வேதங்களின் முக்கிய தாத்பரியம் என்ன ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதங்களில் அநேக விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும்போது, வேதாந்தமான உபநிஷத்தில் சொன்ன ஆத்ம ஸாக்ஷாத்காரம்தான் வேதங்களுக்கெல்லாம் முக்கியமான தாத்பரியம் என்றால், எப்படி ஒப்புக்கொள்வது?

அக்னி ஹோத்ரம், ஸோம யாகங்கள், ஸத்ர யாகங்கள், இஷ்டிகள் என்கிற பல வேள்விகள், பல விதமான கர்மாக்கள், ஹோமங்கள் எல்லாம் வேதத்தில் இருக்கின்றன. இவைதான் வேதத்தின் லக்ஷியம் என்று ஏன் சொல்லக் கூடாது?

கல்யாணத்தில் என்ன செய்ய வேண்டும்? சாவில் என்ன செய்ய வேண்டும்? எப்படி ராஜ்ய பாலனம் பண்ணினால் நல்லது? ஸதஸில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? – என்கிற மாதிரிப் பல விஷயங்களும்தான் வேதத்தில் வருகின்றன. இதில் எதை அதன் மையமான லக்ஷ்யம் என்பது?

யாகம், யக்ஞம் இவற்றையெல்லாம் தவிர, அநேக உபாஸனா மார்க்கங்கள் வேதத்தில் சொல்லப்படுகின்றன. தனித்தனியாகத் தியானம் சொல்லியிருக்கிறது. ‘இந்த சரீரத்துக்குள் ஆத்மா எப்படிப் போகிறது, கடைசியில் சரீரம் என்னவாகப் போகிறது, திரும்பியும் மநுஷ்ய சரீரத்தில் எப்படியெல்லாம் பிரவேசிக்கிறது?’ என்பன போன்ற விஷயங்களும் அதில் காணப்படுகின்றன.

இன்னும், சரீர ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைத்திய சிகித்ஸைகள், சத்ருக்களினால் ஹிம்ஸை வந்தால் அதை நிவிருத்தி பண்ணுவதற்கான சாந்திகள், இப்படி வேறே பல சமாசாரங்களும் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு கேள்வி உண்டாகிறது. அதாவது, “வேதத்தின் முக்யமான உத்தேசம் என்ன? எதற்காக வேதம் ஏற்பட்டுள்ளது?”

‘எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்லுகின்றன’ என்று உபநிஷத் சொல்கிறது (கடோபநிஷத் II.15). அந்த ஒரு பொருள் என்ன? ‘ஓங்கார அர்த்தமாக இருக்கும்படியான ஒரு பரம்பொருளைத்தான் எல்லா வேதங்களும் சேர்ந்து சொல்கின்றன’ என்பது அந்த உபநிஷத்து வாக்கியம்.

‘வேதம் வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிறதே! வெவ்வேறு தேவதைகளைப் பற்றியும் சொல்லுகிறதே!’ என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

ஜட்ஜ் ஸதாசிவ ஐயர் என்று ஒருவர் இருந்தார். மைசூர் ராஜ்யத்தில் இருந்த பரமசிவ ஐயர் அவர் சகோதரர். ‘வேதங்கள் என்றால் பௌதிக சாஸ்திரந்தான். வேதம், ஜியாலஜியைப் பற்றியே [நில இயல்] சொல்கிறது என்று இந்த பரமசிவ ஐயர் எழுதியிருக்கிறார்.

இன்னும் பலபேர் பல பிரகாரமாகச் சொல்கிறார்கள். ‘அந்தக் காலத்தில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஸூர்யனையும், சந்திரனையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதிகமாக விஞ்ஞானம் விருத்தி அடையாத காலம் அது. அதனால் அவரவர்களுக்குத் தகுந்தாற் போல், அவரவர்கள் இயற்கைத் தோற்றங்களைப் பார்த்துப் பல விஷயங்களைச் சொன்னார்கள். அதைப் பாட்டாகப் பாடும்படியான சக்தி எல்லாருக்கும் இல்லை; சில பேருக்குத்தான் இருந்தது. இவர்கள் பாடிய பாட்டுக்களையே மந்திரங்கள் என்று தொகுத்து வேதமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சில வெள்ளைக்காரர்கள் அபிப்ராயப் படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்தால், ‘எல்லா வேதமும் ஒரு பொருளைத்தான் சொல்கிறது’ என்று உபநிஷத்துக்கள் சொன்னாலும், வெவ்வேறு பதார்த்தத்தைத்தான் அது சொல்வதாகத் தெரிகிறதே தவிர, ஒரு பொருளைச் சொல்வதாக நமக்குத் தோன்றவில்லை.

ராமாயணத்தைப் பற்றி ஒரு ச்லோகம் இருக்கிறது :

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே |

வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா ||

“வேதவேத்யே”- வேதத்தினால் அறியப்பட வேண்டிய ஒருவன். அவன் யார்?” பரே பும்ஸி”- பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷன் ராமனாக உலகில் அவதாரம் செய்தான். அவன் தசரதனுடைய குழந்தையாக வந்தவுடன், வேதம், ‘ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம்’ என்று வால்மீகியின் குழந்தையாக வந்தது! இதுதான் மேலே சொன்ன சுலோகத்தின் அர்த்தம். இங்கேயும் பரம்பொருள், அல்லது பரம புருஷன், அல்லது ஓங்காரம் என்கிற ஒரே ஸத்ய தத்வம்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷியம் என்று தெரிகிறது. கடோபநிஷத்தில் “ஸர்வே வேதா:” என்று சொன்னாற் போலவே, கீதையிலும் பகவான் “வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய:” – “எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுகிறேன்” என்கிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, “வேதத்தில் அநேக சமாசாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் வேதங்கள் எல்லாம் சேர்ந்து பொது லக்ஷ்யமாகச் சொல்வது ஒரு பொருளைத்தான்” என்று ஆகிறது.

“அப்படியானால், ஒரு பொருளைச் சொல்வதற்கு அநேகம் பொருளை வேதம் எதற்காகச் சொல்கிறது?” என்று நமக்குத் தோன்றும்.

அநேகம் பொருள்கள் மூலமாகத்தான் அந்த ஒரு பொருளை அறிய முடியும். யோகம், தியானம், தபஸ், யக்ஞம், கர்மாநுஷ்டானம், கல்யாணம் முதலான சடங்குகள், ராஜ்ய நிர்வாகம், சமூக வாழ்க்கை, கவிதை ஆகிய இவை எல்லாம் முடிந்த முடிவில் சுட்டிக்காட்டுகிற ஒரு பொருள் எதுவோ அந்த ஒரு பொருள்தான் வேதத்தின் உண்மையான தத்துவமாக இருக்கிறது. அந்த உண்மையான பொருள் ஒன்றைத் தவிரப் பாக்கி எல்லாம் மாறி மாறிப்போகும்படியான பொருள்கள்; கதையாகப் போகிற பொருள்கள். பின்னால் அந்தக் கதையும் மறைந்து போகிறது. ஒன்று தெரியாமல் பலவான லோகம்தானே நமக்குத் தெரிகிறது? அதனால், நமக்குத் தெரிகிற ஒவ்வொன்றையும் காட்டி, அதன் மூலமே ஒன்றுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகத்தான் வேதம் பல பல விஷயங்களையும் சொல்கிறது.

