அநுபானம் சாப்பிடும்போது நடுவில் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவானது தளர்வடைவதால் ஜீர்ணம் எளிதில் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம

அநுபானம்

சாப்பிடும்போது நடுவில் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவானது தளர்வடைவதால் ஜீர்ணம் எளிதில் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் தண்ணீருக்கு பதிலாக கோக்கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களை அவைகளில் விஷத்தன்மை இருப்பதை அறிந்தும் குடிக்கின்றனர். Bottle Drinks குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகம் சுரந்து உண்ட உணவு பதனழிந்து மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இளைஞர் சமுதாயத்திற்கு இவ்விஷயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சிறந்த அநுபானங்களை கீழ்காணும் விதம் ஆயுர்வேதம் எடுத்துரைக்கின்றது.

அநுபானத்தில் சிறந்தது நீர். அது அறுசுவைகளுக்கும் மூலகாரணம். பிராணிகள் எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொள்ளக்கூடியது. வாழ்வுக்குக் காரணமாயிருப்பது. எனவே நீர் எல்லாவற்றிலும் சிறந்தது.

தயிர் தேன், எரிச்சலை உண்டுபண்ணக்கூடிய எண்ணெய் பண்டங்களை உண்ட பின்பும், கோதுமை, மதுவகைகள் இவற்றைப் பருகிய பின்பும் குளிர்ந்த நீரைத்தான் பருக வேண்டும். சரத் என்ற பருவத்திலும் (ஐப்பசி கார்த்திகை) கிரீஷ்மத்திலும் (ஆனி, ஆடி மாதங்கள்) குளிர்ந்த நீரை பருகுவது சிறந்தது.

மாவுப்பொருட்களை உண்ட பின்பும், சீரணிப்பதற்குக் கடினமான திண்பண்டங்களைப் புசித்த பின்பும், வெந்நீரை அநுபானமாக அருந்த வேண்டும். ஹேமந்த ருதுவிலும் (மார்கழி - தை மாதங்கள்) சுடு நீரையே பயன்படுத்த வேண்டும்.

சம்பா அரிசி, அறுபது நாளில் விளையும் அரிசி இதனால் ஆன உணவை உண்டபின் பால் அருந்த வேண்டும். அவ்வாறே உபவாசமிருப்பவர், வழி நடந்தவர், பேச்சாளர், சிற்றின்பத்தில் ஈடுபட்டவர், உடற்பயிற்சி செய்தவர், உடல் தளர்ந்தவர், சிறுவர் - முதியோர் இவர்கள் பால் அருந்த வேண்டும்.

க்ஷயம் என்னும் உடல் இளைப்பு நோய் உள்ளவருக்கு மாம்சரசம் அநுபானமாகும். வாத நோயாளிக்குப் புளிப்புச் சுவையுள்ள ரசங்கள் அநுபானமாகும். பித்தநோயைத் தடுப்பதற்கு சர்க்கரை கலந்த நீர், கபம் எனும் நோயைப் போக்கவும் கண்,தொண்டை நோய்களிலும் தேன் கலந்த 'திரிபலா' (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) குடிநீர் பெரும்பாலும் அநுபானமாகும்.

தயிருக்கு அநுபானம் நீர் அல்லது தெளிந்த மோர். கூர்சிகா என்னும் தயிர்பால் கலந்து பக்குவம் செய்வது, கிலாடம் எனப்படும் சிறிதளவு பாலில் அதிக மோர் சேர்த்து தயாரிக்கப்படும். தயிர் இவற்றிற்கு தயிர் தெளிவு அனுபானம். கீரைவகை மட்டமான உணவு, இவற்றிற்கு தயிர்த் தெளிவு அல்லது மோர் இவை அனுபானங்களாகும். மாம்சங்களுக்கு மதுபானம் அனுபானமாகும். அல்லது புளிப்பான பழரசங்கள், பல வகையான ஆஸவங்கள் இவைகளை தகுந்தவாறு பிரித்துப் பயன்படுத்தவேண்டும். களைப்படைந்தவன், இளைத்தவன் இவர்களுக்கு கள் அருந்துவது அநுபானமாகும். பருத்த உடல் உள்ளவனுக்கு தேன் கலந்தநீர் அநுபானம். கள், மாமிசம் இவற்றை உண்டு பழகியவர்களும், ஜாடராக்னி குறைந்தவர்களும் கள்ளை அனுபானமாகப் பருகலாம்.

சுருங்கச் சொன்னால் உண்ட உணவு வகைகளுக்கு எதிரிடையில்லாமலும், வீர்யம் முதலியவற்றால் பனகயற்றுதுமான அநுபானம் சிறந்ததாகும்.

அநுபானங்களின் குணங்கள்

அநுபானம் நிறைவை அளிக்கிறது. உடலை வளர்க்கிறது. உற்சாகமளிக்கிறது. பருக்கச் செய்கிறது. உடலிற்குத் தேவையானவற்றை அளிக்கிறது. உண்ட உணவை தளர்த்தி விடுகிறது. அன்னக்கூட்டத்தை பிளக்கிறது. மிருதுத்தன்மையைத் தோற்றுவிக்கிறது. ஈரக்கசிவை ஏற்படுத்துகிறது. உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்கிறது. உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

அநுபானத்திற்குத் தகுதியற்றவர்கள்

கழுத்தின் மேல்பாகங்களில் உண்டாகும் நோய்கள், சுவாசம், இருமல், கபம், நீர்ஊறுதல், விக்கல், குரல் கம்முதல் ரத்தக் கசிவுடன் கூடிய இருமல் ஆகிய இந்நோய் உள்ளவர்கள் அநுபானம் அருந்தக் கூடாது.

பாடகர்களும் சொற்பொழிவாளர்களும் அநுபானம் செய்வது நல்லதல்ல. ஏனென்றால் அநுபானம் அவர்களுக்கு உணவுப் பையைக் கொடுத்து, மார்பிலும் தொண்டையிலும் உள்ள உணவினால் உண்டான எண்ணெய்ப் பசையை அடைந்து அது ஜடராக்னியின் வலிவை குறைத்து வாந்தி முதலான நோய்களை ஏற்படுத்துகிறது. கபத்தைக் கிளறி விடுகிறது.

அநுபானம் எடுத்துக் கொண்டவர்கள், சொற்பொழிவு ஆற்றக்கூடாது. பாடக்கூடாது. வழிப் பிரயாணம் செய்வது தகாது. உறங்கவும் கூடாது.

உடல் அழற்சி, நீரிழிவு, தொண்டை, கண், இவற்றில் தோன்றும் நோய், உடற்புண், இவற்றையுடையவர்கள் நீரே அருந்தக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net