ஸ்வரஸ கல்பனை சிறு கைவைத்ய முறைகளை நம் முன்னோர்கள் கிராமங்களில் கடைபிடித்து வந்தனர் அவ்வகை வைத்ய முறைகளால் நோயின் ஆதிக்கத்தை அவர்களால் பெருமளவு குறைக்க முடிந்தத

ஸ்வரஸ கல்பனை

சிறு கைவைத்ய முறைகளை நம் முன்னோர்கள் கிராமங்களில் கடைபிடித்து வந்தனர். அவ்வகை வைத்ய முறைகளால் நோயின் ஆதிக்கத்தை அவர்களால் பெருமளவு குறைக்க முடிந்தது. நோயின் தாக்கத்தை குறைத்த பிறகே அவர்கள் வைத்யரை நாடினர். இன்று அவ்வகை வைத்ய முறைகளை நாம் மறந்து போனதால் சிறு உபாதைகளைக் கூட சரி செய்து கொள்ளத் தெரியாமல் மருத்துவரிடம் ஓடுகிறோம். வீட்டிலேயே செய்து சாப்பிடும்படியான சில வைத்ய குறிப்புகளை பார்ப்போம்.

கஷாயம் வைத்து மருந்துகளை அருந்துவது சுலபமானது. கஷாயம் ஐந்து வகையில் தயாரிக்க முடியும். அவை -
1. ஸ்வரஸம்
2. கல்கம்
3. க்வாதம்
4. ஹிமம்
5. பாண்டம்

இவற்றுள் ஸ்வரணத்தை விட கல்கமும், கல்கத்தினும் க்வாதமும், க்வாதத்தினும் ஹிமமும், ஹிமத்தை விட பாண்டமும் முறையே எளிதில் ஜீரணிக்கக்கூடிய கணம் மேலிட்டவையாகும்.

சுத்தஸ்வரஸம் - பதனழியாத மூலிகைச் செடிகளைப்புதிதாகக் கொண்டு வந்து உடனே இடித்து, வஸ்திரத்திலிட்டுப் (துணியில்) பிழிந்தெடுப்பதால் வரும் சாறானது ஸ்வரஸம் எனப்படும்.

நிசோஷித ஸ்வரஸம் - முற்கூரிய ஸாதாரண ஸ்வரஸத்திற்குப் யோகமான மூலிகைகள் உலந்திருந்தால் அவற்றைச் சூர்ணம் செய்து- கால் கிலோ அளவு சூர்ணத்தை இருமடங்கு ஜலத்திற் போட்டு, ஓர் இராப்பகல் முடிய ஊற வைத்து, பிறகு வடிகட்டியெடுத்தாலும், சுத்த ஸ்வரஸம் போன்றிருக்கும். இது இரவெல்லாம் ஊற வைப்பதால், நிசோஷித ஸ்வரஸம் எனப்படும்.

பக்வ ஸ்வரஸம் - ஸ்வரஸத்திற்கான மூலிகைகள் ஈரமாகவே கிடைக்காவிட்டால் உலர்ந்தவைகளை சேகரித்து, எட்டு மடங்கு ஜலத்தில் இடித்துச் சேர்த்து, பக்குவம் செய்து, நாலில் ஒரு பங்காக பற்ற வைத்து, வடிகட்டி ஸ்வரஸத்திற்குப் பதிலாயுபயோகிக்கலாம்.

ஸ்வரஸங்களையுபேயாகிக்கும் அளவு - ஸ்வரஸத்தை சுலபத்தில் ஜீரணிக்க முடியாதையாகையால் அதை பொதுவாக அரைப்பலம் (30 IL) உபயோகிக்கலாம். நிசோஷித ஸ்வரஸத்தையும், பக்வ ஸ்வரஸத்தையும் ஒரு பலப்பிரமாணம் (60 IL) உட்கொள்ளலாம்.

ஸ்வரஸத்தில் சேர்க்கக்கூடிய சில பொருட்களின் அளவு - தேன் சர்க்கரை, ஜீரகம், உப்பு, நெய், தைலம் மற்றும் பலவித சூர்ணங்கள் இவை முதலியவற்றை அவசியமானால் ஸ்வரஸத்தில் தனித்தனியே அரைக்கால் பிரமாணம் சேர்க்கலாம்.

அம்ருதா ஸ்வரஸம் - சீந்திற்கொடியிலிருந்து ஸ்வரஸம் பிழிந்தெடுத்து அதில் தேன் கலந்து உட்கொள்ள ஸகல சர்ககரைவியாதிகளும் தீரும்.

தாத்ரீ ஸ்வரஸம் - நெல்லிக்கனியிலிருந்து ஸ்வரஸமெடுத்து, அதில் மஞ்சளின் சூர்ணத்தைக் கலந்தாவது, தேன் சேர்த்தாவது சர்க்கரை வியாதி தீருவதற்கு உட்கொள்ளலாம்.