வேதத்தினால் சுட்டிக் காட்டப்படுகிற மெய்யான ஒரு பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அந்த ஒன்றைப் பற்றிய நினைவு நமக்கு வருவதற்குச் சித்தத்திற்குச் சில பழக்கங்கள் ( disciplines) வரவேண்டும். யாகங்கள் பண்ணுவது, தபஸ் பண்ணுவது, தானதர்மங்களை செய்வது, கோபுரம் கட்டுவது, குளம் வெட்டுவது, சமூக கார்யங்கள், கலியாணம் முதலான ஸம்ஸ்காரங்கள் ஆகிய எல்லாம் சித்தத்தைச் சுத்திசெய்து, சித்த விருத்தி நிரோதம் [ஓடிக் கொண்டே இருக்கும் மனஸை அடக்கல்] செய்வதற்காகத்தான். பல்வேறு கர்மாக்களின் நோக்கம் ஒரே பரமாத்மாவை அடைவதற்குத் துணைபுரிவதுதான்.

“வேத” என்றால் அறிவது. ‘எந்த ஒன்றை அறிந்து கொண்டால், அனைத்தையும் அறிந்து கொண்டதாகுமோ அதுதான் ஆத்மா; ஆஸாமியை அடையாளம் காட்டுகிற அடிச்சுவடு மாதிரிதான் மற்ற எல்லாமும் அந்த ஒன்றுக்கு அடிச்சுவடுகள்’ என்று உபநிஷத்து சொல்கிறது1. அப்படிப்பட்ட ஆத்மாவைப்பற்றி அறிவிப்பதுதான் வேதத்தின் லக்ஷ்யம். வேத ஆரம்பத்தில் வருகிற கர்மாவாகட்டும், முடிவில் வருகிற ஞானமாகட்டும், இரண்டுக்குமே – விஷயமாக இருப்பது ஈச்வரன், பிரம்மம், ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படுகிற ஒன்றுதான். ஸ்வாமிக்கு புஷ்பம் போடும்போது கூறும் மந்திர புஷ்பத்தின் போதும், ஒரு மஹானை வரவேற்கும் போதும், நாம் “யோ வேத (ஆ) தௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:” என்கிறோமே, இது மேலே சொன்னதற்கு proof தான். வேதத்தின் ஆதியிலும் (ஆரம்பத்திலும்), அந்தத்திலும் (முடிவிலும்) பிரதிஷ்டையானது ஒரே மஹா தத்வமான ஈச்வர தத்வம்தான் என்று இந்த மந்திரம் சொல்கிறது. ஆரம்பத்தில் வரும் கர்மா, முடிவில் வருகிற ஞானம் இரண்டுக்கும் லட்சியத்தில் கொஞ்சம்கூட வித்யாஸமில்லை என்று இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அநேக ஆயிரம் தினுசாகப் பிரிந்திருக்கும் கர்மா, ஒன்றே ஒன்றாயிருக்கிற ஞானம் இரண்டுக்கும் பொதுவாக – அதாவது வேதம் முழுவதற்கும் subject-ஆக- இருப்பது ஒன்றுதான். ஆத்மாவைப் பார்த்துக் கொள்ள முடியாமல் வெளிப்பார்வை உள்ளதாகவே, வெளி வஸ்துக்களை நோக்கி ஓடுவதாகவே இந்திரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கடோபநிஷத்தும் (IV.1) சொல்கிறது. விஷயத்தைக் கவனிக்காமல், வேறு எதையாவது பார்ப்பதை ‘பராக்கு’ப் பார்ப்பது என்கிறோமல்லவா? ஆத்மா ஒன்று தான் விஷயம். அதைவிட்டு வெளியிலே பார்ப்பதைத்தான் ‘பரா(ங்)’முகம் என்பது. அதுதான் பராக்குப் பார்ப்பது. இதைத் தான் கடோபநிஷத் சொல்கிறது. அப்படிப் பராக்குப் பார்க்காதே என்றால் மனஸ் அடங்காது. அதனால் வெளிக்காரியங்களைப் பண்ணிப் பண்ணித்தான் உள்ளே பார்த்துக் கொள்ளும்படியான பக்குவத்தை அடைய வேண்டும். இந்திரியங்களும், மனஸும் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஓடாமல் வைதிக கர்மாக்களை நிறையச் செய்யச் செய்யத்தான், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே பார்த்துக் கொள்கிற பக்குவம் உண்டாகும். மற்ற விஷயங்களையெல்லாம் அறிந்து, சோதித்து, சீர்தூக்கிப் பார்த்த பின்தான், எல்லாவற்றையும் அறிகிற அறிவை, எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அதைப் பிடிக்க முடியும். இதற்காகத்தான் அநேக வித்தைகளை, உபாஸனைகளை, கர்மாக்களை, கலைகளை, social duty -களை வேதத்தில் சொல்லியிருக்கிறது. சரீரத்தால் கர்மா பண்ணிப் பண்ணியே சரீராபிமானத்தைக் கரைக்க வேண்டும். பல வித்தைகளைச் சிந்தனை பண்ணியும், தத்வங்களை ஆராய்ச்சி பண்ணியும், உபாஸனைகள் பண்ணியுமே மனஸ், புத்தி இவற்றைக் கரைக்க வேண்டும். கெட்ட காரியம் செய்வதில் சரீராபிமானம் ஜாஸ்தியாகும். துர்விஷயங்களை ஆராய்வதால் மனஸின் தடிப்பு ஜாஸ்தியே ஆகும். மாறாக, மந்திர பூர்வமான, லோக க்ஷேமமான வைதிக கர்மாக்கள், வைதிக உபாஸனைகள் இவற்றை அநுஷ்டிக்கிறபோது, சரீரம் சித்தம் இவற்றின் ஆக்ரஹம் தளர்ந்து கொடுக்கிறது. முடிவிலே உள்ளே பார்த்துக் கொள்வதற்கான முதிர்ச்சி, பரிபக்குவம் உண்டாகிறது. அப்படிப் பார்த்துக் கொண்டபின், இங்கேயே (“இஹைவ”) மோக்ஷ ஆனந்தத்தைப் பெறுகிறான். ‘மோக்ஷம்’ என்றால், ‘விடுபட்ட நிலை’, ‘விடுதலை’ என்று அர்த்தம். எதிலிருந்து என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை. சரீரமும் மனஸும் ‘தான்’ இல்லை என்று அவற்றிலிருந்து உபநிஷத்து சொன்னபடி விடுவித்துக் கொண்டுவிட்டால், ஸம்ஸாரத்திலிருந்தும் விடுதலையாகி விடுகிறது.

இந்த லோகத்திலேயே மோக்ஷத்தை ஸம்பாதித்துக் கொடுப்பதுதான் வேதங்களின் உத்தேசம். அதுதான் அதன் பெருமையும். இதர மதங்களில் இருப்பதுபோல், செத்துப்போனபின் பரலோகம் போய்தான் மோக்ஷம் என்றால், அந்த மோக்ஷம் எப்படியிருக்கும் என்று இங்கே நாம் தெரிந்து கொள்ள முடியாது. அதை அடைந்தவர்களும் திரும்பிவந்து தங்கள் அநுபவத்தை நமக்குச் சொல்ல மாட்டார்கள். அதனால் அப்படி ஒன்று உண்டா என்று ஸந்தேஹமும் அவநம்பிக்கையும் ஏற்படலாம். ஆனால் இந்த லோகத்திலேயே, ஆசைகளுக்கெல்லாம் ராஜிநாமா கொடுத்துவிட்டு, ஆத்ம விசாரம் பண்ணினால் மோக்ஷம் இப்போதே ஸ்வயம் ஸித்தமாக இருக்கிறது என்று வேதம் சொல்வதால், அது ஸந்தேஹத்துக்கு இடமில்லாத ஸத்தியத்தையே சொல்கிறது என்று ஏற்படுகிறது.

