கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் உங்கள் ஆலோசனை என்ன? நமது உறுப்புகளில் புலன்களும், புலன்களில் கண்களும் மிக முக்கியத்துவம் பெற்றவை கண்களின் பார

கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் உங்கள் ஆலோசனை என்ன?

நமது உறுப்புகளில் புலன்களும், புலன்களில் கண்களும் மிக முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து உண்ணல். இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக் கொண்டிருத்தல். பற்களை முறைப்படித் துலக்குதல்.

வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரினால் கண்களில் தெளித்துக் கொள்ளுதல்.

இரவில் படுக்கும் முன் திரிபலா சூர்ணம் (கடுக்காய் - நெல்லிக்காய் - தான்றிக்காய் அடங்கிய இது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 5 கிராம் அளவில் எடுத்து ஒன்றரை ஸ்பூன் (7.5 I.L) த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் பாதுகாக்க இது உதவும்.

வாரந்தோறும் எண்ணெய்க் குளியல் அவசியமா? தேவையற்றதா?

வாரம் இருமுறை - புதன் - சனிக் கிழமைகளில் ஆடவர்களும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்டிரும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ற நல்ல பழக்கம் நம்முன் தலைமுறை வரை ஒழுங்காக நடந்துவந்தது. தற்போது சூழ்நிலை, தொழில், ஆகிய காரணங்களைக் காட்டியும், வீண் செலவு என்ற ஆதாரமற்ற கருத்துக்கு ஆட்பட்டும் இந்த நல்ல பழக்கம் புறக்கணிப்பட்டுள்ளது. உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும் மனமும் இறுகி அயர்ச்சியாக இருக்கும். தூக்கத்துக்கப் பிறகும்ட உடல், மனக் களைப்பு நீங்காமல் மறு நாள் விழித்து எழும்போதும் தொடரும். இதைத் தவிர்க்க சிறந்த உபாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்தான். இப்படிக் குளித்த அன்று மனத்திற்கும் உடலுக்கும் ஒய்வு கிடைக்கிறது. ஆகவே இதைத் தினமும் செய்ய ஆயுர் வேதம் வலியுறுத்துகின்றது.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாமல் போனாலும் குளிக்கும் முன் தலை, காது, கால் இம்மூன்று இடங்களிலும் எண்ணெய் தேயத்து விடுவது அவசியம். தலைக்கு எண்ணெய் தடவுவதால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது. சளி, ஜலதோஷம், மண்டைக் கனம், வரட்சி, பொடுகு, மயிர்க்கால்களில் அழுக்கு தங்கல், அதிக உடற்சூடு இவை நீங்கி கண் தெளிவடையும். கேசம் நன்கு வளரும். நல்ல தூக்கம் வரும்.

எண்ணெயைக் காய்ச்சி ஆறவைத்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டுக் கொள்ளலாம். பஞ்சில் எண்ணெயை நனைத்து அதிகமான எண்ணெயைப் பிழிந்து விட்டுக் காதில் செருகிக் கொள்வது அதிக நல்லது. குளித்தபிறகு பஞ்சு சுற்றிய குச்சியால் புண்படாதவாறு காதினுள் துடைத்து விடுவது அவசியம்.

குளிக்கும் முன் உள்ளங்கால் கால்விரலிடுக்குகள், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தடவித் தேய்த்துவிடுவது அவசியம். உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும், தசைகளும் உள்ள இடம் இவை. உள்ளங்காலிலிருந்து இரு நரம்புகள் மூளைக்கும் அதிலுள்ள கண்களுக்கான நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொள்பவையாகச் செல்கின்றன. காலில் எண்ணெய் தடவித் தேய்க்க கண்கள் தெளியும்.

அலர்ஜி, தும்மல், சளிக்கு நல்ல நிவாரணம் தரக்கூடிய மருந்து என்ன? இவை உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடலாம்? எவற்றைச் சாப்பிடக் கூடாது?

ஏலத்தையும் கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டு அரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். நீர்க்கோர்வை மிகவும் அதிகமாகித் தலைப் பாரம் மிகுந்திருந்தால் இந்தப் பற்றுப் பொருள்களுடன் புழுங்கலரிசி அல்லது அவலைச் சேர்த்து ஒன்றிரண்டு மிளகு கூட்டியும் பற்றுப் போடலாம்.

