சிந்தனையும் சிரத்தையும் "பதறாத காரியம் சிதறாது" என்று கூறுவார்கள் இன்றைய வாழ்க்கை முறை பதற்றத்துடன் நிறைந்துள்ளது சிந்தனையும் சிரத்தையும் இணைந்து அமைவதற்கு சாந

சிந்தனையும் சிரத்தையும்

"பதறாத காரியம் சிதறாது" என்று கூறுவார்கள். இன்றைய வாழ்க்கை முறை பதற்றத்துடன் நிறைந்துள்ளது. சிந்தனையும் சிரத்தையும் இணைந்து அமைவதற்கு சாந்தமான மனநிலை தேவைப்படுகிறது? ஆயுர்வேதம் எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதானாலும் (தன்மன) என்ற வார்த்தையை அடிக்கடி எடுத்துக் கூறுகிறது. சிந்தனையை சிதற விடாமல் அதில் கவனம் வை என்று அப்பதத்திற்கு விளக்கமளிக்கலாம். காலைக் கடனை கழிப்பதற்கு அமர்ந்த நிலையில் மலம் நெகிழ்ந்து வருவதாக தொடர்ந்து ஒரு எண்ண அலையை மனதில் உருவாக்கினால் மலத்தின் வெளியேற்றம் எந்தவித முக்கலும் முனகலுமின்றி நடைபெறுவதை நாம் காணலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பயிற்சி நாளடைவில் எழுந்தவுடன் காலைக்கடன் சிரமேமேயில்லாமல் நிறைவேறலாம். வயிற்றில் அடப்பாசம் இல்லாமல் சுத்தமாக இருப்பவருக்கு சிந்தனை மேம்படுவதையும் சிரத்தை கூர்மையாவதையும் காணலாம். நல்ல சிந்தனைகளை செயல் வடிவத்தில் பிறருக்கு பயன்படும்படி செய்வதில் சிரத்தை பெரும் பங்கு வகிக்கிறது. உடல் சுத்தம் மன சுத்தத்திற்கு வழி வகுப்பதால் மற்றவர்களின் தரத்தையும் தனிமனிதனால் உணர்த்த முடிகிறது. உணவை உண்ணும் போது என்ன சாப்பிடுகிறோம் என்று அறியாமலேயே இன்றைய குழந்தைகள் TV பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்றன. உணவின் தன்மை, அதன்ருசி, சமைத்தவரை பாராட்டுதல் போன்ற உணர்வான விஷயங்களை சிந்தனையில் சிதறலால் மனிதன் மறக்க நேர்வது எவ்வகையிலும் தர்மமாகாது. குழந்தைகளை திருத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம். மருந்தை சாப்பிடும்போது சிரத்தையுடன் அதன் ருசி அறிந்து சாப்பிடுவது மிகுந்த பலனைத்தரும். மருந்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து குடிக்கும் தருவாயில் இரண்டு விஷயங்களை கவனத்திலே கொள்ள வேண்டும். முதலாவது கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு, இரண்டாவது கோவிந்தா, கோவிந்த !என்று சொல்வ ! கோவிந்த ஸ்மரணம் மருந்தின் சக்தியை அதிகப்படுத்தும். விரைவில் நோயின் வேகமும் தணிந்துவிடும். "வைத்யோ நாராயணோ :"என்பதால் மருத்துவருக்கும் நோய் தணிந்து விட்டதை அறிவதால் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார். உறவினர்களோ, நண்பர்களோ பேசும் தருவாயில் செவி மடுத்துக் கேட்பது இன்று வெகுவாகக் குறைந்து வருகிறது. அவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் தருவாயில் நாம் நமது தனிப்பட்ட கருத்துக்களை பேச்சின் நடுவே கூறலாகாது. அவரிடமிருந்து வரும் விஷயத்தை முற்றிலும் கேட்பதால் பேசுபவருக்கு நிம்மதியும், தன் கருத்தை மற்றவர் கூர்ந்து கவனித்ததில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறத? சிரத்தையுடன் கேட்கப்பட்ட விஷயத்தை சிந்தனை செய்து நாம் சிறப்பான பதில்களை தரும்போது நம்மீது மற்றவருக்கு பிரியமும், நட்பையும் ஏற்படுத்துகின்றன. மனதின் தூய்மை வாய்க்கப் பெற்றவருக்கு இதை சாதிக்க முடியும். மனதின் தூய்மைக்கு, தியானம், ஈஸ்வர பக்தி போன்ற சிறப்பான அம்சங்களிருந்தாலும் உணவும் பெரும்பங்கைத் தருகிறது. சாத்வீக உணவு வகைகளான அரிசி, கோதுமை, நெய், பால், கடுக்கா, நெல்லிக்காய், பச்சைப்பயறு, மழைத்தண்ணீர், தேன், மாதுளம், இந்துப்பு, வாற்கோதுமை போன்றவைகளை, கிழக்கு நோக்கி அமர்ந்து சிரத்தையுடன் உண்ண வேண்டும். சிந்தனையும் சிரத்தையும் கூடுவதற்கு ஆயுர்வேதத்தில் பஞ்சகவ்யம், மஹா பஞ்சவகவ்யம், மஹாகல்யாணகிருதம் போன்ற மருந்துகள் உள்ளன. எந்த ஒரு குழந்தைக்கும் சிந்தனா சக்தியும் சிரத்தையும் நிச்சயமாக அமைந்துள்ளன. பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் சிறப்பான ஆசிரியர்கள் அமைவதாலும் குழந்தையின் சிந்தனையும் சிரத்தையும் நன்கு வளரும்படி அமையும், மனப்பாடம் செய்வதைவிட விஷயங்களின் உட்கருத்தை குழந்தைக்கு நன்கு புரியும்படி எடுத்துக்கூறும் முறையால் குழந்தைக்கு அவ்விஷயத்தில் ஆர்வமும், தானே சொந்த முயற்சியின் பயனாக கருத்துக்களைக் கூறும் தன்மையும் வளர்ந்துவிடும். தீர்க்கமான சிந்தனையும், சிரத்தையும் அமைவதற்கு படுக்கும் விதமும் பயனைத் தருகிறது. "வாராத வாழ்வு வந்தாலும் வடக்கில் தலை வைக்காதே". "விடக்கேயாயினும் வடக்காகதது" என்பது பழமொழி. ஆகவே நாம் தூங்கும்போது தெற்கில் தலையை வைத்து உறங்கவேண்டும். மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் முதலான கிரந்தங்களிலும் "கிழக்கில் தலை வைத்து படுத்துக் கொண்டால் புத்தி விசாலமடைகிறது என்றும், தெற்கில் தலையை வைத்துக் கொண்டால், சத்கதியும், தீர்க்காயுஸும் ஏற்படுகின்றன என்றும், வடக்கில் தலையை வைத்துக் கொண்டால் பிணியும், அகால மரணமும் சம்பவிக்கின்றன" என்றும் கூறப்பட்டுள்ளது. மகாபாரதம் அநுசாஸன பர்வதத்தில் "வித்வான்கள் மேற்கிலும், வடக்கிலும் தலையை வைத்துறங்கக் கூடாது" என்றும் காணப்படுகிறது.