வியாஸர் தந்த செல்வம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தில் இருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பதற்காக, வேதங்களை வகுத்துக் கொடுத்த அதே வேதவியாஸர் பதினெட்டுப் புராணங்களை உபகரித்தார். பதினென் புராணங்களை அஷ்டாதச புராணம் என்பார்கள்.

வியாஸரைத்தான் நான் முதல் ‘ஜர்னலிஸ்ட்’ [பத்திரிகை எழுத்தாளர்], இன்றைய ஜர்னலிஸ்ட்களுக்கெல்லாம் ‘ஐடிய’ லாக [முன்னுதாரணமாக] இருப்பவர் என்று நினைக்கிற வழக்கம். கதை, சரித்திரம், பூகோளம், தத்வம், தர்மம், கலைகள் எல்லாவற்றையும் புத்திமான்களுக்கு மட்டுமில்லாமல் பாமர ஜனங்களுக்கும் ஸ்வாரஸ்யமாகத் தருவதற்கே அவர் புராணங்களை எழுதிப் பெரிய செல்வமாகக் கொடுத்திருக்கிறார். இதைத்தானே ஜர்னலிஸ்ட்களும் செய்கிறார்கள்? ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஸ்வாரஸ்யம், ஜன ரஞ்ஜகம் என்பதோடு நிறுத்திக் கொண்டு விடுகிறார்கள். வியாஸர் பாமர ஜனங்களையும் தர்மத்தில் கொண்டு சேர்க்கவே, பரமாத்மாவிடம் கொண்டுபோய் விடுவதற்கே ஸ்வாரஸ்யத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டார். அந்த ஸ்வாரஸ்யத்தையே ‘கோல்’ (லக்ஷ்யம்) என்று வைத்துக் கொண்டால் பத்திரிகைகள் தர்ம விருத்தமான (தர்மத்துக்கு முரணான) விஷயங்களையும் பிரசாரம் செய்யும்படி ஆகிறது. வியாஸரை முன்னோடியாக வைத்துக் கொண்டால் பத்திரிகைக்காரர்களின் எழுத்து சுத்தமாகி விடும். லோகத்துக்கு ஒரு பெரிய நல்லது பிறக்கும்.

நாலு லக்ஷம் கிரந்தங்களில் வியாஸர் இந்த 18 புராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்கொண்ட ச்லோகம். இந்த நாலு லக்ஷத்தில் கால்வாசியை, அதாவது ஒரு லக்ஷம் கிரந்தத்தை ‘ஸ்காந்த புராண’மே எடுத்துக் கொண்டு விடுகிறது. உலகத்தின் மிகப் பெரிய புஸ்தகம் அதுவாகத்தான் இருக்கும். மீதி 17 புராணங்களுமாக மூன்று லக்ஷம் கிரந்தம். இது தவிர லக்ஷம் கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாஸர் உபகரித்திருக்கிறார். (‘புராணம்’ என்கிற பதினெட்டில் சேராமல் ‘இதிஹாஸம்’ என்று இருப்பவை பாரதமும், ராமாயணமும்.)

ஒவ்வொரு தேவதா மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும். சைவமானவை, வைஷ்ணவமானவை, சாக்தமானவை என்றிப்படிப் பல தேவதைகளைக் குறித்துப் புராணங்கள் இருக்கின்றன.

பிரம்ம புராணம் (பிராம்மம்) , பத்ம புராணம் (பாத்மம்) , விஷ்ணு புராணம் (வைஷ்ணவம்) , சிவ புராணம் (சைவம்) , பாகவதம், நாரத புராணம் (நாரதீயம்) , மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம் (ஆக்னேயம்) , பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராஹ புராணம் (வாராஹம்) , ஸ்காந்த மஹா புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் (கௌர்மம்), மத்ஸ்ய புராணம் (மாத்ஸ்யம்) , கருட புராணம் (காருடம்), பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.

இந்தப் பதினெட்டில் பத்து சிவபரமானது என்று சொல்கிறார்கள்.

இப்போது நமக்குப் பிரஸித்தமாகத் தெரிகிற அநேக விருத்தாந்தங்கள் இவற்றிலேதான் வருகின்றன. சரித்திரம், கதை, தத்துவம் எல்லாம் இவற்றிலே இருக்கின்றன.

விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஆசார்யாள் விஷ்ணு புராணத்திலிருந்து நிறைய மேற்கோள் காட்டுகிறார். வியாஸ மஹரிஷியின் பிதாவான பராசரர் பண்ணின புராணம் அது. ஸ்ரீ ராமாநுஜரின் ஸித்தாந்தத்தில் விஷ்ணு புராணம் ஒரு முக்யமான அதாரிடி [ஆதாரநூல்] .

ஸ்ரீ ராமநுஜருக்கு முந்தி விசிஷ்டாத்வைதத்தின் மூல புருஷர்களில் ஒருவராக இருந்தவர் ஆளவந்தார். அவரிடம் ராமாநுஜர் போய்ச் சேருவதற்குள்ளேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. ராமாநுஜரிடம் முக்யமாக மூன்று காரியங்களை ஒப்புவிக்க வேண்டுமென்று ஆளவந்தார் நினைத்தார். அதனால் பிராணன் வெளியே போன பிறகும் அவருடைய சரீரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தனவாம். ஒவ்வொரு விரலும் இன்ன ஆக்ஞையைத் தெரிவிக்கிறது என்று புரிந்து கொண்டு ராமாநுஜர் சொன்னவுடன், உயிரில்லாத அந்த உடம்பின் மடங்கின விரல்கள் ஒவ்வொன்றாக நிமிர்ந்தனவாம்! அந்த மூன்று ஆக்ஞைகளில் ஒன்று, பிரம்ம ஸூத்ரத்திற்கு விசிஷ்டாத்வைதப்படி பாஷ்யம் எழுதவேண்டும் என்பது. இரண்டாவது, திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பண்ண வேண்டும் என்பது. மூன்றாவதாக வியாஸர், பராசரர் ஆகிய இருவரின் கீர்த்தியும் உலகில் இருக்கும்படியாகப் பண்ணுவது. விஷ்ணு புராண கர்த்தா என்பதால் இப்படிப் பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என்று பெயர் வைத்தார். பராசர பட்டர் பிற்காலத்தில் வைஷ்ணவ ஆசாரியர்களில் முக்யமான ஒருவரானார்.

‘விஷ்ணு புராணம்’ பண்ணியவர் பராசரர் என்றாலும், பதினெட்டுப் புராணங்களையும் நாம் பார்க்கிற ரூபத்தில் ஸரிபண்ணி எழுதிக் கொடுத்தது வியாஸர்தான். வேதங்களை அவர்தான் விபாகம் பண்ணினார் [வகுத்துக் கொடுத்தார்] என்ற விஷயத்தை முன்பே சொல்லியிருக்கிறேன். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதியச் செய்வதற்காக அவரே புராணங்களையும் அநுக்ரஹித்தார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்யயனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு வேத தத்வார்த்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாஸர் எழுதினார் என்பதே அந்தக் காரணம்.

விஷ்ணு புராணத்தை வியாஸரின் தகப்பனார் மூல ரூபத்தில் சொன்னார் என்றால், பாகவதத்தை வியாஸரின் புத்திரரான சுகாசாரியார் பரீக்ஷித்துக்கு உபதேசிக்கிறார்.

பதினெட்டுப் புராணங்களில் “பாகவதம்” என்று சொல்லப்படுவது, கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை முக்யமாக வைத்து மற்ற அவதாரங்களின் கதைகளையும் சொல்கிற விஷ்ணு பாகவதமா, அல்லது அம்பாளின் லீலைகளைச் சொல்கிற தேவீ பாகவதமா என்று இரண்டு விதமான அபிப்பிராயங்கள் உண்டு. நமக்கு இரண்டும் வேண்டும். ‘விஷ்ணு பாகவதம்’, ‘தேவீ பாகவதம்’ இரண்டும் உத்தமமான கிரந்தங்களாக இருக்கின்றன. சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபாசாரியார் போன்றவர்களின் ஸித்தாந்தங்களில் விஷ்ணு பாகவதம் வேதத்துக்கு ஸமதையான அந்தஸ்துப் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை ஆட்சேபிக்கிற அத்வைதிகளும் அதைத் தலைக்கு மேல் கொண்டாடுகிறார்கள்.

