய்த நிமித்த காரணமும் நாம்தானே?

ஸ்வாமியே இல்லை என்றும் சொல்லும் ஸித்தாந்தங்கள் அணுக்கள் என்ற உபாதான காரணத்தைக் கொண்டு ஜகத்தைச் செய்யும் நிமித்த காரணம் மட்டுமே ஸ்வாமி என்று சொல்லும் ஸித்தாந்தங்கள்- என்றெல்லாம் பல இருந்தபோது இரண்டு காரணமும் அவன்தான் என்று அத்வைதம் சொல்லிற்று.

ஈச்வரன் ஜகத்தின் கர்த்தா இல்லை என்று ஸாங்க்யம் சொல்லும், ஈச்வர தத்வத்தை ஞான ஸ்வரூபமாகத்தானே சொல்லியிருக்கிறது? அப்படிப்பட்ட சைதன்ய மூலத்திலிருந்து ஜடமான லோகம் ஸம்பவிக்க முடியாது என்று ஸாங்கியர்கள் வாதிப்பார்கள். ஆசார்யாள் என்ன சொன்னாரென்றால்: சைதன்ய மூலம் வாஸ்தவமாகவே இப்படி ஜட லோகம் என்று ஒன்றைப் பண்ணவில்லை, அதாவது ஜட ப்ரபஞ்சம் நித்ய ஸத்யமான ஒன்று இல்லை, மாயையினால் ஏற்பட்ட தோற்றம்தான். பௌதிகமாக ஜடம் என்று நினைப்பதும் மாயா கல்பனையான எண்ணம்தான்; அதாவது இப்போது ஸயன்ஸில் சொல்கிறபடி matter-ம் ஒருவித energy தான்; கல்பனா சிந்தனையான ஒரு தோற்றம்தான்; நம்முடைய அறிவில் கல்பனை எழும்புகிறதுபோலவே எல்லா அறிவுக்கும் காரணமான சைதன்ய மூலமான ஈச்வரனிடம் லோக கல்பனை ஏற்பட்டதில் சைதன்யம் – ஜடம் என்று முரணாக எதுவுமில்லை என்று காட்டினார். கல்பனா லோக கர்த்தாவாக ஒரு ஈச்வரன் உண்டு என்றார்.

‘கர்த்தா’ என்பது ப்ரஹ்மஸூத்ர வார்த்தை. அதை எடுத்துக்கொண்டே கிறிஸ்துவர்களும் ‘கர்த்தர்’ என்பது.

மாயம், கல்பனை என்று எதுவானாலும் அப்படி (மாயக் கற்பனை) பண்ண ஒன்று இருக்கத்தானே வேணும்? அப்படிப்பட்ட கர்த்தா ஈச்வரன் என்று ஆசார்யாள் சொல்லி ஸாங்கயர்களைக் கண்டித்தார்.

பல தாதா ஈச்வரனே என்று விளக்கிக்காட்டி மீமாம்ஸர்களைக் கண்டனம் செய்தார். ‘கார்யங்கள்- அதாவது கர்மாநுஷ்டானம் – தானே பலன் கொடுப்பது, பலனைத் தர ஒரு ஈச்வரன் வேண்டியதில்லை’ என்று மீமாம்ஸகர்கள் வாதம் செய்ததை ஆக்ஷேபித்துப் பேரறிவான ஈச்வரன்தான் இன்ன கார்யத்துக்கு இன்ன விளைவு என்று நிர்ணயம் பண்ணி, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதான கோடாநுகோடி கார்யங்களால் இப்படியொரு ப்ரபஞ்ச ஒழுங்கு ஏற்பட்டிருக்கும்படிப் பண்ணுகிறான் என்று ஆசார்யாள் எதிர்வாதம் செய்தார்.

