மன அமைதிக்கான வழி வாழ்க்கையில் எல்லோருக்கும் எதிர்பார்த்தபடி காரியங்கள் சரியாக அமைவதில்லை அதுமட்டுமல்ல, மனதிற்குப் பிடிக்காத வகையிலும் வாழ்க்கை அமையக்கூடும் மனத

மன அமைதிக்கான வழி

வாழ்க்கையில் எல்லோருக்கும் எதிர்பார்த்தபடி காரியங்கள் சரியாக அமைவதில்லை. அதுமட்டுமல்ல, மனதிற்குப் பிடிக்காத வகையிலும் வாழ்க்கை அமையக்கூடும். மனதில் ஏற்படும் வெறுப்பு, கோபம் போன்றவற்றை சமாளிக்க இதயத்தில் இயங்கும் ஸாதக பித்தம் இதயத்தையும், மூளையையும் தூண்டி உணர்ச்சித் தேக்கத்தைப் பரவலாக விரித்து உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் உடலில் காணும் படபடப்பு, உடற்சூடு, வியர்வை போன்ற உடல் நிலைகள் ஸாதக பித்தம் அந்த திடீர் நெருக்கடியைச் சமாளிக்க கையாளும் யுக்திகளாகும். இந்த அதிர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து சில நிமடங்களிலோ, மணிகளிலோ, நாட்களிலோ நீங்கி இயற்கையான அமைதி ஏற்படுகிறது.

இன்று வாழ்க்கையே போலியாக உள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை மாறி ஏதோ நாமும் வாழ்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக மனிதர்கள் படும்பாட்டை வேலைக்குச் செல்லும் மனிதர்களை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பார்க்க வேண்டும்!ஆனால் பொருளாதார நெருக்கடி மட்டும் தீர்வதேயில்லை. இதனால் தொட்ட இடங்களில் எல்லாம் பூதம் கிளம்பவுது போல் பிரச்னைகள் அநேக குடும்பங்களில் அடிக்கடி ஏற்படுகின்றன. உச்சஸ்தாயில் கத்துவதும், குழந்தைகளை அடிப்பதுமாக காலைப்பொழுது ஒரு குடும்பத்தில் ஏற்படுமானால், அவ்வாறு அடிக்க செய்யும் நபருக்கு இதயமும் மூளையும் பலவீனப்பட்டு, மேற்கொண்டு அதிர்ச்சிகளை சமாளிக்கும் சக்தி குன்றிய நிலை ஏற்படுகிறது. இதுவே இன்று பெருவாரியாகக் காணும் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு முதலியவைகளுக்குக் காரணம்.

இதற்குத் தகுந்த சிகித்ஸையை எல்லோரும் தேடுகிறார்கள். நவீன மருத்துவ வல்லுனர்கள் செயற்கையாக மன அமைதியைத் தரும் டிரான்க்விலைஸர் மருந்துகளை சாப்பிடும்படி தருகின்றனர். அமைதி ஏற்படுவது போலத் தோன்றினாலும் இம்மருந்துகளால் அமைதி நீடிக்குமென நம்ப முடியாது. மேலும் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமாதலால் அடிக்கடி ரத்த அழுத்த அளவு, இதயத் துடிப்பு, மூளையின் சுறுசுறுப்பு ஆகியவற்றை கணக்கிட்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் இல்லாமல் இம்மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் மரண பர்யந்தம் கேடுகளை அனுபவிக்க நேரிடும்.

கோப தாபங்களால் இதயம் மற்றும் மூளைப் பகுதிகளில் ஏற்படும் அதிர்ச்சி, படபடப்பு, மயக்கம், உடல்சூடு அதிகரித்தல், வியர்த்தல் முதலிய நிலைகள் உடல் மற்றும் மனோநிலை ஆபத்திலுள்ளதென்று அறிவிப்புகளாகும். புத்திசாலியாக இருப்பவன் இவ்வறிப்புகளுக்கு செவிசாய்த்து நிரந்தர ஏற்பாடுகளைச் செய்து கொள்வதுதான் உசிதமே தவிர தற்காலிக பலன் தரும் டிராங்குலைஸர்களை நம்பியிருத்தல் சரியாகாது. இம்மருந்துகைள நம்பி நிரந்தர சுகத்திற்கு வழி தேடாதவன் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது அறிவிக்கும் ஒரு முக்கிய சக்தியை இழக்கத் தொடங்குகிறான். உடல் சுத்திக்கு மீறிய செயல்களிலும், மனக்கட்டுப்பாடும் இன்றி பேசும் பேச்சும், செயலும் அவன் அறியாமலே வாழ்வை இழந்து விடுகிறான். டிராங்விலைஸர்களும் தூக்க

மருந்துகளும் அடிக்க உபயோகப்படுத்தப்பட்டால், வியாதியின் சரியான நிலையே நோயாளிக்கும் வைத்யனுக்கும் கூட புலப்படாது. மிகக் கடினமான நோய் கூட இம்மருந்துகளால் மறைக்கப்பட்டு நன்கு நிலைத்து அகற்ற முடியாமற் போவதுண்டு.

இயற்கையான அமைதியைப் பெற முதலில் அடிக்கடி பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலுள்ள வாழ்க்கை முறையையே மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம். சூழ்நிலையை அமைதி தரும் வகையில் அமைத்தாலன்றி, அமைதி ஏற்படாது இயற்கை அமைதியிலே உள்ள இன்பம் செயற்கை அமைதியிலே கிடைக்காது. நற்செயல்களை நல்ல வழியிலே செய்யச் செய்ய, மனம் தானே அமைதியை அடையும். நன்மையே உருவான இறைவனை மனதால் இனிக்க நினைத்து, வாயால் கசிந்துருகப்பாடி அவன் எண்ணத்திலே தன்னை மறப்பதால் அமைதி நிலைத்து நிற்கும்.