சிவபுராணம் வேறே, ஸ்காந்த புராணம் வேறே. ஸ்காந்தத்தில் முக்கால்வாசி சிவனைப் பற்றிய கதைகள், தத்வங்கள் தான். ஆனாலும் ஸ்கந்தனான முருகனைப் பற்றிய விருத்தாந்தம் இதிலே வருவதால் இதற்கு ‘ஸ்காந்தம்’ என்று பெயர் வந்தது. இதிலே ஸுப்ரமண்யரின் விஷயமாக இருப்பதையே முக்யமாக வைத்துக் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழிலே ‘கந்த புராணம்’ என்று எழுதியிருக்கிறார்.

மார்க்கண்டேய புராணத்தில் தான் ‘துர்கா ஸப்த சதீ’ என்கிற துர்க்காம்பாளின் விருத்தாந்தம் வருகிறது. [‘தேவீ மாஹாத்மியம்’ என்பதும் அதுவே.] ‘சண்டீ ஹோமம்’- சத, சண்டி, ஸஹஸ்ர சண்டி – என்று பண்ணுவெதல்லாம் இதில் இருக்கிற எழுநூறு மந்திரங்களைக் கொண்டுதான். இதிலே ஒவ்வொரு ச்லோகமும் ஒரு மந்திரமாக மதிக்கப் படுவதால் அதைச் சொல்லி ஹோமம் செய்யப்படுகிறது.

பவிஷ்யம் என்றால் எதிர்காலம் (future) என்று அர்த்தம். ‘பவிஷ்ய புராண’த்தில் இப்போது நாம் பார்க்கிற கலியின் கிருத்ரிமம் உள்பட அநேக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மௌரியர்கள் போன்ற பழைய ராஜாக்களை மட்டுமின்றி, வெள்ளைக்காரர்கள் இங்கே வந்தது உள்படப் புராணத்தில் இருக்கிறதென்றால், இக்காலத்தவர்கள் “இதெல்லாம் வியாஸர் கலியுக ஆரம்பித்தில் எழுதினதே இல்லை. ஸமீபத்தில்தான் யாரோ எழுதி அவர் பேரைப் போட்டு விட்டார்கள்” என்கிறார்கள். இடைச் செருகல் எங்கேயாவது கொஞ்சம் இருக்கச் செய்யலாம்தான். அதற்காக ஒரேயடியாக “எல்லாம் புதுசுதான்” என்று தள்ளிவிட முடியாது. யோகசக்தி வாய்ந்தவர்கள் எந்தக் காலத்தையும் காண முடியும்; இருந்த இடத்திலே இருந்து கொண்டே எந்தத் தேசத்தில் நடப்பதையும் சொல்லி முடியும். இம்மாதிரியான சக்தி பெற்ற மஹாபுருஷர்களின் பெயரில் யார் வேண்டுமானாலும் கிரந்தம் பண்ணிப் பிரசாரப் படுத்துவது என்பது ஸுலபமான காரியமில்லை.

கருட புராணத்தில் பித்ருலோகம், பித்ரு காரியம் முதலியவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. அதனால் சிராத்த கர்மாவில் இந்தப் புராணத்தைப் படிக்கிற வழக்கம் இருக்கிறது.

பிரம்மாண்ட புராணத்தில்தான் “லலிதோபாக்யானம்” [லலிதாம்பிகையின் சரிதம்], லலிதா ஸஹஸ்ரநாமம் முதலானவை வருகின்றன. பதினெட்டு புராணங்களையும் சொல்லி முடிக்கிறபோது ராஜராஜேச்வரி பட்டாபிஷேகம் வரும் இந்த புராணத்தோடுதான் பூர்த்தி பண்ணுவதாக ஸம்பிரதாயம் இருக்கிறது என்பதைப் பற்றி தேவீ உபாஸகர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.

இப்போது ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாம் சொல்லும் அஷ்டோத்தரம், ஸஹஸ்ரநாமம், கவசம் முதலானவைகள் பெரும்பாலும் புராணங்களில் வருகிறவைதான். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சிவ ஸஹஸ்ரநாமம் இரண்டுமே மஹாபாரதத்தில் வருபவை.

அநேக ஸ்தோத்திரங்களும் இவற்றிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. “ஆதித்ய ஹ்ருதயம்” ஸ்ரீமத் ராமாயணத்தில் வருவது. “ப்ரதோஷ ஸ்தோத்ரம்” ஸ்காந்தத்தில் வருகிறது. இப்படி அநேகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கற்பனையேயானாலும் கருத்துள்ளதே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  உப-புராணங்களும் பிற புராணங்களும்
Next