மூன்றாவது வழி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

எந்தக் காரியத்தையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தப்பி ஒரு காரியத்தைச் செய்தால் கஷ்டந்தான் உண்டாகும். ‘நியாயம்’ என்றாலும் முறை என்றே பொருள். சாலையில் செல்லும்போது இடது பக்கம் போகவேண்டும் என்றால், எல்லோரும் இடது பக்கமாகப் போவதுதான் முறையாகும். பெரியோர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு பொதுவான முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் போட்டிருக்கும் வழியில் செல்வதுதான் நல்லது.

பகவானிடம் போவதற்கு இரண்டு முறைகளை – நியாயங்களை – வகுத்துத் தந்திருக்கிறார்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை; மற்றொன்று பூனைக் குட்டி முறை. ஸம்ஸ்கிருதத்தில் பூனை என்பதற்கு மார்ஜாரம் என்றும், குரங்கு என்பதற்கு மர்க்கடம் என்றும் பெயர். கிசோரம் என்றால் குட்டி என்று அர்த்தம். ஆகவே ஸம்ஸ்கிருதத்தில் இவை மர்க்கட கிசோர நியாயம் என்றும், மார்ஜார கிசோர நியாயம் என்றும் வழங்குகின்றன.

பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய்ப் பூனையே தன் வாயினால் கவ்விக் கொண்டு தூக்கிச் செல்கிறது. இதே போலத்தான் புலியும். புலிக்குப் பூனை மாமா முறை ஆகவேண்டும் என்பார்கள். புலிக்கு வேட்டையாடுதல், தாண்டுதல், பதுங்கிப் பாய்தல் ஆகிய எல்லாவற்றையும் பூனை சொல்லிக்கொடுத்ததாம். ஒன்றை மட்டும் சொல்லித் தரவில்லை. தானோ மிகவும் சிறியவன், எல்லாவற்றையும் சொல்லித் தந்தால் தனக்கே ஆபத்து வந்துவிடும் என எண்ணி, மரத்தில் ஏறுதல், சுவரில் ஏறுதல் முதலியவற்றைப் புலிக்குச் சொல்லித் தரவில்லையாம்! புலிக்கும் பூனைக்கும் தன் குழந்தைகளிடத்தில் வாத்ஸல்யம், பிரியம் அதிகம்.

பகவான் எல்லாக் குழந்தைகளுக்குமே தாயை மயக்கக்கூடிய சக்தியைத் தந்திருக்கிறார். அப்போதுதான் இக்குழந்தை வாழ வழி உண்டு என்பதாலேயே மாயாவியாகிய பகவான் அதற்கு ஏமாற்றும் வித்தையைச் சொல்லித் தந்திருக்கிறார். நம் கர்மாவை அனுபவிப்பதற்கு உடம்பு வேண்டும்; அந்த உடம்பு வளர உணவு வேண்டும். இதற்காகவே, (நமக்கு இந்த உண்மை தெரியாவிட்டாலும்) நாம் நம் வயிற்றில் ஆகாரத்தைப் போடுகிறோம். உடல் வளர்கிறது. இதற்காக நாக்கு என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. நாக்கில் நமக்கு ருசி தெரிகிறது. ருசி இல்லையென்றால் நாம் சாப்பிடமாட்டோம். உடலுக்குள் உணவு செல்லாது. ஆகவேதான் நாக்கில் ருசியைக் கொடுத்து அதன் மூலம் உடலானது உணவைப் பெற்றுக் கர்மாவை அனுபவிக்கும்படி பகவான் செய்திருக்கிறார். இவ்வாறெல்லாம் நாம் கர்மாவை அனுபவிக்கப் பண்ணுவதற்காகவே பகவான் பல தந்திரங்கள் செய்திருக்கிறார். பகவான் குழந்தைகளுக்கு மயக்கும் சக்தியைக் கொடுத்து அதை நாம் பிரியத்துடன் வளர்க்க வைத்து, நம்மை ஏமாற்றுகிறார். ஆனாலும் பகவானின் ஏமாற்றுவித்தை சாதாரண மக்களிடம்தான் பலிக்கும். ஞானியை பகவான் ஏமாற்ற முடியாது. ஞானி பகவானையே ஏமாற்றிவிடுவான்.

