நிருக்தம் : வேதத்தின் காது : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நிருக்தம் என்பது வேதத்துக்கு அகராதி (Dictionary), அகராதி என்பது ‘கோசம்’ என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். ‘அமர கோசம்’ என்று பிரஸித்தமான அகராதி இருக்கிறது. ‘நிகண்டு’ என்றும் சொல்வதுண்டு. தமிழிலும் ‘நிகண்டு’ என்றே சொல்வர். ஒவ்வொரு வார்த்தையும் இந்த தாதுவிலிருந்து வந்தது என்று அக்ஷர அக்ஷரமாகப் பிரித்து ஒவ்வொரு அக்ஷரத்துக்கும் அர்த்தம் சொல்வது நிருக்த சாஸ்திரம். இதை Etymology என்கிறார்கள்.

நிருக்தம் வேதபுருஷனுக்கு ச்ரோத்திர ஸ்தானம், அதாவது, காது. வேதத்தில் உள்ள அரிய வார்த்தைகளுக்கு இன்ன இன்ன அர்த்தம் என்று அது சொல்கிறது. ஏன் இந்தப் பதம் இங்கே உபயோகப்படுத்தப்பட்டது என்பதைக் காரணத்துடன் அது சொல்லும்.

நிருக்த சாஸ்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கியமானது யாஸ்கர் செய்தது.

வேத நிகண்டுவில் ஒவ்வொரு பதத்திற்கும் அது இப்படி உண்டாயிற்றென்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஹ்ருதயம்’ என்ற ஒரு பதம் இருக்கிறது. அது ஏன் இப்படி வந்தது? வேதமே அதன் காரணத்தைச் சொல்லியிருக்கிறது. ‘ஹ்ருதி அயம்’: ‘ஹ்ருதயத்தில் அவன் இருக்கிறான்’ என்பது அர்த்தம். ‘ஹ்ருத்’ என்பதே பௌதிகமான ஹ்ருதயத்தின் பெயர். ஆனால் ‘அயம்’ என்று அதில் கிட்ட உள்ளவனான ஈச்வரனையும் சேர்த்துச் சொல்வதால் அதன் ஆத்மிகமான முக்யத்வமும் குறிப்பிடப்படுகிறது. எந்த சாஸ்திரமானாலும் ஈச்வரனில் கொண்டுவிட வேண்டும். ஹ்ருதயத்தில் பரமேச்வரன் இருப்பதால், அதற்கு, ‘ஹ்ருதயம்’ என்று பெயர் வந்தது என்று தெரிய வருகிறது. இப்படி ஒவ்வொரு பதத்திற்கும் காரணம் உண்டு. அதை ஆராய்வது நிருக்தம்.

ஸம்ஸ்கிருதத்தில் எல்லாப் பதங்களுக்கும் தாது உண்டு. தாதுவை “ரூட்” என்று இங்கிலீஷில் சொல்லுவார்கள். இங்கிலீஷில் கிரியாபதங்களுக்கு ( verbs) தாது உண்டே தவிரப் பெயர்ச் சொல்களுக்கு (Nouns) தாது இல்லை. ஸம்ஸ்கிருதத்தில்தான் பெயர்ச் சொல்லுக்கும் இன்ன க்ரியையால் இப்படிப் பெயர் வந்தது என்று தாது காட்ட முடிகிறது. அப்படி உள்ள பதங்களின் விகாரங்களை மற்ற பாஷைகக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைகளில் பல வார்த்தைகளுக்கு ரூட் தெரிவதில்லை. அந்த பாஷைக்கே உரிய சொல்லாக இருந்தால்தானே சொல்ல முடியும்? மணியை இங்கிலீஷில் Hour என்று சொல்லுகிறார்கள். அந்தப் பதத்தில் அமைந்துள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை அநுசரித்துப் பார்த்தால், ஹெளர் அல்லது ஹோர் என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் “ஹோர்” என்றே சொல்லியிருக்க வேண்டும். “ஹோரா சாஸ்திரம்” என்று ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சாஸ்திரம் உண்டு. ‘அஹோராத்ரம்’ (இரவு பகல்) என்பதிலிருந்து, அந்த ‘ஹோரா’ என்பது வந்தது. ஹோரா என்பது இரண்டரை நாழிகையான ஒரு மணி நேரத்தை குறிக்கும். ‘ஹோரா’ என்பது தமிழில் ‘ஓரை’ ஆயிற்று. கல்யாணப் பத்திரிக்கைகளில் முஹூர்த்த காலத்தை ‘நல்லோரை’ என்று போடுகிறார்கள். அந்த ஹோராவே இப்போதைய இங்கிலீஷ் ஸ்பெல்லிங்கில் hour -ஆகவும், உச்சரிப்பில் ‘அவர்’ என்றும் வந்திருக்கிறது. இப்படியே heart என்பது ஸம்ஸ்கிருத ‘ஹ்ருத்’ என்பதிலிருந்து வந்தது. இப்படிப் பல வார்த்தைகள் இருக்கின்றன. இவைகள் பிற பாஷைகளில் தற்காலத்திய ஸ்வரூபத்தை அடைவதற்கு எவ்வளவோ காலம் ஆகியிருக்க வேண்டும். அந்த பாஷைகாரர்களுக்குப் பதங்களின் மூலம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பழமைதான்.