ராஸ்னாதி சூர்ணத்தை (ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இஞ்சி அல்லது வெற்றிலைச் சாறுடன் குழைத்துச் சிறிது சூடாக நெற்றியில் பற்று இடலாம். வெறும் பொடியை உச்சந்தலையில் தேய்ப்பதும் நல்லது.

மிளகை ஊசியில் குத்தி அதை நெருப்பில் காட்ட வரும் புகையை மூக்கு வழியாக உறிஞ்சினாலும் தலைக்கனம் குறையும்.

தூங்கும்போது தலையணைக்குப் பதில் புழுங்கலரிசி, துவரம் பருப்பு இவைகளைத் துணிப்பையில் அடைத்து வைத்துக்கொண்டு படுப்பதினால் தலைப் பாரம் குறையும்.

கொம்பரக்கு, தும்பைப் பூ, மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், ஓமம், வில்வ இலை, வெற்றிலை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை தலைக்குத் தேய்த்துக் கொள்வதும் வெந்நீரில் குளித்து உடன் தலையைத் துவட்டி சாம்பிராணியைத் தணலில் போட்டுப் புகைபிடிப்பதும் நல்லது.

தூதுவளையை, அன்றாடம் உணவில் சேர்க்கவும். தூதுவளை இலையைக் கூட்டு, பச்சடி, துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம். நெஞ்சு சளி, இருமல், நீர்க் கோர்வை உடல் வலி, புளியேப்பம் முதலியவற்றுக்குத் தூதுவளையை ஒரு பிடி ஆய்ந்து சிறிது பசு நெய்விட்டு வதக்கிச் சாப்பிடலாம். இம் மூலிகையின் முக்கிய குணம் இது. ஷயரோகம், இருமல், ஆஸ்த்துமா, நமைச்சல், மதமதப்பு, சீதளநாடி முதலியவைகளை நீக்கி நுரையிரல்களுக்கு நல்ல பாதுகாப்பும், பலமும் கொடுத்துத் தாதுவைப் பலப்படுத்தும்.

காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். சீரக ரசம், மிளகு ரசம் சூடாக சாதத்துடன் கலந்து உண்ணலாம். மோரைச் சூடாக்கி, மஞ்சள் பொடி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து சாதத்தில்

பிசைந்து சூடாகச் சாப்பிடவும். சுக்கு, மிளகு, திப்பிலியை சம அளவில் நன்கு பொடித்து அரை ஸ்பூன் பொடியில் ஒரு ஸ்பூன் தேன் குழைத்துப் படுக்கும்முன் சாப்பிடவும்.

இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையைக் குறைக்கவும். வெண்டை, பூசணி, பரங்கி, புடலை, வெள்ளரி, சுரைக்காய் ஆகிய காய்களைத் தவிர்க்கவும். குளிர்ச்சியான பழ ரசங்களையும் பானங்களையும் தவிர்க்கவும்.

நோயைக் குணப்படுத்துவதில் ஆங்கில மருந்தைவிட ஆயுர்வேதம் எந்த விதத்தில் வித்தியாசப்பட்டிருக்கிறது?

ஆயுஷோ வேத: ஆயுர் வேத : வேதம் போலவே ஈசுவரன் மூச்சுக் காற்றிலிருந்து வேதத்துடன் சேர்ந்து வெளி வந்துள்ளதால் ஆயுர்வேதம் எனப்படுகிறது.

ஆயுர்வேதம் என்ற வசனத்தில் ஆயுஸ்ஸின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.