வாஸா ஸ்வரஸம் - ஆடாதோடையின் ஸ்வரஸத்தில் தேன்சேர்த்து உட்கொண்டால், இரத்தவாந்தி, இரத்தபேதி, ஜ்வரம், இருமல், க்ஷய ரோகம், காமாலை, கபநோய்கள், பித்தத்தின் சீற்றம் ஆகியவை நீங்கும்.

த்ரிபலா ஸ்வரஸம் முதலியன - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இம்மூன்றின் ஸ்வரஸத்தையும் ஒருமிக்கச் சேர்த்து தேன் கலந்து உட்கொண்டாலும் மரமஞ்சள் ஸ்வரஸம், வேப்பிலை ஸ்வரஸம், சீந்திற் கொடி ஸ்வரஸம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேன்விட்டு உபயோகித்தாலும் காமாலை தணியும்.

துளஸீஸ்வரஸம் முதலியது - துளஸியிலைச் சாற்றிலாவது, பெருவாகையிலை ஸ்வரஸத்திலாவது, மிளகுப் பொடியைக் கலந்துபயோகித்தால் முறைக்காய்ச்செலன்னும் விஷம ஜ்வரங்கள் தீரும்.

ஜம்பூபல்லவ ஸ்வரஸம் முதலியது - நாவல், மா, நெல்லி இவற்றின் தளிர்களிலிருந்து ஸ்வரஸம் பிழிந்தெடுத்து, அவற்றில் எதேனுமொன்றில் தேன், நெய், பால் இவற்றுள் எதையாவது சேர்த்து உட்கொள்ள உக்கிரமான இரத்தபேதி நிவ்ருத்தியாகும்.

பப்பூலாதி ஸ்வரஸம் - கருவேலந்தளிர் ஸ்வரஸமாவது, பெருவாகை, வெட்பாலை இவற்றின் பட்டைகளின் சாறாவது உட்கொள்ளப்படுமானால் ஸகல வித பேதிகளும் நின்றுவிடும்.

ஆர்த்ரக ஸ்வரஸம் - இஞ்சியின் ஸ்வரஸத்தில் தேன் கலந்து உட்கொள்ள விதைவாதம் எனும் அண்டவாயு நீங்கும். ஆஸ்த்மா, இருமல், ருசியின்மை, ஜலதோஷம் இவையும் தீரும்.

பீஜபூர ஸ்வரஸம் - கொடிமாதளம் பழத்தின் ஸ்வரஸத்துடன் தேன் கலந்து உபயோகிக்க விலாப்பக்க வலி, இருதய நோய்க்ள், சிறுநீர்ப்பை வியாதிகள், கடுமையான குடலைப்பற்றிய வாயு இவை நிவிருத்தியாகும்.

சதாவரீ கந்யா ஸ்வரஸங்கள் -
1) தண்ணீர் விட்டின் கிழங்கின் ஸ்வரஸத்தோடு தேன் கலந்து உபயோகிக்க வயிற்றில் பித்த சூலை போகும்.
2) . சோற்றுக் கற்றாழைச் சாற்றில் மஞ்சட்பொடி சேர்த்து உட்கொள்ள மண்ணீரல் நோய், அபசீ எனும் கட்டி உடைந்து புதிய கட்டி கிளம்பும் வியாதியும் தீரும்.

அலம்புஷா ஸ்வரஸம் - பேய்ச்சுரையின் ஸ்வரஸத்தை இரண்டு பலம் (120 IL) அளவில் பருகினால், அபசீ, கண்டமாலை எனும் கழுத்து, அக்குள், தொடையிடுக்கு கட்டிகள், காமாலை இவை நீங்கும்.

பிராஹ்மீ ஸ்வரஸம் முதலியது - பிரமியலை, நீற்றுப் பூசணி, வசம்பு, சங்குபுஷ்பம் இவற்றின் ஸ்வரஸங்களுள் ஏதேனுமொன்றில் தேன், கோஷ்டம் எனும் கொட்டம் இவற்றைச் சேர்த்து உட்கொள்ள ஸகல உன்மாத (பித்து பிடித்த நிலை) ரோகங்களும் தீரும்.

கூஷ்மாண்ட ஸ்வரஸம் - நீற்றுப் பூசிணிக்காய் ஸ்வரஸத்தை வெல்லம் கலந்து உபயோகித்தால், பதனழிந்த வரகு தானியத்தாலான உணவுகளை உட்கொண்டதால் நேரிட்ட வெறி நிவ்ருத்தியாகும்.

காங்கேருகீஸ்வரஸம் - பேய்ப்பீர்க்கம் வேரின் ஸ்வரஸத்தை சுத்தி முதலியவற்றால் வெட்டுண்ட அவயத்திலுள் புண்ணின் துவாரத்தில் விட்டால், வலியை சிறிதும் உணராமலிருக்கலாம்.