கஷாய கல்பனை எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் காய்ச்சி நம்மால் வ்யாதிகளை போக்கிக் கொள்ள முடியும் கஷாயம் காய்ச்சுவது எவ்வாறு? எந்

கஷாய கல்பனை

எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் காய்ச்சி நம்மால் வ்யாதிகளை போக்கிக் கொள்ள முடியும். கஷாயம் காய்ச்சுவது எவ்வாறு? எந்தந்த மூலிகைகளின் சேர்க்கை எவ்வகையான வியாதிகளைப் போக்கும்? போன்றவற்றைப் பார்ப்போம்.

கஷாயத்திற்கு உபோயகமான ஒரு பலம் (60 கிராம்) திரவியத்தை இடித்து பதினாலு மடங்கு (சுமார் 1 லிட்டர்) ஜலத்தில் சேர்த்து மட் பாத்திரத்தில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டியெடுக்க வேண்டும். இக்கஷாயத்தை இளஞ் சூடாயிருக்கையிலேயே உட்கொள்ளவும். இவ்விதம் பக்குவம் செய்யப்படும்முறை 'க்வாதம்', 'ச்ருதம்', 'கஷாயம்', 'நிர்யூஹம்' என்கிற பெயர்களால் வழங்கப்படும்.

கஷாயத்தை உட்கொள்ளும் அளவு - கஷாயத்தை நன்றாக பக்குவம் செய்து, அதற்கு முன் புஸித்த ஆஹாரத்தின் ரஸம் (உணவுகளையுண்ட பின்பு, அவற்றின் திப்பிகளெல்லாம் கீழ்க்குடலில் மலமாக்கப்பட்டபின், இரத்தத்திற் சேருவதற்கேற்றதாய் மிகுந்துள்ள வெண்மையான திரவபதார்த்தம் 'இரஸம்' எனப்படும்.) நன்கு ஜீர்ணமான பிறகு கஷாயங்களை பொதுவாக ஒரு பலம் (60 IL) அளவில் உட்கொள்ளலாம்.

கஷாயத்தில் பதார்த்தங்களைச் சேர்க்க வேண்டிய அளவு -

கஷாயத்தில் சர்க்கரை சேர்க்கவேண்டுமானால், வாததோஷத்தின் சீற்றத்தில் நான்கில் ஒரு பங்கும், பித்த மேலீட்டில் எட்டில் ஒரு பங்கும், கபத்தினுடைய சீற்றத்தில் பதினாறில் ஒரு பங்கும் சேர்க்கலாம். தேன் சேர்க்க வேண்டுமானால், வாதத்தில் பதினாறில் ஒரு பங்கும், பித்த்வியாதியில் எட்டில் ஒரு பங்கும், கபவியாதியில் நான்கில் ஒரு பங்குமாக முறையே முற்கூறியதற்கு மாறாகச் சேர்க்கவேண்டும்.

கஷாயத்தை தயார் செய்வதற்கான குறிப்பு - பாத்திரத்தின் முகத்தை மூடிவிட்டுக் காய்சினால் அதில் சேர்ந்துள்ள ஜலம் நன்றாக சுண்டாது, ஆகவே கஷாயம் காய்ச்சும் போது பாத்திரத்தின் வாயை மூடாமலிருக்கவேண்டும்.

டூச்யாதி கஷாயம் - சீந்திற்கொடி, தனியா, வேம்பு, செஞ்சந்தனம், ஓரிலைத்தாமரை இவற்றிற்கு 'குடூச்யாதி கணம்' எனப்பெயர், இச் சரக்குகளைக் கொண்டு பக்குவம் செய்யப்படும். கஷாயத்தையுபயோகிக்க ஸகல ஜ்வரங்களும் தீருமெனப்படுகிறது. மேலும் நாவறட்சி, ஹருல்லாஸம் எனும் இருதயப்படபடப்பு, சரிரவேக்காடு, வாந்தி, ருசியின்மை இவையும் தீரும், பசியை நன்கு தூண்டிவிடும்.

க்ஷ§த்ராதி க்வாதம் - கண்டங்கத்திரி, நிலவேம்பு, சுக்கு, ஆடாதோடை, தாமரைக்கிழங்கு இவற்றின் கஷயாத்தையுட்கொள்ள ஜ்வரங்கள் அனைத்தும் சமநமாகும்.

சமூல க்வாதம் - சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, நெரிஞ்சி, பில்வம் தழுதாழை, பெருவாகை, பெருங்குமிழன் பாதிரி இம்மூலிகைகள், பத்துக்கும் 'தசமூலம்' எனப்பெயர். இந்த தசமூலத்தைக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் திப்பிலிப்பொடியைச் சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் வாதஜ்வரம், மிதமிஞ்சிய குளிர் நடுக்கம், தலைச்சுற்றல, அதிக வியர்வை, இருமல், மூச்சுத்திணறல், இருதயப்பிடிப்பு, கழுத்தை அசைக்க முடியாத பிடிப்பு, விலாப்பக்கங்களில், சோம்பல், தலைவலி இவை தீரும்.

நிதிக்திகாதி க்வாதம் - கண்டங்கத்திரி, சீந்திற்கொடி, சுக்கு இவற்றை க்வாதமிட்டு திப்பிலிப்பொடியை அக் கஷாயத்தில் சேர்த்து பானம் பண்ணலாம். இதனால் மூச்சுத்திணறல், இருமல், வாய்கோணிப்போகும் அர்த்தம், ஜலதோஷம், ருசியின்மை, தொண்டைக்கம்மல், சூல நோய், அஜீர்ணம் இவை நிவ்ருத்தியாகும்.

வத்ஸகாதி கஷாயம் - வெட்பாலரிசி, அதிவிடயம், பில்வவேர், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் இவற்றைக் கஷாயம் காய்ச்சியுபயோகித்தால் அஜீர்ணத்துடன் கூடிய பேதி, நாட்பட்ட வலியுடன் கூடிய இரத்த பேதியும் நிவர்த்தியாகும்.

த்ரிபலாதி க்வாதம் - த்ரிபலை (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) தேவதாரு, கோரைக்கிழங்கு, ஒளவையார் கூந்தல், முருங்கை இவற்றைக் கஷாயம் செய்து, அதில் திப்பிலிப் பொடியையும், வாய்விடங்கப் பொடியையும் சேர்த்து உட்கொள்ளலாம். 'க்ருமி க்நம்' என்கிற குணமுள்ள இது வயிற்றுக் கிருமிகளை வெளிப்படுத்த உபயோகமாகும்.

ரேணுகாதி க்வாதம் - அரேணுகம், திப்பிலி இவற்றை க்வாதம் செய்து, பெருங்காயத்தைப் பொரித்து சேர்த்து உட்கொள்ள ஐந்துவித விக்கல்களும் உடனே நீங்கும்.