இயற்கை உணவும் இக்காலத்திய டானிக்குகளும் உடலுக்கு வலிவூட்ட டானிக்குகளை நாடுகிறோம் ஆனால் எத்தகைய டானிக்குகளை உபயோகிக்க வேண்டுமென்பதில் விசேஷ கவனம் தேவை உடலும்,

இயற்கை உணவும் இக்காலத்திய டானிக்குகளும்

உடலுக்கு வலிவூட்ட டானிக்குகளை நாடுகிறோம். ஆனால் எத்தகைய டானிக்குகளை உபயோகிக்க வேண்டுமென்பதில் விசேஷ கவனம் தேவை. உடலும், மனமும் இணங்கி இயங்குபவை. மனத்தின் நன்மையை புறக்கணித்து உடலுக்கு மட்டும் வலிவூட்ட டானிக்குகளை உபயோகித்தால் அவற்றால் கிடைக்கும் உடல் வலிவு கொலை, கொள்ளை, வஞ்சனை, பொறாமை போன்ற துர்வினியோகத்திற்கே பயன்படும். அது ராட்சஸ வலிவாகும். வலிவிலும் தெய்வீகத்தன்மை இருத்தல் வேண்டும். நெல்லிக்கணி, உள்ளிப்பூண்டு இரண்டுமே டானிக் தன்மையுள்ளவை. இவற்றுள் நெல்லிக்கனி உடல் மற்றும் மனமிரண்டுக்கும் வலிவு தரும். பூண்டு அசுரத்தன்மை உள்ள அமிருதம். அதனால் மனதைக் கெடுத்து உடலுக்கு வலிவூட்டும். மனதைச் சார்ந்த தோஷங்களாகிய ரஜோ தமோ குணங்களை அதிகமாக்கும். இது காரணமாகவே மனத்தூய்மையை முக்கியமாகக் கருதி ஏற்பட்ட ஆகார நியமங்களை மேற்கொள்பவர், இதன் உபயோகத்தைத் தவிர்க்கின்றனர். எனவே டானிக்குகளை தேர்ந்தெடுக்கையில் மனதின் தூய்மையை அதிகப்படுத்தும் வகைகளையே சாப்பிட வேண்டும். பாரத வைத்ய சாஸ்திரங்களில் காணப்படுகிற டானிக்குகள் பலவற்றில் இந்த நற்குணம் அமைந்திருத்தலால் இவையே சிறந்தனவாம். நம் முன்னோர் ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என உணவை மூவகையாகப் பிரித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உடலில் ஏற்பட்ட குறைகளை இட்டு நிரப்பும் நோக்கத்துடன் போஷாக்கு காரணமான சக்திகளை பிரித்தறிந்து, உணவுச் சத்துகளாகிய வைடமின் தயாரிக்கிறார்கள். மேல் நாட்டு முறையை அனுசரித்த டானிக்குகளில் இந்த வைடமின் சத்துகளுக்கே இடமாதலால் மனத்தின் நன்மைக்குரிய டானிக்குகளாக அமையும் நிர்பந்தம் இல்லை.

நவீன விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் உருவாகும் ஸித்தாந்தங்கள், அவை உருவாகிற அந்தந்த அளவில் வளர்ந்துள்ள ஆராய்ச்சியின் விளைவாகவே அமைதலால், மீண்டும் ஆராய்ச்சி முன்னேற்றம் காரணமாக மாறவும் கூடும். எனவே இடைக்காலங்களில் உள்ள ஆராய்ச்சி விளைவுகள் சிற்சில ஸந்தர்ப்பங்களில் சாச்வதமான பாரத வைத்திய சாஸ்திர ஸித்தாந்தத்திற்குப் புறம்பாகவும் அமைந்திடல் கூடும். வைட்டமின் விஷயமான சில கொள்கைகள் விஷயத்தில் இத்தகைய முரண்பாட்டினைக் காணலாம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் சத்து நிறைய இருக்கிறது. அதிக நேரம் கொதிக்க வைப்பதாலும், கொதித்த நீரை அகற்றுவதாலும் வைட்டமின் பலனை இழக்கிறோம். மாடு போன்ற பிராணிகள் பசுமையாகவே உட்கொள்வதால் மனிதனை விட பலம் பெற்றிருக்கின்றன. அரிசியைக் களைந்து நீரை இறுத்தெடுப்பதால் H வைட்டமின் சக்தியை இழக்கிறோம். இந்தத் தவிட்டையும் தவிட்டின் நீரையும் உட்கொள்ளும் பிராணிகள் பலம் பெறுகின்றன என்று யுக்தியுடன் ஆராய்ந்து முற்கூறிய பழக்கங்களை அகற்றுமாறு வைட்டமின்

சாஸ்திரப்படி உபதேசிக்கப்படுகிறது. அவற்றில் வைட்டமின் சத்து இருப்பது உண்மையே. விலங்கினங்கள் இவற்றால் வலுப்பெற்றிருப்பதும் உண்மையே. ஆனால் அவைகளுக்குள்ள அக்னி எனும் பசிபலம் மனிதனுக்கு இல்லையே. விலங்குகளுக்கு கிடைத்த போதே உண்ண வேண்டியிருத்தலாலும், மனிதனைப் போல புத்தி ஸாமர்த்தியம், தந்திரம், யுக்தி முதலியவற்றால் உணவை ஸம்பாதிக்கும் ஆற்றல் இல்லாமையாலும், இதர பிராணிகளுடன் மனிதனும் அவற்றின் உணவில் பங்கு கொள்ளப் போட்டியிடுவதாலும், இயற்கை அன்னை அவற்றிற்கு கிடைத்த பொருளை கிடைத்த நேரத்தில் பக்குவம் செய்யாத பச்சைப் பொருளானாலும் கடினத்தன்மை உள்ள பொருளானாலும் ஜீரணித்துக் கொள்ளும் அக்னி பலத்தை தந்தருளியிருக்கிறாள். ஆனால் மனிதனுக்கோ சில சமயங்களில் பக்குவம் செய்த உணவைக் கூட ஜீரணிக்க முடியவில்லை. இது காரணமாகவே பெருவாரியான விட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டாலும் ஊசி மூலம் உட்செலுத்தினாலும் அவைகளின் பயனை அவனால் பெறமுடிவதில்லை. பசியைத் தூண்டும் ஜாடராக்னியின் வளர்ச்சியைப் பொறுத்தே தாதுக்களாகிய ரஸ- ரக்த - மாம்ஸம் போன்றவற்றிலுள்ள அக்னியின் பலம் அமைந்துள்ளது. இவைகளின் சக்தியைப் பொறுத்தே ஊசி மருந்துகளை ஏற்பதும் நிராகரிப்பதும் நம் உடலில் நடக்கிறது. ஆகவே நாம் சமைக்கும் அரிசியின் கஞ்சியை வடித்த பின்னரும், காய்கறி நன்கு வெந்ததும் அதை வடித்து நீரை நீக்கிய பிறகே உணவாக்குவதற்கும் காரணம் பசித்தீயாகிய ஜாடராக்னி கேடுவராமல் எளிதில் ஜீரணம் செய்வதற்காகத்தான். அதனால் மனதிற்கும் வலிவூட்டும் டானிக்குகளை எடுத்துரைத்துள்ள ஆயுர்வேத மருந்துகள் வரும் காலங்களில் உலகளவில் போற்றப்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.