“சிக்ஷா சாஸ்த்ர”த்தில் வேத அக்ஷரங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதில் வேதத்தை எப்படிக் கற்கவேண்டும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “எப்படிப் பெண் புலியானது தன்னுடைய குட்டியை ஆபத்திலிருந்து காக்கத் தன் வாயில் கவ்விச் செல்கிறதோ, அப்படி வேதத்தை உச்சரிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது*. புலி தன்னுடைய குட்டியை வாயில் கவ்விக் கொண்டு போகும்போது, குட்டியின் உடலிலே பற்காயம் ஏற்பட்டு விடக்கூடாது, குட்டி கீழே விழுந்து விடவும் கூடாது. அதுமட்டுமின்றி ஆபத்திலிருந்து தப்புவதற்காகத் தாய்ப்புலி வேகமாகவும் ஓட வேண்டியிருக்கும். இந்நிலையில் புலி குட்டியை எவ்வளவு ஜாக்கிரதையாக வாயில் பதமாகக் கவ்விக் காக்கிறதோ, அவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக வேதத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதே போலத்தான் பூனையும். பூனைக்குக் ‘கிராமப் புலி’ என்றே பெயர். ஆகவே வேதத்தை மார்ஜார கிசோர நியாயமாக உச்சரிக்கவேண்டும் என இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வகை பக்தியில் பூனைக் குட்டி முறை ஒன்று. அதாவது பக்தர்களில் ஒரு வகையினர், இந்தப் பூனைக்குட்டி தன் முயற்சியின்றி, தாய்விட்ட வழி என்றிருப்பது போலவே பகவானை சரணடைந்து இருப்பர். அவரைப் பணிவுடன் வேண்டி அவரைத் துதித்துப் புகழ்பாடி அவருடைய அருளை வேண்டுவார்கள். அவருடைய பொற்பாத கமலங்களில் தங்களது உள்ளத்தைக் கிடத்துமாறு செய்து, தம்மை ஆட்கொள்வது பகவானது பொறுப்பே என்று கருதி, பூனைக்குட்டி சுயமுயற்சியின்றித் தாயை நம்பி இருப்பதுபோல் இருப்பார்கள். இவ்வித பக்திக்கு மார்ஜார கிசோர நியாயம் என்று பெயர்.

பூனைக்குட்டிக்கு நேர் மாறு குரங்குக் குட்டி. இந்தக் குரங்குக் குட்டி போன்றவர் இன்னொரு வகை பக்தர்கள். குரங்கின் குட்டியானது அதன் தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். தாய் மரத்துக்கு மரம் தாவும்போது தன் குட்டியைப் பற்றி யாதொரு கவலையும் கொள்ளாது. குட்டிதான் தன்னைக் காத்துக் கொள்ளத் தாயின் வயிற்றை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இந்தக் குட்டிக்கு பகவான் அப்படிப்பட்ட ஒரு பிடிக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். “கடித்ததெல்லாம் கரும்பு; பிடித்ததெல்லாம் இரும்பு” என்று பகவான் அதற்கு வரம் கொடுத்திருக்கிறாராம். அது எதையும் பலத்துடன் பற்றிக் கொள்ளும். குரங்குப் பிடி என்றே சொல்வதுண்டே!

இப்படிப்பட்ட குரங்கின் ரீதியிலேயே, மர்க்கட கிசோர நியாயமாக, சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகவானை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வார்கள். பகவானே அருள் செய்யட்டும் என்று காத்திராமல், அவன் உதறித் தள்ளினாலும் விடுவதில்லை என்று அவனைப் பிடித்துக் கொள்வார்கள். ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார். அவரே சிவபுராணத்தில் ‘பக்தி வலையில் படுவோன்’ என்று கூறுகிறார். அப்படியானால் பக்தர்கள் பகவானைச் சிக்கென்று பிடிக்கிறார்களா, பகவான் பக்தரிடம் சிக்கிக் கொள்கிறானா என்ற கேள்வி வருகிறது. பக்தன் சிக்கென்று பிடித்துவிட்டால், அப்புறம் பகவானே அவனிடம் சிக்கிக்கொண்டு விடுகிறான். பக்தர்கள் கையிலிருந்து பகவான் தப்ப முடியாமல் வலையில் விழுந்த மீன்போலச் சிக்கிவிடுகிறார்.

வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்று இரண்டாகப் பிரித்திருப்பதே இந்த இரண்டு வித சரணாகதி வித்தியாஸத்தினால்தான். ஸ்ரீ வேதாந்ததேசிகனைப் பின்பற்றும் வடகலைக்காரர்கள் மர்க்கட கிசோர நியாயத்தை அநுஸரித்து நாம்தான் விடாமுயற்சியுடன் ஸ்வாமியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார் ஆகியவர்களைப் பின்பற்றும் தென்கலைக்காரர்கள், மார்ஜார கிசோர நியாயப்படி நாம் எந்த முயற்சியும் இல்லாமல் கிடந்துவிட்டால் போதும், ஸ்வாமியே நம்மை ஆட்கொண்டுவிடுவார் என்கிறார்கள். இப்போது வடகலை, தென்கலை என்றால் நாமம் போட்டுக் கொள்வதில் இருக்கிற வித்தியாஸத்தைத்தான் நினைத்துக் கொள்கிறோம். இங்கிலீஷ் ‘யு’ (U) மாதிரி நாமம் போட்டுக் கொண்டால் வடகலை; ‘ஒய்’ (Y) மாதிரி அடியிலே பாதம் வைத்துப் போட்டுக் கொண்டால் தென்கலை என்று புரிந்து கொள்கிறோம். வாஸ்தவத்தில் அவர்களுக்குள்ளே வித்தியாஸம் சரணாகதியில் இருவிதமான தத்வங்களை அநுசரிப்பவர்கள் என்பதே. வழியிலே இன்னார் இன்ன தத்வக்காரர் என்று தெரிவிப்பதற்கே வடகலைக்காரர் U மாதிரியும், தென்கலைக்காரர் அதற்குப் பாதம் வைத்து Y மாதிரியும் நாமம் போட்டுக் கொள்கிறார்கள். சரணாகதி என்பதைப் “பிரபத்தி” என்பார்கள்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ

என்று பகவான் கீதையின் முடிவில் சொல்லியிருக்கிறதுதான் சரணாகதி சாஸ்திரத்துக்குத் தாரக மந்திரம் மாதிரி. ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி விபீஷண சரணாகதியின் போது, ‘ராமா, நான் உன்னுடையவன்; அபயம்!’ என்று எவன் வந்தாலும் அவனை ரக்ஷிப்பதே என் ஜன்ம விரதம்:

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வ பூதேப்யோ ததா(மி) ஏதத் வ்ரதம் மம ||

என்று சொன்னதையும் வைஷ்ணவர்கள் ரொம்பவும் சிறப்பித்துச் சொல்வார்கள். கீதை, ராமாயணம் இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் என்பார்கள்.

தத்வங்கள், ஸித்தாந்தங்கள் இருக்கட்டும். நடைமுறையில் நாம் எப்படியிருக்கிறோம்? அவன் விட்ட வழி என்று நம்பிக்கையோடு கிடப்பதற்கு நம்மால் முடிகிறதா? அத்தனை பக்தி, வைராக்யம் நமக்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. சரி, அப்படியானால் நாம்தான் முயற்சி பண்ணி அவன் அருளை வலியப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஸதாவும் அவனையே பிடித்துக் கொண்டிருக்கவாவது நம்மால் முடிகிறதா? இதுவும் முடியவில்லை.

‘நல்லதோ பொல்லாததோ நமக்கென்று என்ன இருக்கிறது? அம்மாக்காரி செய்கிறபடி ஆகட்டும்’ என்பதாக, சுயமுயற்சியே இல்லாமல் மார்ஜார கிசோரமாகக் கிடக்கவும் நமக்குப் பக்குவம் இல்லை. ‘அம்மாவை விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்; பிடிவாதமாக அவள் ரக்ஷணையைப் பெற்றே தீரவேண்டும்’ என்று மர்க்கட கிசோரமாக சரணாகதி பண்ணவும் நமக்குப் பக்குவம் போதவில்லை.

இரண்டும் இல்லாவிட்டால், இப்படி இரண்டுங் கெட்டனாக இருந்தால் எப்படித்தான் உருப்படுவது? அதற்கு என்ன வழி? இரண்டு வழிகள், முறைகள், நியாயங்கள் மேலே சொன்னேன். இரண்டும் முடியாது என்றால் என்ன செய்வது? யாரிடம் போவது? எந்த வழியிலானாலும் சரணாகதி செய்வதற்குரிய பக்குவமில்லாத நாமும் போகக்கூடிய மூன்றாவது வழியைச் சொல்பவர் யாராவது இருக்கிறார்களா?

இருக்கிறார். நம் சங்கர பகவத் பாதாள்தான் அவர்.

“இரண்டுவித சரணாகதியும் பக்தியில் வருவது. இந்த பக்தியே நமக்கு எட்டமாட்டேன் என்கிறது. ஆசார்யாளோ இதைவிடக் கஷ்டமான ஞானத்தைச் சொல்கிறவரல்லவா? ‘பக்தனும் இல்லை, பகவானும் இல்லை என்று அப்படியே ப்ரம்மமாக இருந்துவிடு’ என்கிறவரல்லவா? நாம் இருக்கிற ஸ்திதியில், அது கொஞ்சங்கூட ஸாத்யமில்லாத விஷயமல்லவா?” என்று தோன்றலாம்.

ஆசார்யாள் ஞானத்தைச் சொன்னவர்தான். ஆனால் அவர், அதிகாரி பேதம் பார்த்து இன்னார் இருக்கிற நிலைக்கு இன்ன வழிதான் ஸாதனம் என்று உணர்ந்து கர்மம், பக்தி இவற்றைக்கூட அங்கீகாரம் பண்ணி இந்த மார்க்கங்களிலும் வழி காட்டியிருக்கிறார். இவற்றில் போனாலே, ஒற்றையடிப்பாதை ஹைரோட்டில் கொண்டு சேர்க்கிற மாதிரி, இவை ஞானத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என்று சொல்லியிருக்கிறார். இப்படித்தான், பக்தியிலும் மேலே சொன்ன இரண்டு வழிகளைத் தவிர, பக்குவம் போதாத நமக்கும் கொஞ்சத்தில் கொஞ்சம் ஸாத்யமாக ஒரு மூன்றாவது வழியைச் சொல்லியிருக்கிறார்.

