புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வராஹமிஹிரர் “ப்ருஹத் ஸம்ஹிதை’ என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார் என்றேனல்லவா? அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே. விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரணத்தை நியூடன் என்பவர்தாம் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற ச்லோகமே, பூமி விழாமல் இருப்பதற்கு ஆகர்ஷண சக்தி காரணம் என்று சொல்லுகிறது. நம் பகவத்பாதாளின் உபநிஷத் பாஷ்யத்திலும் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வஸ்துவை நாம் மேலே வீசி எறிந்தால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அதனுடைய ஸ்வபாவகுணம் அல்ல. அது பூமியில் விழுவதற்குக் காரணம் பூமியின் ஆகர்ஷண சக்தியே. ஆகர்ஷண சக்தி யென்றால் இழுக்கும் சக்தி என்பது அர்த்தம். பிராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே, கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர். ஸ்ரீ ஆசார்யரவர்கள் பிருதிவிக்கு அபானசக்தி, அதாவது ஆகர்ஷண சக்தி, இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். ப்ரச்நோபநிஷத்தில் (III.8.) “ப்ருதிவியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது” என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளை பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி, மேலே போகிற பிராணனை அபானம் கீழே இழுப்பதைப் பற்றிச் சொல்கிறார். இதனால் உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுவதாக ஆகிறது. இவைகளைப் போன்ற பல அருமையான விஷயங்கள் நம்முடைய சாஸ்திரங்களில் இருக்கின்றன. நமக்கு இவைகள் தெரியாததனால் தேசாந்திரத்தில் உள்ளவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

இப்பொழுது எவ்வளவு விதமான கணக்குகள் லோகத்தில் இருக்கின்றனவோ அவ்வளவு கணக்குகளும் எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பே உண்டான நம்முடைய ஜ்யோதிஷ சாஸ்திரங்களில் இருக்கின்றன.

[ஸ்ருஷ்டி தொடக்கமான] கல்பாரம்பத்தில் எல்லாக் கிரஹங்களும் ஒரே நேராக இருந்தன. அப்புறம் காலம் ஆக ஆக அவை கொஞ்சங் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகின்றன. மற்றொரு கல்பாரம்பத்தில் மறுபடியும் நேராக வந்துவிடும்.

நாம் செய்யும் கர்மாக்களில் முதலில் சொல்லும் ஸங்கல்பத்தில் பிரபஞ்ச வர்ணனை, கால அளவை என்றெல்லாம் சொல்லப்படுகிற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயந்தான்.

பூ ஆகர்ஷணம் மட்டுமில்லை, பூமி சுற்றுவதையும்கூட ஆர்யபடர், வராஹமிஹிரர் முதலானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால்தான் இரவு பகல் உண்டாயிருக்கின்றன’ என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டுவரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னால், அவரை மதகுருமார்கள் stake என்ற கம்பத்தில் கட்டி நெருப்பை வைத்துக் கொளுத்தினார்கள்! ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் ஸூர்யனைச் சுற்றுகிறது, ஸூர்யன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதற்கு, ஆர்யபடர் ரொம்ப அழகாக ஒரு பேர் கொடுத்திருக்கிறார். அதற்கு ‘லாகவ – கௌரவ நியாயம்’ என்று பேர். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். ‘லகு’வைக் குறிப்பது ‘லாகவம்’. ‘லேசாக’, ‘லைட்’டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் ‘கை லாகவம்’, ‘ஹஸ்த லாகவம்’ என்கிறோம். லகுவுக்கு ஆப்போஸிட் (எதிர்ப்பதம்) குரு. கனமானது, பெரியது எதுவோ அதுவே குரு. மஹாகனம் பொருந்தியவர், கனவான், பெரியவர்கள் எனப்படுகிறவரே குரு. அவர்தான் ஆசாரியர். ஆசாரியர் குரு என்றால், அப்போது சிஷ்யன்தான் லகு. குருவான ஆசாரியரைத்தானே லகுவான சிஷ்யன் பிரதக்ஷிணம் பண்ணுகிறான்? அதாவது சுற்றிச் சுற்றி வருகிறான்? ஆசாரியர் சிஷ்ய பிரதக்ஷிணம் பண்ணுவாரா? மாட்டார். நம் பிரபஞ்சத்தில் (solar system -லே) பெரியது, குருவானது ஸூர்யன் தான்; லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே ‘லாகவ-கௌரவ நியாயம்’! இதன்படி பூமிதான் ஸூர்யனைச் சுற்ற வேண்டும். இப்படிப் பிரபஞ்சத்தை குரு – சிஷ்ய கிரமமாக பார்த்து சாஸ்திரமாகவும் ஸயன்ஸாகவும் ஆர்யபடர் சொல்லியிருக்கிறார்.

