ராத்திரி ஆரோக்யம் இ ன்று வாழ்க்கை முறை விசித்ரமான நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது, உத்யோகத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பகலில் உறங்கி இரவில் வேலைக்கு

ராத்திரி ஆரோக்யம்

ன்று வாழ்க்கை முறை விசித்ரமான நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது, உத்யோகத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பகலில் உறங்கி இரவில் வேலைக்கும் செல்வோர் பலர். Night shift என்று கூறி எத்தனை போலீஸ்காரர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், தொழிற்சாலை ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோர் உடலைப்பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை காப்பாற்ற உழைக்கிறார்க!ரவில் கண் விழித்து பகலில் தூங்குவது என்பது ஆரோக்யத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். கேட்டால், என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி செய்ய நேரிடுகிறது என்கின்றனர். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீட்டிற்கு வருபவர் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே ஆனால் அதிலும் பலர் ராத்திரியில் வெகுநேரம் கண்விழித்து உணவின் சுவைகூட அறியாத வகையில் தொலைக்காட்சி அல்லது கேளிக்கைகளில் மனதைச் செலுத்தி தற்காலிக சுகத்தை நிரந்தர சுகமாகக் கருதி இரவின் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர்.

ராத்திரியிலும் மனிதனால் ஆரோக்யத்தை பெற முடியுமா? என்றால் பதில் முடியும்தான் எப்படி என்பதை சற்று ஆரோய்வோம், முதலில் உணவின் கார்யத்தி -ல் சிரத்தை வேண்டும். மாலையில் சந்தியாகாலம் போய் இரவு கவ்வியவுடன் அதிகம் தாமதிக்காமல் எளிதில் ஜீர்ணமாகக் கூடிய உணவை சூடாக சாப்பிட வேண்டும். இதற்கு வடிகஞ்சி, பார்லி கஞ்சி, கூழ், சாதம், போன்றவை பயன்படும்.

ஒரு டம்பளர் (250 கிராம்) அரிசிக்கு, 20 டம்பளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து. 2-3 டம்பளர் அளவில் குடிப்பதால் நாம் பெறும் பயன்கள் - வாதத்தை இயற்கை நிலைக்குக் கொண்டு வருதல், நாவறட்சி, உடல் வாட்டம், எளிதில் ஜீர்ணமாகுதல், தாதுக்களை சமமாக்குதல், தசை நார்களை மிருதுவாக்குதல், வியர்வையையுண்டாக்குதல் போன்றவையாகும்.

ஒரு டம்பளர் புழுங்கலரிசியில் 14 டம்பளர் தண்ணீர் விட்டு நன்கு அரிசி வேகும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து குடிப்பதால் பசி, தாகம், உடல் வாட்டம், உடல் இளைப்பு, வயிற்று நோய், ஜ்வரம் இவற்றை நீக்கும். மலத்தை எளிதில் வெளிப்படுத்தும், பத்தியமானது, பசியை நன்கு தூண்டும். எளிதில் ஜீர்ணமாகிவிடும்.

1:8 என்ற விகிதத்தில் அரிசியும் தண்ணீரையும் கொதிக்கவிட்டு, தண்ணீருடன் அரிசியை குழைத்து கூழாக்கிக் குடித்தால் - மலத்தைக்கட்டும், மனதுக்குகந்தது, நாவறட்சியை போக்கும், பசியைத் தூண்டும், நன்மை பயப்பது, புண்கள், கண்நோய், உடல் இளைப்பு ஆகியவற்றை குணப்படுத்தும்.

1:4 என்ற விகிதத்தில் அரிசியும் தண்ணீரும் கலந்து வேக வைத்து, கஞ்சியை வடித்து, சாதத்தை சூடாக பயத்தம் கஞ்சி, கொள்ளு ரசம் அல்லது உளுத்தம் கஞ்சி, நெல்பொரிக்கஞ்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் சிறிது நெய் கலந்து சாப்பிட எளிதில் ஜெரித்து விடும். அரிசியை வறுத்து சாதம் வடிப்பது மிக எளிதில் ஜெரித்து விடும். பிறகு நூறடி நடந்து இடதுபக்கம் சரிந்து படுக்க வேண்டும்.

