கணபதி தடைகளை விலக்கி துவக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவர் கணபதி நல் அறிவையும் புகட்டுபவர் மாணவர்களாலும் மாணவிகளாலும் வணங்கப்ப

கணபதி

தடைகளை விலக்கி துவக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவர் கணபதி. நல் அறிவையும் புகட்டுபவர். மாணவர்களாலும் மாணவிகளாலும் வணங்கப்படுபவர்.

இந்தியாவில் இந்தியர்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்று பழக்கத்தில் பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத துவங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் இவர் சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், வினாயகர் என்பதில் முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுவதால், இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார் என்று ஆகிறது. அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும். புத்தர்களும் ஜைனர்களும் கூட கணபதிக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

கணபதி வழிபாடு இந்திய துணை கண்டத்தில் மட்டும் என்று இல்லாமல், நேபாள், இலங்கை, திபெத், தாய்நாலாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சைனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் "வீரகோசா"உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே கணபதி வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிஸிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 முதல் 1000 H.R. என நிர்ணயித்துள்ளனர்.

தத்துவ ரீதியாக யானை முகத்தானை வர்ணிக்கும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள ஒற்றுமையை காட்டுவதாக அமையும். யானை முகத்தான் சிறியவற்றிக்கும் (அதாவது மனிதன்) பெரியவற்றிக்கும் (அதாவது யானை) உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. என்று மேல்நாட்டு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச் சிறந்தவராக கணபதியினை கருதுகின்றனர். கணபதியினை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணபதி வழிபாட்டு புனித ஸ்தலங்கள் உள்ளன.

பெரோலி :

பழைய காலத்தில் இதற்கு அலாபுர க்ஷேத்திரம் என்று பெயர். இங்கு க்ருஷ்ணேஸ்வரர் (குஷ்மேஸ்வரர்) ஜ்யோதிர் லிங்கம் உள்ளது. இந்த இடத்தின் சிறப்பு என்னவெனில் முருகப்பெருமாள் சிவபெருமானின் அறிவுரைப்படி தாரகாசுரனை கொல்வதற்கு முன்பு இங்கு வந்து கணபதியை வழிபட்டார் என்பதே. இங்குள்ள கணபதியை முருகப்பெருமானே பிரதிஷ்டை செய்தார் என்றும் இவருக்கு வினாயகர் என்ற பெயர் என்று வழக்கில் உள்ளது.

மோரேஸ்வரர் :

இந்த பகுதிக்கு புஸ்வானந்த க்ஷேத்திரம் என்று பெயர். இந்த இடம் பூனாவிலிருந்து 40A.e. தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதிக்கு முரேச கணேசர் என்று பெயர்.ராஜுரா: இந்த இடத்திற்கு ராஜசதன் க்ஷேத்திரம் என்று பெயர். இது ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து 14A.e. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் கணேசர் சிந்துராசுரனை அழித்தபின் வரேன்ய மன்னனுக்கு கணேச கீதை உபதேசித்தது ஒரு சிறப்பு. ராஜுராவை குருக்ஷேத்திரத்தில் உள்ள ஜ்யோதிசார் என்னும் இடத்திற்கு ஒப்பிடுவர். இங்கு தான் அருச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதையினை உபதேசித்தார்.

பிரயாகை :

இது உத்திர பிரதேசத்தில் அலஹாபாத்தில் உள்ளது. இதற்கு ஓங்கார க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. ஆதிகாலத்தில் பிரணவம் (ஓங்காரம்) நான்கு வேதங்களுடன் தோன்றி இந்த இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்ததாகவும் அவரே தன்னை இங்கு பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காசி :
துண்டிராஜ க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு தான் புகழ் மிக்க பிரசித்தமான துண்டிராஜ கணேசர் ஆலயம் உள்ளது.

கும்பகோணம் :
தமிழ் நாட்டில் மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று. இதற்கு ஸ்வேதவிக்னேஸ்வர க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. காவேரி நதிக்கரையில் சுத்த கணபதி ஆலயம் இங்கு உள்ளது. மிகுந்த பிரயாசையுடன் அமிர்த்தத்திற்காக கடலை கடைந்ததும் அமிர்தம் கிடைக்காததால் தேவர்கள் இங்கு கணபதியை தொழுத பின் அமிர்தம் பெற்றனர் என்று வரலாறு.

பத்வமால்யா :

இது பழமையான ப்ரவால க்ஷேத்திரம். பம்பாய் - புசாவல் ரயில் மார்க்கத்தில் மஹஸ்வாடா ரயில் நிலையத்திற்கு ஐந்து மைல் தொலைவில் பத்மாலயா உள்ளது. இந்த தலம் மிகவும் புகழ் பெற்றது. கார்த்தவீர்யனும் (சஹஸ்ரார்ஜூனன் என்றும் சொல்வதுண்டு) சேஷனும் இங்கு கணபதியை தொழுதுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதிஷ்டை செய்த இரண்டு கணபதிகள் இன்றும் உள்ளன. இந்த ஆலயத்திற்கு முன்னால் "உகமா"என்ற புகழ்பெற்ற குளமும் உள்ளது.

கலம்பா : இதனை சிந்தாமணி க்ஷேத்திரம் என அழைப்பர். இதன் பழைய பெயர் கடம்பபுரம். கவுதம ரிஷியின் சாபத்திலிருந்து நிவாரணம் பெற இந்திரன் இங்குள்ள சிந்தாமணி கணபதியை வணங்கி சாப விமோசனம் பெற்றான் என்பது வரலாறு.

