வேதத்தின் பூதக் கண்ணாடி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புராணம் என்பது வேதத்துக்குப் பூதக் கண்ணாடி. சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசுப் பண்ணி காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்ன சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம்.

ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனஸில் பதியும்.

‘ஸத்யம் வத’ (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. ‘தர்மம் சர’ (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்ம புத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. ‘மாத்ரு தேவோ பவ’, ‘பித்ரு தேவோ பவ’ (அன்னை தந்தையை தெய்வமாகக்கொள்) என்ற வேத வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் – கட்டளையிட்டுள்ளவற்றை – புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.

இவர்கள் எல்லாருக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைய வந்திருக்கின்றன. அநேக தப்பு தண்டாக்களைச் செய்கிற நம்மைவிட இந்த உத்தமமான புராண பாத்திரங்கள்தான் ஜாஸ்தி கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ரொம்பவும் பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய சரித்திரத்தைப் படிக்கும்போது, “தர்மங்களை அநுஸரிப்பதனால் கஷ்டந்தானே ஏற்படுகிறது? அதனால் அநுஸரிக்க வேண்டாமே!” என்று தோன்றுவதேயில்லை. அத்தனை கஷ்டத்திலும், சோதனையிலும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் பாறாங்கல் மாதிரி தர்மத்திலேயே நிற்பதால் பெற்றிருந்த மனத் தெளிவுதான் நம் மனஸில் பதிகிறது. அதோடுகூட அந்த உத்தமர்கள் படும் கஷ்டங்களைக் கேட்கும்பொழுது நம் உள்ளம் உருகுவதாலேயே நம்முடைய அழுக்குகளையும் அலம்பிவிட்டாற்போல் இருக்கிறது. முடிவிலே அவர்களுக்கு ஏற்படுகிற பெரிய வெற்றியும் கீர்த்தியும் நமக்கு அந்த தர்மங்களில் கெட்டியான பிடிமானத்தை உண்டாக்கித் தருகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சில கதைகளும் வாதங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  புராணமும், சரித்திரமும்
Next