உணவில் கீரையும் கறிகாய்களும் கறிகாய்கள் உணவில் ஒரு முக்கிய கூட்டுப்பொருளே தவிர தனித்த உணவாகவோ அதிக அளவிலோ சாப்பிட ஏற்றதல்ல அன்னத்திற்கு ருசிதரவும் ஜ

உணவில் கீரையும் கறிகாய்களும்

கறிகாய்கள் உணவில் ஒரு முக்கிய கூட்டுப்பொருளே தவிர தனித்த உணவாகவோ அதிக அளவிலோ சாப்பிட ஏற்றதல்ல. அன்னத்திற்கு ருசிதரவும் ஜீர்ணத்திற்கு உதவவும் ஏற்றது.

கறிகாய், கீரை போன்றவற்றை நன்கு அலம்ப வேண்டும். பிறகு நறுக்கி வேகவைத்து தண்ணீரை பிழிந்து விட்டு எண்ணையிட்டு வதக்கி மிளகு, உப்பு, சுக்கு, பெருங்காயம் முதலியவைகளை சேர்க்க வேண்டும். அப்படி செய்வதால் கறிகாய், நன்கு தானும் ஜீர்ணமாகி மற்றவைகளையும் ஜீர்ணமாகச் செய்யும். இன்று பல ஜீர்ண கோளாறுகள், ஜீர்ண உறுப்பு நோய்கள் வருவதற்குக் காரணம் உணவுப் பொருளை தேர்ந்தெடுப்பதிலும், உணவின் பக்குவ முறையிலும் ஏற்கும் முறையிலும் தொடர்ந்து தவறான வழியில் செல்வதால்தான். உடல் பாதுகாப்பிற்காக பல சமையல் குறிப்புகளையும், விளம்பரங்களையும் இன்று நாம் பத்திரிக்கை மற்றும் டி.வியிலும் காண்கிறோம். ஆனால் நிலைத்த ஆரோக்கியம் பெற புதிய வழிகளை கண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை. பல்லலாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர் கையாண்ட முறைகளே போதுமானது.

வாக்படர் இவ்வாறு குறிப்பிடுகிறார் -

'பத்ரே புஷ்பே பலே நாலே கந்தே ச குருதா க்ரமாத்' என்ற.

இலை (கீரை) , பூ, காய், தண்டு, கிழங்கு எனக் கறிகாய்களை ஐந்து விதமாக பிரிக்கலாம். அவைகளில் இலை சீக்கிரத்திலும் எளிதாகவும் ஜீர்ணமாகக்கூடியது. அதைவிட முறையே பூவும், காயும், தண்டும், கிழங்கும் ஜீர்ணமாகத் தாமதமாகக் கூடியவை. ஆனால் இதிலும் விதிவிலக்குகள் உண்டு. உதாரணத்திற்கு முள்ளங்கியை கிழங்காகக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது பூமிக்கு அடியில் விளைவதால். மிக சுலபமாக ஜீர்ணிக்கும் இலையை விட முள்ளங்கி விரைவில் ஜீர்ணித்து விடும்.

சாப்பிட்ட உணவு நான்கு விதங்களாக பிரிகிறது.

1.இயற்கையாகவே குடலில் வளரும் கிருமிகளால் உணவு பதனழியாமல் மலத்தில் கெட்டவாடை வராமல் வெளியேற்றும். அவைகளுக்கு ஒரு பங்கு.

2. உணவை ஜீர்ணம் செய்யும் பாசகாக்னி எனப்படும் ஜாடராக்னிக்கு - உணவின் ஒரு பங்கு எரிபொருளாகிறது.

3. தாதுக்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் உணவு சத்தாக மாறி ஒரு பங்கு செல்கிறது.

4. மீதியுள்ள கிட்டம் எனப்படும் மலமாக வெளியேறுகிறது.

இந்த நான்கு நிலைகளிலும் உதவும்படி உணவுப் பொருள்களை அமைத்துத் தயாரிக்கப்படுவதே பூர்ண உணவு. கறிகாய்கள் இதை செய்வதற்கு பெரும் உதவி செய்கின்றன. ஜீர்ண கிருமிகளுக்கு உணவாகும், மலத்திற்கு உருவளித்து எளிதில் வெளியேறச் செய்வதிலும் கறிகாய்கள் பயன்பெறுகின்றன.