இதற்கு அதிகமாக ஸ்வாமி ஸம்பந்தமாக ஆசார்யாள் வாதத்தில் போகாமல் பக்தி வளர என்னவெல்லாம் பண்ண வேண்டுமோ அதைக் கார்யத்தில் செய்து கொடுத்தே பௌத்த மதத்திற்கு ஜன ஸமூஹத்தில் following இல்லாமல் ஆக்கிவிட்டார். வழிபாட்டு முறைகளை க்ரூரமான அம்சங்களும், அறுவறுப்பான அம்சங்களும் இல்லாமல், ஜனங்களின் மனஸைக் கவரும்படியாக ப்ரேமை நிறைந்ததாகவும், வைதிக மந்திர பூர்வமானதாகவும் ஆக்கிக் கொடுத்தார். ஆலயங்களுக்கெல்லாம் போய் ஸாந்நித்யம் நன்றாக ப்ரகாசிக்கும்படியாகத் தூண்டிக்கொடுத்தார். பல ஆலயங்களில் யந்த்ரங்களை ஸ்தாபித்து நல்ல திவ்ய சக்திகள் பரவும்படிப் பண்ணினார். குழந்தையிலிருந்து ஆரம்பித்து மஹா பண்டிதர்வரை எல்லாரும் மனமுருகி ப்ரார்த்தித்துக் கொள்வதற்கான ஸ்தோத்ரங்களை ஏராளமாகச் செய்துகொடுத்தார்.

“தந்த்ரங்கள்” என்பதாக உருவாகிக் கொண்டுபோன வழிபாட்டு சாஸ்த்ரங்கள் பல இருக்கின்றன. அறுபத்து நாலு தந்த்ரம் என்று ஒரு கணக்கு. ‘ஸெளந்தர்யலஹரி’யில் (இதை) ‘சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை:’ என்று சொல்லியிருக்கிறது*. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தந்த்ரம் உண்டு. ஆகமம் என்றும் சொல்வதுண்டு. இவை வேத அடிப்படைக்கும் கொள்கைகளுக்கும் வித்யாஸமாகப் போய் தாங்களே independent-ஆன ஆதார சாஸ்த்ரங்கள் மாதிரி ஆகுமானால் அப்போது இவற்றை ஏற்றுக்கொள்வதற்கில்லை என்று ஆசார்யாள் நிலைநாட்டினார். வேதத்தை அநுஸரித்துப் போகும் தந்த்ரங்களையே எடுத்துக்கொள்ளலாமென்று சொல்லி, ஜனங்கள் க்ரூரமான, பீபத்ஸமான வழிபாட்டு அம்சங்களை விடும்படிப் பண்ணினார், சமனம் பண்ணினார். தந்த்ரங்களில் கௌல மார்க்கம், மிச்ர மார்க்கம், ஸமய மார்க்கம் என்று உள்ள மூன்றில் கௌலம் (வேதத்தைச் சாராமல்) ‘இன்டிபென்டென்டா’யிருப்பது. மிச்ரம் வேத வழிகளையும் அங்கங்கே கலந்து கொள்ளும். ஸமய மார்க்கம் தான் வேதத்தையே அநுஸரித்தது. ஆசார்யாள் அதைத் தான் ஸ்தாபித்தார். அதனால்தான் மதம் என்பதற்கே ஸமயம் (சமயம்) என்று பேர் சொல்கிறோம்.

அப்புறம், அதாவது ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் வந்த ந்யாய சாஸ்த்ரக்காரரான உதயனாசார்யார் என்பவர் புத்திவாதமாக, அதாவது தர்க்க ரீதியாகவே ஸ்வாமி உண்டு என்பதற்கு எவ்வளவு சொல்லமுடியுமோ அவ்வளவும் சொல்லி பௌத்த மதக் கருத்து இந்த அம்சத்தில் ஸரியேயில்லை என்று நிலைநாட்டினார். “ந்யாய குஸுமாஞ்ஜலி” என்ற அவருடைய புஸ்தகத்தின் மூலம் பௌத்தர்களின் நிரீச்வரவாதத்தை அவர் தர்க்கரீதியில் தகர்த்தார்.

உதயனாசார்யார் ஆசார்யாளின் அவதாரம் முடிந்து கொஞ்ச காலத்துக்குள் வந்து அவர் பாக்கிவைத்து விட்டுப் போயிருந்ததைப் பூர்த்தி பண்ணியவர்.

இது பக்தியுபாஸனையில்.


* 31-வது ச்லோகம்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பௌத்தத்தின் மும்முனை ஆக்ஷேபனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆசார்யாளின் பாகுபாடு
Next