பல மொழிகளின் லிபிகள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இன்ன ஒலிக்கு இது அடையாளம் [வரி வடிவம்] என்று காட்டுவதற்குத்தான் பல எழுத்துக்களைக் கொண்ட வெவ்வேறு லிபிகள் தோன்றியிருக்கின்றன. இங்கிலீஷ் முதலான பாஷைகளின் ‘ஆல்ஃபபெட்’டை ரோமன் லிபி (Roman Script) என்கிறோம். பிராம்மி என்ற ஒரு லிபி இருந்தது. அசோக சாஸனங்கள் அதில் எழுதியதுதான். அதிலிருந்தே இப்போது ஸம்ஸ்கிருதத்துக்கு வழங்குகிற க்ரந்த லிபியும், தேவநாகரி லிபியும், மற்றும் தமிழ் முதலான அநேக இந்திய லிபிகளும் உருவாயிருக்கின்றன.

பிராம்மி லிபியின் இரண்டு விதமான பிரிவுகளில் தக்ஷிணத்தில் வழங்கி வந்த பல்லவ-க்ரந்தம் என்பதிலிருந்து தான் திராவிட பாஷைகளின் லிபிகள் ஏற்பட்டுள்ளன.

எல்லா லிபிகளுக்குள்ளும் தெலுங்கு லிபிக்கு ஒரு விசேஷம் உண்டு. மற்ற லிபிகளிலெல்லாம் தக்ஷிணாவர்த்தமாக, அதாவது வலது பக்கம் சுழித்து எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. தெலுங்கில் மட்டும் வாமாவர்த்தமாக இடது பக்கம் சுழித்து எழுத்துக்கள் இருக்கின்றன. ஈச்வரனின் வாமபாகத்திலிருக்கிற பராசக்திக்கு வாமமார்க்கம் என்ற உபாஸனையும் உண்டு. இடது அவளுக்கு விசேமானதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்களை ஆந்திர லிபியிலேயே எழுத வேண்டும் என்பதுண்டு. ஆந்திர பாஷை சிவப் பிரதானமானது என்பார்கள். ஏனென்றால் மற்ற எல்லா இடங்களிலும் மஹா விஷ்ணுவின் அஷ்டாக்ஷரத்துடனேயே அக்ஷராப்யாஸத்தை (படிப்புத் தொடக்கத்தை) ஆரம்பிக்கிறார்களென்றால், தெலுங்கு தேசத்தில் சிவ பஞ்சாக்ஷரத்துடன் தொடங்குகிறார்கள். ஆந்திர தேசமும் தெற்கே காளஹஸ்தி, மேற்கே ஸ்ரீ சைலம், வடக்கே கோடிலிங்க க்ஷேத்ரம் என்பதாக மூன்று சிவஸ்தலங்களுக்குள் – த்ரிலிங்கங்களுக்குள் – அடங்கியிருப்பதால்தான் அதற்கு தெலுங்கு தேசம் என்ற பெயரே உண்டாயிற்று. இதனால்தான் அப்பைய தீக்ஷிதர் தாம் ஆந்திரராகப் பிறக்கவில்லையே என்று குறைப்பட்டு ச்லோகம் செய்திருக்கிறார்.

ஆந்த்ரத்வம் ஆந்த்ரபாஷாசாப் – யாந்த்ர தேச ஸ்வஜன்ம பூ:|

தத்ராபி யாஜுஷீ சாகா ந(அ)ல்பஸ்ய தபஸ: பலம்||

ஸாமவேதியாகப் பிறந்தவர் அப்பைய தீக்ஷிதர். “வேதங்களுக்குள் நான் ஸாமவேதம்” என்றே பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். ஆனால் சிவ பக்த சிகாமணியான தீக்ஷிதர் சிவபஞ்சாக்ஷர மந்திரத்தைத் தனது மத்தியில் கொண்டதான யஜுர் வேதத்தில் (“யாஜுஷீ சாகா” என்று இதையே ச்லோகம் சொல்கிறது) பிறப்பதற்கும், தெலுங்கு தேசத்தில் பிறப்பதற்கும் தபஸ் செய்திருக்கவில்லையே என்று குறைப்பட்டிருக்கிறார்!