இப்போது நாம் எந்த மதஸ்தர்கள் விஞ்ஞான சாஸ்திரம் வளர முடியாதபடி விஞ்ஞானிகளை ‘ஹெரிடிக்’ என்று சொல்லிக் கொளுத்தினார்களோ, அதே மதஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு, “இந்தியாவில் ஸயன்ஸ் வளராததற்கு காரணம் ஹிந்து மதம்தான். பரலோகம், பரலோகம் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதம் இந்த லோகத்து விஷயங்களையெல்லாம் அலக்ஷ்யம் செய்துவிட்டது” என்று குற்றம் சொல்கிறோம்! வாஸ்தவத்தில் அத்தனை ஸயன்ஸுகளும் நம் சாஸ்திரங்களிலே இருக்கின்றன.

ஸூர்யன் இருந்தபடிதான் இருக்கிறது; பூமிதான் அதைச் சுற்றி வருகிறது; பூமி சுற்றுவதால்தான் ஸூர்யன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் தோன்றுகிறதேயன்றி வாஸ்தவத்தில் ஸூர்யன் பூமியின் கிழக்கே தினம் தினம் உதித்து அப்புறம் மேற்கே நகர்ந்துகொண்டேபோய் அஸ்தமிக்கவில்லை என்ற விஷயம் ரிக்வேதத்திலுள்ள ஐதரேய பிராம்மணத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. “ஸூர்யன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை” என்று அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறது

பூமி சுற்றுகிற விஷயம் வித்வான்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்பதற்குத் திருமலை நாயகரிடம் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின், “சிவோத்கர்ஷ மஞ்ஜரி”யில் ஆதாரம் இருக்கிறது. ‘பூமிர் ப்ராமயதி’ என்றே இதில் கடைசி சுலோகம் ஆரம்பிக்கிறது. அந்த ச்லோகத்திலிருந்து, நீலகண்ட தீக்ஷிதருக்குப் பெரிய பாட்டனாரான அப்பய தீக்ஷிதருக்கும் பூமி சுற்றும் விஷயம் தெரியும் என்பது தெரிகிறது. [அந்த] ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறது?

ஈச்வரனுக்கு அஷ்டமூர்த்தி என்பது ஒரு பெயர். பூமி, ஜலம், வாயு, அக்னி, ஆகாசம், ஸூர்யன், சந்திரன் (யாகம் செய்கிறவனான) யஜமானன் ஆகிய இந்த எட்டும் ஈச்வரனுடைய மூர்த்திகள். இவற்றிலே யஜமானன் ஒருத்தனுக்கு மட்டும் ப்ரமணம் (சுற்றுதல்) இல்லை. பாக்கி ஏழும் ப்ரமணம் உடையவையே என்று அப்பய தீஷிதர் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் சொல்லியிருக்கிறார் என்பதை அவருடைய தம்பி பேரரான நீலகண்ட தீக்ஷிதர் இந்த ச்லோகத்தில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

