ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பிரார்த்தனை நாம் ஒரு நாள் குளிக்கிறோம், மறுநாளும் குளிக்கிறோம் ஒவ்வொறு நாளும் குளிக்கிறோம் ஒவ்வொறு நாளும் பல் தே

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பிரார்த்தனை

நாம் ஒரு நாள் குளிக்கிறோம், மறுநாளும் குளிக்கிறோம். ஒவ்வொறு நாளும் குளிக்கிறோம். ஒவ்வொறு நாளும் பல் தேய்க்கிறோம். ஒவ்வொறு நாளும் துணி தோய்க்கிறோம். முதல்நாள் ஸ்நானம் செய்தாயிற்றே என்று மறுநாள் ஸ்நானம் செய்யாதிருப்பதில்லை. அப்படியே பல் தேய்க்கும் விஷயத்திலும். தேகத்தில் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கிறது. பல்லிலும் அப்படியே அழுக்கு சேர்கிறது. துணியிலும் அழுக்கு சேர்ந்து கொண்டிருக்கிறது. இம்மாதிரி உண்டாகும் அழுக்கை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொறு நாளும் மனதில் கெட்ட எண்ணங்கள் உண்டாகின்றன. கெட்ட கார்யங்களும் செய்கிறோம். அவைகள் எவ்வளவு வேண்டாமென்றாலும் உண்டாகாமலிருப்பதில்லை. பொய், கோள் சொல்லுதல், திருட்டு முதலியவை மனசுடன் கூடப்பிறந்திருக்கின்றன. ஒவ்வொறு நாளும் என்னென்ன கெட்ட எண்ணங்கள் உண்டாகின்றன. என்னென்ன கெட்ட கார்யங்கள் செய்தோம் என்பதை தவறாமல் யோசிக்க வேண்டும். இப்போதுள்ள ஜனங்களின் பாபத்தை போக்குவதுடன், இனி வரப்போகும் ஜனங்களின் பாபத்தைப் போக்கவேண்டும். என்றும் பிரார்த்தித்து க்ஷேத்திரங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள். அங்கே போய்ப் பகவானிடத்தில் நம்முடைய பாபங்களைத் தெரிவித்து நம்முடைய தபிதங்களை மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். பகவானிடம் ஒன்றும் மறைக்க முடியாது. அவருக்கு எல்லாம் தெரியும். ரிஷிகள் தங்கள் தவத்தை பகவானுக்கு அர்ப்பனம் செய்த இடங்கள் கறந்த பால்போல் சுத்தமானது. அப்பேர்பட்ட சுத்தமான பாலைக் கொடுக்கும் பசுக்களுடன் சம்மந்தப்பட்டவை கோவிந்தகுடி, ஆவூர், தேனுகாபுரம் இவைகள். இந்த க்ஷேத்திரங்களில் நான்கு கால் பிராணிகள் மிகவும் பரிசுத்தமான பசுக்கள், கொஞ்சம் பாப சம்மந்தம் இருந்தாலும் புன்னியமே அதிகமாக இருந்ததால் அவைப் தங்கள் பாலை ஈச்சுவரன் இருக்குமிடத்திற்கு சென்று தாமாகவே பால் லிங்கத்தின் மேல் சொரியும்படி செய்தன. மேற் சொன்ன க்ஷேத்திரங்கள் பசுக்களால் போற்றப்பட்டவை.

எவன் உலகங்களை சிருஷ்டித்தானோ, எவனிடம் கடைசியில் எல்லோரும் போய் சேறுகிறோமோ அப்பேர்பட்ட ஈஸ்வரனிடம்போய் நாம் செய்த பாவமாகிற அழுக்கை, பகவானைப் பற்றி எண்ணுவதாகிய ஜலத்தால் அலம்பிச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி இயலாதவர்கள் ரிக்ஷிகளால் ஏற்படுத்தப்பட்ட கோயில்களுக்காவது சென்று நம் பாபங்களை மன்னித்து இனி இம்மாதிரி எண்ணங்கள் உண்டாகாமல் பகவானுடைய எண்ணம் தான் உண்டாகவேண்டும் மென்று பிரார்த்திக்கவேண்டும். அதற்காகத்தான் மனித ஜன்மம் எடுத்திருக்கின்றோம். கோபுர தரிசனம் செய்தாலும் போதும். பாப மூட்டையுடன் வந்திருக்கும் இந்த ஜன்மத்தில் பாபம் செய்ததனால்தான் கஷ்டப்படுகிறோம். சில நல்ல அதிஷ்டங்களும் ஏற்படுகின்றன. கொண்டுவந்திருக்கும் பாப புண்ணியமாகின்ற மூட்டைகளை கொஞ்சமாவது குறைக்க பிரயத்தனம் செய்ய வேண்டும். பசு முதலியவை பாபம் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய புத்தி