லிபி விஷயத்துக்கு வருகிறேன். இப்போதுள்ள இந்திய லிபிகள் எல்லாம் பிராம்மியிலிருந்து வந்தவைதான் என்றாலும் ஆதியிலிருந்த பிராம்மி லிபியைப் பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. அதனால் புரியாத விஷயத்தை “பிராம்மி லிபி” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம், அது திரிந்து பிரம்மா நம் நெற்றியிலே எழுதியிருக்கிற “பிரம்ம லிபி”யோடு ஒன்றாக்கப்பட்டுவிட்டது! இப்போது ஒன்றும் புரியாவிட்டால் “பிரம்ம லிபி” என்று நாம் சொல்வது “பிராம்மி லிபி” என்றுதான் இருக்க வேண்டும்.

கரோஷ்டி என்றும் ஒரு லிபி இருந்தது. கர-ஓஷ்டம் என்றால், ‘கழுதையின் உதடு’ என்று அர்த்தம். கழுதை உதடு துருத்திக் கொண்டு வருகிற மாதிரி அந்த லிபி எழுத்துக்களில் வளைசல்கள் பிதுங்கிக் கொண்டிருக்கும். பார்ஸி பாஷைக்கு அதுதான் லிபி.

ஐரோப்பாக் கண்டத்தின் எல்லா பாஷைகளுக்கும் ரோமன் லிபி ஒன்றேயிருப்பதுபோல் நமக்குப் பொது பிராம்மி. தற்போது அதிலிருந்து வந்த தேவநாகரியே வடக்கத்தி பாஷைகளின் லிபிகளில் நன்றாக தெரிகிறது.

ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமான ஒலியைச் சொல்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. அதனால்தான் “தமிழில் ஏன் ‘ன’, ‘ந’ என்ற இரண்டு எழுத்துக்கள் ஒரே சப்தத்துக்கு இருக்கின்றன? வேறு எந்த பாஷையிலும் இப்படி இல்லையே!” என்று நினைக்கிறோம். வாஸ்தவத்தில் ‘ன’ சப்தத்துக்கும், ‘ந’ சப்தத்துக்குமிடையே சூக்ஷ்மமான வித்யாசம் உண்டு. ‘ந’ வில் நாக்கு முன்னம் பல்லின் உள்பக்கம் படும்; “ன” விலோ நாக்கு இன்னும் மேலேறி மேலண்ணத்தைத் தொடும். தெலுங்கிலேகூட ஒரே ‘ந’ தான். மற்ற பாஷைகளிலும் இப்படியே.

தமிழுக்கும் தெலுங்குக்கும் மட்டும் பொதுவாயிருப்பது ‘ர’, ‘ற’ என்ற இரண்டு வகை இருப்பது. ஒன்று இடையினம், மற்றது வல்லினம் என்று சொல்லுகிறோம். மற்ற பாஷைகளில் இப்படி இரண்டு இல்லை. இதிலும் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒரு வித்யாஸம் உண்டு. தமிழில் வல்லின ‘ற’மட்டுமே ஒற்றோடு கூட ‘ற்ற’என்று சேர்ந்து வரும். ‘குற்றம்’, ‘சுற்றம்’, ‘மற்றும்’, சொற்றுணை’என்கிற மாதிரி வார்த்தைகளில் இப்படி வருகிறது. ஆனாலும் இங்கே எழுத்தைப் பார்த்து ஒலியை அப்படியே உச்சரிப்பதில்லை. ‘குட்றம்’, ‘சுட்றம்’, ‘மட்றும்’, ‘சொட்றுணை’என்கிற மாதிரி ‘ற’கர ஒற்றானது ‘ட’கர ஒற்றானது போலவே உச்சரிக்கிறோம். தெலுங்கில் இப்படி வராது. இதற்கு மாறாக, தெலுங்கிலே குதிரைக்கு என்ன சொல்கிறார்கள்? ‘குர்ரம்’ என்கிறார்கள். ‘ர்’ ஸவுண்டும், ‘ர’ ஸவுண்டும் கொஞ்சங்கூட மாறாமல் உள்ளபடியே சொல்கிறார்கள். தமிழில் இப்படி ‘ர்ர’ உள்ள வார்த்தையே கிடையாது.

