அறிவியல் வளர்ச்சியால் வேலை கிடைக்கும்; ஆன்மிக வளர்ச்சியால் அமைதி கிடைக்கும் இந்து சமயம் என்பது விஞ்ஞான பூர்வமான சமூக நலனில் அக்கறை கொண்ட வாழ்க்கை முறையாகும் என்ற

அறிவியல் வளர்ச்சியால் வேலை கிடைக்கும்; ஆன்மிக வளர்ச்சியால் அமைதி கிடைக்கும்

இந்து சமயம் என்பது விஞ்ஞான பூர்வமான சமூக நலனில் அக்கறை கொண்ட வாழ்க்கை முறையாகும் என்று சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருச்சியில் நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் இளைஞர் மாநில மாநாட்டில் அருளாசி வழங்கும்போது கூறினார்.

மாநாட்டில் சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசி வழங்கி பேசியதாவது:


எத்தனையோ பேர் ரத்தம் சிந்தி பக்தியை வளர்த்திருக்கிறார்கள். நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றால் நல்ல வழிகாட்ட வேண்டும், ஒரு பலனை எதிர்பார்க்கிறோம் என்றால் அதற்காக உழைப்பு நம்மிடம் வேண்டும். நல்ல பலனை எதிர்பார்க்க நன்றாக உழைக்க வேண்டும். இளைஞர்கள் உலகத்தை பற்றியும், இந்து சமயத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா, டிவியில் நல்ல விஷயங்கள் கூறினாலும் அது முழுமையானதாக இல்லை. எல்லா நல்ல விஷயங்களையும் டிவி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பது சரி அல்ல.

ஆடம்பரத்தை வெறுக்க வேண்டும். எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைப்போல் சோம்பேறித் தனத்தை முழுமையாக ஒதுக்க வேண்டும். ஸ்டிரைக் செய்வது ஒரு வருத்தமான விஷயம். வேலையை செய்து விட்டு சாத்வீகமான முறையில் பிரச்னையை தெரிவிக்க வேண்டும். நாம் விருந்தாளிகளுக்கு அதிக சலுகை செய்துவிட்டதால் நாம் இப்போது ஏழையாக உள்ளோம். நல்ல மருந்து நமது நாட்டில் கிடைப்பது போல் வியாதிகளும் வளர்ந்து உள்ளன. நாம் நல்லபடி வாழ வேண்டும். சகிப்புத்தன்மை, பெருந்தன்மை இருப்பதால் தான் இந்த சமுதாயம் அமைதியாக இருந்து வருகிறது.

நமது நாட்டில் படித்தவர்களில் 4 கோடி பேருக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர்.வேலை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போல வேலை செய்வதில்லை என்பது உண்மை.
உங்கள் பகுதிக்கு தேவையான படிப்பை படிக்க வேண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்பை படிக்க வேண்டும்.

நமது தமிழ்நாட்டில் 36 ஆயிரம் கோயில்கள் ஏழையாக உள்ளன. இந்த கோயில்களில் கோபுரங்களில் செடிகள் முளைத்துள்ளன. வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதுபோல் கோயில்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இறைபணி செய்வதற்கு தயக்கமே காட்டக்கூடாது.

பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் சீக்கிய கோயிலில் படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என்று வித்தியாசமின்றி அனைவரும் சுத்தம் செய்கின்றனர். உணவு பரிமாறுகின்றனர். கோயில்களில் இறைவனே உழவாரப்பணிக்காக மண் சுமந்துள்ளார். கோயில்களில் நித்யபூஜை, ஒரு கால பூஜையாவது நடைபெற முயற்சி செய்ய வேண்டும். கோயில்களில் வில்வம், துளசி செடிகளை நடவேண்டும். இதைச் செய்வதால் புண்ணியம் கிட்டும். கோயில்களில் தீபம் எரிய முயற்சிக்க வேண்டும். ஆன்மிக சம்பந்தமான புத்தகங்களை படிக்க வேண்டும். ஞாயிறு, வியாழக்கிழமைகளில் கோயில்களிலும், வீடுகளிலும் ஆன்மிகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆன்மிகம்தெரிந்து கொள்வதால் மனதில் தன்னம்பிக்கை வளரும். அகங்காரம் இருக்காது.

பெற்றோரை மதித்து அன்பாக நடக்க வேண்டும். ரேஷன் கடைகளில் ரேஷன் சரியாக வழங்கப்படுகிறதா, பள்ளிகளில் நல்லகுடிநீர் உள்ளதா என்பதை எல்லாம் இளைஞர்கள் பார்த்து உதவி புரியவேண்டும். அரசாங்கத்தால் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. அதை நாம் தெரிந்து தர்மம் செய்ய வேண்டும்.

திருப்பதியில் ஸ்ரீவாரி சேவா உள்ளது. அங்கு சென்று சேவை புரியலாம். ஒருவருக்கு ஒருவர் உதவி புரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். பக்திதான் கடையேற்றும் வழி, காலையில் எழுந்து இறைவனை பிரார்த்திக்க வேண்டும். தாயும், தந்தையும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.

நல்ல பாடங்களை படிக்க வேண்டும். அனைத்து இடத்திலும் நிறைந்துள்ளது இந்துமதம். இந்து சமயம் என்பது விஞ்ஞான பூர்வமான சமூக நலனில் அக்கறை கொண்ட வாழ்க்கை முறையாகும். இளைஞர்கள் இதை எல்லாம் உணர்ந்து தெய்வபக்தியை அடித்தளமாக கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டும். பூசலார் நாயனார் கூட மனதில் கோயில் கட்டினார். இறைவன் அங்கு குடியேறினார். பக்தி வளர்ந்தால் நல்ல புத்தி வரும், நாடும் முன்னேறும்.

வீரத்தோடு விவேகமும் கொண்டு நாம் வாழவேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றாக வளர வேண்டும். அறிவியல் வளர்ச்சியால் வேலை கிடைக்கும். ஆன்மீக வளர்ச்சியால் அமைதி கிடைக்கும். ஒரு தேர் வெளிவர ஒற்றுமையும், உழைப்பும் தேவை. மக்களின் வாழ்க்கை முறை ஒன்றாக அமைய உழைப்பும் தேவை. மக்களின் வாழ்க்கை முறை ஒன்றாக அமைய உழைப்பும், பக்தியும் தேவை. இவ்வாறு ஸ்வாமிகள் பேசினார்.