மற்ற மார்க்கங்கள் மலேரியாவுக்குக் கொய்னா கொடுத்து அப்போதைக்கு ஜ்வரத்தை இறக்குகிற மாதிரி தற்கால சாந்தி கொடுக்கின்றன. மறுபடி ஒரு போதும் அந்த ஜ்வரம் வராதபடி செய்யவேண்டுமானால், வியாதியின் மூல காரணத்தையே கண்டுபிடித்து அதை அழிக்க வேண்டும். இப்படியே ஜீவனின் மூலம் என்ன என்கிற இடத்துக்கே போய், பரமாத்மாவிலிருந்து இப்படி அது பிரிகிற மூலத்தையே அடைந்து, பேதத்தை அழிப்பது வேத மதம்தான். அதுதான் தற்கால சாந்தியாக இல்லாமல் சாச்வத மோக்ஷமாக இருப்பது.

வேதத்தின் கர்மகாண்டத்தில் சொல்லியிருப்பதெல்லாமும் தற்கால சாந்திதான். ஆனாலும் எப்போதும் ஒரே அசாந்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறவனை, எடுத்த எடுப்பில் ஆத்மாராமனாக, பிரசாந்தனாக ஆக்கிவிட முடியாது. அதனால், தற்கால சாந்தியைத் தருகிற கர்மாக்களைக் கொடுத்திருக்கிறது. இவற்றால் சாச்வத சாந்திக்கு வேண்டிய qualification – ஆன (யோக்யதாம்சமான) சித்த சுத்தியும் ஏற்படுகிறது. யக்ஞம், விரதம், பூர்த்தம் என்கிற பொதுத்தொண்டு போன்றவற்றையும் வேதம் விவரமாக விதித்தாலும், இது ஒவ்வொன்றையுமே முடிந்த முடிவாகக் கொள்ளவில்லை. இவற்றில் சரீரத்தைக் கிருசம் பண்ணுவதும் [மெலிவிப்பதும்] , இவற்றிலேயே மனஸைச் செலுத்துவதால் மனம் ஒருமுகப்படுவதும் நம் சித்த மலத்தை நீக்க வழியாகிறது என்பதற்காகவே இவை விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, வேதங்களில் அநேக ஸமாசாரங்கள் நீள நெடுகச் சொல்லப்பட்டிருந்தாலும், அவை எல்லாமும் முடிவான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட ஞான விசாரத்தில் கொண்டு விடுவதற்காக ஏற்பட்டவைதான்.

முடிவில் சொல்வதுதான் தீர்மானம். ஒரு பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒருவருடைய பிரசங்கம் அல்லது கட்டுரையைப் படித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அவர் நிறையப் பேசியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. அதனால் ஆரம்பத்தை படித்து விட்டு சட்டென்று அதனுடைய கடைசிப் பாராவைப் பார்க்கிறோம். முதலில் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறம் கடைசியில் இருப்பதைப் படித்துவிட்டால் போதும். அவர் அந்த கட்டுரையில், அல்லது பிரசங்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது ஒரு விதமாகத் தெரிந்துவிடும். ஆரம்பத்தையும் முடிவையும் படித்துவிட்டே அதில் என்ன விஷயம் இருக்கும் என்று தீர்மானம் பண்ணிவிடலாம். இந்த மாதிரி “வேத ஆதௌ” விலும் (வேத ஆரம்பத்திலும்) “வேதாந்தே ச”விலும் (வேத முடிவிலும்) ஒரே பரமாத்மாவான ஈச்வர தத்வத்தையே சொல்லியிருப்பதால் அதுவே வேதத்தின் ஸப்ஜெக்ட் ஆகிறது.

சர்க்காரில் அநேக சட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களின் அபிப்ராயங்களைப் பற்றியே சில சமயங்களில் சிக்கல்கள் வந்து விடுகின்றன. அப்போது சட்டத்துக்கு வியாக்கியானம் இப்படித்தான் என்று இன்னொரு சட்டம் வகுத்து, அதன் மூலம் நிர்ணயம் செய்கிறார்கள். இதை Law of Interpretation என்கிறார்கள். இப்படியே ஈச்வரனின் நிரந்தரச் சட்டமான (Eternal Law – ஆன) வேதங்களின் தாத்பர்யத்தை நிர்ணயம் செய்ய, மீமாம்ஸை என்ற சாஸ்திரம் வியாக்கியான சட்டமாக ( Law of Interpretation -ஆக) இருக்கிறது. பதினான்கு வித்யாஸ்தானங்களில் ஒன்றான மீமாம்ஸையைப் பற்றி மற்ற விஷயங்கள் பின்னால் சொல்லுகிறேன். இப்போது ஒரு ஸமாசாரத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

வேத வாக்கியம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு, மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு,

உபக்ரம- உபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம் |

அர்த்தவாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே ||

என்று சொல்லியிருக்கிறது.

உபக்ரம – உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்பனவே இந்த ஆறு. வேதம் மட்டுமின்றி, எந்த ஒரு கட்டுரை அல்லது பிரவசனத்துக்கும் உத்தேசம் என்ன என்று கண்டுபிடிக்க இந்த ஆறும் உதவி செய்கின்றன.

உபக்ரமம் என்றால் ஆரம்பம். உபஸம்ஹாரம் என்றால் முடிவு. ஆரம்பத்தையும் முடிவையும் சேர்த்து ஒன்றாகப் பார்ப்பது ‘உபக்ரம-உபஸம்ஹாரம்’ என்ற முதல் வழி. இரண்டும் ஒன்றையே சொல்வதாக இருந்தால், அதுவே தாத்பரியம் என்று நிர்ணயம் பண்ணி விடலாம். ‘அப்யாஸம்’ என்றால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது. திரும்பத் திரும்பத் தண்டால் போடுவதால் அதை தேகாப்யாஸம் என்கிறோம். ஒரு பிரஸங்கத்தில் அல்லது வியாஸத்தில் ஒரு விஷயம் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டால் அதுதான் அதற்கு விஷயம் என்று தெரிகிறது. ‘அபூர்வதா’ என்றால், பூர்வத்தில் சொல்லாமல் புதிதாகச் சொல்வது. ஏற்கெனவே சொன்னதை அல்லது எழுதினதைக் காட்டிலும், புதிதாக ஒரு விஷயத்தைக் கொடுத்தால், இதுவே தாத்பரியம் என்று தெரிகிறது. “இப்படிச் செய்தால் இந்தப் பலன் கிடைக்கும்” என்று சொன்னால், “இப்படிச் செய்து இந்தப் பலனை அடை” என்று சொல்வதாகவே ஆகும். அதாவது இந்தப் பலனை அடைவிப்பதுதான் உத்தேசம் என்று தெரிகிறது. ‘பலம்’ என்பது இதுவே. அநேக ஸமாசாரங்களைச் சொல்லி, அவற்றைத் தழுவியதாக ஒரு கதை சொல்லி, அதன் மூலம் ஒரு விஷயத்தை பெருமைப்படுத்தினால், பெருமைப்படுத்தப் படுகிற விஷயமே நமக்கு தாத்பரியம் என்று தெரிகிறது. இதுதான் ‘அர்த்தவாதம்’ என்பது. ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியன விளக்கப்பட்டிருந்தால், அந்த விஷயந்தான் முக்யமான கருத்து என்று ஏற்படுகிறது. இந்த முறைக்கு ‘உபபத்தி’ என்று பெயர்.