தெலுங்கு பாஷையில் உள்ள வேறு சில விசேஷ சப்தங்கள்: சில இடங்களில் ‘ஜ’ என்பதை J சப்தமாக இல்லாமல் Z சப்தமாக சொல்கிறார்கள். ‘சால’ என்பதை ‘த்ஸால’ என்பதுபோல் சில இடங்களில், ‘ச’ வுக்கு ‘த்ஸ’ என்று, சொல்கிறார்கள். ஸம்ஸ்கிருதத்துக்கான தேவநாகரி, க்ரந்த லிபிகளில் 50 எழுத்து இருக்கிறதென்றால், தெலுங்கிலே ஜகாரத்திலும் சகாரத்திலும் ஒவ்வொன்று அதிகமிருக்கிற எழுத்துக்களைச் சேர்த்து 52 இருக்கின்றன. மஹாராஷ்ட்ர பாஷையிலும் இந்த ஸூக்ஷ்மமான இரண்டு சப்தங்களும் இருக்கின்றன. இரண்டாவது ‘த’ (tha) வை நாலாவது ‘த’ (dha) வாகவும் தெலுங்கர்கள் மாற்றிக் கொள்வதுண்டு. தியாகய்யர்வாள் பாட்டிலேயே இப்படிச் சில இடங்களில் இருக்கிறதென்று ஒருத்தர் சொன்னார்.*

ஒரு பாஷையில் உள்ளதை அப்படியே இன்னொரு பாஷையின் லிபியில் எழுதுகிற போது (transliterate பண்ணுகிற போது) இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு பண்ண வேண்டும். இப்படிப் பண்ணுகிறபோது ஸம்ஸ்கிருதத்தில் ‘ன’ இல்லாததால், ‘ஸத்யவான்’, ‘தர்மவான்’ என்கிற மாதிரி வார்த்தைகளைக் கூட ‘ஸத்யவாந்’, ‘தர்மவாந்’ என்றுதான் எழுத வேண்டும். ஆனாலும் தமிழில் இப்படிப்பட்ட வார்த்தைகள் இல்லாததால், நம் கண்ணுக்கு அது விசித்ரமாகப் படும்! உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று Phonetic spelling ஆக எழுதினால் அது நாம் இப்போது எழுதுவதற்கு வித்யாஸமாகத்தான் இருக்கும். தெலுங்கிலே வருவதைக் ‘கன்னதல்லி’ என்று எழுதாமல், ‘கந்நதல்லி’ என்றுதான் எழுவேண்டும். அது அச்சிலே விநோதமாகத்தான் இருக்கும்.

உச்சரிப்புக்களை உள்ளபடி தெரிந்து கொண்டால் தமிழில் ன, ந என்ற இரண்டு எழுத்து ஏன் இருக்கிறது என்பது போல் நமக்குப் புரியாமலிருக்கிற பல விஷயங்கள் புரிந்து விடும். இங்கிலீஷில் கூட இப்படியே நமக்கு “ஒரே ‘வ’ காரத்துக்கு ஏன் V, W என்று இரண்டு எழுத்துக்கள்?” என்று தோன்றினாலும், இவற்றுக்கிடையே வித்யாஸம் உண்டு என்று ஒரு ப்ரொஃபஸர் சொன்னார். ‘V’ வருகிற இடத்தில் நம் பாஷைகளின் ‘வ’ மாதிரி கீழ் உதட்டை மடித்து, அதன் மேலே மேல் வரிசைப் பல் படவேண்டும்; ‘W’ வரும்போது பல்லே படாமல், உதட்டையே ரவுன்டாகக் குவித்துச் சொல்ல வேண்டும்; ஆகையால் இந்திய பாஷைகளில் வருகிற ‘ஸரஸ்வதி’, ‘ஈச்வரன்’ முதலான வார்த்தைகளை Sarasvati, Isvaran என்றுதான் எழுதவேண்டும் என்றார். இன்னொன்று கூட: இங்கிலீஷில் ‘ண’ கரம் கிடையாது; ‘ன’ தான் உண்டு. ஆனபடியால் ‘and’, ‘band’ போன்ற வார்த்தைகளை ‘அண்ட்’, ‘பாண்ட்’, என்று எழுதாமல் ‘அன்ட்’, ‘பான்ட்’ என்றுதான் எழுதவேண்டும்.

