நமது தர்மம் நாம் நமது வயிறு நிறையச் சாப்பிட்டுக்கொண்டு, நம் குழந்தைகள், பந்துக்கள் இவர்களும் கஷ்டப்படாமல் சாப்பிடும்படி செய்வதற்காக நாம் சில கார்யங்கள் செய்து வருகிறோம

நமது தர்மம்

நாம் நமது வயிறு நிறையச் சாப்பிட்டுக்கொண்டு, நம் குழந்தைகள், பந்துக்கள் இவர்களும் கஷ்டப்படாமல் சாப்பிடும்படி செய்வதற்காக நாம் சில கார்யங்கள் செய்து வருகிறோம். நம்முடைய மானத்தைக்காக்க வஸ்திரமும், பசியைப் போக்க ஆகாரமும், இருப்பதற்கு வீடும், நம்முடைய குழந்தைகளைப் போஷிப்பதற்குறிய சௌகரியங்களும் அமைவதற்காக, ஒவ்வொரு லௌகிக கார்யம் செய்வதுபோல எந்த லோகத்திலே போனாலும் சௌக்கியமாக ஒரு கார்யம் செய்யவேண்டும். அந்தக் கார்யம்தான் தர்மம்.

அரஞ்செய விரும்பு என்றார் ஒளவையார்.

நாம் நான்கு விதத்தில் தர்மம் செய்யலாம். அதாவது சரீரத்தாலும், வாயாலும், மனத்தாலும், பணத்தாலும் செய்யலாம். தூங்குவதிலும், வம்பு பேசுவதிலும் பரிகாசம் செய்வதிலும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ காலம் செலவழிகிறது. அவற்றை நிறுத்தி விட்டுப் பகவானின் சரணங்களை த்யானம் செய்யலாம்.. அதுதான் வரவு, மற்றவையெல்லாம் செலவுதான்.

நாம் மிகவும் பாபம் பண்ணியிருக்கிறோம் என்று பயப்படக்கூடாது. நம்மைப் போல் இருந்தவர்களில் எவ்வளவோ பேர் பக்தர்களாகி யிருக்கிறார்கள். நம்மைவிட மகா பாபிகளானவர்கள்கூட நல்ல ஸ்திதிக்கு வந்திருக்கிறார்கள். பாபிகளை ரக்ஷிப்பதால்தான் ஈச்வரனுக்குப் பெருமை ஏற்படுகிறது. அதனால் நாம் தைரியமாக இருக்கவேண்டும்.

பாபத்தை தர்மத்தினால் நிவர்த்தி பண்ணலாம்.

இவ்வுலகில் எல்லோரும் புண்ணியமே செய்வதென்று நினைக்கிறார்கள். பாபமே செய்யக்கூடாதென்றும் தெரியும். ஆனால் அவர்கள் செய்வதில் முக்கால் பங்கு பாபம்தான். நாம் பாபம் வேண்டுமென்று ஆசைப்படுவதில்லை. ஆனால் பாபமூட்டை ஏறிக்கொண்டே இருக்கிறது. இது ஒர் ஆச்சரியமல்லவா.

நாம் மனது, வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களும் பாபம் செய்கின்றோம்.

மனத்தில் பலவகையான கெட்ட எண்ணங்கள் உண்டாகின்றன. வாக்கினால் பொய் பேசுவது முதலான பாபங்களைச் செய்கிறோம். நமக்கு மட்டும் பகவான் வாக்கைக் கொடுத்து எதற்காக. ஹ்ருதயத்தில் உள்ளதைச் சொல்லட்டும் என்று கொடுத்திருக்கிறார். அப்படிச் செய்யாமல் பொய் சொன்னால் இவனுக்கு வாக்கைக் கொடுத்து பிகயோஜனமில்லை என்று வாயில்லா மாடாக பிறக்கச் செய்வார். நமக்கு வாக்கைக் கொடுத்திருப்பது சத்தியத்தைச் சொல்லுவதற்காகவும் பகவத் நாமாவைச் சொல்லுவதற்காகவும் தான்.