இப்படித்தான், வேதத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்த்துவிட்டு வந்த ஒருத்தர். என்னிடம் சொன்னார்: ‘வேதம் சொல்லவந்த முக்ய ஸமாசாரம் என்னவென்றால் Fire Worship (அக்னி உபாஸனை) தான். வேதம் உபக்ரமத்தில், அதாவது ஆரம்பிக்கும்போது ‘அக்னிமீளே’ என்று சொல்கிறது. கடைசியில் உபஸம்ஹாரம் பண்ணி முடிக்கிறபோது அக்னி என்றே முடிகிறது. ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னிதான். ஆனபடியால், வேதத்தின் தாத்பரியம், gist (ஸாரம்) Fire Worshipதான் என்று அவர் சொன்னார்.

இதிலேயும் ஒரு உண்மை இருக்கிறது. அக்னி இருப்பது ஆத்ம சைதன்யம்தான்; அறிவொளிதான். அறிகிறவனாகவும், அறியப்படுவதாகவும், அறிவாகவும் இருக்கிற ஒரே ஆத்ம சைதன்யம்தான் வேதத்தின் பரம தாத்பரியம்.

ஆனால் வார்த்தைப்படி (literal-ஆக) எடுத்துக் கொண்டு, அக்னி உபாஸனைதான் தாத்பரியம் என்றால் சரியில்லை. ஏதோ ஒரு தேவதா உபாஸனைதான் பெரிசு என்று சொல்லாததுதான் வேதத்தின் பெருமை. எல்லா தேவதைகளாகவும் இருக்கிற ஆத்மாவையே பிரியமானதாக உபாஸிக்க வேண்டும் என்றுதான் வேதம் (பிருஹதாரண்யகம் 1.4.8.) சொல்கிறது. “ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும். ஆத்மாவே கேட்கப்படவேண்டும். ஆத்மாவே மனனம் செய்யப்பட வேண்டும். ஆத்மாவே அநுபவித்து அறியப்பட வேணடும். அதனாலேயே எல்லாம் அறியப்பட்டதாகும்” என்றுதான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குச் செய்கிற உபதேச வாயிலாக, நம் எல்லாருக்கும் வேதமானது முடிவான goal-ஐ (லக்ஷ்யத்தை)ச் சொல்கிறது.

Goal (குறிக்கோள்) என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், ‘இப்போது நாம் இருக்கிற இடம் வேறு; இந்த ஆரம்பத்திலிருந்து நாம் அந்த முடிவான இடத்துக்குப் போயாக வேண்டும்’ என்ற கருத்து அதில் தொக்கி நிற்கிறது.

“அத:” என்று ‘அது’வாகத் தூரத்தில் சுட்டிக் காட்டப்படுவது கோல்; ‘இதம்’ என்று இதுவாக இப்போது நாம் இருக்கிற நிலைதான் ஆரம்ப ஸ்தானம். இங்கேயிருந்து அங்கே போயாக வேண்டும்.

ஆனால் வாஸ்தவத்தில் அந்த லக்ஷ்யம் (அது) இங்கே (இது என்பதில்) இல்லையா? இருக்கத்தான் செய்கிறது. எல்லாம் பிரம்மந்தான் என்று தெரிந்து கொள்கிறபோது ‘அது’, ‘இது’ இரண்டுமே பிரம்மந்தான்; அதாவது இரண்டுமே ஒன்றுதான். ‘அது’, ‘இது’ என்ற இரண்டுகூட இல்லவே இல்லை. ‘இது’ என்று இப்போது நாம் சொல்வதே ‘அது’ என்று இப்போது நினைக்கிற ஸத்யவஸ்துவாக, முடிவிலே ஆகிவிடுகிறது.

“அத:” என்ற மாதிரியே, “தத்” என்றும் பரமாத்மாவைச் சொல்வது வேதத்தின் வழக்கம். “தத்” என்றால் ‘அது’ என்றே அர்த்தம். “ஓம் தத் ஸத்” என்று எந்தக் காரியத்தையும் முடிப்பதற்கு, ‘தத்’தாக உள்ள அது ஒன்றே ஸத்யம் என்று அர்த்தம்.

புருஷத்வம், மஹத்வம் (மகத்துவம்) என்பது போல் பல வார்த்தைகளை முடிவில் ‘த்வம்’ சேர்த்துச் சொல்கிறோம். இங்கே ‘த்வம்’ என்பதற்குத் ‘தன்மை’ என்று பொருள். மஹத்தின் தன்மை மஹத்வம். புருஷனின் தன்மை புருஷத்வம். ஸரி, தத்வம், தத்வம் என்று ஸத்யமான முடிவுகளைச் சொல்கிறோமே! இது எப்படி? ‘தத்வம்’ என்றால் தத்-த்வம், அதாவது ‘தத்’தினுடைய தன்மை என்று பொருள். தத்வ விசாரம், தத்வ உபதேசம் என்பவற்றிற்கு, பிரம்மமான தத்தினுடைய தன்மையை விசாரிப்பது, தத்தினுடைய தன்மையை உபதேசம் செய்வது என்பதே பொருள்.

வேதம் ‘தத்’ என்று பரம்பொருளைத் தூரத்திலுள்ள ‘அது’ வாக சொல்கிறது என்றால், நமக்கு அதனால் என்ன பயன்? அப்படி இல்லை. “வெகுதூரத்தில் இருக்கிறவர்தாம் மிகவும் அருகிலும் இருக்கிறார்” – “தத்தூரே தத்வந்திகே” என்று2 வேதம் உணர்த்துகிறது.

கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் பந்துக்களுக்குள்ளேயே முறைப் பையனைப் பார்த்து அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெண், “புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், “உன் இஷ்டப்படியே போ!” என்று விட்டு விட்டார்கள்.

அந்தப் பெண், ‘புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள்.

ஒரு நாளைக்கு ராஜா பல்லக்கில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனான்.

இதை அந்தப் பெண் பார்த்தாள். ‘அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்து போய்விட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல இருக்கிறதே! கல்யாணம் பண்ணிக்கொண்டால் இந்தச் சாமியாரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்து விட்டாள்.

சாமியாரோடு போகும்போது, ஒருநாள் அவர் தெருக்கோடியில் இருந்த பிள்ளையாருக்கு முன் நின்று குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதை அவள் பார்த்தாள். “சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள்.

அவளைத் தவிர அந்தப் பிள்ளையாரிடம் யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக் கொண்டு ‘ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், ‘அடடா, இந்தப் பிள்ளையாரையும் விட உசந்தது இந்த நாய்தான்!’ என்று, அந்த நாயைத் துரத்திக் கொண்டு, அவள் போக ஆரம்பித்துவிட்டாள்.

தெருவில் ஒடுகிற அந்த நாயை, ஒரு பையன் கல்லால் அடித்தான். அது ‘வள், வள்’ என்று குரைத்துக்கொண்டு ஓடிவிட்டது.

“ஏண்டா அந்த நாயை அடித்தாய்?” என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக் கொண்டு அதட்டினான்.

‘நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அடித்தவனையே திருப்பி அடிக்கிற இவன்தான் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.

இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆஸாமிதான் அவளுடைய அப்பா அம்மா முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளை! ‘வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக் கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி லௌகிகமாக ஒரு கதை சொல்வதுண்டு.

“எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாதவரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். “தத்தூரே தத்வந்திகே” – ‘தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்’ என்று ச்ருதி சொல்கிறது.

ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவது போல் இருக்கும். அங்கே ஒரு பனைமரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘அந்தப் பனைமரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்து விடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால் அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகுதூரத்திற்கு அப்பால் போய்விட்டது போல தெரியும். நாம் போகப் போக அதுவும் போய்க் கொண்டே இருக்கும். இந்தப் பனைமரத்தில் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும் என்று போய்க் கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகுதூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகுதூரத்திற்குப் போய்விட்டது போலத் தெரிகிறது. ஆகவே அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடந்தான் அது. அப்படி ‘அது’, ‘அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே – உன் உள்ளேயே – இருக்கிறது; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

நீயே அது என்பதைத் ‘தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. தத்வம் என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. ‘த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. தன்மை என்பது ஒன்று. ‘நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்- த்வம் அஸி என்னும் போது ‘தத்– அது, த்வம்– நீ (யாக), அஸி– இருக்கிறாய்’ என்று அர்த்தம். த்வம் என்பதற்கு இருக்கும் இரண்டு அர்த்தங்களை வைத்து, ஆசார்யாள் கூட “ஸெளந்தர்ய லஹரி” யில் சிலேடையாக ஒரு சுலோகம் பண்ணியிருக்கிறார் 3.

தத்-த்வம் என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துதான் தத்வம் என வழக்கில் வந்திருக்கிறது. ஒரே ஸத்யமான பரமாத்மாவின் தன்மையைத் தெரிவிக்கிற வார்த்தையைக் கொண்டே, எந்த ஸத்யமான முடிவுக்கும் ‘தத்வம்’ என்று பெயர் சொல்லுகிறோம்.

நான் நான் என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அதுதான், அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. ‘நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற ‘தத்’ என்று நினைக்கிறாயே, அந்த ‘தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.

இது இது என்று எதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்த இதம் என்பது, மூலம் இல்லாதது அன்று. மூலம் இல்லாமல் இது என்று ஒன்று தோன்றாது. விதை இல்லாமல் மரம் தோன்றாது. இவ்வளவு பிரபஞ்சத்திற்கும் – மலைகள், சமுத்திரம், ஆகாசம், பூமி, மாடு, மனுஷன், கோபம், பயம், பிரியம், இந்திரியங்கள், சக்தி இப்படி எல்லாவற்றுக்கும் – இது என்று சுட்டப்படும் எல்லாவற்றுக்கும் – மூலம் உண்டு. பார்க்கப்படுகிறது, கேட்கப்படுகிறது, முகரப்படுகிறது, நினைக்கப்படுகிறது, உஷ்ணம் சீதளம் என்பதாக ஸ்பர்சிக்கப்படுகிறது, மனசினாலே இந்திரியங்களினாலே ஆராயப்படுகிறது, அநுபவிக்கப்படுகிறது – இவை எல்லாவற்றுக்கும் ‘இதம்’ என்றுதான் பெயர். புத்திசாலித்தனம், ஆச்சரியமான காரியங்கள், இதுவரை வந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் முதலிய எல்லாம், அதாவது அறியப்படுவன எல்லாம் ‘இதம்’தான். இவை எல்லாம் ஒரு மூலத்தையே காரணமாக உடையன. மூலம் இல்லாது போனால் ‘இது’ என்கிறது ஒன்றுமே இராது. மூலம் இல்லாமல் ஒரு பொருள் கிடையாது. எல்லாவற்றுக்கும் ஒரு மூலம், பீஜம் இருக்கிறது. மநுஷ்ய சரீரம் என்றால் பீஜம் இருக்கிறது. மரம் என்றால் அதற்கு ஒரு பீஜம் (விதை) இருக்கிறது. மூலம் இல்லாமல் ஒன்றுமே கிடையாது. ஆதலால் பிரபஞ்சத்துக்கு ஒரு மூலம் இருக்க வேண்டும். பிரபஞ்சத்தில் என்ன என்ன சக்தி இருக்கிறதோ அவ்வளவும் அந்த மூலத்தில் இருக்க வேண்டும்.

புளியங்கொட்டை முளைக்கிறபோது பார்த்தால் தெரியும். முளை கண்டவுடன் அந்த விதையை இரண்டாகப் பிளந்து பார்த்தால் அதற்குள் ஒரு மரமே இருப்பது தெரியும். பெரிய மரமாக வளரக்கூடிய சக்தி அதனிடத்திலேயே இருக்கிறது. எல்லா விதைகளிலும் அப்படியே இருக்கும். என்றாலும், புளியங்கொட்டையில்தான் நன்றாக நாம் பார்க்க முடியும்.

மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் என்று உண்டு. ஒரு சின்ன விதைக்குள் ஒரு மஹாவிருக்ஷம் இருப்பதுபோல், இந்த அக்ஷரங்களுக்குள்ளே அளவுகடந்த சக்தியை அடைத்து வைத்திருக்கிறது. ஐகாக்ரியத்தோடு (one- pointed concentration-ஓடு) லக்ஷக்கணக்கான ஆவிருத்தி அந்த அக்ஷரத்தை ஜபித்தால், அதன் உள் சக்தி முழுதையும் கிரஹிக்க முடியும்.

உலகத்திற்குள் எவ்வளவு சக்தி இருக்கிறதோ, எவ்வளவு மேதை இருக்கிறதோ, சாமர்த்தியம் இருக்கிறதோ அவ்வளவும் மூலமான ஸ்வாமிக்குள் இருக்க வேண்டும். மூலம் இல்லாமல் இவை ஒன்றுமே தோன்றாது.

வேதம் முரசறைவதாவது, “இது இது என்று தோன்றும் பொருள்கள் எல்லாம் ஒரு மூலம் இன்றித் தோன்றவில்லை. மூலத்தில் இருக்கும்படியான சக்தி எதுவோ அதுவேதான் உலகம் முழுவதும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அந்த மூலம் எங்கே இருக்கிறது? இது இது என்று பார்க்கப்படுவனவற்றுள், உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிற ஆத்மாவேதான் மூலம்.”

பெரிய நிலைக்கண்ணாடியை வைத்துவிட்டு அதில் பார்க்கிறோம். நம் உருவம் அதில் இருக்கிறது. நான்கு நிலைக் கண்ணாடிகளை முன்பின் வரிசையாக வைத்துவிட்டுப் பார்த்தால் ஆயிரம் உருவங்கள் தெரிகின்றன. அந்த ஆயிரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறவன், ஆயிரத்துக்கும் மூலமான ஒரே ஒருவன்தான். இப்படி இத்தனை கோடி ஜீவர்களுக்கும் உள்ளே இருந்து, இது இது என்று பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே ஒருத்தன்தான் ஸ்வாமி! பார்க்கிற பொருள்தான் பார்க்கப் படுகிற வஸ்துக்களுக்கெல்லாம் மூலம். அந்த மூலம் என்பது அறிவுதான். அறிவு என்பதே எல்லா ஜகத்திற்கும் காரணம். அந்த அறிவு எங்கே இருக்கிறது? உன்னிடமே இருக்கிறது. அகண்டமாக (பிரிவில்லாததாக) இருக்கக்கூடிய இது, உன்னிடம் கண்டமாக (பிரிந்ததாக)த் தோன்றுகிறது.