ஸ்பெல்லிங்கைப் பார்த்தே ப்ரொனௌன்ஸியேஷன் [உச்சரிப்பு] சரியாகப் பண்ணுவது என்பது, மற்ற எந்த பாஷையையும் விட ஸம்ஸ்கிருதத்திலேயே பூர்ணமாகத் தப்பில்லாமல் இருக்கிறது. இங்கிலீஷில் ஒரே கோணாமாணா! ‘Legistlature wound up’ என்று ஸமீபத்தில் பேப்பரில் பார்த்தேன். Wound என்பதை ஏதோ நினைவில் ‘வூன்ட்’ என்று படித்ததில் அர்த்தமே புரியவில்லை. ‘வூன்ட்’ என்றால் காயம் அல்லவா? இங்கே ‘வெளன்ட்’ என்று அதே ஸ்பெல்லிங்கைப் படிக்க வேண்டியிருக்கிறது! ‘சுற்றுவது’ என்கிற அர்த்தமுள்ள wind- க்கு இது past participle. இங்கே ‘வௌன்ட்-அப்’ என்றால் ‘ஸமாப்தி பண்ணப்பட்டது’ என்று அர்த்தம். இந்த wind என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டாலும் ஸ்பெல்லிங் ஒன்றாகவே இருந்தாலும், அதைக் காற்று என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளும்போது ‘வின்ட்’ என்று சொல்ல வேண்டும்; ‘சுற்றுவது’ என்ற அர்த்தம் பண்ணும் போது ‘வைன்ட்’ என்று சொல்ல வேண்டும். இப்படி ஒரே குழப்பம்! B-U-T பட், C-U-T கட், என்று இருந்தாலும் P-U-T மட்டும் ‘பட்’ இல்லை, ‘புட்’ என்கிறான். வால்க், சால்க் என்று உச்சரிப்புகளைக் கொடுக்கும்படியான Walk, Chalk என்பவைகளை வாக், சாக் என்றே சொல்கிறான். கேட்டால், சில எழுத்துக்கள் ஸைலன்ட் ஆகிவிடுகின்றன என்கிறான்.

தமிழில் இப்படியில்லை என்றுதான் தோன்றும். ஆனாலும் ஸம்ஸ்கிருதம் முதலான பிற பாஷைச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்திருப்பதால் அவற்றைத் தமிழில் எழுதும்போது மற்ற பாஷைகளில் ஒரே அக்ஷரத்தில் உள்ள நாலுவிதமான சப்தங்களைக் குறிப்பிட நாலு எழுத்துக்கள் இருக்கிறபோது, தமிழிலோ நாலுக்கும் ஒரே எழுத்துத்தானே இருக்கிறது என்ற குறை தெரிகிறது. ‘கண்’ என்பதில் வருகிற ‘க’ வேறு; ‘முகம்’ என்பதில் வரும் ‘க’ வேறு. ‘முகம்’ என்பதில் kha என்று அழுத்திச் சொல்லவேண்டும். கங்கை என்பதில் வரும் ‘க’ வோ இன்னொரு தினுசு; ga சப்தமாக உள்ளது. இதையே இன்னம் அழுத்தி gha -காரமாக ‘கடம்’ என்ற வார்த்தையில் சொல்ல வேண்டும். Ka, kha, ga, gha இவற்றுக்கு மற்ற இந்திய பாஷைகளில் நாலு எழுத்து இருக்கும்போது, தமிழில் ஒரே ‘க’ தான் நாலுக்கும் பொதுவாயிருக்கிருக்கிறது. பீமன் கையிலே வைத்திருக்கிற ‘கதை’ (gadai) , எழுத்தாளர்கள் எழுதுகிற கதை ( kathai ) இவற்றில் இரண்டு அக்ஷரங்களும் வித்யாஸமாயிருந்த போதிலும், தமிழில் ஒரே மாதிரித்தான் எழுத வேண்டியிருக்கிறது. தமிழில் t’a, d’a இரண்டுக்கும் ஒரே ‘ட’; ta, da இரண்டுக்கும் ஒரே ‘த’ என்று ஏற்பட்டிருப்பதில், ஸ்பெல்லிங்கை வைத்தே சரியாக உச்சரிக்க முடியாமல் இருக்கிறது. ‘தோ(do)ஷம்’ என்றால் குறை;’ தோ(to)ஷம்’ என்றால் மகிழ்ச்சி. (‘ஸந்தோஷம்’ இதிலிருந்து வந்தது தான்.) ஆனால் இப்படி நேர்மாறாக அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைகளையும், தமிழில் ஒரே எழுத்துக்களால்தான் எழுத வேண்டியிருக்கிறது!கூடிய மட்டும் லிபியைக் கொண்டே சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதால்தான் ஸ, ஹ, ஜ, ஷ, க்ஷ முதலான கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்த்தது. ஆனால் இப்பொழுது, முன்னெல்லாம் கவிப்பண்பை உத்தேசித்து தமிழ்க் கவிதைகளில் மட்டும் செய்து வந்தது போல் வசன நடையிலும்கூட இந்த எழுத்துக்கள் கூடாது என்கிற ரீதியில் எழுதி வருவதால், குழப்பமாகிறது. ஸம்ஸ்கிருத வார்த்தைகளைத்தான் பூர்ணமாக ஒழித்துக் கட்ட முடியவில்லை என்பதால், அதற்கே விசேஷமான சப்தங்களுக்குரிய இந்த எழுத்துக்களையாவது ஒழித்து விடலாமா என்று ஆரம்பித்திருப்பதில் வார்த்தைகளைத் தப்புத் தப்பாகப் படிக்கும் படி ஆகியிருக்கிறது. ‘சாதகம்’ என்று எழுதினால் அது ‘ஸாதக’மாகவும் இருக்கலாம், ‘ஜாதக’மாகவும் இருக்கலாம் என்றால், அர்த்தம் குழம்பித்தானே போகும்? சிலது தவிர்க்க முடியாது. முன்னே சொன்ன மாதிரி க,ச,ட,த,ப முதலானவற்றில் நாலு தினுசான வித்தியாஸம் தெரிவிக்கத் தமிழில் ஆதியிலிருந்தே எழுத்து இல்லை. ஆனால் பிறகு சேர்த்தவைகளைக் கூட இப்போது ஏன் விடவேண்டும்? இதனால் தமிழுக்கு வெற்றியா? ஸம்ஸ்கிருதத்துக்குத் தோல்வியா? பாஷைகள் என்ன, ஒன்றுக்கொன்று சண்டையா போட்டுக்கொள்கின்றன? நாம் தப்புத் தப்பாக வார்த்தைகளைச் சொல்கிறோம் என்பது தவிர இப்படிப்பட்ட பாஷா த்வேஷக் காரியங்களால் ஒரு பலனும் இல்லை. இது இருக்கட்டும்.

