சூன்யமில்லை; ஸச்சிதானந்த பூர்ணமே ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘ஒண்ணுமே இல்லேன்னா சூன்யமா? கடைசியிலே சூன்யமாவாப் போறது?’ என்று யோசிக்காதே. சூன்யமே இல்லை. அப்போதும் ஆத்மாதான் இருக்கிறதே! நீ நிஜமான நீயாக இருக்கிறாயே, இது எப்படி சூன்யமாகும்? மனஸ் போன (அழிந்த) பிறகே அடையக்கூடிய அந்த நிலை எப்படி இருக்குமென்று மனஸுக்குப் புரியவைக்கவே முடியாது. இருந்தாலும் அத்வைதப் புஸ்தகங்கள் கொஞ்சத்தில் கொஞ்சம் புரியவைக்கப் பார்க்கின்றன. என்ன சொல்கின்றனவென்றால்: தூக்கத்திலும் மயக்கத்திலுங்கூட நீ ஆத்மாவாக இருந்துகொண்டிருந்தாலும், உனக்கு ‘ஸத்’ என்ற அந்த இருப்பு நிலை தெரியவில்லை, இல்லையா? ஞான மார்க்கத்தில் ஸாதனை பண்ணி நீ நிஜமான ஆத்மாவாயிருக்கும் ஸமாதியிலோ ஸத்தாக இருப்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொண்டு, அநுபவித்துக்கொண்டு அப்படி இருப்பாய். பாக்கியுள்ள ஸகலமும் இருக்கிறதாகத் தெரிந்தாலும் என்றைக்கோ ஒரு நாள் இல்லாமல் போகப் போகிறவைதான். இந்த ஆத்மா மட்டுமே, தாற்காலிகமான அந்த எல்லா வ்யவஹார ஸத்யங்களுக்குங்கூட ஆதாரமாக, சாச்வதமாக உள்ள ஒரே ஸத். அப்படிப்பட்ட ஸத்யமே நாமென்ற பூர்ண ப்ரஜ்ஞையோடு இருப்பாய். இப்படிச் சொன்னதாலேயே அப்போது நீ ஞானத்தோடு அதாவது ‘சித்’ப்ரகாசத்தோடு இருக்கிறாயென்று தெரிகிறது. சித்தோடு கூடி, சித்தினால் ஸத்தை நீ அறிகிறாய் என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டால் ஒரே தப்பாகிவிடும்! அத்வைதம் போய் த்வைதம் வந்துவிடும். ஏனென்றால் அப்போது ‘ஸத்’தென்ற உன் ஸ்திதி ஒன்று, அதற்கு வேறாக இருந்துகொண்டு அதை அறிகிற ‘சித்’தென்று இன்னொன்று என்று இரண்டு ஸமாசாரம் வந்துவிடும். உபத்ரவ ஹேதுவான இரண்டாவது ஸமாசாரமில்லாமல் பண்ணிக்கொண்ட நிலைதான் இது (ஸமாதி) என்று சொல்லிவிட்டு இப்படி, (ஸத், சித் என்று இரண்டு இருப்பதாகச்) சொன்னால் தப்புத்தானே? ஆகையால், அப்போது அந்த ஸத்தும் சித்தும் கூட ஒன்றாகவே ஆனவைதான். நீ சித்தோடு கூடி ஸத்தை அறியவில்லை. சித்தாகவே இருக்கிறாய். ஸத்தும் சித்துமாகிய ‘ஸத்சித்’தாக இருக்கிறாய். ஸத்-சித்தாக இருப்பதோடு, மனஸினாலே வருவித்துக் கொண்ட அத்தனை வித ஸம்ஸாரக் கட்டும் அறுபட்டுப்போன அந்த பரம ஸ்வதந்திரமான நிலை ஆனந்தமாக-பேரானந்தமாக-இருக்கும். சூனியமாய்ப் போவதில்லை; ஆனந்த மயமாக இருப்பதாயிருக்கும். வெளியிலிருந்து வராமல், ஆகையால் வெளி பாதிப்புகளுக்கு ஆளாகாமல், தன்னிலிருந்தே, தான் நன்றாக இருப்பதிலேயே ஏற்படும் சாச்வத ஆனநதம்! வெளியிலிருந்து மனஸினால் பெற்ற ஆனந்தம் எல்லாமும் இந்த ஆனந்த ஸாகரத்தின் ஓரொரு திவலைதான். ‘ஸச்சித்’துக்கு வெளியிலிருந்து வருகிற ஆனந்தமாயிருந்தாலும், சற்று முன் சொன்னபடி, த்வைதம் வந்துவிடுமாதலால், ஸத்-சித்-ஆனந்தம் எல்லாமே ஒன்றுதான். நீ இப்படி ஸத்-சித்-ஆனந்தமாக இருக்கும் பரிபூர்ண நிலைதான் பந்தத்திலிருந்து விடுபட்ட மோக்ஷ நிலை. சூன்யம் இல்லவேயில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மனமென்ற த்வதைம் மறைவதே அத்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஜீவாத்ம-பரமாத்ம பேதமும் இல்லை
Next