நோயற்ற வாழ்விற்கான வழிகள் ஆரோக்யத்துடன் வாழ மனிதன் ஆசைப்படுகிறான் நோயற்ற நிலையில் கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிகராக ஏதுமில்லை என்றே கூறலாம் ஏனெனில் உடல்

நோயற்ற வாழ்விற்கான வழிகள்

ஆரோக்யத்துடன் வாழ மனிதன் ஆசைப்படுகிறான். நோயற்ற நிலையில் கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிகராக ஏதுமில்லை என்றே கூறலாம். ஏனெனில் உடல் உபாதை இல்லாத மனிதனுக்குத்தான் உயர் சிந்தனைகளில் மனம் லயிக்கும். உபாதை தோன்றிவிட்டால் அதை சரி செய்து கொள்ள அவன்படும் பிரயத்னங்களில்தான் மனம் ஈடுபடுகிறது. ஆரோக்யம் மறுபடியும் திரும்பிவிட்டால் மனம் சாந்த நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சரகசம்ஹிதை எனம் ஆயுர்வேத நூலில் நோயற்ற வாழ்விற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

"உடலுக்கும் மனதிற்கும் ஒத்துக்கொள்ளும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், நிதானித்துச் செயலாற்றுபவன், பொறிகளால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பிறருக்கு உதவுபவன், ஸமபாவனை கொண்டவன், உண்மையில் ஈடுபாடுள்ளவன், பொறுமை உள்ளவன், உண்மையான இதத்தைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான்" என்று குறிப்பிடுகிறார்.

இக்காலத்தில் மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் திறமையும் அவசியமாகியுள்ளது. காரணம் அரசாங்கம் கடைபிடித்து வரும் சில சட்ட திட்டங்களால் நோயின் தன்மையை தன் கூர்மையான அறிவால் அறிந்து மருந்தைத் தரும் உயர்ந்த மருத்துவர்கள் குறைந்து விட்டனர். தவறான மருந்தால் மனிதன் இறந்துபோகும் சம்பவங்களை கேள்விப்படுகிறோம். சரக ஸம்ஹிதையில் இதைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

"மருந்தைப் பற்றியும் அதனைப் பயன்படுத்தும் முறையைப் பற்றியும் தீர அறியாமல் பயன்படுத்தினால் விஷமாகி அது உயிரை மாய்க்கும். கூரிய ஆயுதமாகி உடலை சிதைக்கும். நெருப்பாகி எரித்து விடும். இடியாகி நொடியில் சுருக்கி விடும். அதனையே அறிந்து முறையுடன் பயன்படுத்தினால் அமுதமாகி நீண்ட நாட்கள் வாழவைக்கும்".

நோயின் ஆதிக்கம் அதிகரித்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு விடுகிறோம். வைத்யனும் தன் திறமையெல்லாம் காட்டி நோயை தீர்த்து ஆரோக்யத்தை மறுபடியும் கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புகிறார். வீடு திரும்பும் அவன் நோயின் சீற்றத்தை மறக்காமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சரகர் அபிப்பிராயப் படுகிறார்.

"வெள்ளம் வந்தது. பயிர் அழிந்தது. மறுபடி அவ்வாறு வெள்ளம் வரலாம். வெள்ளம் வருவதற்கான புறக்காரணங்களை தவிர்க்க முடியாமலாகலாம். அதற்காக முன்னதாக அணை கோலுவர். வெள்ளம் வந்த பின் அணையிட முடியாது. முன் நோய் வந்த அனுபவம் உள்ளது. மறுபடி அவ்வாறு நோய் வரலாம். நோய்

வரக்கூடிய புறக்காணரங்களைத் தவிர்க்க முடியாமல் ஆகலாம். நோய் வருமிடமான உடலை வலுப்படுத்திக் கொள்வோம். நோய் பாதிப்பு அதிகமாகாமல் அணை கோலுவோம்."

"திறமை வாய்ந்த வைத்யரைப் பற்றி அறிந்து அவரிடம் சென்று நோயாளி மருந்தை வாங்கியதும் நம்பிக்கை பெற்று மருந்தை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கீழ்காணும் விதம் கூறுகிறது.

"நோயாளியும் அவனுக்குப் பணிவிடை புரிவபவர்களும் மங்களமான நடத்தையுள்ளவர்கள். நோயாளி தைவ பக்தியும் வைத்யரிடம் நம்பிக்கையும் கொண்ட வைத்யர் சொல்படி இசைந்து சிரத்தையுடன் நடப்பவன் சிகித்ஸை பலிக்கும் என்ற திடமான எதிர்பார்வை, இவை அனைத்துமிருக்க ஆரோக்யம் எளிதில் கிட்டும்".

பத்யா ஆசரணைகளில் மனம் செல்லாமல் மருந்தை மட்டும் சாப்பிடுவதால் பயனேதுமில்லை. சில உணவு வகைகள் அதிக அளவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்யம் கெட்டு உடல் நலம் குன்றி விடும் என்று சரகர் குறிப்பிடுகிறார்.

"முறையற்று மனம்போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதும், புளிப்பும் உப்பும் உரைப்புத் அதிகமாகச் சேர்ந்ததும், அப்பளக்காரம் சோடா உப்பு போன்றவை அதிகம் சேர்ந்ததும், குளிரால் விரைத்தும், உலர்ந்ததும் சுவையற்றிருக்கும் கறிகாய்களும் புலாலும் சேர்ப்பதும், எள்ளும் எள்ளின் எண்ணெய்யும் இட்லி தோசை போன்ற மாவாலான பணியாரங்களும் உணவில் அதிக அளவில் தொடர்ந்து சேர்வதும் உடல் நலனைக் கெடுக்கும் எல்லா தோஷங்களையும் தோற்றுவிக்கும்."

நோய்க்கும் துக்கத்திற்கும் காரணம் மனிதனின் சிந்தனையும் செயலும் வேண்டிய அளவில் இல்லாததால்தான் கையேந்தி பவனில் சாப்பிட்ட ஊசிப் போன பேல்பூரியால் ஏற்பட்ட வயிற்று வலியை மருந்தினால் சரி செய்து, பின்னர் ஒரு நாள் மறுபடியும் அதை ஒருவன் சாப்பிட்டால் அம்மனிதனை என்னவென்று சொல்வது. வாக்படாசார்யார் தன் ஆயுர்வேத உபதேசத்தில் குறிப்பிடுகிறார்.

"இரவு படுக்குமுன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மனநிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல் - மனப் பாதிப்பு, இரண்டின் பின் விளைவுகள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, அதன் அடிப்படையில் நாளது வாழ்க்கை முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது. இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்கவேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்க வேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை."