எது சூட்டைத் தணிக்கும்? வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய மூன்றில் எது உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாயந்ததாக உள்ளது? வெங்காயம் சுவையில் காரமானது ஜீரணத்தி

எது சூட்டைத் தணிக்கும்?

வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய மூன்றில் எது உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாயந்ததாக உள்ளது?

வெங்காயம் சுவையில் காரமானது. ஜீரணத்தின் இறுதியில் இனிப்பாக மாறக்கூடியது. சூடான வீர்யத்தைக் கொண்டது. பலம் தரும். காம இச்சையைத் தூண்டி விடுவது. இதனுடைய சூடான தன்மையினால் மாதாமாதம் தீட்டு சரிவராமல் இடுப்பு, தொடைகள் வலியுடன் கஷ்டப்படும் பெண்கள், தினம் காலையில் பல் துலக்கியவுடன் இரண்ட சிறிய வெங்காயத்தைத் தோல் நீக்கிச் சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, மேல் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் நாளடைவில் வலிகள் நின்று தீட்டும் சரிவர வெளியாகும்.

எலுமிச்சம் பழம் குளிர்ச்சியானது என்று சிலர் கூறுவர். இது தவறானது. புளித்த பழச்சாறுகள் உடலின் தோலில் பட்டதும் சில்லென்ற உணர்ச்சி தரும் என்பது வாஸ்தவமே. "தலையில் சூடேறி விட்டது. எலுமிச்சம் பழத்தை வைத்துத் தேய்க்க வேண்டும்" என்று கூறுவர். தொடுகையில் முதல் உணர்ச்சிதான் குளிர்ச்சியாக இருக்குமே தவிர, அமிலமாகையால் தன் சூட்டைத் தொடர்ந்து காண்பிக்கும். எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதே. நெல்லிக் கனி மற்றும் மாதுளம் கனியைத் தவிர எல்லாப் புளிப்புப் பழத் திரவங்களும் பித்தத்தை அதிகப்படுத்தி உடல் சூட்டை அதிகமாக்கும்.

நாவல் பழத்தை, பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், வறட்சி, எரிச்சல், தாகம், வெப்பம் போன்ற உடல்நிலைகளில் சாப்பிட்டால் அவை குறையும். ஆனால், பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் பசி கெட்டு, வயிற்றபு ¢ பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி முதலிய தொந்தரவு ஏற்படும். இவை நீங்க பச்சை நெல்லிக்காய் அல்லது நெல்லி வற்றலை மென்று தின்று குளிர்ந்த நீர் பருக வேண்டும். ஆக, இம்மூன்றில் நாவல்பழம்தான் உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாய்ந்தது.

மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருந்துகள் இருக்கும்போது, சிலர் மூலிகை மருந்துகளை நாடுவது ஏன்?

நவீன வைத்திய முறையில், கடும் முயற்சியின் பலனாகப் பல புதிய சக்திமிக்க மருந்துகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அவை சிறந்த மருந்துகளாயினும் கல்லீரலில் விஷப் பரிணாமத்தை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது. நவீன மருந்துகள் கல்லீரலில் ஏற்பட்டுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதில் அதிகம் முனைகின்றன. அவ்வாறு அழிக்கும் பட்சத்தில் கல்லீரலின் வேலைத் திறனைச் சரி செய்வதற்கு மீண்டும் மருந்துகளைக் கொடுக்கிறார்கள்.

ஆனால், மூலிகை மருந்துகளின் பயன்பபாடு காமாலை நோயினால் ஏற்பட்டுள்ள உணவில் வெறுப்பு, களைப்பு, தளர்ச்சி, கல்லீரல் வேலைத் திறன் ஆகியவற்றை ஒரே சமயத்தில் சரி செய்வதில் முனைந்து விரைவில் வெற்றியும் பெறுகின்றன.

உதாரணத்திற்கு, கீழாநெல்லியை வேருடன் பிடுங்கி அலம்பி இடித்து அதன் சாற்றை மட்டும் அரை அவுன்ஸ் - 2 அவுன்ஸ் (50 IL) வரை பசுவின் பாலுடன் தினமும் காலையில் சாப்பிட்டு வர, பித்தக் குழாய் அடைப்பை அகற்றிக் குடலுக்குள் பித்தத்தைக் கொண்டுவந்து பசியைத் தூண்டச் செய்து மலம் வெண்மையாகப் போவதை நீக்கி காமாலை நோயைக் குணப்படுத்துகிறது. ஓய்வும், உணவில் கண்டிப்பும், உடல்நிலைக்கு ஏற்ப மூலிகை மருந்துகளால் காமாலை நோய் விரைவில் குணமாகிறது. அதோடு உணவில் விருப்பத்தையும், களைப்பு, தளர்ச்சி, கல்லீரல் மந்தத் தன்மை ஆகியவற்றை ஒரே சேர நிவர்த்தி செய்வதிலும் விரைவாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் மூலிகை மருந்துகளை நாடுகின்றனர்.

எனக்குச் கொஞ் நாள்களாக இனிப்பு தவிர மற்ற ஆகாரம் எல்லாம் நாக்கில் பட்டவுடன் சிறிது கசப்பாக உள்ளது. இதற்கு என்ன மருந்து சாப்பிடலாம்?

வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்திருந்தால் நாக்கில் உணவு பட்டவுடன் கசப்பை உணர்கிறோம். வயிற்றில் பித்தம் அதிகளவில் சுரப்பது இதற்குக் காரணமாகலாம். வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு. அவை அதிக அளவில் ஊறாமல் இருப்பதும் அதற்கு காரணமாகும்.

அதனால், நீங்கள் வாயை அடிக்கடி குளிர்நத் நீரால் கொப்பளித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெட்டிவேர் ஊறிய பானைத் தண்ணிர் வாய் கொப்பளிக்க மிகவும் சிறந்தது. வாயைச் சுத்தமாக வைத்திருப்பதால் நமது ஜீரண உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அதிக அளவில் பித்தத்தின் தேக்க நிலையை இதன் மூலம் நம்மால் தவிர்க்க இயலும். மேலும், பித்த ஊறலைச் சமச் சீராக்க இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகள் பெரிதும் உதவுகின்றன. இந்தச் சுவை அடங்கியுள்ள உணவுப் பொருள்களை அதிக அளவில் சேர்க்கவும். உதாரணமாக, மாதுளம் பழச் சாறு, மணத்தக்காளிக் கீரை, வாழைப் பூ போன்றவை.

வாய்க் கசப்பைத் தவிர்க்கப் புளிப்புச் சுவையும் உதவக்கூடும். ஆனால், புளிப்பு பித்தத்தைக் கிளறிவிடும் என்பதால் எல்லாவித புளிப்புச் சுவையும் உங்களுக்குப் பத்தியமல்ல. நெல்லிக் காய் வயிற்றில் புளிப்பாயினும் கசப்பைக் கண்டிப்பதில் மிகவும் சிறந்தது. நெல்லி வற்றலைத் தூள் செய்து 3-5 கிராம் அளவில் குளிர்ந்த நீருடன் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். கசப்புச் சுவை மறைந்து விடும்.