மரக்கறி உணவு உதவுமா தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றால் ஆன உணவு நம் நாட்டில் பொதுவாக மரக்கறி உணவு என்றும், தென்னாட்டில் சைவ

மரக்கறி உணவு உதவுமா

தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றால் ஆன உணவு நம் நாட்டில் பொதுவாக மரக்கறி உணவு என்றும், தென்னாட்டில் சைவ உணவு எனவும், ஆங்கிலத்தில் வெஜிடேரியன் மீல் ( vegetarian meal) எனவும் கூறப்படும். தானியங்களுடனோ தனித்தோ புலால் உண்பதை மாமிச உணவு, அசைவ உணவு எனவும், ஆங்கிலத்தில் Non - vegetarian food என்றும் கூறுவர். இப்படி நம் நாட்டில் பல பகுதிகளிலும் இருவகை உணவுப் பழக்கங்கள் வழக்கிலுள்ளன என்பது கண்கூடு. இந்தியாவிற்கு அப்பாலுள்ள ஆசியாகண்டத்தின் பெரும் பகுதி நாடுகளிலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள நாடுகளிலும் புலால் உணவுதான் மிகுதி என்பது யாவரும் அறிந்ததே.

மானிடப் பிறவியின்றி விலங்கு இனங்களிலும் புலால் உண்ணும் இனங்களே அதிகம். ஆயினும், பசு, எருது, குதிரை, யானை போன்ற சில விலங்குகள் புலால் உண்பதில்லை.

எவ்வகையான உணவு மானிட உடலுக்கு ஏற்றது என்பதைப் பற்றி உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடத்திய அறிஞர் பலர் பல வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மரக்கறி வகைகளையும், தானியங்களையும், பால் பண்டங்களையும், கனி வகைகளையும் கொண்ட உணவுப் பழக்கம், மனிதனின் உடல்வளர்ச்சி, வலிமை, ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உகந்தது எனப் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அண்மையில் 'ஸ்டேட்ஸ்மென்' ( State sman) நாள் வெளியீட்டில் (20-5-73) வெளியான திரு ரொனால்ட் எல்லிஸ் ( Ronald Ellis) என்ற அறிஞரின் 'மரக்கறி உணவுப் பழக்கத்தின் வளர்ச்சி' ( G row th of vegetarianism) என்ற கட்டுரையின் சாரத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் என்ற நோக்குடன் கீழே அந்த ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை நேயர்களுக்கு அளிக்கிறோம்:- ''பிளேடோ, ஸாக்ரடிஸ், அரிஸ்டாட்ல், ரூஸோ, கோல்ட்ஸ்மீத், வாக்னர், தோரோ, டால்ஸ்டாய், காந்தி, பர்னார்ட்ஷா ஆகியோரிடையே காணப்பட்ட பொதுவான அம்சம் யாது? மார்ஷல் வைகௌண்ட் மாண்ட்கமரி, ஹாரி வீட்க்ராஃப்ட், பிரிகேடியர் ப்ரோஃபி, ட்விக்கி, அந்தோணிகுவின், மால்காம் மக்கெரிட்ஜ், பீடர் முர்ரே ஆகிய இராணுவப் பெருந்தகைகள் எவ்வகையில் ஒருவரை ஒருவர் ஒத்திருந்தனர்? இவர்கள் யாவரும் மரக்கறி உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியவர்கள் என்பது மேலே காணப்படும் இரு வினாக்களுக்குத் தக்க விடையாகும். இப்போது நம்மில் பெரும்பான்மையினர் அவர்களைப் பின்பற்ற வேண்டிய தறுவாயில் உள்ளோம். ஏன்?

''மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, லண்டன் மாநகரில், சந்தைகளில் இறைச்சியின் விலை மிகவும் அதிகமாகி வருகிறது. மீன் வகைகள், கோழிகளின் விலையோ மேலும் அதிகம். பழங்களின் விலையும், காய்கறிகளின் விலையும் குறைவு எனச் செப்புவதற்கில்லையாயினும், இறைச்சி வகைகளின் விளையளவுக்கு இவற்றின் விலை உயரவில்லை. பிற பிறவிகளைக் கொன்று அவற்றை உண்பதைப் பலர் வெறுப்பது மரக்கறி உணவு வளர்ச்சிக்கு மற்றொரு காரணம். மூன்றாவதாக, இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய வலிமை தரும் காய்கறிகள், கனிகள், தானியங்களின் மாவுகள் போன்றவற்றில் மக்களுக்கு ஏற்படும் நாட்டம் ஒரு காரணமாகும்.