நிறைய கறிகாய்கள் சாப்பிட வேண்டும், வேக வைக்காமல் பச்சையாகவே (ஆடு மாடுகள் உண்பதுபோல) சாப்பிட்டால் அதிலுள்ள உணவுச் சத்தை நாம் முழுமையாக பெறமுடியும். ஆகவே பச்சையாகவே, பாதி வேகவைத்தோ சாப்பிடவும். கறிகாய்களை வேக வைத்து நீரில் சத்து இறங்கியிருக்கும். அதனால் அதையும் விட்டு வைக்காமல் சேர்த்தே சமைத்து விடவும் போன்ற கருத்துகள் நவீன விஞ்ஞானிகள் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் ஆயுர்வேதம் வேறு விதமாக தன்கருத்துகளை தெரிவிக்கிறது.

1.கறிகாய்களை அதிக அளவில் உணவில் சேர்க்கக்கூடாது.

2. நன்கு வேக வைத்த கறிகாய்களையே உண்ண வேண்டும்.

3. கறிகாய்கள் வெந்த ஜலத்தை பிழிந்து அகற்றுவதே நல்லது என்று இன்றைய கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துகளை கூறுகிறது.

பொதுவாக கறிகாய்களுக்கு சில குணங்களுண்டு.

1. வயிற்றிலுள்ள சூட்டை குறைத்து, மலம், மூத்திரம் இவைகளின் அளவை அதிகரிக்கும்.

2. நார்ச்சத்து மிகுந்த காய்கள் குடலில் தாமதித்து வெளியேறக்கூடும். சில சமயங்களில் இது உதவக்கூடும். ஆனால் தாமதித்து வெளியேறுவதால் மற்ற உணவுப் பொருள்களில் நெகிழ்ச்சியும் வெளியேற்றத்திலும் பாதகம் விளைவிக்கக் கூடிய வாய்ப்பினால் பொறுமல், கனம், அசதி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இந்த தாமதத்தைத் தவிர்க்கவே கறிகாய்களை பொடிபொடியாக நறுக்குவது, வேக வைப்பது, வேக வைத்த தண்ணீரை பிழிந்து கொட்டி விடுவது, கறிகாயின் வரட்சியை தவிர்க்க எண்ணெய் சேர்த்து வதக்குவது, தாமதத்தைக் குறைக்க சுறுசுறுப்பு தருபவைகளான கடுகு, பெருங்காயம், புளிப்புச்சாறு, மிளகு, இஞ்சி கருவேப்பிலை, ஜீரகம், ஓமம், சுக்கு போன்றவைகளை சேர்ப்பது. கீரைக்குத்தான் இதுபோன்ற பக்குவமுறை மற்ற கறிகாய்களைவிட அதிகம் தேவைப்படுகிறது.

உணவை ஜீர்ணம் செய்து அந்த உணவின் பூர்ணமான சத்து நம் உடலில் சேர்ப்பதே ஜீர்ணத்தின் பலன். கறிகாய் வெந்த நீரை பிழிந்து விட்டு கறிகாய் மட்டும் என்ணெயுடன் வதக்கவேண்டும் என்பதின் தாத்பர்யம் அது எளிதில் ஜீர்ணமாக்குவதற்காகத்தான். சாதத்திலுள்ள கஞ்சி எளிதாக ஜெரிப்பதில்லை. அதனால அதை வடித்து விட்டு சாதத்தை மட்டும் உண்கிறோம். உபவாசம் இருப்பவர்களுக்கு பசி அதிகமிருப்பதால் அவர்கள் இது போல் தடிப்பான கஞ்சிகளை குடிக்கலாம். Horlicks, Boost, Complan போன்றவை சத்து தரும் என்றெண்ணி ஜீர்ண சக்தி குன்றியவர்கள் பாலுடன் அருந்துவதால் பயனேதுமில்லை.

பசியின் அளவை பொருத்தே உணவை உட்கொள்ளும் திறமைசாலிகளுக்கு மட்டுமே ஆரோக்யத்தின் சுகத்தை அடைய முடியும். ஆயுர்வேதத்தின் அறிவுரைகளை ஏற்று உணவை பாகம் செய்து சரியான அளவில் சாப்பிடும் வழக்கத்தை குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லிதர வேண்டும் .ஏனெனில் American pizza Corner, Chinese Noodles இன்று அதிக அளவில் மாணவர்களை கவர்ந்துள்ளன. மேலோட்டமாக பார்க்கும்போது ஆர்வத்தை அவை தூண்டினாலும் உண்மையில் நம் முன்னோர்கள் நமக்களித்த உணவின் பாகமுறைகளை நாம் என்றென்றும் மறக்கலாகாது.