மூலிகை அறிவோம் - நந்தியா வட்டை Latin Name - Tabermaemontana divaricata English - East Indian rosebay Sanskrit - (Nandivrksah) பாரதமெங்கும் விளையும் செடியாகும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டி

மூலிகை அறிவோம் - நந்தியா வட்டை

Latin Name - Tabermaemontana divaricata

English - East Indian rosebay

Sanskrit - (Nandivrksah)

பாரதமெங்கும் விளையும் செடியாகும். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர். பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 - 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை.

வேர், பூக்கள், மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.

வேர் கசப்பான சுவைகொண்டது. சிறிது துவர்ப்புச் சுவையும் இதிலுண்டு. உடல் சூட்டைக் கிளப்பி சீராக்கும், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். பல் வியாதியிலும், மங்கலாக பார்வை உள்ளவர்களுக்கும் சிறந்தது வேர். பக்கவாதம், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சுருக்கம், வாயு தோஷத்தின் சீற்றம், பூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவைகளில் வேர் சிறந்தது பூக்கள் குளிர்ச்சியானவை, வாசனையுடன் கூடியவை, கண் எரிச்சல், கண் சம்பந்தப்பட்ட நோய்களிலும், தோல் வியாதிகளிலும் பூ சிறந்தது. பால் குளிர்ச்சியும், புண்களில் ஏற்படும் நீர்க்கசிவுகளிலும் பயன்படுத்த உகந்தது.

வேரின் தோல் துவர்பபு கசப்புச்சுவை உடையது. வெந்நீர் விட்டரைத்து வெறும் வயிற்றில் இருவேளை நக்கிச் சாப்பிட அனாவசியமாக அடைந்து கிடக்கும் குடல் அழுக்குகளை அகற்றி- விடும். மலத்தைக் கட்டும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் வியாதிகளிலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையையும், பூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளிலும் வேர்தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது. சூடான புளித்த மோரில் வேர்த்தோலை அரைத்த பூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்களில் பற்று இடலாம். வெந்நீரில் அரைத்து உள்ளுக்கும் சாப்பிடலாம். அதுபோல் வாய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களில் வெந்நீரில் அரைத்து கரைத்த வேர்த்தோலை வாய் கொப்பளிப்பதால் (வாய் மற்றும் பல் உபாதைகள் நீங்கிவிடுகின்றன. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற நிலைமையில் வேர்த்தோலை நன்னாரி, கடுக்காய், சுக்கு கஷாயத்தில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுதுபோல் அரைத்து வெந்நீருடன் பருக நல்ல பலனைத் தரும்.

நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆற வைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன. பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்.