ஜீவஹிம்ஸை செய்யலாமா ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

யாகம் என்பது மந்த்ரம், தேவதை, ஹவிஸ் என்ற மூன்று ஸ்வரூபமாக உள்ளது. அவைகளுள் மந்த்ரம் என்பது வாயால் சொல்லப்பட வேண்டும். தேவதையை மனஸால் தியானம் செய்ய வேண்டும். ஹோமம் செய்வதற்கு முக்கியமாக வேண்டிய திரவியமே ஹவிஸ். அது காரியத்தில் ஆஹூதியாக அக்னியில் செலுத்தப்பட வேண்டியது. இவ்வாறு மனோ-வாக்-காயம் என்ற மூன்றும் ஒருமுகப்படுத்தப் பெறுகின்றன.

ஹவிஸ்ஸில் நெய் முக்கியம். வெறும் நெய்யே ஹோமம் செய்யப்படுவது மட்டுமின்றி, வேறு எதை ஹோமம் செய்தாலும், அதை நெய்யால் சுத்தி செய்தே ஆஹூதி பண்ண வேண்டும்.

பல யாகங்களில் ஆஹூதியாகப் பிராணிகளின் வபையைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது.

யக்ஞம் பண்ணுவது பாபமா? புண்ணியமா? மிச்ரமா (இரண்டும் கலந்ததா)? மத்வாசாரியர், ‘பசுவைக் கொன்று யாகம் பண்ணக்கூடாது; மாவால் பசுவின் வபையைப் போல் பண்ணி ஆஹூதி பண்ண வேண்டும்’ என்று கருணையால் ஏற்பாடு பண்ணினார். (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை; எந்தப் பிராணிக்கும் ஸம்ஸ்கிருதத்தில் பசு என்றே பெயர்).

வியாஸர் “பிரம்ம ஸூத்திரம்” செய்தார். அதில் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி வேதத்தின் ஞானகாண்டத்திலுள்ள உபநிஷத் சொல்வதன் தாத்பர்யத்தைச் சொல்லியிருக்கிறார். யக்ஞப் பிரயோகம் வேதத்தின் கர்மகாண்டமான பூர்வ மீமாம்ஸையில் இருக்கிறது. அதனுடைய பிரயோஜனம் வேதத்தின் ஞானகாண்டமான உத்தர மீமாம்ஸையில் இருக்கிறது. அதாவது யாகம் என்ற கர்மா செய்வதால் ஏற்படும் சித்த சுத்தியே ஒருவனை ஞானமார்க்கத்தில் சேர்க்கிறது.

“அசுத்தமிதி சேந்ந சப்தாத்” என்று அந்த பிரம்ம ஸூத்ரம் சொல்கிறது. ஆத்ம ஞான அங்கமாக ஸாக்ஷாத் வேதமே விதித்தது யக்ஞம். இது அசுத்தமான கர்மாவாக எப்படி ஆகும்? அசுத்தம் என்று நாம் தீர்மானம் பண்ணுவதும், நல்லது கெடுதல் என்று தீர்மானம் பண்ணுவதும், எதனாலே ? சாஸ்திரங்களைக் கொண்டு நாம் செய்கிறோம். வேதந்தான் பெரிய சாஸ்திரம்; வேதந்தான் பெரிய பிரமாணம். “யக்ஞம் ‘சப்தம்’ எனப்படும் வேத ப்ரமாணத்திலேயே ஏற்பட்டதாதலால் பாபம் இல்லை”, என்று வியாஸர் பிரம்ம ஸூத்ரத்தில் சொல்கிறார். சுத்தம் அசுத்தம் ஆகியவை வேதம் என்ற சப்தப் பிரமாணத்தால் அறியப்படுகின்றன. ‘கள் குடிக்காதே!’ என்று வேதம் சொன்னால், அது அசுத்தம் என்று தெரிகிறது. வேத அபிப்ராயம் யக்ஞம் அசுத்தம் என்பதாக இருந்தால் வியாஸர் அதை அங்கமாகச் சொல்லமாட்டார். மத்வாசாரியார் சொல்கிறபடி மாவினால் பசு பண்ணினாலும், அதில் பிராண பிரதிஷ்டை பண்ணுகிறோம். மந்திர பூர்வமாகப் பிராணப் பிரதிஷ்டை பண்ணிவிட்டால், அதுவும் உயிருள்ள பிராணிக்கு ஸமம்தானே? எனவே, அப்பொழுதும் அதற்கு ஹிம்ஸை உண்டாகிறது என்றுதானே ஆகும் ?….

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன்

 உயிர்செகுத் துண்ணாமை நன்று

என்று திருக்குறளில் ஒரு செய்யுள் இருக்கிறது. ஹவிஸை அக்கினியில் ஆஹூதி பண்ணி ஆயிரம் யக்ஞம் பண்ணுவதைக் காட்டிலும், ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமல் இருக்கிறது நல்லதென்பது இதன் அர்த்தம். இப்படிச் சொன்னதால், திருவள்ளுவர் யக்ஞத்தை நிந்திக்கிறார் என்று அர்த்தமாகாது.

தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? கொலைகாரனுக்குத் தூக்குத்தண்டனையை சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்படி, லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்கு பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை.

ஆயிரம் யக்ஞத்தைக் காட்டிலும், ஒரு பிராணியை ஹிம்ஸை பண்ணாமல் இருப்பது நல்லது என்பதால் யாகத்தைத் திருவள்ளுவர் நிந்தித்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். மற்ற யக்ஞங்கள் ஆயிரத்தைவிட, ஒரு அச்வமேத யாகம் செய்வது உயர்ந்தது என்று மனுவே ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். ஆயிரம் அச்வமேதத்தைவிட ஒரு ஸத்யம் உயர்ந்தது என்றும் மனு சொல்கிறார். ஒன்றைவிட ஒன்று உசத்தி என்றால், எல்லாமே உசத்திதான்! யக்ஞம் பாபமாக இருந்தால், ஆயிரம் பாபத்தைக் காட்டிலும் ஒரு புண்ணியம் உத்கிருஷ்டமானது [உயர்வானது] என்று சொல்லுவார்களா? 100 ஏகாதசி உபவாஸத்தைவிட ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டமானது என்று சொல்லலாம். 100 கசாப்புக் கடைகள் வைப்பதைக் காட்டிலும், ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டம் என்று சொல்லுவார்களா? புண்ணிய கர்மாக்களுள்தான் இதைவிட இது உத்கிருஷ்டமானது என்று சொல்லுவார்கள்.

சாந்தோக்யோபநிஷத்தின் முடிவில், அஹிம்ஸையைச் சிறப்பிக்கும்போதுகூட, “அன்யத்ர தீர்த்தேப்ய:” என்ற விதிவிலக்குச் சொல்லியிருக்கிறது. அதாவது, வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களைத் தவிர, மற்ற இடங்களில் அஹிம்ஸையை அநுஷ்டிக்க வேண்டும் என்று அர்த்தம்.

யக்ஞம், யுத்தம், நீதிப்படி தண்டனை தருவது முதலிய இடங்களில் ஹிம்ஸை என்று நினைக்கக் கூடாது.

யக்ஞத்தைவிட அஹிம்ஸை சிரேஷ்டமென்றால், “யக்ஞமும் சிரேஷ்டந்தான்; அதைவிட அஹிம்ஸை சிரேஷ்டம்” என்றுதான் அர்த்தமாகும். ஆயிரம் யக்ஞங்கள் மிகவும் உயர்வானவை; அவைகளிலும் அஹிம்ஸை உயர்வானது என்ற அர்த்தத்தில்தான் அந்தக் குறள் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் இந்தக் குறள் துறவற இயலில் சொல்லப்பட்டிருகிறது. ‘கிருஹஸ்தன் ஆயிரம் யக்ஞங்களைச் செய்வதைக் காட்டிலும், ஸந்நியாஸி ஒரு பிராணிக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பது நல்லது’ என்ற அபிப்ராயத்தில் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறார். சாஸ்திரப்படியும் துறவிக்கு யக்ஞம் செய்யும் அதிகராம் கிடையாது; அவனுக்கே பூர்ண அஹிம்ஸை விதித்திருக்கிறது.

யாகங்களில் பலவிதம் உண்டு. அதைப்பற்றிப் பின்னால் வேதாங்கங்களில் ஒன்றான “கல்ப”த்தைப் பற்றியும், கிருஹஸ்தாச்ரமம் பற்றியும் சொல்லும்போது சொல்கிறேன். இங்கே சொல்ல வந்தது, எல்லா யாகத்திலும் பசுபலி செய்யப்படவில்லை என்பதே. ஆஜ்யம் என்று நெய்யை மட்டும் ஹோமம் செய்வது, ஹவிஷ்யான்னத்தை (நெய்ச் சாதத்தை) ஹோமம் செய்வது, ‘சரு’ என்ற நன்றாகப் பக்குவமான ( cooked ) தானியத்தை ஹோமம் செய்வது, ‘புரோடாசம்’ என்பதான அடைமாதிரியான ( baked ) தானிய பக்ஷ்யங்களை ஹோமம் செய்வது, அக்னிஹோத்ரம் என்பதில் பாலை ஹோமம் செய்வது, ஒளபாஸனத்தில் அக்ஷதையை ஹோமம் செய்வது, ஸமிதா தானத்தில் சுள்ளியை மட்டும் ஹோமம் செய்வது என்றிப்படிப் பல இருக்கின்றன. பசுபலி உள்ளதிலும், யக்ஞப் பிரஸாதமாக ஹோமம் செய்து மிஞ்சியதில் ரொம்பக் கொஞ்ச அளவே சாப்பிட வேண்டும்.

ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ‘நிரூட பசுபந்தம் ‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.

‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.

மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்’ என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.

இப்போது ஒரு மருந்தைப் பரீக்ஷிப்பது என்பதற்காக லாபரட்டரிகளில் எத்தனை ஜீவன்களைக் கொல்கிறார்கள்? இப்படியே ஒரு பெரிய க்ஷேமத்துக்காகச் சின்ன ஹானியையும் உண்டாக்கலாம் என்றே யக்ஞங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாஸ்தவத்தில் ஹானியும் இல்லை; அந்தப் பசு ஸத்கதி பெறுகிறது என்பதே நம்பிக்கை.

இன்னொரு புரளி, ‘ஸோம யாகம்’ என்று சொல்லிக்கொண்டு ஸோமரஸம் குடித்தது மதுபானம் மாதிரிதான்’ என்பது. ஸோமரஸம் போதைப் பொருள் அல்லவே அல்ல. அது intoxicating அல்ல. “அர்த்த வாதம்” என்கிற முறையில், மிகைப்படப் பேசும்போது, வேதத்தில் ஓரிடத்தில், இந்திரன் ஸோமரஸத்தால் மதமடைந்து சத்ருவதம் பண்ணினான் என்று வருவதை வைத்துக்கொண்டு இப்படிக் குயுத்தி பண்ணுகிறார்கள். தேவ சரீர தத்வமே மநுஷ்ய தர்மங்களுக்கு மாறானது. அது மட்டுமின்றி, ரித்விக்குகள் ஏதோ பாட்டில் பாட்டிலாகவோ மொந்தை மொந்தையாகவோ குடித்த மாதிரிப் பேசுவது அடியோடு விஷயம் தெரியாத பேச்சு. ஒரு யாகத்தில், உரல் மாதிரியான ரூபத்தில் ரொம்பச் சின்னதாக உள்ள க்ரஹம் என்ற ஒரு பாத்திரத்தில், இத்தனை ஸோமரஸம் வடித்து ஹோமம் செய்ய வேண்டும், அதில் மீறுவதை ‘ஹூத சேஷம்’ என்று சாப்பிட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இம்மாதிரி ஒரு யாகத்தில் துளிதுளியாக செய்கிற ஸோம பானத்தையெல்லாம் சேர்த்தால்கூட ஒரு அவுன்ஸுக்குமேல் வராது. இப்படிச் சாப்பிட்டு எவரும் மயக்க மடைந்தததும் கிடையாது. ஸோமரஸம் என்பது அப்படியொன்றும் ருசியாக இருக்கவும் இல்லை என்கிறார்கள் *.

ஸோம பானத்தை அந்தக் காலத்துக் காபி என்று சிலர் வியாக்யானம் பண்ணிவிட்டார்கள்! ஸோம ரஸம் உண்டாக்குகிற ஸந்தோஷத்தைப் பற்றி வேத மந்திரங்கள் இருப்பதால், இப்படி தப்பர்த்தம் பண்ணிவிட்டார்கள். காபி சித்த விருத்தியைக் கெடுக்கிற வஸ்து. ஸோம ரஸம் சித்த சுத்தியை உண்டாக்குகிற வஸ்து. இரண்டையும் ஒன்று என்பது கொஞ்சங்கூட பொருந்தாது. அந்தக் காலத்தில் ஸம்ருத்தியாகக் கிடைத்து வந்த ஸோமலதை இப்போது கிடைப்பதே ரொம்பவும் அபூர்வமாகிக் கொண்டு வருகிறது. வேத தர்மங்கள், ஆசாரங்கள் எல்லாம் நசித்து வருவதற்கு ஏற்றாற்போல், ஸோம யாகங்களுக்கு ஜீவாதாரமாக இருக்கப்பட்ட கொடியும் க்ஷீணித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஸமீபத்தில் கொல்லங்கோடு ராஜா, ஸோமயாகம் எங்கே நடந்தாலும் அதற்கு ஸோமலதை கொடுப்பதென்று வைத்துக் கொண்டிருந்தார். காபிக்கும் இந்த ஸோமலதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.


* இப்பகுதியில் உள்ள விஷயங்களில் சில ஸ்ரீ அக்னிஹோத்ரம் தாதாசாரியரவர்களின் விளக்கத்தில் வெளியானவை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேள்வியின் தாத்பரியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  முறை வேறாயினும் முடிவு ஒன்றே
Next