சூட்சமம், ஸ்தூலம் என்று ஸகல ஜீவராசிகளடைய உடல் இரு விதம். சூட்சம சரீரத்தை நம்மால் பார்க்க இயலாது. ஸ்தூல சரீரம் நாம் அனுபவிக்கும் பெரிய சரீரம். சரீர - இந்திரியம் (ஐம்புலன்கள்) - மனஸ் - ஆத்மா ஆகிய நான்கு திரவியங்களுடைய கர்மவசத்தினால் ஏற்பட்டுள்ள சேர்க்கையானது ஆயுஸ் எனப்படுகின்றது. இந்த ஸ்தூல தேகத்தைவிட்டு ஜீவாத்மா வெளியேறுவதைத்தான் மனிதன் மரித்தான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் மனிதப் பிறவியை அடைந்துள்ள ஜீவாத்மா மரணம் அடையவில்லை. அவன் எடுத்துக் கொண்ட ஸ்தூல சரீரம்தான் மரித்தது. கிழிந்த வேஷ்டியை எறிந்துவிட்டு வேறு வேஷ்டியை எடுத்துக் கொள்வது போல வயதாகிப் போன ஸ்தூல உடலைவிட்டு வேறு ஸ்தூல உடலை ஜீவன் அடைகிறான். இதைத்தான் மறுபிறவி, புனர்ஜன்மம் என்று பேசுகிறோம். வேறு ஒரு ஸ்தூல உடலை அடையும் வரை ஜீவாத்மா சூட்சும சரீரத்துடன் சேர்ந்தே இருக்கிறான். ஆதலால், ஆயுஸ் எனப்படும் சரீர - ஆத்மாவின் சேர்க்கை ஞானம் ஏற்பட்டு ஆத்மாவிற்கு ஸம்ஸாரததிலிருந்து மோட்சம் சித்திக்கும் வரையில் வரும் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து ஆத்ம சரீரங்களுடைய சம்பந்தம் ஸ்தூல சூட்சும ரூபமாகத் தொடர்கிறது.

ஆயுஸின் அர்த்தம் வரும் பிறவிகளுக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. இந்த சித்தாந்தப்படி, ஆயுஸ்ஸுக்கு வந்த வியாதிகளைப் போக்கும் சிகிச்சையையும், வராமல் காப்பாற்றும் வழிகளையும் போதிக்கும் சாஸ்திரம் ஆயுர்வேதம். இந்தக் கொள்கை கொண்டுள்ள ஆயுர்வேதமானது. மனிதரின் இந்தப் பிறவியில் உள்ள சரீரத்தின் பாதுகாப்பையும், வியாதி சிகித்சைகளை போதிப்பதுடன் மட்டும் நிற்கவில்லை. இந்த மனிதனுக்கு வரும் பிறவிகளிலும் நோய்கள் ஏற்படாமலிருக்கும்படியாக இந்தப் பிறவியிலேயே இதே ஸ்தூல சரீரத்திலேயே செய்கிறது என்ற ஆயுர்வேதத்தின் விசேஷப் பெருமையை விளக்குகின்றது ஆயுர்வேதத்தின் பெயர். மற்ற மருத்துவ முறைகள் எதுவும்ட மனிதனுக்கு புனர்ஜன்மம் உண்டு என்பதையே அறியவில்லை. அப்படியிருக்க, அடுத்த ஜன்ம சரீரத்தின் பாதுகாப்பைப் பற்றி கேள்வி ஏதுமில்லை. இந்த சரீரத்திலேயே வரும்

ஜன்மாவிற்கும் நோய்கள் வராமல் காப்பாற்ற முடியும் என்றறிந்து அதையும் உபதேசிக்கின்றது ஆயுர்வேதம். ஸ்தூல சரீர சிகித்ஸையில் ஆயுர்வேதம் சூட்சமமாக உள்ள வாத பித்த கபங்களையும் கருத்தில் கொண்டு சிகித்சை அளிக்கின்றது.

அதிக வியர்வை வருகிறபொழுது அரிப்புப்போல தடிப்புடன் அரிப்பு ஏற்படும். சிலருக்கு குளிரி காலத்தில் அரிப்பு தோன்றிவிடும். அதை போக்குவதற்கான வழிகள்.

உடல் பலத்திற்குத் தக்கபடி முதலில் லங்கணம் (பட்டினி) இருக்க வேண்டும். பசி ஏற்பட்டதும்ட ஒன்றிரண்டு வேளை கெட்டியான முழு அளவு உணவு சாப்பிடாமல் கஞ்சி, புளிக்காத மோர் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வியாதி நன்றாய் குணமடையும் வரையில் காரம், புளி, உப்பு குறைத்து புளிக்காத மோர், ஆடை நீக்கிய பால், பழைய அரிசி சாதம் சாப்பிடவும். தானியம், மாவுப் பண்டம், எண்ணெய்ப் பண்டங்களை அறவே அகற்ற வேண்டும். கொஞ்சம் அதிக அளவில் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதும், இளநீர் பருகுவதும் மிக நல்லது.

பச்சையாக அருகம்புல், பச்சை மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து தோலில் தடவி, அந்தப் பூச்சு உலரத் தொடங்கும்போது, சுத்தமான நீரினால் அலம்பும். சோப்பு ஒன்றும் தேயக்கூடாது.

