வடமொழி வியாகரணமும் தமிழிலக்கணமும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

‘இலக்கணம்’ என்ற தமிழ் வார்த்தை ‘லக்ஷணம்’ என்பதிலிருந்து வந்த மாதிரியே, இலக்கண சம்பந்தமான வேறு பல வார்த்தைகளும் ஸம்ஸ்கிருத வியாகரணத்தில் உள்ளதை அநுசரித்தே தமிழில் உண்டாயிருக்கிறது. உதாரணமாக, தமிழிலக்கணத்தில் ‘பகுதி’, ‘விகுதி’ என்று இரண்டைச் சொல்கிறோம். ‘ராமனுக்கு’ என்கிற வார்த்தையில் ‘ராமன்’ என்பது பகுதி, கு என்பது விகுதி என்கிறோம். ‘பகுதி’, ‘விகுதி’ என்பன ‘ப்ரக்ருதி’, ‘விக்ருதி’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் மரூஉதான். “அதெப்படிச் சொல்லலாம்? பகுதி என்பது நல்ல தமிழ் வார்த்தையல்லவா? ‘பகுத்தல்’ என்ற வினைச்சொல்லின் வேரிலிருந்து உண்டான பெயர்ச்சொல் அல்லவா பகுதி?” என்று ஆக்ஷேபிக்கலாம்.

‘பகுப்பட்ட’ என்ற அர்த்தத்தில் சுத்தத் தமிழ் வார்த்தையாகப் ‘பகுதி’ என்று ஒன்று இருப்பது வாஸ்தவம்தான். ஒரு வஸ்து நாலாகப் பகுக்கப்பட்டால், அதை ‘கால் பகுதி’ என்கிறோம். இங்கே ‘பகுதி’ என்பது சுத்தத் தமிழ் வார்த்தையாகப் ‘பகுதி’ என்ற ஒன்று இருப்பது வாஸ்தவம்தான். ஒரு வஸ்து நாலாகப் பகுக்கப்பட்டால், அதை ‘கால் பகுதி’என்கிறோம். இங்கே ‘பகுதி’ என்பது சுத்தத் தமிழ் வார்த்தைதான். ஆனால் ஸம்ஸ்கிருத ‘ப்ரகிருதி’ என்பது மருவி ‘பகுதி’ என்ற இன்னொரு தமிழ் வார்த்தையானதும் உண்டு என்கிறேன். இப்படி ‘ப்ரக்ருதி’ என்ற அர்த்தத்தில் தான் ‘ராமனுக்கு’ என்பதில் ‘ராமன்’ என்பதைப் பகுதி என்கிறோம். ஸம்ஸ்கிருத வியாகரணப்படி ராமன்-பரக்ருதி;கு-விக்ருதி. இந்த ‘விக்ருதி’யே ‘விகுதி’ என்றாயிற்று. ‘பகுதி’ விஷயமாகத் தமிழ் தாதுவிலிருந்தே வந்ததோ என்று சந்தேகம் ஏற்படுவதுபோல் ‘விகுதியின் விஷயத்தில் சந்தேகமே இல்லை. ‘பகு (த்தல்)’ என்பது போல ‘விகு (த்தல்)’ என்று தமிழ் வேர்ச்சொல் இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள். விக்ருதிதான் விகுதி என்பதாலேயே, ப்ரகிருதிதான் பகுதி என்று நிச்சயமாகத் தெரிகிறது.

(விக்ருதியைப் ‘பிரத்யயம்’ என்றும் சொல்வார்கள். ஒரே ப்ரக்ருதிக்குப் பல அர்த்தங்களை உண்டாக்குவது ப்ரத்யயம்தான். ‘ராமனை அடித்தேன்’ என்றபோது ‘ஐ’ என்ற ப்ரத்யயம் ராமன் என்ற ப்ரக்ருதியை அடிவாங்கினவனாகப் பண்ணுகிறது. ‘ராமனால் அடிபட்டேன்’ என்றால், அதே ராமன் என்ற ப்ரக்ருதி ‘ஆல்’ என்ற ப்ரத்யயத்தால் அடிக்கிறவனாக ஆகிறான்!)

தமிழைவிட ஸம்ஸ்கிருதத்துக்கு உயர்வு தருவதற்காக இதையெல்லாம் நான் சொல்லவில்லை. ஒன்றுக்கு உயர்வு, இன்னொன்றுக்குத் தாழ்வு சொல்லிச் சந்தோஷப்படுவது எப்போது? ஒன்றுதான் நம்முடையது, மற்றது பிறத்தியானுடையது என்று நினைக்கும்போதுதான்! ‘ரேஸ்’ வித்யாஸங்களை நிஜம் என்று நினைத்து இதில் ஒன்றே நம்மைச் சேர்ந்தது என்றால்தான் இதை உயர்த்திச் சொல்லி, இன்னொன்றை மட்டம் தட்டுவதில் ஆசை உண்டாகும். ‘இந்த ரேஸ் வித்யாஸமே தப்பு; இரண்டும் ஒன்றுதான்; ஒரே இனத்திலேயே, ஒரே கலாசாரத்திலேயே வெவ்வேறு பாஷைகள் மட்டும் ஏற்பட்டன’ என்னும்போது உயர்த்துவது, தாழ்த்துவது என்பதற்கு இடம் ஏது? ஆகையால் யதார்த்தத்தை யதார்த்தமாக ( fact -ஐ fact -ஆக) சொல்கிறேனேயொழிய, ஒன்றுக்கு உசத்தி சொல்லி இன்னொன்றுக்கு மட்டம் தட்டுவதற்காகச் சொல்லவில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is இலக்கண நூல்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸம்ஸ்கிருதம் சர்வதேச மொழி
Next