''இறைச்சி உண்பவரை காட்டிலும், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றைப் புசிப்பவர் எவ்விதத்திலும் குறைவானவர்களாகத் தெரியவில்லை. பிற உணவு வகைகளில் இல்லாத சில தனிப்பட்ட சத்துக்கள் இறைச்சி உணவில் உள்ளன என்ற தவறான எண்ணத்தை, காய்கறி உணவு தின்போர் உதறித் தள்ளிவிட்டனர். சாதாரணப் பாலடைக் கட்டியிலுள்ள புரதச்சத்து ( protein) மாட்டிறைச்சி, ஏன், முட்டையிலுள்ள சத்தைக் காட்டிலும் அதிகமே. பால், பால்பொருள்கள், விதைகள் ( nuts) , கடலை, அவரை போன்ற புதிய பசுமைக் காய்கறிகள், உருளைகிழங்கு ,அரிசி, கோதுமை ரொட்டி, கனிகள், இவற்றைக்கொண்ட உணவு மனித உடலின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் தேவையான யாவற்றையும் கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை.

''பிரிட்டனில் ஒரு மாது தன் குடும்பத்தாரை 'இறைச்சி உண்ணாதார்'எனக் குறிப்பிடுவதில் பேரின்பமடைகிறாள். பிறர் தன்னை, 'என்ன, உங்களுக்கு இப்படிப் புலாலில்லாத உணவு சுவையற்றதாகவும் வெறுப்பூடடுவதாகவும் இல்லையா?''என அடிக்கடி கேட்பதைத் தாம் பொருட்படுத்துவதில்லை என்றும், அலுத்துக் கொள்வதில்லை என்றும் கூறுகிறார் அந்த மாது.

''கிடைக்கக்கூடிய காய்கறி வகைகளை, இறைச்சி வகைகளுடன் ஒப்பிட்டால் காய்கறிவகைகளை மிகையாக உள்ளதனால் அலுப்பு ஏற்படக் காரணமில்லை. புலால் கொடுக்கும் விலங்குகளை மேய்ப்பதற்கும், அவற்றுக்கான தீனிக்கு உரிய தானியங்கள், புல் முதலியவற்றைத் தயாரிக்கவும் தேவைப்படும் நிலப்பரப்பைக் காட்டிலும், மரக்கறி உணவுப் பழக்கமுள்ளவர்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறி, கனிவகைகளை உற்பத்தி செய்வதற்குக் குறைவான நிலமே தேவை.

''பிரிட்டன் தேசத்தில் மரக்கறி உணவு உண்ணும் பழக்கம் 1850-ஆம் ஆண்டிலிருந்தே துவங்கப்பட்டுள்ளது. தற்காலம் சுமார் 1,00,000 (ஒரு லக்ஷம்) மக்கள் புலால் கலவாத உணவு உண்கின்றனர். மரக்கறி உணவுக் கழகத்தினரில் ( Vegan Society) சிலர் பிற பிராணிகளைக் கொல்லாமல் மனிதன் உணவு கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் பால், வெண்ணெய், தேன் போன்றவற்றைக்கூட உண்பதில்லை.

''ஆனாலும் இத்தகைய உணவுப் பழக்கமுள்ளவரில் ( vegetarian) பெரும்பாலோர், சில மருத்துவர்களைப் போலவே மரக்கறி உணவு சரியான வலிமையைக் கொடுக்காதோ என்று ஐயப்படுகின்றனர்.''

மேற்கண்டவாறு புலால் உணவு பழக்கங்களையே அதிக மக்கள் பின்பற்றி வரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த திரு ரொனால்ட் எல்லிஸ் தைரியத்துடனும் வன்மையுடனும் எழுதியது போற்றத்தக்கது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டு அறிவுரை நூல்கள், இன்றும் உண்மையாகத் தோன்றும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்:-