பிற பாஷைச் சொற்களாக இல்லாமல் தமிழிலேயே உள்ள சொற்களை எழுதுவதற்குத் தமிழ் லிபி ரொம்பவும் திட்ட வட்டமாகத்தான் இருக்கிறது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னட பாஷைகளில் க, ச, ட, த,ப, முதலியவற்றில் நாலுவித ஒலிகள் இருப்பது மாதிரி தமிழ் பாஷையில் கிடையாது. Kha, ga, gha முதலிய சப்தங்கள் இதர பாஷை வார்த்தைகளைத் தமிழில் எடுத்துக் கொள்ளும் போதுதான் வருகின்றன. ஆகையால் தமிழுக்கு என்றே ஏற்பட்ட சப்தங்களை எழுதத் தமிழ் லிபி போதுமானதாகத்தான் இருக்கிறது. இங்கிலீஷில் சொந்த பாஷை வார்த்தைகளையே எழுத்தைப் பார்த்துச் சரியாக உச்சரிக்க முடியாமலிருக்கிறதே, அந்த மாதிரித் தமிழில் இல்லை.

ஆனாலும், இங்கேயும் கூடத் தமிழ் லிபி பூர்ணமாகச் சரியாக இல்லை என்று நான் சொன்னால், உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும்! ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால், நான் பிரத்யக்ஷத்தில் பார்த்த ஒன்றைச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்கள்.

வடக்கத்திக்காரன் ஒருத்தன் தமிழ் லிபியை (ஆல்ஃபபெட்டை) நன்றாகத் தெரிந்து கொண்டான். அதாவது ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெழுத்தாகத் தெரிந்து கொண்டான். அப்புறம் அவனுக்கு வார்த்தை வார்த்தையாக எழுத்துக்களைச் சேர்த்துக் கற்றுக்கொடுப்பதற்கு ஆள் கிடைக்கவில்லை. தேவார திருவாசகங்களை மூல ரூபத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையால்தான் அவன் இப்படித் தமிழ் கற்றுக்கொண்டது. ‘எழுத்துக்கள் தெரிந்து விட்டதல்லவா?’என்று, அவனே அதற்கப்புறம் தேவாரபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துப் பாடம் பண்ண ஆரம்பித்தான். அவனுக்குத் தமிழ் பாஷா ஞானம் [மொழியறிவு] இல்லை. ஆனால் அர்த்தம் தெரியாவிட்டாலும் மஹான்களின் வாக்கைச் சொன்னாலே புண்ணியம் என்று இப்படிப் பாடம் பண்ணினான். அப்புறம் ஒருநாள் அவன் என்னிடம் வந்தான். “தேவாரம் சொல்கிறேன்”எனறான். எனக்கு ரொம்பவும் ஸந்தோஷமாயிற்று. சொல்லச் சொன்னேன்.

