உடல் பாதுகாப்பு எதற்கு? தேர் ஒன்று இருக்கிறது தேர்ச்சக்கரம் உடலுடன் இணையும் பகுதியில் அச்சாணி உள்ளது வண்டிமையை அச்சாணியில் குழைத்து இடுதல் சைக்கிளுக்கு Greese இ

உடல் பாதுகாப்பு எதற்கு?

தேர் ஒன்று இருக்கிறது. தேர்ச்சக்கரம் உடலுடன் இணையும் பகுதியில் அச்சாணி உள்ளது. வண்டிமையை அச்சாணியில் குழைத்து இடுதல் சைக்கிளுக்கு Greese இடுவது போல தேர் நன்கு சத்தமில்லாமல் ஓடுவதற்கு பயன்படுகிறது. விட்டுப் போன மரபாகங்களை சரியாக இணைத்து அவ்வப்போது மரப் பாதுகாப்பிற்காக செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தேரை கேடு வராமல் பல ஆண்டு காலம் ஸ்வாமியினுடைய திருவீதி உலாவிற்கு பயன்படுசுத்தலாம். இதைப்போலவே உடலுக்கு நன்மை பயக்கும் உணவு நடத்தையின் மூலமாக புத்திசாலியான ஒரு மனிதனின் ஆயுளும் பல ஆண்டு காலம் உடல் பாதுகாப்பினால் பாதுகாக்கப்பட்டு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உயர் பலன்களை மனிதன் அடைவதற்கு வழி ஏற்படும். சுத்தமான எண்ணையும் திரியும் சேர்ந்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. விட்டில் பூச்சியும், காற்றும் விளக்கினருகில் வராமலிருந்தால் எண்ணை முழுதும் தீரும் வரை அவ்விளக்கானது பிரகாசமான ஒளியுடன் எரிவதை நம்மால் காணமுடிகிறது. அது போலவே உணவில் சிரத்தை, நன்னடத்தை போன்றவைகளால் மனிதன் உடல் பாதுகாப்பு மூலம் தீர்க்காயுளை அடைகிறான். அழுக்கான எண்ணையிம், திரியும், பூச்சியும், காற்றும் விரைவில் விளக்கை அணைத்து விடுவது போல மனிதனின் ஆயுளும் மட்டமான உணவு, அழுக்கான சிந்தனைகளாலும் விரைவில் மரணத்தை அடைகிறான். மற்ற அனைத்தையும் விட்டு உடல் பாதுகாப்பிற்கே மனிதன் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மனிதனுடைய விஷயங்கள் அனைத்தும் உடல் இல்லாமல் நடைபெறாது. தேராளி தேரை பாதுகாப்பது போல், நகரத்தினுடைய மேயர் நகரத்தை பாதுகாப்பது போல மேதாவியான ஒரு மனிதன் உடல் பாதுகாப்பை முக்கிய கருத்தாக கொண்டிருத்தல் வேண்டும்.


உணவிற்காக பயன்படுத்தும் பதார்த்தங்களின் இயற்கை குணம், அவைகளின் சேர்க்கை, தண்ணீர், நெருப்பில் வேக வைத்தல் போன்றவைகளால் அதில் ஏற்படும் மாற்றம், உணவின் அளவு, உணவு உடலுக்கு ஒத்துக் கொள்ளுதல், சரியான சமயத்தில் உணவை அருந்துதல், உணவு உட்கொள்ளும் முறை ஆகிய ஏழு விஷயங்களை கூர்ந்து கவனித்து சிறந்த உணவையே உட்கொள்ள வேண்டும். உடலானது உணவினால் மட்டுமே வளர்ந்து போஷிக்கப்படுகின்றது. பயம், வெட்கம், சந்தோஷம், சங்கடம் போன்ற எவ்வகையான நிலையில் மனிதன் ஆட்கொள்ளப்பட்டாலும் இயற்கையாக வரக்கூடிய வேகங்களாகிய கீழ்வாயு, மலம், மூத்திரம், தும்மல், தண்ணீர்தாகம், பசி, தூக்கம், இருமல், மூச்சுத்திணறல், கொட்டாவி, கண்ணீர், விந்து ஆகியவற்றை அடக்கலாகாது. அவைகளை அடக்குவதால் அனைத்து நோய்களுக்கும் அவையே வேராகின்றன. நன்னடத்தையுடன் கூடிய செயல்களால் உடல் மற்றும் மனோபலம், உத்ஸாஹம், புலன்கள், ஆயுள் இவைகளுக்கு யமனால் அகாலத்திலேயே உபாதைகள் ஏதும் ஏற்படாது. ஒருவர் உடலுக்கு ஒவ்வாத அனைத்தையும் தவிர்த்து நன்னடத்தையுடன் நடந்தாலும் நோய்கள் வருமானால் 'புலனடக்கமுள்ளவன்' என்று பெரியோர்களால் போற்றப்படுவான். தீராத ஒரு நோய் அவரை தாக்கும்போது புத்திமானாகிய அவர் வருத்தமேதுமடைய அவசியமில்லை. ஏனெனில் அது இந்த ஜன்மத்தில் செய்த தவறால் வரவில்லை, பூர்வ ஜன்ம பலனால் வந்ததேயாகும் என்றெண்ணி தர்மானுஷ்டங்களை தொடர்ந்து செய்து வரவேண்டும். நல்ல உணவு, நடத்தையும், சதா ஆசாரங்களை அனுஷ்டித்தும், இந்த ஜன்மத்திலும், அடுத்த ஜன்மாவிலும் நன்மையே ஏற்பட வேண்டும் என்று சிரத்தையுடன் இருப்பவருக்கு வாழ்க்கை அமுதம் போல சுகமானதாக இருக்கும்.
லௌகிக சுகங்களில் பேராசையுடன், ஆசை, கோபம், பொறாமை போன்றவைகளுக்கு அடிமையாகி சன்மார்க்கத்தை விட்ட ஒரு மூடன் தீய வழிகளில் நடந்து ஒரு அர்த்தமற்ற வாழக்கையை வாழ்கிறான். நீண்ட காலம் வாழ விரும்பும் ஒரு அறிவாளி தன்னுள்ளேயே இருக்கும் காம க்ரோதாதிகளை வெற்றி கொண்டு அடக்கி, வேண்டாதவைகளை ஒதுக்கிவிட்டு, இம்மையிலும் மறுமையிலும் சுகம் தரும் கார்யங்களில் எப்போதும் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும்.

- எஸ். சுவாமிநாதன்,பேராசிரியர்,ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஆயுர்வதே கல்லூரி.