மிக இள வயதிலேயே முகத்தின் முகவாய்க் கட்டைத் தாடி நரைத்தலுக்கான காரணம் என்ன? நமது ஆரோக்கியத்தைக் குலைக்கும் காரணங்கள் பல உண்டு அவற்றுள் மன அமைதியில்லாமை முக்கியமானதா

மிக இள வயதிலேயே முகத்தின் முகவாய்க் கட்டைத் தாடி நரைத்தலுக்கான காரணம் என்ன?

நமது ஆரோக்கியத்தைக் குலைக்கும் காரணங்கள் பல உண்டு. அவற்றுள் மன அமைதியில்லாமை முக்கியமானதாகும். இக்காலச் சூழ்நிலையில் மன அமைதி மிக அரிதான பொருளாகிவிட்டது. பலர் குடும்பத் தொல்லைகளாலும் வேலை மிகுதியாலும் மனக் கவலை மிகுந்து சிறுவயதிலேயே மூப்புப் பருவத்திற்குரிய நரை திரை முதலிய சின்னங்களைப் பெறுவதோடு உடல் வலிமையற்றவராயும் காணப்படுகின்றனர். இயன்ற அளவு அன்பு, பொறுமை முதலிய ஆத்ம குணங்களை வளர்த்துக் கொண்டு அமைதியைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்.

மனத்தில் கோபம், வெறுப்பு, படபடப்பு ஏற்படுவது, டீ, காபி குடிப்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களால் உடலில் பித்தம் கிளறிவிடப்பட்டு சூடு அதிகரிக்கிறது. மனத்தைத் சார்ந்த ரஜஸ் மற்றும் தமஸாகிய தோஷங்களும் அதிகரிக்கின்றன. இவை மூன்றும் ஒன்று சேர அதிகரிப்பதால் முடியின் வேர்ப்பகுதியில் அழற்சி ஏற்பட்டு முடிகள் நரைத்துவிடுகின்றன. மன அமைதியைத் தேடிக் கொள்ள வேண்டும். தீய நண்பர்களைத் தவிர்த்து சான்றோருடன் சேர்ந்து பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டால் மன அமைதி தானே வந்துவிடும்.

பித்தத்தைக் கிளறிவிடும் காரம், புளி, உப்புச் சுவைகளைக் குறைக்க வேண்டும். உப்பு வகைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகள் பித்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மனத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவுகின்றன. தங்களுக்கு வயதோ சத்துக் குறைவோ காரணமல்ல.

நெல்லி வற்றலை 5 முதல் 10 கிராம் வரை வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருடன் சாப்பிடவும். வேண்டாத பித்தம் பேதி மூலம் வெளியேறும். பிறகு நரசிம்ம ரஸாயனம் என்னும் லேகியத்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் பல் தேய்த்ததும் அணு தைலம் என்ற எண்ணெயை மூக்கின் ஒவ்வொரு துவாரத்திலும் 2 சொட்டு விட்டு மெதுவாக உள் உறிஞ்சவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்தால் தோள்பட்டை, கழுத்து, மார்பு, முகவாய்க்கட்டைப் பகுதிகளுக்கு அபார பலத்தையும் முகத்தின்தோல் சுருக்கம், நரை முகத்தில் கருந்திட்டுக்கள் ஆகியவற்றை நீக்கவும் முடியும்.

ஆம்பல் கிழங்கு, நெய்தல் பூக்கள், அருகம்புல், அதி மதுரம், வெண்சந்தனம் ஆகியவற்றைப் பாலாடையில் அரைத்து முகப்பூச்சாக உபயோகித்துவர அகால நரை, முகத்தின் கருமை, தோல் சுருக்கம் நீங்கி முகம் பார்க்க அழகாயிருக்கும். முகப்பூச்சு உலர்ந்து விடக்கூடாது. பால்விட்டு ஈரப்படுத்தி முகப்பூச்சை நீக்கி விடவும்.