காற்று நின்ற இடத்தில் நிற்காமல் சுற்றுவதும், நெருப்பும் கொஞ்சம்கூட ஸ்டெடியாக இல்லாமல் அசைந்து ஆடுவதும், ஜலமும் இப்படியே ஒரு இடமாக இருக்க முடியாமல் ஓடுவதும் நம் கண்ணுக்கே தெரிவதுதான். ஆகாசத்தைப் பார்க்கும் போது ஸூர்ய – சந்திரர்கள் சுற்றுவது தெரிகிறது. ஆகாசத்திலேதான் ஸகல ஸப்தங்களும் இருக்கின்றன. சலனம்தான் சப்தமூலம் என்பதால் அந்த ஆகாசமும் ப்ரமணமுடையது என்று தெரிகிறது. ஆனால் பூமியைப் பார்த்தால் அது, போட்டது போட்டபடி இருக்கிற மாதிரித்தானே தெரிகிறது? இப்படித் தெரிந்தாலும், அதுவும் சுற்றுகிற ஏழில் ஒன்று என்றே அப்பைய தீக்ஷிதர் கருதியிருக்கிறார். “பூமிர் ப்ராமயதி” என்று ச்லோகம் ஆரம்பிப்பது பூமியின் சுழற்சியைத் தான் சொல்கிறது.

பூமியின் ஆகர்ஷணம், சுற்றுவது முதலியன இருக்கட்டும். பூமியின் ரூபத்தையே பார்க்கலாம். வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘பூமி தட்டையாகத் தோசைக்கல் மாதிரி இருக்கிறது என்றுதான் பழங்காலத்தில் நினைத்தார்கள். அது தட்டையாக இல்லை, பந்து மாதிரி உருண்டையாக இருக்கிறது என்று நாங்கள்தான் ஸமீப நூற்றாண்டுகளில் கண்டுபிடித்தோம்’ என்கிறார்கள். ஸரி, ‘ஜாகரஃபி’க்குப் பேர் என்ன சொல்கிறோம்? ‘பூகோள சாஸ்திரம்’ என்கிறோம். ‘பூசாஸ்திரம்’ என்று சொன்னாலே போதும். ஆனாலும் பூமியானது கோளமாக, அதாவது உருண்டையாக இருப்பது நமக்கு ஆதிகாலத்திலிருந்தே தெரியும் என்று தெரிவிப்பதாகத்தான் ‘பூகோளம்‘ என்று சொல்லியிருக்கிறது.

Universe எனப்படும் ஸகல நக்ஷத்ர லோகங்களும் உட்பட்ட பிரபஞ்சத்தை ‘ப்ரம்மாண்டம்’ என்கிறோம். ‘பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம்’ இது. அண்டம் என்றால் என்ன தெரியுமா? கோழி முட்டை. கோழி முட்டை திட்டமான உருண்டையாக இருப்பதல்ல. ஒரு உருண்டையின் ஓரங்களைத் தட்டிவிட்ட மாதிரி நீளவட்டத்தில் கனபரிமாணம் உள்ளதாக முட்டை இருக்கிறது. நவீன விஞ்ஞானத்திலும் Universe என்பது உருண்டையாக (spherical) இல்லை; முட்டை மாதிரி oval வடிவத்தில் கனபரிமாணமுள்ளதாக elliptical -ஆகவே இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் முழுக்க நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்ற மாடர்ன் அஸ்ட்ரானமியில் சொல்கிறார்களென்றால் வேதகாலத்திலிருந்து நாம் இதற்குத் தந்திருக்கிற பேரே இந்த உண்மையைத்தான் சொல்கிறது. ‘ஜகத்’, ‘ஜகத்’ என்றே நாம் சொல்கிறோம். ‘ஜகத்’ என்றால் நின்ற இடத்தில் நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது என்றுதான் அர்த்தம் .