அவைகளுக்கு இல்லை. அவைகள் முற்செய்த கர்ம பலனை அனுபவிக்கத்தான் பிறந்திருக்கின்றன. அவைகளால் புண்ணிய பாபங்கள் மறுபடியும் செய்ய முடியாது. அது மனிதனால்தான் முடியும் நாம் நமது புத்தியை நல்ல வழிகளில் உபயோகப்படுத்தி, இன்று நாம் என்ன தபிதம் செய்தோம் மனசாட்சிக்கு விரோதமாக எண்ணென்ன செய்தோம். நாளைக்காவது கொஞ்சம் குறைவாக தப்பு செய்யவேண்டும். இவ்விதம் நம் பாபச் செயல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டேவந்து கொஞ்சமேனும் கெட்ட எண்ணமே உண்டாகாமல் இருக்க வேண்டுமென்று பகவானை பிரார்த்திக்க வேண்டும். மஹா ஷேத்திரங்களில் இவ்விதம் பிரார்த்தித்தால் சீக்கிரம் பலன் கிடைக்கும். பெரியோர்களின் இதயத்திலேயே பகவான் இருக்கிறார். ஆரம்பத்தில் சூர்ய மண்டலத்தில் பகவானைத் தியானம் செய்ய வேண்டும். முன்பு எல்லோரும் சூர்ய மண்டலத்திலேயே பகவானைத் தியானிக்கிறார்கள். தமது ஹிருதயத்தில் பகவானை வைத்து தியானிக்க முடியாதவர்கள் வெளியில் விக்கிரக ரூபமாக வைத்து அதையே ஹிருதயத்தில் தியானிக்க வேண்டும். இந்த விக்கிரகங்களுக்கு கோயில் விசேஷம் எதனால் ஏற்பட்டதென்றால் மஹரிஷிகள் தங்களுடைய தவத்தை அங்கு அமர்த்திருக்கிறார்கள். படம் பூஜைக்காக அல்ல, அதிலிருக்கும் மூர்த்தியை மனதில் தியானிப்பதற்காகவே சூரியனிடமும் அக்னியிடமும் எதுபோனாலும் எரிந்துபோகும். அப்பேர்பட்ட இடத்திலேயே பகவான் ஆராதிக்கிறோம். சூரியனிடத்தில் நமஸ்காரத்தினாலும் சந்தியோபாஸனையினாலும், அக்னியிடத்தில் ஹோமம் முதலியவைகளாலும் ஷேத்திரங்களில் சென்று தரிசனம் செய்வதின் மூலமாகவும் பஜனை மடம் முதலிய இடங்களில் கருணாமூர்த்தியான ஈச்சுவரனை மனதில் தியானிப்பதனாலும் மனதிலுள்ள அழுக்கு போகும். வீட்டில் செய்வதைவிட ஷேத்திரங்களில் செய்வது விசேஷம்.