மர்க்கட கிசோரம், மார்ஜார கிசோரம் ஆகிய இவ்விரண்டு முறை, அல்லது நியாயத்தைத் தவிர மூன்றாவதாக ஒரு நியாயத்தை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் தமது சிவானந்த லஹரியில் கூறுகிறார்.

இங்கே மனத்தை அவர் குரங்காகத்தான் சொல்கிறார். ஓயாமல் அலை பாய்வதில் அது குரங்காகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்வாமி என்ற தாயைத் தானாகக் கட்டிக் கொள்கிற விஷயத்தில் மட்டும் நம் மனம் குரங்காக இருக்கவில்லை. எனவே, ஸ்வாமியே குரங்காட்டியாக வந்து இந்தக் குரங்கைக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார், நம் ஆசார்யாள். இந்த மனக் குரங்கு சில சமயம்தான் முறையான வழியில் போகிறது. திடீரென அடர்ந்த காட்டுக்குள் போய் வழி இன்றித் தவிக்கிறது; அலைகிறது. அப்படிப்பட்ட இந்தக் குரங்கை யாராவது ஒரு குரங்காட்டியிடம் கொடுத்துவிட வேண்டியதுதான் முறையாகும். அதனால் குரங்கும் பிழைக்கும்; குரங்காட்டிக்கும் பிழைப்பு நடக்கும்.

“நீயோ கபாலக் கப்பரையை வைத்துக்கொண்டு பிச்சைக்காரனாக, பிக்ஷாடனனாகத் திரிகிறாய். உனக்கு ஏற்ற குரங்கு இருந்தால் அதைக்கொண்டு நீயும் பிழைக்கலாம். குரங்கும் உன்னால் அடக்கப்பட்டுச் சீரடையும். உனக்குத் தகுந்த குரங்கு ஒன்று உண்டென்றால், அது என்னுடைய மனம்தான். என் மனமானது குரங்குக் குட்டியாக இருந்தாலும், நீ அதற்குத் தாயாக இருப்பதை அறிந்து அது உன்னைப் பற்றிக் கொள்ளவில்லை. மனம் பூனைக் குட்டியாகவும், நீ தாய்ப் பூனையாகவும் இருந்தாலாவது நீயாகவே அதைத் தூக்கிச்சென்று காப்பாற்றுவாய். ஆனால் இதுவோ அடங்காத குரங்கு. நீயும் பூனையாக இல்லாமல் பிச்சைக்காரனாக இருக்கிறாய். ஆகவே, நீ ஒரு கயிற்றைக் கொண்டு இந்தக் குரங்கைக் கட்டிப் போட்டுத்தான் அடக்க வேண்டும். இதனால் நீயும் வெறுமே பிச்சை கேட்கிற தடியாப் பிள்ளையாக இல்லாமல், குரங்காட்டு வித்தை என்று ஒரு பொழுதுபோக்கைக் காட்டி, கலைஞன் என்ற ஹோதாவில் ஸம்பாவனை கேட்பதாக ஒரு கௌரவம் பெறுவாய். இந்தப் பொல்லாத குரங்கு உன்னிடமிருந்து தப்புவதற்குப் பலவாறு முயற்சி செய்யும். நீ அன்பு என்கிற கயிற்றால் அதைக் கட்டி இழுத்துச் செல்வாயாக!” என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர்.

பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம். உண்மையில், மனமானது கண்டப்படி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் ஸ்வாமியின் அருளை நாம் கோரவேண்டும். மனம் அவசியமற்றவைகளையெல்லாம் செய்யத் தூண்டும். கண்ணால் காணக் கூடாதவைகளைக் கண் பார்க்கிறது. காதால் கேட்கக் கூடாதவற்றைக் காது கேட்கிறது. நாக்கினால் ருசிக்கக் கூடாதவைககளை நாக்கு ருசிக்கத் துடிக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மனம் பல பொருட்களைக் கண்டு மயங்குவதுதான். இதற்கெல்லாம் மேலான அழகுள்ள பொருள் கிடைத்துவிட்டால், மனமானது இவற்றை விட்டுவிட்டு அந்த ஒரு அழகு வஸ்துவையே பற்றிக் கொண்டு திருந்திவிடும். ஒரு குழந்தைக்குப் பொரி உருண்டையின் மேல் மிகவும் பிரியம். ஆனால் லாடு கிடைத்தால், அதே குழந்தை பொரி உருண்டையைத் தூக்கி எறிந்துவிட்டு லாடுவை எடுத்துக் கொள்கிறது. அதுபோல் மற்ற எல்லாவற்றையும் விட அழகான பொருள் கிடைத்தால் மனம் அதில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கும். அப்பேர்ப்பட்ட அனைத்திலும் அழகிய வஸ்து ஈசுவரனே! ‘பிச்சைக்காரனான நீ, மிக அழகுடையவனான நீ, இந்த மனக்குரங்கைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போய் விடுவாயாக!’:

கபாலின்! பிக்ஷோ! மே ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்

த்ருடம் பக்த்யா பத்த்வா சிவ, பவத் அதீனம் குரு விபோ!

