கலியில் ஜீவபலி உண்டா ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரு வாதம் உண்டு. அதாவது:

பூர்வ யுகங்களில் மநுஷ்யர்கள் ரொம்பவும் உயர்ந்த சக்தியோடும் பண்புகளோடும் இருந்தார்கள். மனஸிலே பரமப் பிரியத்தை வைத்துக் கொண்டே லோகக்ஷேமார்த்தமாக அவர்களால் ஜீவபலி கொடுக்க முடிந்தது. அதனால் அவர்கள் அசுவம், கோ இவற்றைக்கூட யக்ஞங்களில் பசு பலியாகத் தந்தார்கள். சிராத்தத்தில் மாம்ஸம் சேர்த்தார்கள். இப்படி மனஸில் பட்டுக்கொள்ளாமல், தேவ சக்திகளை லோகநலனுக்காகப் பிரீதி பண்ணும் பொருட்டே அவர்கள் நடுத்தர வயஸில் கிருஹஸ்தர்களாகக் கர்ம மார்க்கத்தில் இருந்து கொண்டு நிஷ்காம்ய கர்மம் செய்தார்களென்றால், பிற்பாடு விருத்தாப்யத்திலோ ஸகல கர்மாவையும் விட்டு விட்டு பூஜை புரஸ்காரங்களும் ஆசாரங்களுங்கூட இல்லாமல், அப்படியே செயலற்ற ஆத்மாராமர்களான ஸந்நியாஸிகளாக இருக்கவும் அவர்களால் முடிந்தது. அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட உத்தமப் பண்பு இருந்தது என்றால், ஒரு ராஜ்யத்திலே தன் சகோதரனான ராஜா, வாரிசு இல்லாமல் செத்துப் போய்விட்டால், ‘அராஜகம் வராமல் தேசம் க்ஷேமமாக இருக்கவேண்டுமே’ என்ற ஒரே எண்ணத்துக்காக, தங்களுக்கென்று காமமே இல்லாமல் தங்களுடைய பிரம்மசரியம் குலையாமலே, ஸஹோதரனின் ஸ்தானத்தில் தாங்களே இருந்துகொண்டு புத்ரோத்பத்தி பண்ணக்கூட முடிந்தது. நம்முடைய கலியுகத்தில் இப்படிப்பட்ட நிஷ்காம்ய கர்ம பாவனையோ, பிரேமையோடேயே கொலைகூடச் செய்கிற பாவனையோ, ஸகல கர்மாவையும்விட்டு மனஸையும் அடக்கி ஸந்நியாஸியாக இருக்கிற தகுதியோ, ஸ்திரீ ஸங்கத்திலும் பிரம்மசர்ய பாவனை நழுவாத தன்மையோ எவருக்கும் இருக்க முடியாது. அதனால் அச்வமேதம், கோமேதம், சிராத்தத்தில் மாம்ஸம், ஸந்நியாஸம், ஸஹோதரன் ஸ்தானத்தில் புத்ரோத்பத்தி செய்வது ஆகிய இந்த ஐந்தும் கலியில் வர்ஜமாகும் (விலக்கத் தக்கதாகும்) என்பது ஒரு வாதம்:

அச்வாலம்பம் கவாலம்பம் ஸந்-ந்யாஸம் பல பைத்ருகம் |
தேவரேண ஸுதோத்பத்திம் கலௌ பஞ்ச விவர்ஜயேத் ||
1

இந்த ஸ்லோகத்தில் “அச்வாலம்பம்” என்பதற்குப் பதில் “அக்ன்யாதானம்” (அக்னி ஆதானம்) என்று சிலர் சொல்கிறார்கள். இப்படிச் சொன்னால் பசுபலி இல்லாத ஏராளமான யாகங்கள், இஷ்டிகள் இருக்கின்றனவே, அவற்றைக்கூடக் கலியில் செய்யக்கூடாது; அதாவது கலியில் வேள்வி என்பதற்கே total prohibition (முழு விலக்கு) என்று அர்த்தமாகி விடும். ஹவிர் யக்ஞங்களில் முதலாவதாக வருவதே இந்த அக்ன்யாதானம். அதுவே இல்லை என்றால் ‘பாக யக்ஞம்’ என்ற ஏழு சின்ன யக்ஞங்களைத் தவிர யாக, யக்ஞாதிகளே அடியோடு இல்லை என்று அர்த்தமாகி விடும்.