ஸர்ஜிகா க்ஷ£ரம் (Soda bicarb) , இந்துப்பு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் குழப்பித் தடவவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு பயிறு அல்லது கடலை மாவை, வடித்த கஞ்சியில் அல்லது சிறிது புளித்த தயிரில் குழைத்து அலம்பவும்.

தனி ஸர்ஜிகா க்ஷ£ரம் ஒன்றை மட்டும் தண்ணீரில் எவ்வளவு பூர்ணமாய்க் கரையுமோ அவ்வளவு கனமாய்க் கரைத்து (Saturated solution) அந்தத் திரவத்தை உடலில் பூசி ஒரு மணி நேரம் இருந்து குளிக்கவும். இந்தப் பூச்சுகள் அனைத்தும் தோல் அரிப்பு, எரிச்சல் எல்லாவற்றையும் நன்றாய் சீக்கிரம் போக்கும். தூர்வாதி தைலம், மஹாதிக்தககிருதம் இவற்றை வியாதி குறைந்த பின்பு சில நாள்கள் பூசிக் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

உள் மருந்துகள் - முதலில் குடல் சுத்திக்குச் சிறு பேதிக்குச் சாப்பிட வேண்டும். இதற்குக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் காய்களின் கஷாயம் (திரிபலா கஷாயம்) காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

அதிமதுரம், இலுப்பைப்பூ, சித்தரத்தை, வெள்ளைச் சந்தனம், செஞ் சந்தனம், நொச்சியின் பட்டை, திப்பிலி இந்த ஏழும் சேர்த்துக் கஷாயம். நன்னாரி வேர், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், அதிமதுரம், சீந்தில்ª £கடி இந்த ஐந்தும் சேர்த்துக் கஷாயம்.

இவைகளில் ஏதாவது ஒரு கஷாயத்தைத் தினம் மூன்று வேளை - வேளைக்கு 3-4 அவுன்ஸ் (ஓர் அவுன்ஸ் 25 I.L.) வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நோயின் சீற்றம் நன்கு குறைந்தவுடன் மஹாதிக்தககிருதம் காலை, மாலையிலும் ஹரித்ராகண்டம் லேகியம் இரண்டு வேளை உணவிற்குப் பிறகும் சாப்பிடவும்.

வயிற்றுப் புண், குடல்வாயு, மலச் சிக்கல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மருந்து என்ன?

பச்சைக் கீரைகள் - அகத்தி, வல்லாரை, வெந்தயம், கொத்துமல்லி, சோம்பு, அரைக்கீரை இவைகள் உத்தமம்.

மணத்தக்காளி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பருப்புக் கீரைகள் தள்ளுபடியல்ல, சாப்பிடலாம்.

பச்சைக் காய்கள் - பாகல், புடல், முத்தின பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ இதமானவை. கிழங்குகள், வெங்காயம், பூண்டு அபத்தியம், தவிர்க்கவும்.

பழங்கள் - மாதுளை நல்லது. நெல்லிக்காய் - பிஞ்சு, முத்தியது, பழுத்தது, உலர்ந்த வத்தல் எல்லா விதத்திலும் மிகவும் நல்லது.

தானியங்கள் - சுமார் ஒரு வருஷம் பழசான நெல்லு புழுங்கிய அரிசி உத்தமம். கோதுமை தள்ளுபடி அல்ல. பாசிப்பருப்பு, மஜூர்டால் நல்லது. கடலை வகைகள், உளுந்து, மொச்சை, பட்டாணி வகைகள் அபத்தியமென்பதால் தவிர்க்கவும். அது போல கேழ்வரகு, கம்பு ,சோளங்கள், முளைக்க வைத்தவை எல்லாம் அபத்தியம்.

ருசி தருபவை - சோம்பு, ஜீரகம்ட, தனியா, மாங்காய், இஞ்சி தாராளமாய்ச் சேர்க்கலாம். இஞ்சிப் பிஞ்சும், மிளகு நெய்யில் வறுத்ததும் மிதமாய்ச் சேர்க்கலாம்.

குடிநீர் - காய்ச்சி ஆறின தண்ணீர், மாமிச உணவுகளை சூப்பாகச் செய்து சாப்பிடவும்.

அபத்தியங்கள் - புதிய அரிசி, எள்ளு, உளுந்து, மொச்சை, கொள்ளு, தயிர், இட்லி தோசை, வடை. எண்ணெய்ப் பட்ஷணங்கள், பழைய புளி, புளித்த பண்டங்கள், பிரெட், பிஸ்கெட் வகைகள், மதுபானம், கருவாடு, மலமூத்திர வேகங்களை அடக்குதல் முதலியன.