பூமி சுற்றுகிறது என்ற வாதத்தை ஆக்ஷேபித்தவர்களும் நம்மவர்களில் சிலர் இருந்துதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாராருடைய அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்: பூமியின் சுற்றளவு (circumference) சுமார் இருபத்தையாயிரம் மைல். அதனால் ஒரு நாளில் (24 மணிகளில்) பூமி ஒரு தடவை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றால், அது மணிக்கு ஆயிரம் மைல் சுற்றுகிறது என்று அர்த்தம். அப்படியென்றால், ஒரு நிமிஷத்தில் அது பதினாறு அல்லது பதினேழு மைல் சுற்றுகிறது. அதாவது, பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்த நிமிஷத்தில் இந்த மயிலாப்பூர் இருக்கிற இடத்தில், அடுத்த நிமிஷம் இங்கேயிருந்து பதினேழு மைலில் இருக்கிற ஒரு ஊரோ, சமுத்ரமோ வந்தாக வேண்டும். இந்த நிமிஷத்திலே இந்த மயிலாப்பூரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற காக்காய் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழும்பி ஆகாசத்தில் நேரே போகிறது. அடுத்த நிமிஷம் அது கீழே வருகிறது. முன்னே எங்கே உட்கார்ந்திருந்ததோ அதே மயிலாப்பூர் மரத்தில் அல்லது மாடியில் வந்து உட்காருகிறது. பூமி சுற்றுவது நிஜமானால் இது எப்படி ஸாத்தியமாக இருக்க முடியும்? அது மேலே எழும்பின ஒரு நிமிஷத்தில் கீழே இருக்கிற பூமி சுற்றுகிற சுற்றில் மயிலாப்பூர் இருக்கிற இடம் நகர்ந்து பதினேழு மைலுக்கு அந்தண்டை உள்ள இடமல்லவா இங்கே வந்திருக்க வேண்டும்? – இப்படிக் கேட்கிறார் பூப்ரமண ஸித்தாந்தத்தை ஆக்ஷேபிக்கிறவர்.

இதற்கு மேற்படி ஸித்தாந்திகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. ஆனால் நவீன விஞ்ஞானம் படித்தவர்களைக் கேட்டபோது, “பூமியைச் சுற்றி சுமார் 200 மைலுக்கு atmosphere என்ற காற்று மண்டலம் இருக்கிறது; அதற்கப்புறமும் உறைகள் மாதிரிச் சில மண்டலங்கள் இருக்கின்றன; இவையும் பூமியோடு கூடவே சுற்றி வருகின்றன” என்று விளக்குகிறார்கள். நான் இப்போது சொன்னதில் கொஞ்சம் பிசகு இருந்தாலும் இருக்கலாம். அதெப்படியானாலும், பூமி மட்டுமன்றி அதன் அட்மாஸ்ஃபியரும் அதோடுகூட சுற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.

Arabic Numeral என்று சொல்கிற 1,2,3,4 இலக்கங்களுக்கு இந்தியாதான் மூலமான தாய்வீடு என்று, இப்போது மேல் நாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஸைஃபர் என்பதே இந்தியாவிலிருந்து வந்ததுதான் என்று மேல்நாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள். இது தெரிய வந்ததால்தான் கணித சாஸ்திரம் பூரண ரூபம் பெற முடிந்தது என்கிறார்கள்.

ஸைஃபர் வந்தது மட்டுமில்லை, எந்த இலக்கத்தை ஸைஃபரால் வகுத்தாலும் infinity (அனந்தம்) வருகிறது என்ற சூக்ஷ்மமான கணித உண்மையையும் பாஸ்கராசாரியார் சொல்லி அதைப் பரமாத்ம தத்வத்தோடு சேர்த்துத் தம் கணித சாஸ்திரத்தின் மங்கள ச்லோகமாகக் கூறுகிறார்.

வகுக்கும் எண் (divisor) சின்னதாக ஆக ஆக ஈவு (quotient) பெரிதாகும் அல்லவா? பதினாறை எட்டால் வகுத்தால் (அதாவது வகுக்கும் எண் எட்டாக இருந்தால்) ஈவு 2; வகுக்கும் எண் நாலானால் ஈவு 4; இரண்டானால் ஈவு 8 ஆகிறது. ஸைஃபராலேயே வகுத்து விட்டால்? அப்போது ஈவானது எண்ணிக்கையாலேயே குறிப்பிட முடியாத அனந்தமாகிவிடுகிறது; infinity ஆகி விடுகிறது. வகுபடும் எண் எதுவானாலும் சரி, அதை வகுக்கிற எண் ஸைஃபரானால் ஈவு அனந்தம். இதற்கு கஹரம் என்று பாஸ்கராச்சாரியர் பேர் கொடுத்திருக்கிறார். ‘கம்’ (Kham) என்றால் ஸைஃபர்; ‘ஹரம்’ என்றால் வகுத்தல், ‘இப்படி அனந்தமாக இருக்கிற பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்’ என்று தம்முடைய கணித சாஸ்திரத்தில் அவர் சொல்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சகுனம், நிமித்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மூடநம்பிக்கையல்ல ; ஆதார பூர்வமான உண்மைகளே !
Next