என்று ஆசார்யாள் சிவானந்த லஹரியில் கூறுகிறார்.

‘கபி’ என்றால் குரங்கு. ஹ்ருதய கபி: மனக் குரங்கு.

பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. நம்மிடம் இல்லாமல் அவனிடம் உள்ள ஏதோ ஒன்றைக் கேட்கவேண்டியதில்லை. நம்மிடமே இருக்கும்படியான நம் உண்மை ஸ்வரூபத்தை நாம் அறியவில்லை. நம்முடைய உண்மை ஸ்வரூபம் ஆனந்த மயமானது. பகவானேதான் அது. பரமாத்மாவேதான் அது. அப்படிப்பட்ட நம் நிஜ ஸ்வரூபத்தை மனத்தால் மறைத்துக்கொண்டு ஓயாமல் துக்கப்படுகிறோம். “என் உண்மை நிலையை உணர அருள்வாயாக! என்னை நான் அறிய முடியாதபடி, இந்த மனசு ஆட்டிப் படைக்கிறது. இதை அன்பினாலே கட்டி, கட்டுப்படுத்தி என்னிடம் கொடுத்தால் போதும். என் ஸ்வரூபத்தையே நான் காண முடியாமல் கெடுக்கும் இந்தக் கெட்ட மனப்போக்கை நீ எடுத்துப் போ. என் ஸ்வரூபத்தையே எனக்களித்து அதைக் காக்க வேண்டிய காவலன் நீ!” என்று பிரார்த்திப்போம்.

‘தாய் விட்டபடி’ என்றிருக்கும் பூனைக் குட்டிபோல் பகவானை சரணமடைய நமக்குப் பக்குவமில்லை. குரங்காகத் திரிகிறது நம் மனசு. ஆனாலும் குரங்குக் குட்டிபோல் அவனை பற்றிக்கொள்ளவும் நமக்குப் பக்குவமில்லை. குரங்கு குட்டியாக இருந்துகொண்டே, பூனையம்மாவின் ரக்ஷணையைக் கேட்பவர்களாக இருக்கிறோம்! ஆகவே, ஆசார்யாளின் மூன்றாவது வழியைப் பின்பற்றி நாமும் “மனத்தை நீயே அடக்கி அருள்வாய்” என்று பிரார்த்திப்போம்.

இது முதலில் ஸதாகாலப் பிரார்த்தனையாக இருக்காது. ஸதாவும் பிரார்த்திக்கிறோம் என்றால், எப்போதும் அவனை விடாமல் பிடித்துக்கொண்டு மா்க்கட கிசோரமாக இருக்கிறோம் என்றாகிவிடுமே! நமக்குத்தான் அவ்வளவு யோக்கியதை இல்லையே! ஆனாலும் ஏதோ கொஞ்சம் தவிப்பு, உருப்படவேண்டும் என்ற கவலை உண்டாகிவிட்டதல்லவா? ஏதோ ஒரு நிலையில், இரண்டு நிமிஷமாவது பிரார்த்தனை என்று பண்ணத் தோன்றுகிறதல்லவா? அப்போது இந்தப் பிரார்த்தனையைப் பண்ணிக்கொள் என்று ஆசார்யாள் வழி காட்டுகிறார்.