லோகே வ்யவாயாமிஷமத்யஸேவா

நித்யாஸ்து ஜந்தோர் ந U தத்ர சோதநாமி

வ்யவஸ்திதிஸ் தேஷ§ விவாஹயஜ்ஞ-

ஸுரார்ச்சநாதௌ து நிவ்ருத்திரிஷ்டாமிமி

இதன் பொருள்:- ''உலகில் பெண்ணாசை, புலால் உண்பதில் ஆசை, மதுபானத்தில் ஆசை இவை நிரந்தரமானவை. எனவே இவற்றிலுள்ள ஆசையைக் கட்டுப்படுத்தவே திருமணம் (எல்லா இனத்தோரிடமும்) , இறைச்சி மது இவற்றைக் கடவுளுக்கு அர்ப்பித்து உண்ணுதல் (சில இனங்களிடமும்) பழக்கம்.''இப்படிச் சில பண்பாடுகள் தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றன. சாத்திரங்கள் மேற்கண்டபடி செப்பிடினும், மேற்கண்ட இயற்கையான உணர்ச்சிகளை அடக்கி வாழ்வதே உயர்வாழ்வின் மேம்பாடுள்ள தத்துவம். நம் பாரதநாட்டிலும், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகளில் புலாலைத் தீண்டாத சில மக்கள் இனங்கள் இன்றும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

திரு ரொனால்ட் எல்லிஸ் தமது நாட்டில் மரக்கறி உணவுப் பழக்கத்தின் வளர்ச்சியையும், பொதுவாக அத்தகைய உணவின் நன்மைகளையும், பொருளாதார லாபத்தையும் தமது கட்டுரையில் விவரமாக எடுத்துக்காட்டியிருப்பினும் இங்கு நம் நாட்டுப் பண்டை அறிவுரைகளிலுள்ள சில கருத்துக்களையும், மற்றும் சில உலகப் பேரறிஞர்கள் முதலியோரின் கருத்துரைகளையும் நோக்குவோம்.

உலகம் போற்றும் உயர்ந்த வகைத் தத்துவ நூல்களில் ஒன்றாகக் கணக்கிடப்படும் 'பகவத்கீதை'என்னும், பாரதப் போர்களத்தில், பாண்டவன் அர்ஜுனனுக்குத் தேர்த்தட்டினின்றும் கண்ணபிரான் செப்பிய தேன்மொழிகளின் தொகுப்பில், மானிடன் உண்ணக்கூடிய உணவு வகைகளை மூன்று வகைகளாகப் பிரித்து கூறப்பட்டள்ளது.

ஆயுள் நீடிப்பு, வலிமை பெறல், நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவைக்கேற்ற உணவு, திரவமாகவும் (சாறு நிறைந்ததாகவும்) , ஈரப்பசையுள்ளதாகவும், குளிர்ச்சியுள்ளதாகவும், புலால் சேராததாகவும், சுத்தமுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வகை உணவு உயர் நோக்கமுள்ள ஸாத்துவிகர்கள் உண்ணும் உணவாம். (பகவத்கீதை அ.17, ஸ்லோகம் 8.) நடுநிலைக் குணமுடையவர் (ராஜஸர்) உண்ணும் உணவு துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரமான, உலர்ந்த, மிகச் சூடான உணவுப் பொருள்களாம். இவை HE, வலி, துயரம் ஆகியவற்றைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தவை. (பகவத்கீதை, அத்தியாயம்17, ஸ்லோகம் 9.) பழமையான உணவு, உலர்ந்த உணவு, பிறர் உண்ட உணவின் மிகுதிப் பகுதிகள், அசுத்தமான உணவு, மதுபான வகைகள், மீன், இறைச்சி போன்றவை கீழ்ப்பட்ட எண்ணங்களையும், நற்குணங்களின்மையையும் படைத்த தாமஸர் எனப்படும் பண்பாடு குறைவுபட்ட மக்களின் உணவு வகைகளாம். (பகவத்கீதை, அ.17, ஸ்லோகம் 10.)

நம் நாட்டின் சட்டதிட்டங்களைப் பண்டைக் காலத்தில் வகுத்து வைத்த மனு கூறுவதாவது

''இரத்தத்தின் ஆக்கசக்தியிலிருந்து உண்டான இறைச்சியைப் பற்றி எண்ணிப் பார்க்கில், அவ்விறைச்சியை உண்ணும்பொருட்டு விலங்குகளைத் தேடிச் செல்வது நாகரிகமற்ற செயலாகும். எனவேதான் நல்லோர் இறைவனுக்கே என அர்ப்பணம் செய்யப்பட்ட இறைச்சியையும் உண்ணார். புலாலுண்ணாதிருப்போர் உலகில் அரிதாகி வருவாரே ஆயினும் அத்தகையோர் நோய்வாய்ப்படார்.''