நித்தியம் மனத்திலும், வாக்கினாலும் உடம்பினாலும் நல்ல கார்யங்களைச் செய்ய வேண்டும். நமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பைசாவாவது தர்மத்திற்காக உண்டியலில் போடவேண்டும். அந்தப் பணத்தை குடும்பத்திற்கு உபயோகப்படுத்தாமல் தர்மத்திற்கு விநியோகப்படுத்த வேண்டும். நம்முடைய பணமெல்லாம் நமதல்ல என்ற ஞாபகம் இருக்கவேண்டும். இந்த உடம்பு போனவுடன் அது நம்முடைய சம்பந்தத்தை பணத்தை நம்முடையதாகச் செய்ய வேண்டுமானால் நாம் எங்கே போனாலும் செல்லக்கூடிய நோட்டாக அதை மாற்ற வேண்டும். மேலுலகத்தில் இந்தப் பணம் செல்லாது. அதைத் தர்ம நோட்டாக மாற்றிவிட்டால் அது எங்கேயும் செல்லும். அப்பொழுது இந்தப் பணமும் நமக்குச் சொந்தமாகும். ஆகையால் குழந்தை முதல் பெரியவர் வரையில் தனித்தனித் தர்மத்திற்காக ஒர் உண்டியல் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் பிறந்தது முதல் இந்தமாதிரிப் பழக்கங்களை வைத்துக் கொண்டிருந்தால் இதற்குள் எவ்வளவோ செய்திருக்கலாம். நம்முடைய கார்யத்தை நாம் மறந்து விட்டோம். குழந்தைகளுக்கென்று இப்போழுதே தர்ம உண்டியல் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்காக இன்ஷ்யூர் செய்வதில்லையா. இந்த இன்ஸ்யூரென்ஸ் இந்தப் பிறவிக்குப் பின்பும் உபயோகப்படுமாதலால் இதை மறுபிறவி இன்ஷ்யூரன்ஸ் after life insurance என்று கருதவேண்டும்.

தினந்தோறும் ஆயிரம் பகவந்நாமாவையாவது சொல்லவேண்டும். அது நமக்கு உபத்திரவம் வராமல் காக்கும். வீணாக வம்பு பேசுவதினால் பாபமும் அதனால் உபத்திரவமும் ஏற்படுகிறது. பகவானுக்குப் பல நாமாக்கள் இருக்கின்றன.

பேராயிரம் பரவி வானேரேத்தும் பெம்மானே

என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய நாமாவை ஆயிரம் தடவை சொல்ல வேண்டும்.

மனசினால் நல்ல காரியம் செய்யவேண்டும். நமது மனது பகவானுக்குரிய இடம். அதை நாம் மெழுகிச் சுத்தப்படுத்தி அதில் பகவானை உட்காரவைத்து அவர் பாதத்தைத் தியானம் செய்ய வேண்டும். இந்த மனம் தியானத்தில் ஈடுபட்டுவிட்டால், வாய் முதலியன அதன்படியே நல்ல கார்யம் செய்யும்.

உடம்பினால் நல்ல கார்யம் செய்ய வேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவேண்டும். இந்த உடம்பு நமதன்று, அவரது என்று நினைத்து அவர் சன்னிதியில் போட்டுவிட வேண்டும்.

இப்படிச் செய்வதினால் பாபம் தானாக நழுவிவிடும். அகம்பாவம் குறையும். எவ்வளவுக்கெவ்ளவு நாம் இறங்குகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மஹிமை ஏறும்.

நாம் செய்து வந்திருக்கும் பாபங்களை நிறுத்துவதற்கு மாற்று தர்மம். அந்தத் தர்மத்தை மனம், வாக்கு, உடம்பு, பணம் இவைகளால் செய்யவேண்டும். இப்படிச் செய்தால்தான் பாபம் நிவர்த்தியாகும். ஆத்மலாபத்திற்கு வேண்டிய முதல் சேரும். இந்தத் தர்மங்களைக் கை, கால் முதலிய காரணங்கள் இருக்கிறபோதே செய்து, கடனை அடைந்து முதலையும் சேர்க்கவேண்டும். அவை போனபின் செய்வதென்றால் முடியாது. இவ்விதம் செய்து பாபத்தைப் போக்கி ஸ்திரமான சௌக்யத்தை அடையலாம்.