மாணவன் யார்? இன்றைய மருத்துவத்துறையில் மாணவர் சேர்க்கை என்பது ஒரு வியாபார விஷயமாகிவிட்டது கல்வித்துறையில் மிகவும் மேம்பட்டதான மருத்துவத் துறையில் இவ்வாறு நடப்ப

மாணவன் யார்?

இன்றைய மருத்துவத்துறையில் மாணவர் சேர்க்கை என்பது ஒரு வியாபார விஷயமாகிவிட்டது. கல்வித்துறையில் மிகவும் மேம்பட்டதான மருத்துவத் துறையில் இவ்வாறு நடப்பது வேதனைக்குரிய விஷயமாகும். தகுதியுள்ள மாணவன் யார்? என்பதை ஆயுர்வேதம் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

மருத்துவத்தை பயிலவைக்கும் ஆசிரியர் மீது மிகுந்த பக்தி, தான் பயிலும் கல்வியின் மீது மிகுந்த ஆர்வத்தைக் கொண்டவனாகவும், புத்திசாலியாகவும், ஞாபக சக்தியை அபாரமாகக் கொண்டவனும், விஷய ஞானத்தில் தெளிவாக உள்ளவனும், முகம், மூக்கு, கண்கள் போன்றவை வளைவு ஏதுமில்லாமல் நேராக அமைந்தவனும், மெல்லிய மற்றும் நெய்ப்புடன் கூடிய நகங்களை உடையவனும், பார்ப்பதற்கு தேஜஸ்வியுடன் கூடியவனும், திருமணம் ஆகாத பிரம்மசாரியாகவும், சுகதுக்கம், விருப்பு வெறுப்பு போன்ற இரட்டை நிலைகளை வென்றவனும், தூய்மையான கருத்துக்களிலும், செயல்களிலும் ஆழ்ந்த பற்றுடையவனும், ஒழுக்கத்தை விடாது கடைபிடிப்பவனும், பயிலும் கல்வியை இறுதிவரை படிப்பவனும், குறைந்தது ஆறுமாதமாவது ஆசிரியர் பணிவிடையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனும், தகாத செயல்களை செய்வதில் வெட்கப்படுபவனும், உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் சுத்தமானவனும், நல்ல குலத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஒரு மாணவன்தான் மருத்துவத்துறைக்கு சிறந்தவன் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கூறுவதோடு மட்டுமில்லாமல் அக்காலத்தில் மேற்குறிப்பிட்ட லட்சணங்கள் அனைத்தும பூரணமாய் உடைய ஒருவனைத்தான் ஆயுர்வேத ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யனாக அங்கீகரித்தனர்.

இக்காலத்தில் இவை முழுவதுமாக சாத்யமில்லையென்றாலும், பணத்திற்காக மருத்துவத்துறையில் மாணவர் சேர்க்கை பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நோய்வாய்ப்பட்டவன் மருத்துவரை தெய்வமாகக் கருதுகிறான். ஆனால் மருத்துவரோ தான் செலவு செய்து படித்த பணத்தை திரும்பப் பெற தேவையில்லாத பரிசோதனைகளை செய்யச்சொல்லி நோயாளியிடமிருந்து பணத்தை பெறுவதற்கு முயற்சி செய்யலாம். அறுவை சிகித்ஸைகளை மேற்கொள்ளலாம். இதனால் நோய் மாராமல் வீண் செலவுகளை செய்து நோயாளிகள் துன்புறநேரிடும். அரசு இவ்விஷயத்தில் பண்டைய ருஷிகளைப்போல நடந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய மாற்றங்களை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் தற்சமயம் இருந்து வருகிறோம். பேராசிரியர், மருத்துவர் ஆகியோருடைய தனியார் மருத்துவக் கல்லூரியாயினும் சம்பள விகிதத்தை அரசே நிர்ணயித்து வழங்கினால் மருத்துவக்கல்லூரியை நடத்தும் நிர்வாகம் மாணவர் சேர்க்கையின் போது அதிக அளவில் பணம் வாங்கவேண்டிய வராது. தகுதியுள்ள மாணவனையும் தேர்ந்தெடுக்க முடியும். தரமான கல்வியையும் அவர்களுக்குத் தரமுடியும்.