காலில் கறுப்பு நிறத்தில் பருக்கள் போன்று ஏற்படுவதற்கு காரணம் என்ன?

நமது வயிற்றிலிருந்து உணவின் சத்தை உறிஞ்சும் குழாய்களுக்கும், உடலின் மேற்புறம் அமைந்துள்ள தோலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. இவ்வகைக் குழாய்களின் நுண்ணிய உட்பகுதிச் சுவர்களில் படியும் கசடுகளால் அவற்றின் வேலைத் திறன் குன்றி விடுகின்றது. அதன் பாதிப்பைத் தோலில் ஏற்படும் படை, அரிப்பு போன்றவை மூலம் வெளிப்படுத்துகின்றன.

ஒரு சுத்தமான கல்லைச் சுத்தமான தண்ணீரில் போட்டு வையுங்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு இந்தக் கல்லைக் கையிலெடுத்து உருட்டுங்கள். கல்லின் மேல் படிந்திருக்கும் மெல்லிய பசையால் கல் கையை விட்டு வழுக்குவதைக் காணலாம். பல வகையான உணவு வகைகளை வீட்டிலும், ஹோட்டல்களிலும் திருமணங்களிலும் சாப்பிடும் நமக்குக் கல்லின் மேல் படிந்த அழுக்குப் போலக் குடலில் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகின்றன. இந்த அழுக்குகளை அகற்றாமல் உதாசீனப்படுத்துவதன் விளைவாக தோல் வியாதிகள், சர்க்கரை நோய், உடல் பருமன் மூலம் போன்று பல வியாதிகளுக்கும் ஆட்படுகிறோம்.

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக்கி உடலைச் சுத்தமாக வைத்திருந்ததால் பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்தனர். இன்று மருந்தே உணவாகிவிடும் அளவிற்கு நாம் வந்ததற்குக் காரணம், உடல் சுத்தத்தை மறந்ததும், உணவில் கட்டுப்பாடற்ற நிலையும்தான். இது உட்புறக் காரணம். விஷப் பூச்சிகளின் கடி, பார்த்தீனியம் போன்ற செடிகளின் நீர்க்கசிவு உடலில் படுதல், ஆடைகளின் ஒவ்வாமை ஆகியவை வெளிப்புறக் காரணமாகலாம்.

குழாய்களில் பரவியுள்ள அழுக்குகள் கரைவதற்கும், உடலில் ஏதேனும் விஷத்தன்மையிருந்தால் அதைக் குறைப்பதற்கும் "படோல கடு ரோஹிண்யாதி' எனும் கஷாயத்தைப் காலை, மாலை 6 மணிக்கு 3 ஸ்பூன் (15 IL) அளவில் எடுத்து, 12 ஸ்பூன் (60 IL) அளவு சிறிது சூடான தண்ணீர் கலந்து சாப்பிடவும், குடல் சுத்தமாக இது உதவக்கூடும். மூன்று வாரம் சாப்பிட்ட பிறகு நீர்க்கசிவு ஏதுமின்றி அரிப்புள்ள பகுதி வறண்ட நிலையிருந்தால் 'தினேச வல்யாதி' எனும் தைலத்தைக் கீழிருந்து மேலாகத் தடவி 1 மணி நேரம் ஊறிய பிறகு பச்சைப் பயறு, ஆரஞ்சு பழத்தோல், வேப்பிலை அரைத்த பொடியால் தேய்த்து அலம்பவும்.

உணவில் தயிர், நல்லெண்ணெய், கத்தரிக்காய், புலால் உணவைத் தவிர்க்கவும். மறுமுறை உணவைச் சூடாக்கி சாப்பிடக்கூடாது. புளிப்பான ஊறுகாய் சாப்பிட வேண்டும். காலை உணவிற்குக் கோதுமை ரவை உப்புமா, மதியம் சாதத்துடன் சூடான ரஸம், மோர், இரவில் சாப்பாத்தி நன்கு வேக வைத்த காய்களுடன் சாப்பிடலாம். பகல் தூக்கம் தவிர்க்கவும்.