ஆனால், அவன் சொன்னது எனக்கு வேடிக்கையாயிருந்தது.

அவன் அப்பர் ஸ்வாமிகள் திருவையாற்றில் ஸர்வத்தையும் உமாமஹேச்வர ஸ்வரூபமாகப் பார்த்துப் பாடின பிரஸித்தி பெற்ற “மாதர் பிறைக் கண்ணியானை” என்ற பாடலைப் பாடினான். ஆனால் எப்படி பாடினான்?

எடுத்த எடுப்பிலேயே நாம் “மாதர்” என்பதை maadar என்கிறோம் என்றால் அவன் maatar என்று ஆரம்பித்தான்.

‘இதென்னடா, தர் புர்ரென்று ஆரம்பிக்கிறானே!’ என்று எனக்கு விசித்ரமாயிருந்தது.

அப்புறம் malaiyaan mahalod’u (மலையான் மகளொடு) என்பதில் makalot ‘u என்று ‘க’வையும் ‘ட’வையும் அழுத்தி பாடினான்.

‘மலையான் மகளொடு பாடி’ என்பதில், நாம் ‘paad’i ‘ என்பதை அவன் ‘paat’i’ என்று பாடினபோது, எனக்குச் சிரிப்பே வந்துவிட்டது.

இப்படியே போயிற்று. ‘புகுவார்’ நாம் சொல்கிற Puhuvaar -ஆக இல்லாமல் Pukuvaar – ஆக இருந்தது. ‘யாதும் சுவடு படாமல்’ (yaadum s’uvadu pad’aamal) என்பது yaatum chuvat’u pat’aamal என்று அவன் வாயில் மாறி ஸ்வரூபம் கொண்டதற்கப்புறம் என்னால் அடக்கவே முடியவில்லை.

வடக்கத்தியான் ஒருத்தன் நம் தமிழ் பாடலைக் கற்றுக் கொண்டு பாடுகிறானே என்ற சந்தோஷத்தில், அவனை உத்ஸாஹந்தான் படுத்தவேண்டும் என்று அது வரை பேசாமல் இருந்த நான், அதற்கப்புறம் பொறுக்க முடியாமல், அவனுடைய உச்சரிப்பில் இருந்த ஏராளமான கோளாறுகளை அவனுக்கு ஹிதமாக எடுத்துக் காட்டினேன்.

அதற்கு அவன், “நான் என்ன பண்ணலாம்? புஸ்தகத்தில் இப்படித்தானே எழுதியிருக்கிறது?” என்று காட்டினான்.

அவன் சொன்னது வாஸ்தவம்தான். புஸ்தகத்தில் எழுதியிருக்கிற லிபியின்படி பார்த்தால், அவன் சொன்ன விதம் சரிதான். புஸ்தகத்தை வைத்துக்கொண்டு எழுத்தெழுத்தாக நானும் நீங்களும் படித்தாலும் அவன் சொன்ன மாதிரியே தான் படிப்போம்.