“நான் முழுதும் குரங்காக இல்லை. மற்ற எல்லா விஷயத்திலும் மனசு குரங்காகத் திரிந்து கொண்டிருந்தாலும் உன்னைப் பிடித்துக்கொள்கிற விஷயத்தில் மட்டும் அப்படி இல்லை. வரனுக்கு எல்லா qualifications-வும் [தகுதியும்] இருக்கிறது; ஆயுள் பாவம் மட்டுமில்லை என்கிற மாதிரி, எதில் முக்கியமாகக் குரங்காக இருக்க வேண்டுமோ, அது ஒன்றைத் தவிர பாக்கி எல்லாவற்றிலும் குரங்காக இருக்கிறேன்! அதனால் இந்த விஷயத்தில் நீதான் தாய்ப் பூனை மாதிரி செய்யவேண்டும். ஆனாலும் நான் முழு குரங்குக்குட்டியாக இல்லாதபோது உன்னை மட்டும் முழு தாய்ப்பூனையாக இருக்கச் சொன்னால் அது நியாயமில்லை. உன்னிடம் அவ்வளவு பெரிய அநுக்ரஹம் எதிர்பார்க்க எனக்கு யோக்கியதை இல்லை. அதனால் ஒரேயடியாக நீ என்னை ஆட்கொண்டு நடத்திக்கொண்டு போ என்று நான் சொல்லவில்லை. ஆனால் என் அலைபாயும் குரங்கு மனஸையும் ஏதோ கொஞ்சம் சரிபண்ணிக் கொண்டு நான் இந்த நிமிஷம் உன்னைப் பிரார்த்திக்க வந்திருக்கிறேன் அல்லவா? இந்தப் பிரார்த்தனை இன்னம் வலுப்பதற்குப் பக்திக் கயிற்றால் சற்று என்னைக் கட்டிப் போடு. உன்னை விட்டுவிட்டு அந்த கயிற்றின் நீளத்திற்கு நான் ஓடிக்கொண்டுதான் இருப்பேன். நீயும் அந்த அளவுக்கு ஆட்டம் பார். ஆனால் ஒரேயடியாக உன்னிடமிருந்து நழுவிப் போவதற்கு விடாதே. இம்மாதிரி, உன்னுடனேயே ஒட்டிக் கொண்டிராவிட்டாலும், உன்னை விட்டு ஒரே ஓட்டமாக ஓடாமல் நீ என்னைக் கொஞ்சம் விட்டுப் பிடித்தால், அதுவே இந்த ஸ்டேஜில் எனக்குப் போதுமானது. உன்னை நான் விடாமல் மர்க்கட கிசோரமாகப் பிடித்துக் கொள்வதோ, நீ என்னை விடாமல் பிடித்துக்கொள்வாய் என்று பூர்ணமாக நம்பி நான் எந்த பாரமும் இல்லாமல் மார்ஜார கிசோரமாகக் கிடப்பதோ -இந்த இரண்டில் எதுவோ ஒன்று எப்போது வாய்க்கிறதோ அப்போது வாய்த்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ஒரு நிமிஷம் நான் குரங்குக் குட்டியாக இந்த பிரார்த்தனையாவது பண்ணுகிறேன் அல்லவா? இதற்குப் பிரதியாக நீயும் கொஞ்சம் தாய்ப் பூனையின் ஸ்வபாவத்தைக் காட்டி என்னை இன்னம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறப் பண்ணுவதற்கு எண்ணு. அதாவது, எனக்கு உன்னிடம் உள்ள அன்பை, பக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு போகப் பண்ணு” என்றிப்படிப் பிரார்த்தனை பண்ண வேண்டும்.

முதலில், நாமிருக்கிற நிலையில், “பக்தியைத் தா” என்று பிரார்த்தனை பண்ணுவோம். பக்தி வந்தபின் பிரபத்தியில் எது, மா்க்கட கிசோரமா, மார்ஜார கிசோரமா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரண்டுக்குமே மூலாதாரமாக பக்தி அல்லவா இருந்தாக வேண்டும்?

இரண்டுமே கலந்து கலந்துதான் வருகிறது என்கிறமாதிரி, ஆசாரியாள் ச்லோகத்திலிருந்து தொனிக்கிறது. பிரார்த்தனை என்று ஒன்றைப் பண்ணுகிறோம் என்ற அளவுக்கு நாம் குரங்குக் குட்டியாக அவனைத் துளி பிடித்துக் கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால் பிடிப்பு உறுதியாக இல்லை. பிடி நழுவி நாம் விழுந்துவிடுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம். இப்போது, அதாவது நம் முயற்சி போதாதபோது, அவனே பூனையம்மாவைப்போல் நமக்கு உறுதி தர வேண்டியிருக்கிறது என்ற உணர்வைப் பெற வேண்டும். “நான் நழுவி விழாமல் பக்திக் கயிற்றைப் போட்டுக் கட்டிப் பிடித்துக் கொள் — த்ருடம் பக்த்யா பத்த்வா பவத் அதீனம் குரு” — என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

உன் அருள் என்ற கயிற்றால் கட்டிப் போடு” என்று ஆசார்யாள் சொல்லவில்லை. அப்படிச்சொன்னால், அவனே பூனை கவ்விக் கொள்கிற மாதிரி நம்மைக் கயிற்றால் தன் வசத்தில் வைத்துக் கொண்டு, நம்மை உய்விக்கிற பொறுப்பைத் தானே வைத்துக்கொண்டு விடுகிறான் என்று ஆகிவிடும். பக்த்யா பத்த்வா என்றே சொல்கிறார். அதாவது “உன் அருளால்” கட்டு என்று சொல்லாமல், “என் பக்தியாலேயே என் மனஸைக் கட்டு” என்கிறார். “பக்தி வலையில் படுவோன்” என்று மாணிக்கவாசகர் சொன்ன மாதிரி ஆசாரியாள் சொல்லவில்லை. அதாவது நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிற அவனையே நாம் பக்திக் கயிற்றால் கட்டுகிறோம். அல்லது பக்தி என்ற வலைக்குள் பிடித்துவிடுகிறோம் என்று சொல்லவில்லை. இப்படிச் சொல்லியிருந்தால் அது முழுக்க மர்க்கட கிசோர நியாயமாக ஆகிவிடும்.