இது சின்ன பல்பு, அது பெரிய பல்பு. அது நீல விளக்கு, இது பச்சை விளக்கு. விளக்கில் அநேக உருவங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அவை எல்லாவற்றுக்குள்ளும் இருக்கும் சக்தி- மின்சார சக்தி – ஒன்றுதான். எங்கும் வியாபித்திருக்கிற மின்சக்தி இங்கே, இந்த விளக்குக்குள் இருந்து பிரகாசிக்கச் செய்கிறது; fan (விசிறி) க்குள் இருந்து சுற்ற வைக்கிறது. இந்த எல்லாக் காரியங்களுக்கும் மூலமான சக்தி ஒன்று. அது அகண்டமானது. அதுவே ஒயர் (கம்பி) க்குள் வருகிறபோது கண்டமாகிறது. இயற்கையில் பளீர் பளீர் என்று மின்னும்போது, ஜலம் அருவியாகக் கொட்டும் போது, அங்கெல்லாம் இது தானே வெளிப்பட வந்து விடுகிறது. இந்த மாதிரி உனக்குள்ளேயே இருக்கிற பரம ஸத்யமான தத்வம் உனக்கு flash ஆகும்படியாக [பளிச்சிடும்படியாக] பண்ணிக் கொள். கர்மாநுஷ்டானத்தில் ஆரம்பித்து, யக்ஞம், தேவதா உபாஸனை எல்லாம் பண்ணிக்கொண்டே போய், மஹாவாக்யத் தியானத்தில் முடிகிற வேத வேதாந்த ஸாதனங்களெல்லாம் இதற்குத்தான். வேதத்தில் இருக்கிற சமூக வாழ்க்கை முறைகள், குடும்ப தர்மங்கள், ராஜாங்க நீதிகள், கவிதை, வைத்தியம், ஜியாலஜி முதலான சாஸ்திரங்கள் எல்லாமும், இந்த ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் கொண்டு போய் விடுவதற்காக ஏற்பட்ட படி வரிசைதான். முதலில் இப்படி ‘தத்’தும் ‘த்வம்’மும் ஒன்றாயிருப்பதை, மின்னல் வெட்டு மாதிரி சில க்ஷணங்களுக்கு மட்டுமே தெரிந்து கொள்வாய். பிரம்மாநுபவம் மின்னலில் மின்னல் மாதிரிக் கண்கொட்டுகிற நேரம்தான் உண்டாகும் என்று கேனோபநிஷத்தில் (iv.4) சொல்வது இந்த நிலையில்தான். அதோடு விடாமல் அப்யாஸம் செய்து கொண்டேயிருந்தால், அருவி தாரை கொட்டுகிறபோதும் எப்போதும் மின்சாரம் உண்டாகிற மாதிரி, எப்போதும் அந்த அநுபவத்திலேயே இருக்கலாம். இதுதான் சரீரத்தில் இருக்கிறபோதே மோக்ஷம். அப்புறம் சரீரம் போனபின், அந்தப் பரம ஸத்தியமாகவே இருந்து விடலாம். இப்படி சரீரம் உள்ளபோது ஜீவன் முக்தி, உயிர் போனபின் விதேஹமுக்தி என்று வித்யாஸம் சொல்வதுகூட, மற்றவர்கள் பார்வையில்தான். ஞானிக்கு இரண்டும் ஒன்று தான்.

இப்படி, எல்லாம் ஒரே பிரம்மம்தான் என்று நாம் அநுபவத்தில் தெரிந்து கொண்டு, இங்கேயே மோக்ஷத்தில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் ஸகல வேதங்களுக்கும் பரம தாத்பரியமாகும்.

இன்றைக்கு லோக விஷயங்களைப் பத்திரிக்கைகளின் (ந்யூஸ் பேப்பர்களின்) மூலம் தெரிந்து கொள்கிறோம். பல தேசத்திலுள்ள ரிப்போர்ட்டர்கள், ந்யூஸ் ஏஜென்ஸிகள் எல்லோரும் கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும், டெலிப்ரிண்டர் மூலம் மெஸேஜ் கொடுத்தும் இந்தச் செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன. லோகத்திலுள்ள இப்படிப்பட்ட கருவிகளாலும், ஸாதாரண மநுஷ்ய புத்தியாலும் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் இருக்கின்றனவே! அவற்றைத் தெரிந்துகொள்ள ஒரு பத்திரிக்கை வேண்டாமா? எதை இந்தக் கருவிகளால் தெரிந்து கொள்ள முடியாதோ, எந்த ஊரிலிருந்து தந்தியும் டெலிப்ரின்டரும் வராதோ, அங்கேயுள்ள விஷயங்களைச் சொல்கிற பத்திரிக்கைதான் வேதம். அதீந்திரிய சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்தப் பத்திரிகையின் வழியாகத்தான் லோகாதீதமான, நம் ஸாதாரண புத்திக்கு அதீதமான ஸமாசாரங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி அநேக ஸமாசாரங்கள் வேதத்தில் இருந்தாலும் அதிலும் தள்ளப்படும் சில பாகங்கள் உண்டு.

“தள்ளப்படுவது” என்றால் ஒரேடியாகத் தப்பு என்று ஒதுக்கி விடுவது என்று அர்த்தமில்லை. வேதத்தில் தப்பான ஸங்கதி ஒன்றுகூட இருக்க முடியாது. அப்படியிருக்கும் என்று நினைத்தாலே அபசாரம். ஆனாலும், முக்யமான ஒரு விஷயத்தை ஏற்கச் செய்வதற்குப் பக்க பலமாகவும், பூர்வாங்கமாகவும் அதிலே பல விஷயங்கள் வரும்போது முக்கியமான விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பாக்கியைத் தள்ளவேண்டியதுதான் என்று நம் பூர்விகர்களே ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். ஒரு ஆரம்ப நிலையில் அல்லது இடைநிலையில், சில விஷயங்களை எடுத்துக் கொண்டாலும், மேல் நிலைக்குப் போகிறபோது அவற்றை விட்டு விடும்படியாக இருக்கிற ஸமாசாரங்களும், படிப்படியாக ஜீவனை உயர்த்திக் கொண்டே போகிற வேதத்தில் இருக்கின்றன. இவை ஒரு நிலையில் ஏற்கப்பட்டாலும் அதற்கு மேலே இன்னொரு நிலையில் தள்ளப்படுகிறவைதான்.

இப்படியில்லாமல் பரம தாத்பரியம் அல்லது “விதி” என்பதாக பூர்ணமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் வேதத்தில் இருக்கின்றன. அப்படியில்லாமல், ஸாரம் போக, பாக்கி தள்ளப்பட வேண்டியவற்றுக்கு “அர்த்தவாதம்” என்றும் “அநுவாதம்” என்றும் பெயர்.

ஒரு தத்வத்தை, விதியை நம் மனஸிலே படுகிற மாதிரி எடுத்துச் சொல்வதற்காக, அதற்கு மிகவும் உயர்வைக் கல்பிக்கிறதான அநேக கதைகளை வேதம் சொல்வதுண்டு. இப்படிச் சொல்லும்போது, விதியையே பூர்ணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கதைகளை வேதம் சொல்வதுண்டு. இப்படிச் சொல்லும்போது, விதியையே பூர்ணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கதைகளை ‘அர்த்தவாதம்’ என்று தள்ளி விடலாம். அதாவது, அவற்றை நாம் அனுஷ்டானத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது “அர்த்தவாதம்”.