ஆகவே தமிழிலும் அநேகம் சப்தங்களை எழுத்திலே மாற்றித்தான் எழுதுகிறோம் என்று தெரிந்தது. குறிப்பாக வார்த்தைகளுக்கு ஆரம்பத்தில் வராமல் நடுவிலும் முடிவிலும் வருகிற சப்தங்கள் எழுத்திலே வித்யாஸமாகத்தான் ஆகின்றன. ‘மஹளொடு’ என்று உச்சரிப்பதை ‘மகளொடு’ என்று எழுதுகிறோம். ‘அதற்காஹ’ என்று உச்சரிப்பில் சொன்னாலும் ‘அதற்காக’ என்றே எழுதுகிறோம். ஆரம்ப ‘க’ நடுவிலும் கடைசியிலும் ‘ஹ’ ஆகிறது. தமிழின் வார்த்தை ஆரம்பத்தில் ‘த’ வை ‘ta’ என்கிறோம்; பிறகு வந்தால் ‘da’ என்கிறோம். ‘தந்தை என்கிறபோது முதலில் ‘த’ என்பது ‘ta’ஸவுண்ட்; ‘தை’ என்பதோ ‘dai’ ஸவுண்டாயிருக்கிறது. இப்படியே ஆரம்பத்தில் வராமல் நடுவிலே வருகிற ‘ட’ ‘d’a’ தான்; ‘t’a’ இல்லை. கடவுள், இடம் என்பதில் எல்லாம் ‘d’a’ தானே சொல்கிறோம்?

இம்மாதிரி விஷயங்கள் தமிழ் இலக்கண நூல்களில் நன்றாக வரையறுத்துச் சொல்லியிருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் போலவே தமிழிலும் ‘தொல்காப்பியம்’, ‘நன்னூல்’ முதலான அநேகம் உயர்ந்த புஸ்தகங்களில் வார்த்தைகளின் ரூபம், சப்த ரூபம், அவற்றில் ஏற்படுகிற வித்யாஸம் முதலியவைகளைச் சொல்லித்தான் இருக்கிறது. இந்த எழுத்தின் பின் s’a என்பது cha ஆகும்; ka என்பது ha சப்தத்தைக் கொடுக்கும் என்றெல்லாம் விதி இருக்கிறது.

பொதுவாக, தமிழில் வார்த்தையின் முதலில் ‘க’ வரும் போது ka சப்தமாகவும், நடுவிலும் முடிவிலும் வரும்போது ha சப்தமாகவும் இருக்கிறது. ‘த’ என்பது வார்த்தை முதலில் ta-வாகவும், பிற்பாடு da-வாகவும்; இப்படியே ‘ப’ வும் முதலில் pa-வாகவும், பிற்பாடு ba-வாகவும் தொனிக்கிறது. (தமிழ் வார்த்தையின் நடுவிலோ, முடிவிலோ தனியாக ‘ப’ வருவதாகத் தெரியவில்லை. ‘அன்பு’, ‘அம்பு’, ‘இன்பம்’ என்பது போல் கூட்டுச் சப்தமாகத்தான் வருகிறது. ஜபம், சாபம், கபம், சுபம் என்கிறதுபோல, நடுவிலே தனி ‘ப’ வரும் வார்த்தைகள் ஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான்) ‘ச’ விலே ஒரு வேடிக்கை. க-ங-ச-ஞ-ட-ண-த-ந-ப-ம- என்கிற போது ka-nga- cha -ngya-t’a-na-ta-na-pa-ma என்று cha -காரமாகச் சொன்னாலும், தமிழில் க,த,ப முதலியன ஆரம்பத்தில் வரும்போது ka,ta,pa என்றே தொனிப்பது போல், ‘ச’ என்பது cha -வாகத் தொனிக்காமல் s’a என்றே தொனிக்கிறது. சட்டி, சிவப்பு என்பதை s’atti, s’ivappu என்றுதான் சொல்கிறோம். ஆனால் ஒற்றெழுத்தோடு சேரும்போது chcha சப்தம் வந்து விடுகிறது; s’s’a அல்ல – அச்சம், பச்சை, குச்சு என்பது போல! ‘சொல்’ என்கிறபோது s’ol என்கிறோம். அதையே பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும்போது peyarchchol, vinaichchol என்கிறோம். ஆனால், தமிழிலிருந்தே வந்த மலையாளத்தில், வார்த்தை ஆரம்பத்திலேயே ‘ச’ வுக்கு cha சப்தம் கொடுக்கிறார்கள். சிவப்பு என்பதை மலையாளிகள் chivappu என்றுதான் சொல்வார்கள். இன்னொரு பக்கத்தில், சில ஸமயங்களில் வார்த்தைக்கு நடுவே ‘ச்ச’ வரும்போது ch cha என்று சொல்லாமல் s’s’a என்றும் சொல்கிறார்கள். காவிச் சேரி, நெல்லிச்சேரி முதலான ஊர்ப் பெயர்களை நாம் (தமிழர்கள்) Kaavichcheri, Nellichcheri என்று தான் சொல்கிறோம். மலையாளத்திலே Kaavis’s’eri, Nellis’s’eri என்கிறார்கள். தெலுங்கிலே ‘ர்ர’ வருகிற மாதிரி, மலையாளத்தில் s’s’a இருக்கிறது. அச்சன், எழுத்தச்சன் என்னும்போது, நம்மாதிரி ch cha சப்தமாகவும் சொல்கிறார்கள்.