குடுல்வாயு மற்றும் மலச் சிக்கலை நீக்க -

பேய்ப்புடல் இலை, சுக்கு, கொத்தமல்லி விதை இவைகளுடைய கஷாயம்.

பேய்ப்புடல், சுக்கு, சீந்தில், கடுகு, ரோஹிணி இவைகளின் கஷாயம்.

ஆடாதோடை இலை, பர்பாடகப்புல், வேப்பிலை, நிலவேம்பு, மையாந்துரை, பேய்ப்புடல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இந்த 9 சரக்குகளுடைய கஷாயம். ஏதேனும் ஒன்றை இளம் சூடாக ஒரே நாளில் 3 வேளை உணவிற்கு முன் சாப்பிடவும். அளவு 1-4 அவுன்ஸ் தனி நெல்லிக்காய் சூர்ணம் 3-6 கிராம் 3 வேளை உணவு சாப்பிட்ட உடனே சுத்தமான தண்ணீருடன் சாப்பிடவும்.

அடி முதுகில் வலி எல்4எல்5 Disk bulging மருந்து என்ன?

முதலில் நல்ல ஒய்வு, கம்பளி போன்ற உஷ்ணப் பாங்கான விரிப்பு கொண்ட

படுக்கையில் உடலை அசைக்காமல் படுத்திருப்பதும் (மல்லாந்து கால்களை நீட்டி) நல்லது. தசைகள் விறைத்திருப்பதும் தசைகளை இயக்கும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தமும்தான் இந் நோய்க்குக் காரணம்.

தத்தூராதி தைலம் - மிக எளிய முறை. கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தையை இடித்துப் பிழிந்த சாறு 200 IL. நல்லெண்ணெய் 400 IL ஆகிய இரண்டையும் அடுப்பிலேற்றிச் சாறு சுண்டிக் கசண்டாகும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். சற்று ஆறியதும் கட்டிச் சூடம் 10 கிராம்ட தூளாக்கிப் போட்டு கலக்கி விடவும். இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவிக் கோதுமைத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்கவும். ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வையையும் எண்ணெய் பிசுக்கையும் துணியால் துடைத்துவிட்டு ஓய்வு தரவும். பிறகு மெல்லிய பூச்சாக இம் மருந்தைத் தடவி விடுவதும் நல்லதே. சிலருக்குச் சூடான நமைச்சல் தரும். அவர்களது தேகவாகு அப்படி. அப்போது இதை நிறுத்தவும்.

சசிஸார தைலம் - ஓமம் 400 கிராம், 4 லிட்டர் தண்ணீரில் கஷாயமிட்டு 1 லிட்டர் மிதமாகக் காய்ச்சி முன் போல எண்ணெய்யுடன் காய்ச்சி எடுத்துக் கற்பூரம் கலந்து கொள்ளவும். தத்துராதி தைலம் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இது நல்லது.

உள் மருந்துகள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

சத்துள்ள உணவு, சத்தில்லாத உணவு என்று நாம் எப்படி அறிவது? சில உணவுப் பொருள்கள் சிலருக்கு அலர்ஜியாவது ஏன்?

சரீரத்தின் சுபாவத்தினால் உணவு சத்துள்ளதாகவும், சத்தில்லாததாகவும், அலர்ஜியாகவும் ஆகிறது. வாதப் பிரகிருதி, பித்தப் பிரகிருதி, கபப் பிரகிருதி என்று மூன்று விதங்களாக நமக்கு உடல் அமைகிறது. ஆரோக்கியநிலை, நோய் நிலை இரண்டிலும் பிரகிருதிக்குத் தனிப்பட்ட பத்தியங்களை உபயோகிக்க வேண்டும்.

வாதப் பிரகிருதி உள்ளவருக்கு உடல் வறட்சி, தொட்டால் குளிர்ச்சி, சொரசொரப்பு, கல்லுக் குடல் வாகு (மலம் இறுக்கமதிகம்) . இவருக்குக் காரணம், துவர்ப்பு, கசப்புச் சுவை கொண்ட மிளகு, மிளகாய், பாகல், சுண்டைக்காய் முதலியவை அபத்தியம். பொதுவாய் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, பால், தயிர், வெண்ணெய், பலா, இனிப்பு மாதுளை, வாழை, மா, திராட்சைப் பழங்கள், அரிசி, கோதுமை, உளுந்து, குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரும் நெய் போன்றவை சத்துள்ள உணவாகும். அதிக உடற்பயிற்சி, புணர்ச்சி, இரவு கண்விழித்தல் போன்றவை அபத்தியம். மாமிசம், மீன், முட்டை நல்லதே.