தற்காலக் கல்லூரிப் பட்டதாரிகளும், நம் பண்டைப் பண்பாடு, நூல்கள் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவரும், ''மனுவிற்கு விஞ்ஞானம் தெரியுமா?அவர் எதைக் கண்டார்!''எனக் கேலி செய்யலாம். மனு மனித இனத்தின் இயற்கை இயல்புகளை விளக்கும் எளிதான ஸமஸ்க்ருத ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-

ந மாம்ஸபக்ஷணே தோஷோ ந மத்யே ந ச மைதுநே I

ப்ருவ்ருத்திரேஷா பூதாநாம் நிவ்ருத்திஸ் து மஹாபலா II

இதன் பொருள்:- புலாலுண்ணல், போதை தரும் கள் போன்ற மதுவகைகளைக் குடித்தல், பெண்டிருடன் கூடல் ஆகியவை மானிடப் பிறவியின் இயற்கையே. ஆயினும் இவற்றை விட்டுவிடுதல் மிகுதியான நன்மையைப் பயக்கும்.

பகவத்கீதையும் மனுவின் தர்மசாஸ்த்திர நூலும் மிகப் பழமையானவை. நாம் வாழும் காலமோ வெண்மதியில் மனிதன் நடமாடும் காலமாயிற்றே அண்மையில் வாழ்ந்தவர்கள், தற்காலப் பேரறிஞர்கள் அனுபவசாலிகள் ஆகியோரின் சில கருத்துரைகளுக்காவது செவி சாய்ப்போமா?

1. தொண்ணூற்றுநான்கு ஆண்டுகள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்த பர்னாட் ஷா அவர்கள் கூறுவதாவது:-''நான் 25 ஆண்டுக்காலம் என் இனத்தையே தின்பவனாக ( Cannibal ) வாழ்ந்தேன். (புலாலுண்டு வந்தேன்) . ஷெல்லி என்னும் மகாகவியே முதல் முதலாக எனது உணவுப் பழக்கத்தின் நாகரிகமற்ற தன்மையை எனக்கு உணர்த்தியவர்.''

2. ஸோவியத் ருஷ்யாவில் 117 ஆண்டுக்காலம் வலிமையுடனும், கூர்மையான நினைவுடனும், கடின உழைப்புடனும் வாழ்ந்து வந்த பொலோவா ( Pollova ) பிராந்தியத்தைச் சேர்ந்த ஸுப்தோர் புழ்யிர்கோவா ( Subdor Puzyrkova) என்ற அம்மையார் தம் வாழ்நாள் முழுதும் புலாலை உருசி பார்க்காமல், மரக்கறி உணவையே உண்டு வந்ததாகக் கூறியுள்ளது இந்திய மக்கள் பலருக்கு வியப்பாகத் தோன்றும்.

3. ஜெர்மனிநாட்டுச் செஞ்சிலுவைச் சங்க வெளியீடு ஒன்றில் காணப்படுகிறதாவது:-''இறைச்சி உணவு பலராலும் விரும்பி உண்ணப்படுமாயினும், மனிதன் உண்ணக்கூடிய உணவில் அது அவசியமானதல்ல. குடிக்கக்கூடியவற்றில் உயர்ந்த வகையானவை பால், இயற்கையான பச்சைத் திராட்சை போன்ற பழங்களின் சாறுகளேயாகும்.''

4. கொலம்பியா (வட அமெரிக்கா) பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஷர்மன் ( Sherman ) கூறுவதாவது:-''குறைந்த புரதச் சத்தும், மிதமான உணவுத் தரமுள்ளதாயினும் கனிவகைகளைப் புசிப்போர், வயது வந்தவர்களோ, குழந்தைகளோ ஆயினும் தங்கள் உடல்களை நல்ல ஊட்டமும் வலுவும் உள்ளவையாகவே கொண்டுள்ளனர்.''