ஆனால் இப்படிச் சொல்வது சரியல்ல என்பதே பெரியவர்களான சிஷ்டர்களின் அபிப்பிராயம். வேத மார்க்கத்தைப் பிரதிஷ்டை செய்யவே வந்த சங்கர பகவத் பாதாள் “வேதோ நித்யம் அதீயதாம்” (வேதத்தை தினுமும் ஓதுங்கள்) என்று சொன்னதோடு நிறுத்தாமல், அதை ஓதினால் மட்டும் போதாது, அதில் சொன்ன கர்மங்களை அநுஷ்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார்: தத் உதிதம் கர்மஸ்வநுஷ்டீயதாம் என்று. வேதகர்மா என்றால் முக்கியமாக யாகந்தான். அதை விட்டுவிட்டு வேறெந்த வேத கர்மாவைப் பண்ணுவது? ஆதலால் சில விதமான யாகங்களை வேண்டுமானால் கலியில் விடலாமே தவிர, முழுக்க விட்டுவிடக் கூடாது.

அக்னியாதானம் கூடாது; அதாவது எந்த விதமான பெரிய யாகமுமே கூடாது என்று இந்த ச்லோகத்தில் முதலில் சொல்லியிருந்தால், அப்புறம் யாகத்தில் ஒருவிதமான (கோமேதம் என்ற) கவாலம்பம் கூடாது என்று வேறு ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? அக்னியாதானம் போய் விட்டால், அதனுடன் தானே கவாலம்பமும் போய்த்தானே விடும்? ஆனபடியால் சில தினுஸானவை தவிர, மற்ற வேள்விகள் எக்காலத்திலும், எல்லாக் காலத்திலும் நடக்க வேண்டியவைதான்.

தர்ம சாஸ்திரங்களிலிருந்தே இன்னொரு ச்லோகமும் சொல்லப்படுகிறது. இதன்படி, கொஞ்சமாவது கலியில் வர்ணாச்ரம பேதங்கள் இருக்கிறவரையில், கொஞ்சமாவது வேத சப்தம் இருந்து கொண்டிருக்கிற வரையில் (யாவத் வர்ண விபாகோஸ்தி, யாவத் வேத ப்ரவர்த்ததே)2 அக்னியாதானமான யாக கர்மாவும், ஒரு கர்மாவும் இல்லாத ஸந்நியாஸமும் இருக்கலாம் என்று ஏற்படுகிறது. சில வகையான பசுபலி, சிராத்தத்தில் மாம்ஸம், ஸஹோதரனுக்காகப் புத்திரோத்பத்தி என்பவை மட்டும் கலியில் கூடாது.


1 ‘நிர்ணய ஸிந்து’ என்ற தர்ம சாஸ்திரத் தொகுப்பு நூலில் கலியுக விலக்குகள் குறித்த அத்யாயத்தின் மூன்றாம் பிரிவில் முதற் பகுதியில் காணும் மேற்கோள். வியாஸ ஸ்மிருதியில் உள்ளது.

2 தேவலர் எழுதிய தர்ம சாஸ்திர நூலிருந்து மேற்கோளாக ‘நிர்ணய ஸிந்து’வில் (முந்தைய அடிக்குறிப்புக் கூறும் இடத்திலேயே) காண்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is முறை வேறாயினும் முடிவு ஒன்றே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  யாகம் செய்பவர்கள்
Next