“அநுவாதம்” என்றால் என்ன? நமக்குத் தெரியாததை முடிவாகச் சொல்வதற்காகவே, நமக்குத் தெரிந்த ஒன்றில் வேதம் ஆரம்பித்து, அதையும் விவரித்துக் கொண்டு போகும். புதிசாக ஒரு விதியை அல்லது தத்வத்தைச் சொல்லாமல், சில இடங்களில் ஏற்கெனவே நமக்குத் தெரிந்ததைத் திரும்பவும் சொல்லும். அதாவது வேதப் பிராமாண்யம் தேவைப் படாமல் நமக்கே நடைமுறையில் பிரத்யக்ஷப் பிரமாணம் முதலானதுகளால் தெரிய வருகிற விஷயங்களையும் சில இடங்களில் வேதம் சொல்ல வேண்டியதாகும். இதுதான் “அநுவாதம்” என்பது.

அநுவாதமும், அர்த்தவாதமும் முக்யமானவை அல்ல. அவை வேதத்தின் முடிவான உத்தேசத்தைச் சொல்ல வந்தவை அல்ல. நமக்கு மற்ற எந்தப் பிரமாணங்களாலும் தெரியாததை வேதம் சொன்னால், அதுதான் விதி; அதுதான் முக்யமான வாதம். அதுதான் ஸத்யமான தத்வம். அதுதான் வேதத்தின் உத்தேசம், உபதேசம் எல்லாம்.

அதாவது இதர கருவிகளைக் கொண்டு தெரிந்து கொள்ளக் கூடியதை வேதமும் சொன்னால், அது மறுக்க முடியாத வேதப் பிரமாணமாகி விடாது. தெரியாததைத் தெரிவிக்க ஏற்பட்டதுதான் வேதம். அது நமக்குத் தெரிந்ததையும் சொல்லி, தெரியாததையும் சொல்லிற்று என்றால், தெரியாதது தான் அதன் பரமதாத்பரியம் என்றே அர்த்தமாகும். நமக்குத் தெரிந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற கருணையாலேயே தெரிந்ததையும் சொல்கிறது. ஆனால் இதுவே ஸத்ய தத்வம் என்றால் தெரியாததைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை! “நமக்குத் தெரியாத ஒரு தத்துவத்தை வேதம் நீள நெடுகச் சொல்லியிருக்குமானால் அப்போது அதைத் தள்ளிவிடுங்கள்: தெரிந்ததையே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் அது பரிஹாஸத்துக்கு இடமாக அல்லவா ஆகும்? இதற்கு ஏன் தெரியாததை நீட்டி முழக்கி சொல்லியிருக்க வேண்டும்? சொல்லாமல் விட்டிருக்கலாமே!

சரி, நமக்குத் தெரிந்தது என்ன? தெரியாதது என்ன? உலக வஸ்துக்களின் விஷயத்தில் இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரிகிற இத்தனை வஸ்துக்களும் ஒரே பொருளா, வேறு வேறா என்ற ஸந்தேஹம் ஏற்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிகிறது. நாம் பிரத்யக்ஷப் பார்வையை மட்டும் வைத்துக் கொண்டு, வஸ்துக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வேறே வேறேதான் என்கிறோம். அப்படி வேற வேறேயாக வைத்துக் கொண்டால்தான், நமக்குக் காரியம் சரியாக நடக்கிறது. நமக்கு ஜலம் வேறே, எண்ணெய் வேறேதான். தீபம் வேண்டுமானால் எண்ணெய் விட்டால்தான் எரியும். ஜலத்தை விட்டுப் பிரயோஜனமில்லை. அதே தீபம் பெரிசாக எரிந்து நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டால், அப்போது ஜலத்தை விட்டுத்தான் அணைக்க வேண்டும். எண்ணெய் விட்டால் இன்னம் பெரிசாக ஜ்வாலை விடும்! இப்படியே எந்தக் காரியமானாலும், வஸ்துக்களிடையே வித்யாஸம் பார்த்து, அவை வேறே வேறே என்று வைத்துக்கொண்டு செய்தால்தான் காரியம் நடக்கிறது.

இப்படி வேறே வேறேயாகவே வைத்துக் கொள்கிறது தான் த்வைதம்.

வேதத்தில் அநேக கர்மாக்கள், உபாஸனைகளைச் சொல்லியிருப்பதெல்லாம் இப்படிப்பட்ட த்வைத அடிப்படையிலேதான். அதனால், இங்கெல்லாம் வேதம் த்வைதமாக இருக்கிறது என்றுதான் ஏற்படுகிறது. இதை அத்வைதிகள் என்பதற்காக நாம் யாரும் ஆக்ஷேபித்துப் பேச வேண்டாம்.

ஆனால், இப்படி நமக்குத் தெரிந்த த்வைதத்தோடு வேதம் நின்றுவிட்டதா என்று பார்க்கலாம். அப்படி நின்று விட்டால் த்வைதந்தான் வேத தாத்பரியம் என்று சொல்லி விடலாம். ஆனால் வேதத்திலே என்ன பார்க்கிறோம்? ஸம்ஹிதையிலே ஆங்காங்கும், கடைசியில் உபநிஷத்தில் ஏகப்பட்டதாகவும், பிரத்யக்ஷத்தில் நமக்குத் தெரியாத அத்வைதத்தைச் சொல்லியிருக்கிறதே! வஸ்துக்கள் வேறு வேறு இல்லை – எல்லாம் ஒரே ஆத்மாவின் வெளித்தோற்றங்கள் தான் – என்ற அபிப்ராயத்துக்குக் கொண்டு விடுகிறதே!

நம்முடைய மதப் புஸ்தகங்களில் ‘பூர்வபக்ஷம்’, ‘ஸித்தாந்தம்’ என்று இரண்டு உண்டு. முதலில், பூர்வபக்ஷம் என்பதில் புஸ்தகத்தின் கொள்கைக்கு மாறுபட்டவர்களின் கொள்கையைச் (opposite point of view) சொல்லியிருக்கும். அதை மட்டும் பார்த்தால் புஸ்தகத்தின் அபிப்ராயத்தையே நாம் நேர்மாறாகப் புரிந்து கொண்டு விடுவோம். இப்படி எதற்கு பூர்வபக்ஷம் பண்ணியிருக்கிறதென்றால் அப்புறம் ஸித்தாந்தம் செய்வதற்காகத்தான். அதாவது எதிர்வாதங்களை வென்று புஸ்தகத்தின் கொள்கையான சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்கே, முதலில் அந்த எதிர்வாதங்களைச் சொல்லியிருக்கும். அப்புறம் ஸித்தாந்தம் என்ற பாகத்தில், அந்த வாதங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நிராகரித்து விட்டுத் தன் கொள்கையையே கெட்டியாக நிலை நாட்டியிருக்கும். எதிராளியின் அபிப்ராயத்தையும் மறைக்காமல் சொல்லி, அதற்கு இப்படி நம் தரிசனங்களில் (‘தரிசனம்’ என்றால் தத்வ சாஸ்திரங்கள் என்று அர்த்தம்) பதில் சொல்லியிருப்பதைப் பிறதேசத்து அறிஞர்களும் கொண்டாடுகிறார்கள்.