5. அமெரிக்காவில் உணவு ஆராய்ச்சியில் மிகச்சிறந்த அறிஞராகச் கருதப்படும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மாக் காலம் ( Dr. Mc. Callum ) என்பாரின் குறிப்பு ஒன்று பின்வருமாறு:- ''விலங்கினங்களினுடையவும், மனித உடலினதும் தன்மைகளைச் சோதனை செய்து அறிந்ததில், மனித சமூகத்தின் உணவில், இறைச்சி உண்பது அவசியமற்றது என்ற முறியடிக்க முடியாத முடிவிற்கும், பால் பண்டங்கள், காய்கறிகள் ஆகியவை அடங்கிய உணவே சிறந்த உணவு என்பதற்கும் தக்க ஆதரவு கிடைத்துள்ளது. இந்நாட்டில் சராசரியளவு இறைச்சியை உண்பவன், தன் உணவிலிருந்து அந்த இறைச்சியை நீக்கிவிடுவானாகில், அதனால் மேன்மையடைவானேயன்றிக் கெடுதி ஏதும் அடையமாட்டான் என நான் திண்ணமாக அறிகிறேன்.''

6. டென்மார்க் நாட்டு அரசாங்க உணவு ஆய்வாளர் டாக்டர் ஹிண்ட்ஹெடே ( Dr. Hindhede ) என்பார், மக்கள் தானியங்களை உண்பது, பன்றிகள், ஆடுமாடுகள் இவற்றை வளர்த்து இவற்றின் இறைச்சியை உண்பதைக் காட்டிலும், பொருளாதார நோக்கில் மிகச் சிக்கனமானது என அரசாங்க அலுவலர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

7. நம் நாட்டைப் பிரிட்டிஷார் ஆண்டு வந்த காலத்தில், இராணுவ மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் மக் காரிஸன் ( Dr. Mc. Carrison ) இமயமலை அடிவாரப் பகுதியில் வாழும் மக்களுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டிருந்தார். ''இந்தியாவின் வடகோடிப் பகுதியிலுள்ள ஹ§ன்ஸாம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் இயற்கை தரும் உணவுப் பொருள்களை உண்டு வருகின்றனர். என்னுடைய அநுபவத்தில் இன்றுவரை தானியங்கள், காய்கறிகள், கனிகள், சிறிது பால், வெண்ணெய், எப்போதாவது விருந்துநாட்களில் மாத்திரம் சிறிது இறைச்சி உண்ணும் இம் மக்கள் உடலமைப்பிலும் வலிமையிலும் நிகரற்றவர்களாகவும் நோயற்றவர்களாகவும் இருக்கின்றனர். இம் மக்களிடையே நான் வாழ்ந்த ஏழு ஆண்டுகாலத்தில், இவர்களுக்கு ஏதேனும் விபத்துக்களால் ஏற்பட்ட காயங்கள், கண் தொடர்புள்ள நோய்கள் முதலியவற்றுக்கு மட்டுமே நான் சிகிச்சை செய்துள்ளேன். உணவுப் பழக்கங்களால் ஏற்படக்கூடிய குடல்நோய்கள் இவர்களுக்கு ஏற்பட்டு இவற்றுக்குச் சிகிச்சை செய்தறியேன். ஐரோப்பாவில் மிகவும் பரவலாக மனிதர்களுக்கு ஏற்படும் குடல்நோய் (அபெண்டிஸிடிஸ் Append icitis) இப்பகுதியில் தெரியவே தெரியாது''என்கிறார் இம் மருத்துவ நிபுணர்.

8. அகில இந்தியச் சுகாதாரப் பொது ஆரோக்கிய நிறுவனத்தின் (All - India Institute of Hygiene and Public Health) கூட்டம் ஒன்றில் (16-11-1960) சொற்பொழிவாற்றிய டாக்டர் கே. பாக்சி (Dr. K. Bagchi) வருமாறு கூறியுள்ளார்:- ''விலங்கினங்களிலிருந்து கிடைக்கக் கூடிய கொழுப்பு, இறைச்சி, முட்டைகள் ஆகியவை மனிதவாழ்விற்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. மேலும், நாகரிகமடைந்த நாடுகளில் ஆண்டுதோறும் இவ்வகை உணவுப் பழக்கங்கள் இருதயநோய் மூலம் மிகுதியான மக்களின் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன.''

