கூர்மையான பார்வைக்கு கண்கள் வலிவு பெறவும் அதில் ஏற்பட்டுள்ள நோய்களை அகற்றவும் தர்ப்பண - புடபாக முறைகள் பெரிதும் உதவுகின்றன ஆயுர்வேதம் இவ்விரண்டு சிகி

கூர்மையான பார்வைக்கு

கண்கள் வலிவு பெறவும் அதில் ஏற்பட்டுள்ள நோய்களை அகற்றவும் தர்ப்பண - புடபாக முறைகள் பெரிதும் உதவுகின்றன. ஆயுர்வேதம் இவ்விரண்டு சிகித்ஸை முறைகளுக்கும் மிகுந்த முக்கியத்வம் அளித்துள்ளது. தர்ப்பணம் என்றால் நெய் இடுதல், புடபாகம் என்றால் புடமிட்டுப் பிழிதல் என்றும் பொருள் கூறலாம்.

ஆச்யோதன அஞ்சனம் சிறிது தாரையாக மருந்து ஊற்றுதல், மை ஆகியவற்றின் பிரயோகங்களால் கண்களுக்கு பலக்குறைவு உண்டாகும். அது நீங்க தர்ப்பண புடபாக விதிகள் உதவி செய்கின்றன.

கண்கள் வாட்டம் அடைதல், அசைவற்றுப் போதல், காய்ந்திருத்தல், வறண்டு போதல், அடிபட்டிருத்தல், வக்கிரமாக வளைந்திருத்தல், இமைமயிர் உதிருதல், கலங்கிய பார்வை, சிரமப்பட்டு கண்விழித்தல், ரத்த தோஷத்தால் கண்களின் வெண்பகுதியில் சிவந்த கோடுகளுடன் வீக்கம், வேதனை, எரிச்சல் ஆகியவை காணப்படுதல், சிவப்புக் கோடுகள் வளர்ச்சியடைந்து கண்ணீர் சொரிதலுடன் பார்வை மங்குதல், கண்ணின் வெண்பகுதியில் முயல் ரத்தம் போன்ற சிவப்புப் புள்ளி காணப்படுதல், கண்ணில் வேதனை, குத்தல், கிளர்ச்சி, புளிச்சை இவை அடங்கிய நிலையில், அதிகக்காற்று (புழுதி, வெயில்) இல்லா இடத்தில் தலை, உடல் ஆகியவற்றிற்கு உடலை சுத்தி செய்யும் சிகித்ஸை செய்தபின் சாதாரண காலங்களில் காலையிலும், மாலையிலும் நோயாளியை மல்லாந்து படுக்கச் செய்து தரப்பணம் செய்தல் வேண்டும்.

யவைஎனும் வாற்கோதுமையுடன் உளுந்து சேர்த்து, அரைத்த கெட்டியான மாவாக செய்து கொள்ள வேண்டும். கண்களுக்கு வெளிப்புறத்தில் இரண்டு அங்குல உயரத்திற்கு சமமாக வரம்பு ஒன்று அந்த மாவினால் உறுதியாக அமைத்து நோய்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட நெய்யை வெந்நீரில் வைத்து உருக்கி, கண்களை மூடச் செய்து ஊற்ற வேண்டும். இமையின் மயிர் முழுகும் அளவு மருந்தை கண்களில் விட வேண்டும். பிறகு மெள்ள கண்களைத் திறக்க வேண்டும். நோய்களுக்கு ஏற்றவாறு தர்ப்பண மருந்தை கண்ணில் வைத்திருக்க வேண்டும்.

பிறகு கடைக் கண்ணுக்கு அருகில் உளுந்தின் மாவால் செய்யப்பட்ட அணைப்பில் துவரம் செய்த நெய்ப்பு பொருளை வடியச் செய்து பாத்திரத்தில் வடித்துக் கொள்ளவேண்டும். பிறகு மூலிகைப் புகையை வாயால் உறிஞ்ச வேண்டும்.

தர்ப்பண சிகித்ஸை நன்கு நிறைவேறினால் கண்கள் பிரகாசத்தைப் பார்க்கும் வன்மையுள்ளதாகவும், நோயின்றியும், தெளிவாகவும் கனமின்றியும் இருக்கும். நோய் நீங்கும். தர்ப்பண சிகித்ஸையால் திருப்தி உண்டாகாவிடில், மாறான குறிகள் காணப்படும்.

தர்ப்பணத்திற்குப் பின் புடபாகம் -

நெய்ப்பு சிக்திஸைக்குப்பின் உடல் வருந்துவது போல தர்ப்பண சிகித்ஸைக்குப் பின் கண்கள் தளர்ச்சியடைகின்றன. ஆதலால் முற்கூறிய

நோய்களில் தர்ப்பண சிகித்ஸைக்குப் பின் கண்க்ள் பலம் பெறுவதன் பொருட்டு புடமிட்டுப் பிழிதலாகிய புடபாக சிகித்ஸை செய்ய வேண்டும்.

வாயுவால் உண்டான நோய்களில் நெய்ப்புள்ள புடபாகத்தையும், கபம் கலந்த வாத நோய்களில் கரைக்குந் தன்மையுள்ள புடபாகத்தையும், கண்கள் பலம் குறைந்த காலத்திலும், வாயு, பித்த, ரத்தம் ஆகியவற்றால் உண்டான நோய்கள், ஆரோக்ய நிலை ஆகியவற்றிலும் தெளிவுறச் செய்யும் புடபாகத்தையும் பிரோயகிக்க வேண்டும்.

மருந்து சரக்குகளை ஒரு பலம் அளவு எடுத்து உருண்டையாக்கி, நெய்ப்பு செய்தல், கரைத்தல், தெளிவாக்கல் ஆகிய புடபாகங்களை முறையே ஆமணக்கு, ஆல், தாமரை இவற்றின் இலைகளால் சுற்றி அதன் மேல் (2 அங்குலம்) மண் கவசம் செய்து, முறையே தவக்கட்டை, தன்வனக்கட்டை, பசுஞ்சாணம் ஆகியவற்றில் எரிக்க வேண்டும். மண் உருண்டை செந்நிறமானவுடன், அதை வெளியே எடுத்து மண்ணை நீக்கி மருந்துப் பொருள்களை துணியில் கட்டி, சாறு பிழிந்தால் கண்கள் பலப்படும்.

நெய்ப்பு மற்றும் கரைக்கும் புடபாகங்கள் இளஞ்சூடாகவும், தெளிவுறச் செய்யும் புடபாகத்தில் மருந்து குளிர்ந்ததாகவும் இருக்கவேண்டும். நெய்ப்பு கரைக்கும் புடபாகங்களுக்கு பின் மூலிகை புகை பிடிக்க வேண்டும்.

இரவில் மல்லிகை, முல்லை பூக்களை கண்களில் கட்டிக் கொள்ள வேண்டும். நஸ்யமிடுதல், அஞ்ஜனமிடுதல், நெய்யிடுதல் முதலியவற்றால் எல்லாவிதத்திலும் கண்களுக்கு பலம் உண்டாக்க வேண்டும். கண்ணில், பார்வை நீங்கினால், பல விதமான பொருள்களால் நிரம்பிய உலகம் ஒரே இருளாகக் காணப்படும்.