ஒரு பெரிய குளம். அதனிடையில் சேறு நிறைந்த ஒரு சுரைகுடுக்கை கிடைக்கிறது. அக்குடுக்கை அடியில் கிடப்பதற்கு காரணம் அதில் நிறைந்திருக்கும் சேறுதான். அச்சேற்றை எடுக்க எடுக்க அக்குடுக்கை மேலே வரும். அப்படியே மனத்திலிருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி அதைச் சுத்தப்படுத்தினால் அதுவும் மேலே வரும். ஹிருதயமான சிம்மாசனத்தில் பகவானை உட்கார்த்தி வைப்பதற்கு அச்சிம்மாசனம் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கக்கூடாது. கெட்ட எண்ணங்களாகிய அசுத்தங்களால் ஹிருதயம் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஏதோ பயிர்த்தொழிலோ, கூலி வேலையோ, உத்தியோகமே செய்கிறோம். நமது உடலையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக ஏதாவது தொழில் செய்கிறோம். இது அவசியமா. நாம் ஏன் சாப்பிடவேண்டும். சாப்பிடாவிட்டால் செத்துப்போய் விடுவோம். எப்படியும் ஒருநாள் சாக வேண்டியதுதானே. பின் ஏன் சாப்பிட்டுவிட்டு உடலைக் காப்பாற்றுகின்றோம். சீக்கிரம் செத்தால் பாவம் குறையுமே என்றால் நாம் இந்த ஜென்மத்தை சுத்தப்படுத்த எவ்வளவு நாள் ஜீவித்திருக்கிறோமோ அவ்வளவுக்களவு அதிக தியானம் செய்யலாம். அதற்காகவே நாம் ஜீவித்திருக்க

வேண்டும், சாப்பிடவேண்டும். இம் மனித ஜன்மத்தில்தான் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்காகவே ஈச்வரன் நமக்குக் கொடுத்திருக்கும் தேகத்தை நாமாகக் கெடுக்கக் கூடாது. காமத்தை விளைவிக்கும் சினிமா பார்த்தல், கெட்ட புஸ்தகங்களை படித்தல், கெட்ட கார்யங்களை செய்தல் இவற்றை தவிர்க்க வேண்டும். உடலுக்கு மாத்திரம் உபயோகப்படக்கூடியதை செய்யாமல் உடலழிந்த பிறகும் நாம் க்ஷேமமாயிருப்பதற்காக ஆத்மாவிற்கு அழுக்கு வராமலிருப்பதற்கு வேண்டிய கார்யங்களை செய்யவேண்டும். ஒவ்வொறு நாளும் கொஞ்சமாவது இரண்டு நிமிஷமாவது கடவுளைத் தியானிக்க வேண்டும். அப்படி செய்தால் ஒரு சிறு நெருப்புப் பொறி எப்படி ஒரு பெரிய பஞ்சு மூட்டையை எரித்து விடுகிறதோ அவ்விதமே அது பாபத்தை அழித்துவிடும்.

ஒவ்வொரு நாளும் பல்துளக்கி நீரிட்டு, சிவனோ விஷ்ணுவோ இவர்களின் நாமத்தை (சிவ நாமமோ- ராம நாமமோ இவைகளை) ச் சொல்ல வேண்டும். அவரவர்கள் அவர்களுக்குப் பிடித்த நாமத்தைச் சொல்ல வேண்டும். வாரத்திற் கொருமுறையாவது கோவிலின் நாலு வீதியும் பிரதக்ஷிணம் செய்து கொண்டுவந்து ஸந்னிதியில் வந்து தண்டம் செய்யவேண்டும். (நம்முடைய சக்தியினால் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் எந்த சக்தியினால் நமக்கு சக்தி ஏற்படுகிறதோ அந்த சன்னிதியில் நம்முடைய சக்தியை விடுகிறோம் என்று அதை அர்ப்பணம் செய்வதுதான் தண்டம் சமர்ப்பிக்கிறது) அதுமாதிரி எல்லோரும் காலையில் எழுந்திருந்து பல் துளக்கி 11 தடவை பகவானின் நாமத்தை நினைத்து, நாம் நேற்று என்ன பாவம் செய்தோம் என்று ஞாபகப்படுத்திக் கொண்டு இன்று அப்படி செய்யாமலிருக்க வேண்டி பகவானின் நாமத்தை சொல்லவேண்டும். பரமாத்மாவிற்காக ஒரு நாளாவது கால்களை உபயோகிக்க வேண்டும். அப்படியே பேச்சையும் உபயோகிக்க வேண்டும். கோபுரத்தையாவது உபயோகிக்க வேண்டும். கால்களை உபயோகப்படுத்தி க்ஷேத்திரங்களுக்கு சென்று பகவானின் நாமத்தை வாக்கினால் சொல்லவேண்டும். கோபுரத்தையாவது தரிசிக்கவேண்டும். இதை ஊறுக்கு 10 பேராவது சரியாக செய்தால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி க்ஷேமமுன்டாகும். சிவம் என்றால் மங்களம் அல்லது சுபம் என்று அர்த்தம். புண்ணியம், ஞானம் கருணை இவைகளிள் உருவம்தான் சிவம். உடம்பழுக்கைப் போக்க ஸ்நானம் செய்வதைப்போல் மனத்தின் அழுக்கைப் போக்கவே பகவான் நாம கீர்த்தனமும் வாரம் ஓரு முறை கோயில் பிரதக்ஷினமும்.