இரண்டும் இல்லாமல், இரண்டும் கலந்த மாதிரி ஆசாரியாள் சொல்கிறார். பக்தியால் அவனைக் கட்டுகிற பக்குவந்தான் நமக்கு இல்லையே! அதனால் இப்போது இந்த ஆரம்ப நிலையில் பக்தியையே அவன்தான் தரவேண்டும். நாம் பக்தியே செய்யாமல் அவனே நம்மை ஒரேயடியாக உய்வித்து மோக்ஷத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. அது ரொம்பவும் தகாத ஆசை. அதனால் ‘பக்தியைக் கொடு; அப்படிக் கொடுப்பதே உன் அருள்தான்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகரும் சொல்கிறது போல, அவன் தன் அருளால் நேரே மோக்ஷத்துக்குத் தூக்கிவிடாமல், முதலில் நாம் அவனை பக்தி பண்ணுகிறதற்கே அருள்செய்ய, அப்புறம் நம் பக்திக்கு இரங்கி மோக்ஷம் தரவேண்டும். இப்படிப் புருஷப் பிரயத்தனமும், தெய்வாநுக்ரஹமும் கலந்து வந்தால்தான் நன்றாயிருக்கிறது. நியாயமாயிருக்கிறது. இப்போது நமக்குச் சுரக்க வேண்டிய அன்பை (பக்தியை)யே அவன் ஒரு கயிறாகத் தரட்டும். பக்தியால் நாம் அவனைக் கட்டுவதும் கட்டாததும் பிற்பாடு நடக்கிறபடி நடக்கட்டும். இப்போதைக்கு அவனே நாம் பக்தியை விட்டுவிடாத மாதிரி, அதனால் நம்மைச் சுருக்குப் போட்டுக் கட்டிவிடட்டும் -என்றிப்படி மா்க்கட கிசோர நியாயமாகவும் இல்லாமல், மார்ஜார கிசோர நியாயமாகவும் இல்லாமல், ஒரு வழியை ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிறார்.

“பிரபத்தியில் இப்படியா அப்படியா? குரங்குக் குட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டுமா, அல்லது பூனைக் குட்டியாகத் தன் செயல் இல்லாமல் கிடக்க வேண்டுமா?” என்று வாதம் செய்து சண்டை போட்டு, ஏதாவது ஒன்றை நிலைநாட்டி விடலாம். ஆனால் அது வெறும் வாதமாகத்தான் இருக்குமே தவிர, காரியத்தில், நம்மில் அபூர்வமாக லக்ஷத்தில் ஒருத்தனைத் தவிர எவராலும் இரண்டு விதங்களில் எதிலும் சரணாகதி பண்ண ஸாத்யப்படாது. இதற்காக நாம் மனம் தளர்ந்து விடாமல், நம் நிலையிலும் ஸாத்யப்படுகிறமாதிரி, “பக்தி வரம் தா அப்பா!” என்று பிரார்த்திக்க, ஆசார்யாள் வழி சொல்லிக் கொடுக்கிறார்.

இப்போதைக்கு இந்த மூன்றாவது வழியில், நிஜ பக்தியைக் கொடு என்று பிரார்த்தனை பண்ண முடிந்த மட்டும் பண்ணுவோம். அப்புறம் அது முதலில் சொன்ன இரண்டு வழிகளில் எதில் கொண்டு சேர்க்கிறதோ, அல்லது பகவத்பாதாளின் ஞான மார்க்கத்தில்தான் சேர்கிறதோ, அப்படிச் சேர்த்துவிட்டுப் போகட்டும். எந்த நதியானாலும் முடிவில் அதை ஸமுத்ரம் எடுத்துக்கொள்கிற மாதிரி எந்த வழியானாலும் அதன் முடிவில் ஒருவனேயான பரமாத்மா நம்மை எடுத்துக்கொள்வான்.

“என் மனஸைக் கட்டி உன் ஆதீனத்திலேயே வைத்துக்கொள்ளு” என்று இங்கே நம்முடைய பக்தி பாவத்தை ஈச்வரப் பிரஸாதமாகவே ஆசார்யாள் விட்டுவிடுகிறார். அவரது பாஷ்யங்களிலும், அத்வைத பிரகரண கிரந்தங்களிலும் ஈச்வர ஆராதனத்தை மனம் ஒருமைப்படுவதற்காக அவர் உபாயமாகச் சொல்லியிருந்தாலும், ஈச்வரனின் அருளாலேயே பக்தியும் ஸம்பாதித்துக் கொள்ளப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அத்வைத நூல்கள், ஞானவிசாரமும், ஆத்ம தியானமும் செய்யக்கூடிய பக்குவம் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. இங்கே “சிவானந்த லஹரி”யில் நம் எல்லோராலும் முடிந்த பக்தி மார்க்கத்தைக் காட்டுவதால் இந்த மாதிரி சொல்கிறார். பக்தியினால் (உபாஸனையால்) ஸாதகனே மனஸைக் கட்டவேண்டும் என்று ஞானப் புஸ்தகங்களில் சொன்னார். இங்கே ஈச்வரனிடம், “அப்பா, பக்தியைத் தந்து, அதனால் எங்கள் மனஸைக் கட்டிப்போடு” என்று அவனிடமே விட்டுவிடுகிறார் ஆசார்யாள்.

“ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்” என்று ஆசார்யாள் சொல்கிறபடி, மகா சபலத்துடன் தாவிக்கொண்டேயிருக்கிற மனக் குரங்கை ஈச்வரன் கட்டி வைத்து, முதலில் அது கயிற்றின் நீளத்துக்குத் தாவுகிற மாதிரி விட்டுப் பிடித்தாலும், அப்புறம் அது அவன் ஆட்டினால்தான் ஆடுவது என்று குரங்காட்டியின் குரங்கு மாதிரிச் சும்மா இருக்கிறபடி செய்துவிடுவான். மனஸ் இப்படித் துளிக்கூடத் தானாக நகராதபோது, அதை அவனும் ஆட்டி வைக்காவிட்டால், அதுதான் மனமே அழிந்துபோய் ஆத்மா மட்டும் பிரகாசிக்கற அத்வைத சித்தியான மோக்ஷம். இப்படிப்பட்ட அத்வைதத்தைத் தருவதும் பரமாத்மாவின் கையில்தான் இருக்கிறது என்கிற மாதிரி இங்கே கயிற்றை அவன் கையிலேயே கொடுத்திருக்கிறார்! இந்த ச்லோகம் பக்திப் பிரார்த்தனையாக இருக்கும்போதே அதற்குப் பலனாகப் பரமாத்மா ஞான மோக்ஷத்தைக் கொடுக்கவும் செய்யலாம் என்கிற அபிப்பிராயத்தையும் கொடுக்கிறது.

பின்னாடி ஒரு ச்லோகத்தில் இந்த அபிப்பிராயம் இன்னம்கூட ஸ்பஷ்டமாக வருகிறது. அந்த ச்லோகத்தில் மனஸை ஒரு மதயானைக்கு ஒப்பிட்டுவிட்டு, “இந்த யானையை ஞானம் என்கிற கருவியால் உன் பாதமான தறியில் கட்டிவிடு” என்கிறார்: “ஹ்ருதய மதேபம் பதான சித்யந்த்ரை:

இங்கே “பக்த்யாபத்த்வா” (பக்தியினாலே கட்டி) என்றவர் அங்கே “பதான சித்யந்த்ரை:” (ஞானத்தால் கட்டு) என்கிறார். பக்தியைத் தருவது, ஞானத்தைத் தருவது, அதனால் முடிவில் அத்வைதத்தையே தருவது ஆகிய எல்லாமும் பரமாத்மப் பிரஸாதமாகவே கிடைக்கக் கூடியவை என்று இதிலிருந்து தெரிகிறது. நமக்கு அவன் பக்தியைத் தந்து, நாம் அவனை பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே, அவன் ஞான மோக்ஷாதிகளைக் கொடுத்துவிடுவான் என்ற தாத்பரியம் ஏற்படுகிறது.

அந்த பக்தியை முதலில் பிரார்த்திப்போம். அதனால் இரண்டில் ஒரு தினுஸான சரணாகதி ஸித்திக்கும். அவன் விட்ட வழி என்று, நம் மனஸுக்கென்று ஆசையும் ப்ளானும் இல்லாமல் விட்டுவிடுவதுதானே சரணாகதி? இதுவும் ஞான மார்க்கத்தில் மனஸின் ஓட்டமே இல்லாத நிலை என்று சொல்லப்படுகிறதும் ஒன்றேதான். ஆத்ம விசாரத்தால் மனஸை நிறுத்துவதற்குப் பதில் இங்கே பக்தியால், அன்பினால் நிறுத்துகிறோம்.

பக்தி மார்க்கத்திலே சொல்லப்படும் இரண்டு விதமான சரணாகதிகளானாலும் சரி, ஞான மார்க்கத்திலே சொல்லப்படும் மனோ நாசமானாலும் சரி, எதற்கும் முதலிலே வழியாக இருப்பது பக்திதான். அதனால், ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிற மாதிரியே –நாம் இப்போதுள்ள ஸ்திதியில் –“இந்த என் மனக்குரங்கை பக்தி என்ற கயிற்றால் திடமாகக் கட்டி, உன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ளப்பா” என்று பரமாத்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்.

மே ஹ்ருதயகபிம் அத்யந்த சபலம்

த்ருடம் பக்த்யா பத்த்வா

சிவ பவத் அதீனம் குரு விபோ ||


* * “சிக்ஷை : வேதத்தின் மூக்கு” என்ற உரையில் “உச்சரிப்பு விதிகள்” என்ற பிரிவு பார்க்க