நாமாலா காவ்:

இதுதான் பழமையான அம்லாச்ரம க்ஷேத்திரம். கச்சிகுடா - மன்மாட் ரயில் மார்க்கத்தில் ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து தோசபுரி வரையில் பேரூந்தில் சென்று அதன் பின் இந்த இடத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஒரு காலத்தில் இருந்தது. தன் தாயின் சாபத்தில் இருந்து விடுபட யமன் இங்கு கணபதியை வணங்கி விடுபட்டான். யமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசபூரக கணபதி இன்றும் அருள் பாலித்துக் கொண்டுள்ளார். சுபத்தி ப்ரத தீர்த்தம் என்ற புகழ்மிக்க குளம் இங்குள்ளது.

அதோஷா:

இதற்கு சாமி விக்னேச க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. நாகபுர - சிண்ட்வாடா ரயில் மார்க்கத்தில் சமரேரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5மைல் தொலைவில் உள்ளது. மஹப்பா சங்கடா, சத்ரு என்ற மூன்று அரக்கர்களை அழிக்க தேவர்களும் ரிஷிகளும் இந்த இடத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. மஹாபலியின் யாகத்திற்கு போகும் முன் வாமன மூர்த்தியும் இங்கு கணபதியை வணங்கி சென்றதாகவும் வரலாறு உண்டு.

லோஷ்யாத்ரி:

ஜௌரா தாலுக்காவிற்கு அருகில் பூனா மாவட்டத்தில் இந்த தலம் உள்ளது. தனக்கு கணேசன் மகனாக பிறக்க வேண்டி பார்வதி இந்த இடத்தில் கடும் தவம் செய்ததாக வரலாறு. இதன் பழைய பெயர் பள்ளிபுரா பள்ளால என்ற வைச்யன் தவத்திற்கு மெச்சி கணபதி இங்கு தோன்றியதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த பகுதிக்கு வல்லாலி வினாயக க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பழமையான வரலாற்றில் குறிக்கப்படும் சிந்து தேசம் தற்போது இல்லை ஆனால் குலவ மாவட்டத்தில் உள்ள (மஹாராஷ்டிரம்) பாலி க்ஷேத்திரம் மிகவும் புகழ்மிக்கது.

ஜலசேபுரா:

தற்சமயம் இந்த தலம் இல்லை. இந்த இடத்தில் மயன் கணபதி ஆலயம் நிர்மாணம் செய்து வழிபட்டதாக தெரிகிறது. திருபுராவின் அசுரர்களும் இங்கு வழிபட்டுள்ளனர்.

பரினேரா:

இதற்கு மங்கள மூர்த்தி க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு மங்கள பகவான் (அங்காரகன்) இந்த இடத்தில் கணபதியை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். நர்மதைக் கரையில் இந்த தலம் உள்ளதாக சொல்லப்பட்டாலும் எந்த இடத்தில் உள்ளது என்று நிர்ணயிக்க முடியவில்லை.

கஸ்யபாஸ்ரமம் வரலாற்றில் குறிப்பிட்டிருந்தாலும் இது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. தன்னுடைய ஆசிரமத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து காச்யபர் வழிபட்டார் என்று கூறப்படுகிறது.

கங்கா - மசாலே:

இது பாலசந்திர கணேச க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. கச்சிகுடா மன்மாட் ரயில் மார்க்கத்தில் பர்பானி நிலையத்தில் இருந்து 26மைல் தூரத்தில் உள்ள சிலு நிலையத்தில் இருந்து 15மைல் தூரத்தில் உள்ளது. கோதாவரி நதியின் நடுவில் பாலசந்திர கணேசர் ஆலயம் உள்ளது.

விஜயபுரா:

அனலாசுரனை அழிக்க கணபதி தோன்றினார். இது தைலிங்க தேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கு என நிர்ணயிக்கப்படவில்லை. சென்னை - மங்களூர் ரயில் பாதையில் விஜய மங்கலம் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஈரோடுலிருந்து 16மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதி மிகவும் பிரத்திபெற்றவர். ஆனால் இந்த தலம் தானா விஜயபுரா என்று உறுதியாக தெரிவதற்கில்லை.

பாஸ்கரபுவனா: கோதாவரிக்கரையில் ஜால்னாவில் இருந்து 33மைல் தூரத்தில் உள்ளது. குருதத்தாத்ரேயர் இங்கு தவம் செய்து விஞ்ஞான கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. இந்த கோவில் இன்றும் உள்ளது.

ராஜா நாகாவ்:

இது மணிபூர க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. பூனாவிலிருந்து பேரூந்தில் இதனை அடையலாம். திரிபுரத்தின் அசுரர்களை வெற்றி காண முடியாத நிலையில் பரமேஸ்வரன் இந்த இடத்தில் கணபதியை வழிபட்டு வெற்றி கண்டார் என்று வரலாறு. இந்த ஆலயம் தற்போதும் உள்ளது.

தேவுரா:

பூனாவில் இருந்து ஐந்து மைலில் உள்ளது. படைப்பு தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளை களைய பிரம்மா இந்த இடத்தில் கணபதியை வழிபட்டதாக வரலாறு.

சித்ததேகா:
பீமா நதிக்கரையில் போரிவில்லி நிலையத்திலிருந்து 5மைல் தூரத்தில் உள்ளது. இதற்கு பழமையான பெயர் சித்தாஸ்ரமம். மது கைடபர்களைக் கொல்ல மஹாவிஷ்ணு இந்த இடத்தில் கணபதியை வணங்கியதாக வரலாறு. வேதவியாசர் த்வாபர யுகத்தின் முடிவில் நான்கு வேதங்களையும் தொகுப்பதில் ஏற்பட்ட இடர்படுகளை களைய இந்த மஹா விஷ்ணுவால் ஏற்படுத்தப்பட்ட சித்தாஸ்ரமத்தில் கணபதியை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

(இந்த கட்டுரைக்கு ஆதாரம் 31.8.1975 பவன்ஸ் ஜர்னல்)