இதை எதற்கு சொன்னேன் என்றால், ‘வேதத்தி்ல் அத்வைதத்தைச் சொன்னது, இப்படிப் பூர்வபக்ஷமாக அந்தக் கருத்தைச் சொல்லி அப்புறம் அது சரியில்லை என்று நிர்த்தாரணம் பண்ணுவதற்கா?’ என்று பார்த்தால், அப்படி இல்லை.

அத்வைதத்தை விசேஷமாகச் சொல்கிற உபநிஷத்துக்கள் தான் ஸித்தாந்தம் மாதிரி ‘ஞானகாண்டம்’ என்று கடைசியில் வருகிறது. த்வைதத்தை சொல்லும் ‘கர்மகாண்டம்’ பூர்வ பக்ஷம் மாதிரி இதற்கு முந்தியே வந்து விடுகிறது. ஆகவே நமக்குத் தெரிந்த த்வைதத்தையும் வேதம் முதல் நிலையிலே சொல்லி, தெரியாத அத்வைதத்தையும் முடிவிலே சொல்கிறது என்றால், அந்த அத்வைதந்தான் வேதம் சொல்ல வந்த லக்ஷ்யம், அதுவே வேதத்தின் பரம தாத்பரியம் என்றுதான் அர்த்தம்.

ஆனாலும் பூர்வபக்ஷத்தைக் கண்டிக்கிற மாதிரி வேதத்தில் த்வைதத்தைக் கண்டிக்கவில்லை. ஏனென்றால், காரணம் சொல்கிறேன். த்வைதத்தை வைத்துக் கொண்டு செய்கிற கர்மா, உபாஸனை ஆகியன அத்வைதாநுபவத்துக்குப் போவதற்கு விரோதமில்லை. மாறாக அதற்கு உபாயமே இவை. அதனால் பூர்வபக்ஷத்தில் எதிர்க்கட்சிக்காரன் என்று ஒருத்தனை வைத்து அப்புறம் அவனைக் கண்டித்த மாதிரி, இங்கே த்வைதமான அபிப்ராயங்களையும், கர்மாக்களையும் விரோத பாவத்துடன் எதிர்க்கட்சி என்று வைக்கவில்லை. ஆகையால், அவற்றை அப்புறம் கண்டிக்கவுமில்லை. முதலிலே பூ இருந்து, அப்புறம் அந்தப் பூ உதிர்ந்து பழமாகிற மாதிரி, முதலில் த்வைதமாக இருந்தே, நாம் அப்புறம் அதை விட்டு அத்வைதமாக வேண்டியிருக்கிறது. பூவுக்கும் பழத்துக்கும் விரோதமா என்ன? பழந்தான் முற்றிய நிலை என்பதற்காகப் பூவைக் கண்டிப்பதில்லையல்லவா?

மற்ற எல்லாமும் அதது இருக்கவேண்டிய லெவலில் இருந்தால், அவற்றை அத்வைதத்தில் கண்டிக்க வேண்டியதேயில்லை. லெவலை மீறுகிற போதுதான் கண்டிக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் (சங்கர பகவத்பாத) ஆசார்யாளும், மற்ற அத்வைத கிரந்த கர்த்தாக்களும் இதர ஸித்தாந்திகளைக் கண்டனம் பண்ணி எழுதினது.

ஈச்வர கிருபையால், விஞ்ஞான வளர்ச்சியானது ஆத்மிகத்துக்குக் கெடுதலைப் பண்ணாமல், இதுவரைக்கும் வேதத்தால் அன்றித் தெரிந்து கொள்ள முடியாதிருந்த அத்வைதத்துக்கும் கிட்டே கிட்டே கொண்டு போவதாகவே ‘மாடர்ன் ஸயன்ஸி’ல் ஏற்பட்டிருக்கிறது. ஸயன்ஸில் ஆரம்பத்தில் பார்த்தால் உலகத்திலுள்ள வஸ்துக்கள் எல்லாம் வேறு வேறு என்றே நினைத்தார்கள். பிறகு எல்லாவற்றுக்கும் மூலமாக 72 எலிமென்ட்களே இருக்கின்றன என்று தீர்மானித்தார்கள். அந்த 72ம் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பல தினுசில் சேருவதால்தான் இத்தனை கோடி வஸ்துக்களும் வந்தன என்றார்கள். அப்புறம் Atomic Science (அணு விஞ்ஞானம்) என்பதில் ஆராய்ந்து கொண்டே போனதில், இந்த 72 பதார்த்தங்களுக்கும் மூலம் ஒன்றேதான், ஒரே எனர்ஜி (சக்தி) தான் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்4.

ஆத்ம தத்வத்தை விசாரித்து, ஸத்யத்தைத் தெரிந்து கொண்டவர்கள், அந்த ஸத்யம் அறிவு மயமானதே என்று சொல்லி, இந்த அறிவுக்குள்ளேயே ஜட வஸ்துக்களை மட்டுமில்லாமல் அறிவோடு (சைதன்யத்தோடு) இருக்கபட்ட ஜீவாத்மாவையும் சேர்த்து அத்வைதமாகச் சொல்கிறார்கள்.

ஒரே எனர்ஜி என்றாலும் சரி, ஏக சைதன்யம் என்றாலும் சரி, விஞ்ஞானிகளும் ஞானிகளும் சொல்கிற அந்த ஒன்றேயான வஸ்து நமக்குப் பிரத்யக்ஷத்தில் தெரியவில்லை. அதன் வேஷமான பல பல வஸ்துக்கள்தான் வேறே வேறே மாதிரி ‘த்வைதமாக’த் தெரிகின்றன. இந்த த்வைதமே ஸத்யமானால், அதற்கு வேதத்தைப் பார்க்க வேண்டுமென்பதே இல்லை. நம்முடைய கண்ணுக்கும் புத்திக்கும் தெரிந்ததைச் சொல்ல வேதம் எதற்கு? நமக்குத் தெரியாததாகவும், தெரிந்த இடத்திலிருந்து ஆரம்பித்து நாம் போகக்கூடியதாகவும், கடைசியிலே முடிவான விஷயமாகவும் வேதம் ஒன்றைச் சொல்லுமானால், அதுதான் வேதங்கள் அத்தனைக்கும் முடிவான தாத்பரியம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படியிருப்பது ‘ஜீவாத்மா’ தன்னுடைய நிஜ நிலையைப் பெற வேண்டுமானால் பரமாத்மாவில் அத்வைதமாகக் கரைந்து பிரம்மமாகிவிடவேண்டும்’ என்ற தத்வந்தான்.


1. ப்ருஹதாரண்யகம் I.4.7

2. ஈசாவாஸ்யோபநிஷத், 5.

3. “தெய்வத்தின் குரல்–முதற்பகுதி”யில் “பவானித்வம்” என்ற உரை பார்க்க.

4. அணு விஞ்ஞானம் உருப்பெறு முன்பே, அதாவது 1920-களிலேயே, ஸ்ரீ பெரியவர்கள் தமது உரையொன்றில், “72 எலிமென்ட்கள் ஒன்றுக்கொன்று சேருவதால் பல பொருட்களையும் உண்டாக்குகின்றன என்று சொல்கிறார்கள். இன்னும் மேலே ஆராய்ந்து கொண்டே போனால், அந்த 72 பதார்த்தங்களுக்கும் மூலம் ஒரே பதார்த்தந்தான் என்பதை அறிந்து கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறார்கள். அவர்களது தீர்க்க தரிசனம் பலிதமானதில் வியப்பென்ன?

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தசோபநிஷத்துக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதமும் தமிழ்நாடும்
Next