பித்தப் பிரகிருதியில் உடல்சூடு, மிருதுவான குடல், செம்பட்டை முடி, நல்ல உடல்நிறம் கொண்டவராக இருப்பார். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் பத்தியம், புளிப்பு, காரம், உப்புச் சுவை அபத்தியம், மாதுளை, நெல்லிக்காய், வெல்லத்துடன் கலந்த எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, கடைந்த புதிய மோர் ஆகியவை சத்துள்ள உணவாகும்.

சுப பிரகிருதியில் உடல்குளிர்ச்சி, தோலில் எண்ணெய்ப் பசை அதிகம். உடல் வழவழப்பு, நல்ல குரல்வளம் கொண்டவராக இருப்பார். கப வியாதிகள் அதிகம் அடிக்கடி பீடிக்கும், சீக்கிரம் உடல் பருமனாகி விடும். கசப்பு, துவர்ப்பு, காரச்சுவையுள்ள காய்கறிகள் பத்தியம், நெய், வெண்ணெய், ஆடைத்தயிர், வெல்லம், கறும்புச்சாறு அபத்தியம் வெறும் வயிற்றில் ஆறிய தண்ணீரில் தேன்கலந்து குடிக்க உடல் இளைக்கும். பகல் தூக்கம் மிகக் கெடுதல், உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தானியங்கள் பத்தியம். அரிசி, கோதுமைகளை விட யவம் என்னும் வார் கோதுமை பத்தியம். இவை அனைத்தும் சத்தான உணவாகும். மாமிசத்தை மிதமாய் உண்ணலாம். மீன், முட்டையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆக, பிரகிருதிகளால்தான் உணவு சத்தாகிறது. அல்லது சத்தில்லாமல் போகிறது அல்லது அலர்ஜி ஆகிறது.

நெஞ்சுவலி வந்தவர்கள் அதிகம் கோபப்படுவது ஏன்? உடல் ஆரோக்கியம் பற்றிய குறிப்பு என்ன?

நெஞ்சுவலி எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். காரணமில்லாமல் காரியமில்லை என்பது நோய்க்கும் பொருந்தும். காரியமாகிற நோய்க்கு மருந்தைச் சாப்பிட்டுக் காரணத்தைத் தொடராமலிருத்தல் நலம். ஆரோக்கியம் மேம்படக் போதுமான காலம் உறக்கம் தேவையானது. இவர்களுக்குத் தூங்கி எழும்போது உடல் சுறுசுறுப்புடன் மனமும் தெளிவடைந்திருந்தால் அனாவசியமாகக் கோபம் வராது. மேலும் ஆரோக்கியமானதும், எளிதில் ஜீரணமாவதுமான உணவை அளவுடன் மிதமாக உண்ணுவதும், மனத்தில் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் அமைதியாகவும் சுவைத்துச் சாப்பிடுவதும், முன் உண்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை சாப்பிடுவது என்ற உறுதியும் கொண்டவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மலம், மூத்திரம் முதலியவைகளின் உந்துதல் ஏற்பட்டதும் அனாவசியமாகக் கட்டுப்படுத்தாமல் அவைகளைக் கழித்தலும் உடலாலும் மனத்தாலும் செய்ய வேண்டிய பணிகளை அவை களைப்புறும் அளவிற்கு அதிகமாகச் செய்யாமலும் சோம்பலுக்கு இடம் கொடுக்காமலும் இவர்கள் பழகினால் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

ரத்தக் குழாய் விரிவடைகிறது. தடுக்க என்ன வழி?