எங்கே பார்த்தாலும் ஏன் கோயில்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடுகிறோம். அலங்கரித்துக் கொள்கிறோம். இவைகளை யார் கொடுத்தார்கள். ஒரு இலை. ஒர் அரிசி நம்மால் செய்யமுடியுமா. கொடுத்தவனுக்கு அவைகளைச் சமர்ப்பிக்காமல் அவனை நினைக்காமல் அவைகளை உபயோகப்படுத்தினால் நாம் துரோகிகளாவோம். எந்தச் சக்தி இவைகளை நமக்கு தருகிறதோ, அச்சக்திக்கு அர்பணம் செய்துவிட்டுத்தான் நாம் சாப்பிடவேண்டும். இதுதான் பூஜை தத்துவம். அப்படிச் செய்யாவிடில் நாம் நன்றி கெட்டவர்களாகிறோம். எல்லோரும் அப்படிச் செய்யமுடியாது. அதற்காகத்தான் பொதுவாக கோயில்கள். மணியடித்துக் கோயிலிலுள்ள ஸ்வாமிக்கு நிவேதனம் செய்த பிறகுதான் நாம் சாப்பிடலாம்.

அப்படி எல்லோரும் செய்வதாயிருந்தால் இப்போதிருக்கும் கோயில்களே இருக்காது. இந்த வழக்கம் குறைந்தால்தான் கோயில்கள் இடிந்து கிடக்கின்றன. அவைகளைக் கட்டினவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. உடலை மாத்திரம் காப்பாற்றிக்கொண்டு கோயில்கள் அழிந்துபோவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்தான் பைத்தியக்காரர்கள்.

நாம் தினந்தோறும் மேற்சொன்னபடி செய்துவந்தால் வர வர பாபம் குறையும். கடைசீக் காலத்தில் பாபமே இராது. சாகும்போது எல்லாமே மறைந்துபோகிறது. ஆனால், சாகும் சமயம் எந்த நினைவிருக்கிறதோ அதன்படித்தான் அடுத்த ஜன்மம் வருகிறது. போதையிலிருப்பவன் எது அவனுக்கு நன்றாகப் பழக்கமானதோ, அதைப் பற்றியே புலம்பிக் கொண்டிருப்பான். மரண காலத்திலிருக்கும் ஞாபகமேதான் அடுத்த ஜென்மத்தில் வரும். ஆனால், இப்போழுது பாவம் செய்துவிட்டு சாகும் காலத்தில் சுவாமியை நினைக்கலாமென்றால், இப்பொழுது முதல் அப்யாஸம் செய்துவந்தால்தான் கடைசீயில் மரணகாலத்தில் பகவான் நாமம் சொல்லமுடியும். தினம் கொஞ்சமாவது ஈச்வரன் நாமத்தை சொல்லிவந்தால்தான் மரணகாலத்தில் ஈச்வரனின் ஞாபகம் வரும்.

ஆகையினால், தினம் காலையில் பல்துலக்கி நீரிட்டு பதினொரு முறையாவது பகவானின் நாமத்தைச் சொல்லவேண்டும். வாரம் ஒரு முறையாவது பகவானின் க்ஷேத்திரம் சென்று தரிசிக்கவேண்டும். நம் தேசத்தில் நாம் இப்படிச் செய்தால் உலகமே க்ஷேமமடையும். நாம் தினந்தோறும் எல்லா உலகங்களும் சுகமாயிருக்கவேண்டும். வையகம் துயர் தீர்க்கவே என்ற எண்ணம் உண்டாகும்படி பிரார்த்திக்கவேண்டும்.