அர்த்தம் தெரிந்தாலொழிய ஒரு பாஷையைக் கேட்டு பிரயோஜனம் என்ன? அது கேட்டும் கேளாமல், செவிடாக இருப்பதற்கு ஸமம்தானே? இதனால்தான் நிருக்தத்தை வேத புருஷனுக்குக் காது என்பது. காதால் கேட்கப்படும் ச்ருதிக்கும் [வேதத்துக்கும்] இது ச்ரோத்ரம்!

வியாகரண சாஸ்திரத்தையும் நிருக்த சாஸ்திரத்தையும் வெள்ளைக்காரர்கள் காசியிலிருந்த பண்டிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டார்கள். இன்ன இன்ன காரணத்தால் இன்ன இன்ன பதம் இவ்விவ்வாறு வந்தது என்று நிருக்தத்திலே சொல்லியிருப்பதைத் தெரிந்து கொண்டனர். இதிலிருந்தே மொழி ஆராய்ச்சி என்று ஒரு புதிய சாஸ்திரம் (Science) உண்டாக்கினார்கள். அது ஃபைலாலஜி (philology) எனப்படும். இப்படியாக நவீன பாஷா சாஸ்திரமும் ஏற்பட்டதற்கு மூலகாரணம் வியாகரணமும் நிருக்தமுமே.

அவர்கள் ஆராய்ச்சியால் பற்பல பாஷைகள் ஒவ்வொரு மூலத்திலிருந்து வந்தவைகளென்று சொல்கிறார்கள். அந்த மூலபாஷையைப் பேசிய மனிதர்களிருந்த இடத்தில்தான் அந்த இனத்தின் ஆதிஜனங்கள் இருந்தார்களென்றும், அப்புறம் பல இடங்களுக்கு பரவினார்களென்றும் சொல்கிறார்கள். ஸம்ஸ்கிருத மூல பாஷைகாரர்களின் ஆதி இடம் பற்றி அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. ஏதாயிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. நாம் எல்லாம் நம்முடைய ஊரே என்ற கொள்கையுடையவர்கள்: “யாதும் ஊரே!”, “ஸ்வதேசோ புவனத்ரயம்!” — மூன்றுலகமும் நமக்குச் சொந்தமான நாடு தான்! பல இனம், அவற்றுக்கான பல மூல பாஷைகள் என்று இவர்கள் சொன்னாலும் அத்தனை இனத்துக்கும் ஒரே மூல இனமுண்டு; இவர்கள் மூல பாஷைகளாகச் சொல்வதற்கெல்லாமும் பொதுவாக ஒரே மூல பாஷை உண்டு என்பது நம் கொள்கை. நவீன ஆராய்ச்சிகளும் அதில் கொண்டுவிட்டு உலக ஜன சமுதாயம் முழுக்க ஒன்று என்று நிரூபணமாக வாக்தேவி அநுக்ரஹிக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதத்தின் பாதம், மந்திரத்தின் மூக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  கண் என்பது ஏன்?
Next