இறைச்சியை உண்பதற்கு முக்கிய காரணம் அதில் புரோட்டீன், கொழுப்பு ஆகிய சத்துக்கள் மிகுதி எனப்படும். ஆனால் இச் சத்துக்கள் பிற பொருள்களிலும் சுத்தமான வழியில் கிடைக்கின்றன என்ற உண்மையைச் சில புள்ளி விவரங்களுடன் விளக்கலாம். ஒரு கிலோ இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரோட்டீன் சத்து (Protein) சுமார் 125 கிராம் (121/2%சதவீதம்) ;ஒரு கிலோ கோதுமையிலும் இதே அளவு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. பட்டாணி, கடலை முதலியவற்றில் சுமார் 25% (சதவீதம்) புரோட்டீன் சத்து உளதாம். பால் பால்பொருள்களில் இறைச்சியிலுள்ளதைப் போல் இருமடங்கு சத்து உள்ளது.

விலகினங்களில் கூட இரு வகைகள் உள்ளன. புலால் தின்னும் இனம், தின்னா இனம் என முன்னரே குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு வகை விலங்கிற்கு ஏற்ற குடல் அமைப்பு, பற்களமைப்பு இவற்றைக் காணலாம். மனிதனின் குடல் வயிறு அமைப்புகள் மாறுபட்டவை. புலாலைத் தின்னாது வாழ்கின்றன காட்டில் வாழும் விலகினங்களில் பெரியதான யானையும் வேகமாக ஓடும் மானும். இவை வாழும் அதே காட்டில்தான் பிற இனங்களைக் கொன்று தின்று வாழ்கின்றன சிங்கமும் புலியும் மற்றும் பலவும். காளிதாஸ மகாகவி, ''உலர்ந்த புல்லைத் தின்று காட்டில் வாழும் யானைகள் வலிமையடைகின்றன அல்லவா?'' என்று கூறியுள்ளார். cF கூறும் மனு, வேள்வி முதலிய சூழ்நிலைகளில் புலால் உண்ணாத இனத்தவர்கூட, கடவுளுக்கு அர்பித்த இறைச்சியை உண்ணலாம் என ஒப்புக்கொண்டுள்ளார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த கன்னடிய வகுப்பைச் சார்ந்த, பல ஸம்ஸ்க்ருத நூல்கள் இயற்றிய, வேள்விகளைச் செய்த ஒரு சிறந்த அறிஞர், வேள்வியில் கடவுளுக்கு அர்ப்பித்த புலால் பிரசாதத்தைக்கூடச் சாத்திரத்தில் உள்ள, உண்ணாது 'ஆக்ராணம்' அதாதவது நுகர்ந்து பார்த்தல் என்ற மாற்று முறையையே கைக்கொண்டாராம்.

இப்படிப் பல மேற்கோள்கள் விஞ்ஞானக் கருத்துக்களைக்கொண்டு மரக்கறி உணவின் உயர்வை எடுத்துக் கூறுவதனால், புலால் உண்போரை அதைக் கைவிட்டுவிட வேண்டும் என்று பறைசாற்றுவது இக் கட்டுரையின் நோக்கமல்ல. மக்கள் தீடிரென அப்படிச் செய்துவிடுவதும் எளிதல்ல. புலால் உணவும் உடலுக்கு வலிமையூட்டும் என்பது உண்மையேயாயினும், அதை உண்ணாது சைவ உணவு உண்போரும் வலுக் குறைந்தவர் என்று சொல்வதற்கில்லை. புலால் உணவினால் அதிக வலிவு ஏற்படுமாயின் அத்தகைய உணவருந்தி வலிவுள்ள மக்களும் நாட்டிற்குத் தேவையே. புலால் உண்ணுதலைக் கட்டுப்படுத்தல், குறைத்தல், சிலர் கைவிடுதல், பெரும்பான்மையோர் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்தல் ஆகியவை, நாட்டின் பொதுச் சுகாதாரம், பொது நலன், நோய்களினின்று விடுபடுதல், பொருளாதாரம் போன்ற பயன்களைக் கருதிடில் மிகவும் முக்கியத் தேவைகளெனத் தோன்றுகின்றன.

கொல்லாமை (அஹிம்லை) , உண்மை, திருடாமை, சுத்தம், புலன்களை அடக்கல் ஆகிய ஐந்தும், மனிதனின் பொதுவான குறிக்கோள்களென உலகில் காணப்படும் எல்லா மதங்களின் பொதுவான கருத்துக்கள். எனவே இக் கருத்துக்களில் முதன்மையான அஹிம்ஸையைக் கடைப்பிடிக்கும் வழிகளில் புலால் உணவைத் தள்ளி மரக்கறி உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது குறைந்த ஹிம்ஸையைச் செய்வதாகும், விரும்புக்கூடியதுமாம்.