தமிழிலக்கண நூல்களைப் பார்த்தால், இந்த மொழியின் genius [பண்பு] படி, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சப்தம் எப்படியெப்படி ஆகும் என்பது விளக்கமாகத் தெரியும்.

ஆனாலும்கூட, லிபியைப் படிப்பதிலேயே உச்சரிப்பு கொஞ்சங்கூடத் தப்பாமலிருப்பது தமிழிலும் ஸாத்தியமில்லாமல்தான் இருக்கிறது.

ஸம்ஸ்கிருதத்தில்தான், இப்படிப்பட்ட மாறுபாடு இல்லை; இரண்டே இரண்டு விலக்கு தவிர, வேறெங்கும் இல்லை. அது பூர்ணமாக phonetic spelling- ஆகவே இருக்கிறது.

‘ஏது இரண்டு விலக்கு? முழுக்க முழுக்க ஸம்ஸ்கிருதம் உச்சரிப்புக்குச் சரியான எழுத்துக்களை உடையதல்லவா?’ என்றால் சொல்கிறேன்:

ஒன்று ‘ப’ ( pa ) வுக்கு முன்னால் ‘:’ என்ற விஸர்க்கம் வரும்போது ஏற்படுகிற சப்த மாறுதல். விஸர்க்கம் ஏறக்குறைய ‘ஹ’ சப்தத்தைத் தருவது. ‘ராம:’ என்பதை ‘ராமஹ’ என்று சொல்லவேண்டும். பூர்ணமான ‘ஹ’ வாக இன்றிக் கொஞ்சம் தாழ்த்திச் சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் பூர்ண ‘ஹ’ வாகவே சொல்கிறார்கள். குறைத்துச் சொல்கிற மற்றவர்களை கேலியாக நினைக்கிறார்கள். வாஸ்தவத்தில் சிக்ஷா விதிப்படி அவர்கள் சொல்வதுதான் சரி. இந்த விஸர்க்கம் ‘ப’வுக்கு முன்னாடி வரும்போது ‘ப’ என்பது ‘fa’ (ஃப) என்கிற ஸவுண்டைப் பெறுகிறது. லிபியை மட்டும் பார்த்து உள்ளபடி படித்தால் இங்கே தப்பாகிவிடும்.

இரண்டாவது மாறுதல்; ஸம்ஸ்கிருதத்தில் ஸுப்ரஹ்மண்யன், ப்ரஹ்மா, வஹ்நி என்று எழுதினாலும், படிக்கும்போது ஸுப்ரம்ஹண்யன், ப்ரம்ஹர், வன்ஹி என்றே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. சரி, ‘ஹ்’ சேர்ந்த கூட்டெழுத்துக்கள் எல்லாவற்றுக்குமே இது பொது விதியா என்று பார்த்தால், அப்படியும் இல்லை. ‘கஹ்வரம்’, ‘ ஜிஹ்வா’, ‘குஹ்யம்’, ‘தஹ்ரம்’, ‘ப்ரஹ்லாதன்’ முதலான வார்த்தைகளை உள்ளபடியே படிக்கிறோமே ஒழிய ‘கவ்ஹரம்’, ‘ஜிவ்ஹா’, ‘குய்ஹம்’, ‘தர்ஹம்’, ‘ப்ரல்ஹாதன்’ என்று [மேலே சொன்ன ரீதியில்] மாற்றிப் படிக்கவில்லை.

இந்த இரண்டு தவிர, முற்றிலும் உச்சரிப்பும், லிபியும் ஸம்ஸ்கிருதத்தில் ஒன்றாகவே இருக்கின்றன.


* உதாரணமாக “கருணாஜலதே” என்ற நாதநாமக்ரியா திவ்ய நாம கீர்த்தனையில் “ஜலதே (dhe)”, “நிதே (dhe)” என்பவற்றுக்கு எதுகையாக “தாசரதே (the)” என்று வருகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உச்சரிப்பு விதிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சுதேச-விதேச மொழிகளும், லிபிகளும்
Next