ஆடாதோடை என்னும் பச்சிலை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொண்டை, நுரையீரல் இவைகளில் அழற்சி, நீர்க்கோர்வை, ரத்தக் கொதிப்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இது மிகவும் பழக்கத்திலுள்ளது. இதன் வேர்ப்பட்டை, இலை, பூ மூன்றும் மருந்தாகக் கூடியவை. இதன் வெள்ளை நிறமள்ள பூ சிற்சில மாதங்களில்தான் கிடைக்கும். தூதுவளை, இம்பூறா, கண்டங்கத்திரி, முகமுசுக்கை, ஆடாதோடை இவ்வைந்தும் நுரையீரல் நோய்களில் பயன் தரும் மூலிகைகள் புண்ணை ஆற்றும் சக்தியும் ரத்தம் பெருகுவதைத் தடை செய்யும் சக்தியும் இருப்பதால் ரத்தமாகக் காறி உமிழ்வதும் குறைகிறது. இலை, வேர்ப்பட்டை, பூ

இந்த மூன்றும் ரத்தத்திலுள்ள கொதிப்பைக் குறைத்து, வியர்வையையும் சிறு நீரையும் அதிகமாக்கி ஜ்வரதாபத்தை அடக்குபவை.

இலையைத் தண்ணீர் விட்டு இடித்த சாறு அரை அல்லது ஒரு அவுன்ஸ் (25 I.L.) , தேன், பனங்கல்கண்டு, சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். வேரையும், இலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி இட்டிலித் தட்டில் வைத்து அவித்து வெந்ததும் கசக்கிப் பிழிந்து எடுத்த சாறு 8 அவுன்ஸ், பனங்கல்கண்டு, சீனாக் கல்கண்டு 250 கிராம் சேர்த்து நன்றாகத் தேன் பதம் வரும் வரை இளம் தீயில் காய்ச்சி ஸிரப்பாக (பானகமாக) எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பானகம் சிறு குழந்தைகள், பெரியோர்கள் எல்லோருக்கும் வரும் உஷ்ண இருமல், புகைந்த இருமல், சளிக்கட்டின் போது இருமியும் சளி வெளிவராத நிலை. நுரையீரல்களில் புண் ஏற்பட்டு இருமும் போதும் காறித் துப்பும் போது ரத்தம் வருதல் இவைகளில் அரை டீஸ்பூன் அளவு சப்பிச் சாப்பிட நல்ல குணம் கிடைக்கும். மயிர் போன்ற மெல்லிய ரத்தக் கசிவுகளை இந்தப் பானகம் உடனே நிறுத்தும். அதனால் சீத ரத்த பேதி, ரத்த மூலம், மாதவிடாயில் அதிக உதிரப் போக்கு இவைகளிலும் இதைச் சாப்பிடலாம்.

இலைகளை உலர்த்திப் பெருந்தூளாக்கிக் கொண்டு, பீடி இலையில் சுற்றிப் புகை குடிக்க, சளிக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சுத் திணறல் இவை குறையும்.

உடல் எடையைக் குறைக்க என்ன வழி?

நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

வராதி (Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 IL அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 IL) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 IL அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 IL - 30 IL வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 IL தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்' கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி.

புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். நீங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச் சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.

வலது குதி காலில் வலி நீங்க என்ன வழி?

குதி காலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எக்ஸ்ரே மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால்

ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.

சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 I.L.) . சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர்ப் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.

சித்த மருந்துகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளுக்கும் என்ன விச்த்தியாசம் உள்ளது?

'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒர் உயர்ந்த எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்த மகான்களான முனிவர்களால் எழுதப்பட்ட மருத்துவ முறைகள்தான் சித்தமும், ஆயுர்வேதமும். பூத உடலை ஜிவாத்மா அணிந்த கொண்டிருப்பதன் லட்சியம் அறம்- பொருள் - இன்பம் - வீடு (மோட்சம்) ஆகியவற்றைப் பெறுவதற்காகத்தான் இந்த நான்கிற்கும் இடையூறு விளைவிக்கின்ற நோய்களால் மக்கள் துன்புற்றிருக்க, அதைக் கண்டு வருந்திய முனிவர்கள் மூலிகைகளை முக்கியமாகக் கொண்ட நோய் தீர்க்கும் மருந்துகளை நமக்கு உபதேசித்தனர். எத்தனை யுகங்கள் வந்தாலும் ஆதியும் அந்தமுமில்லாத இந்த சித்த ஆயுர்வேதம் என்னும் அமுதத்தை தன்னலம் ஏதுமின்றி மக்களின் மேன்மைக்காக நமக்கு எடுத்துரைத்த முனிவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இந்த இரு வைத்திய முறைகளுமே சாதாரண மனிதர்களால் இயற்றப்படாததால் இவை இரண்டுமே மிகச் சிறிந்த மருத்துவ முறைகள்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.