இப்படி இதமான உணவை உட்கொண்டு அமைதியான மனதுடன் சுத்தமாக இருந்து, ஆண்டவனை நினைத்துக் கொண்டு தனது படுக்கைக்குச் செல்ல வேண்டும். இன்று மனிதர்களில் பலர் பணத்தை விட அன்பிற்கும் அமைதிக்கும்தான் ஏங்குகின்றனர். பணம் இவ்விரண்டையும் ஒருவருக்கு சம்பாதித்துத் தந்தால் அவருடைய தன சம்பாத்யம் பூரண பலனைத் தருவதாகத்தான் எண்ண வேண்டும். வீட்டில் குழந்தைகளிருந்தால் அவர்களை கொஞ்சி மகிழ்வதும், உறவினர் மற்றும் நன்பர்களிடமும் தூய அன்பை வெளிப்படுத்தத் தெரிந்தவருக்குத்தான் அன்பும் அமைதியும் ஒருங்கே பெற்றவராவார்.

படுக்கச்செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்கிளை வரிசைப்படுத்தி மனதில் கொண்டு வந்து தான் செய்த தவறுகளையும் நன்மைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தவறுகளை இனி செய்வதில்லை என்ற திடமான எண்ணத்துடன் படுக்கச் செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் கூறுவார்கள். ERR is Human, No Man is Infaliable (without mistakes) என்று.

நமது படுக்கையறை சுத்தமா இருக்க வேண்டும், காற்றோட்டத்துடன் கூடிய நறுமணமான படுக்கை அறை நல்ல தூக்கத்திற்கு வித்திடுகிறது- அடுத்தவர் மேல் இடித்துக் கொண்டு படுக்கும் அளவுக்கு அதிக நபர்களுடன் கூடிய அறையில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.

குப்புறப்படுத்தல் தவறான Posture ஆகும். இடது பக்கம் சரிந்து படுத்தலே நலம் தரும், தலையை வடக்கு நோக்கி வைக்காமல் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்.

நவீன மருத்துவர்களின் கூற்றான தலையணையை தவிர்த்து படுப்பதால் தலைக்கு ரத்த ஓட்டம் சீராகயிருக்கும் என்ற கருத்தை ஆயுர்வேதம் ஆமோதிக்காது. அதிக உயரமான தலையணை வைக்காமல் தோள்ப்பட்டையும் தலையும் சமமாக வரும்படியான தலையனை வைத்து உறங்க வேண்டும், படுக்கை நன்கு பரப்பப்பட்டு, மேடு பள்ளமில்லாத, மெத்தென, இலவம் பஞ்சு அடைத்த முழங்கால் உயரமுள்ள கட்டிலில் விரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இடுப்பு வலியுள்ளவர்கள் தரையில் கோரைப்பாயில் கம்பளி விரிக்கப்பட்டு அதன்மேல் மல்லாந்த நிலையில் கால்களை நன்கு நீட்டி படுக்க வேண்டும். இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள Disc Bulging, Prolapse `போன்றவை இவ்வகை படுக்கை மூலம் குறைய வாய்ப்புண்டு.

நம்மை விட வயதில் பெரியவர், தாய் தந்தையர், உறவினர், நம்மிலும் மேன்மையானவர் போன்றவர்களுக்கு எதிரில் கால் நீட்டாமல், கெட்ட கனவுகளுக்கு இடம் தராமல் தர்ம சிந்தனையுடன் உறங்க வேண்டும். படுத்த பிறகுதான் பலர் அரட்டையில் இறங்குகின்றனர். இது தவறாகும். "சுப ராத்திரி" என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டபிறகு ஏதும் பேசாமல் அமைதியாக உறங்கும் வழக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும்.