புரோஹிதரும், குருவும்

புரோஹிதரும், குருவும்

அந்த தர்ம வ்யவஸ்தையை இங்கே சொல்லக் காரணம், (குறிப்பிட்ட) ச்லோகத்தில் 'ராஜாவின் புரோஹிதர்', சிஷ்யனின் குரு' என்பதாகப் புரோஹிதரையும் குருவையும் வெவ்வேறு ஆஸாமிகளாகச் சொல்லியிருப்பதுதான், ராஜ பாபம் புரோஹிதம், சிஷ்ய பாபம் குரும்.

அப்படியானால் குரு வேறே, புரோஹிதர் வேறேயா?

குரு என்று இந்த ச்லோகத்தில் சொல்வது - இங்கே மாத்திரம் இல்லை, பொதுவாகவே அநேக இடங்களில் சொல்வது -பால்யத்தில் உபநயனம் ஆனதும் எவரிடம் போய் ஒருத்தன் குருகுலவாஸம் செய்து படிப்பானோ, அவரைத்தான். அவர் க்ருஹஸ்தரே. என்றாலும் ரொம்ப பூர்வ காலங்களில் அவர் காட்டில் இருந்து கொண்டிருந்தார். நாட்டிலிருந்து சிஷ்யர்கள் அங்கே போய் கூட வாஸம் பண்ணி வித்யாப்யாஸம் செய்தார்கள். அதற்கப்புறம் அவர் காட்டில் இல்லாவிட்டாலும், சிஷ்யர்களாக வந்தவர்களின் வீடுகளோடு ஸம்பந்தப்படாமல் ஒதுங்கத் தனியாக குருகுலம் வைத்துக் கொண்டு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். வெளியூரிலிருந்தும் பசங்கள் அவரிடம் வந்து படிப்பார்கள். படிப்பானதும், காட்டு குருகுலம், நாட்டு குருகுலம் எதுவானாலும் அதை விட்டு விட்டு சிஷ்யர்கள் அகத்திற்குப் போய்க் கல்யாணம் கார்த்திகை செய்து கொண்ட க்ருஹஸ்த கர்மாக்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்போது அவற்றை அவர்களுக்குச் செய்விக்க வேறே புது குருமார் வேணும்தானே? அப்படி ஏற்பட்ட இரண்டாவது குருவுக்குத்தான், ஜெனரலாக, 'புரோஹிதர்' என்றே தனிப்பெயர் கொடுத்து வைத்தது. பொது ஜனங்களாக உள் க்ருஹஸ்தர்கள் பல பேருக்கு ஒருவரே புரோஹிதராக இருப்பார். ஆனால் ராஜாவுக்குத் தனியாக ஒருவர் அப்படி இருப்பார். ராஜாவும் பால்ய தசையில் காட்டிலேயோ, நாட்டிலேயே ஒதுக்குப் புறத்திலேயே இருந்த குருவிடம் போய்த்தான் வித்யாப்யாஸம் பண்ணித் திரும்பியிருப்பான். ராஜாவான அப்புறமும்கூட அவனுக்குள்ள வஸதியினால் அவரை அவ்வப்போது - அன்றன்றுங்கூட - ரதம் அனுப்பி வரவழைத்து அட்வைஸ் கேட்டுக்கொள்வான். ராமாயணத்தில் வஸிஷ்டரை அயோத்தி ராஜ ஸதஸில் அடிக்கடிப் பார்க்கிறோமில்லையா? ராஜா அரண்மனையில் தனக்கென்றே தனியாக வேற ஒரு புரோஹிதர் வைத்துக் கொள்வதாகவும் நிறையவே இருந்திருக்கிறது.

இப்படி நாட்டிலேயே இருந்துகொண்டு வயஸுக்கு வந்துவிட்ட ராஜாவுக்கு அட்வைஸ் பண்ணுபவரைத்தான் ச்லோகத்தில் 'புரோஹிதர்' என்றும், மற்ற குருமார்களை எல்லாம் குரு என்றும் வித்யாஸப்படுத்திச் சொல்லியிருக்கிறது.

ஆகக்கூடி, புரோஹிதரும் குருதான் - குரு செய்வதான நல்வழி காட்டும் கடமையைச் செய்பவர்தான், ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், குறிப்பிட்ட கார்யத்திற்காக ஏற்பட்டவர்.

ஒருத்தனுக்கு வருங்கால ஹிதத்தை முன்னதாக எடுத்துச் சொல்பவர் 'புரோஹிதர்' என்று நிர்வசனம் (பத இலக்கணம்) . அப்படிச் சொல்வதையே அவன்

மனஸுக்கும் பிடித்தமான முறையில் ஹிதமாகச் சொல்கிறவர் என்றும் சேர்த்துக்

கொள்ளலாம். தற்காலத்தில் நாம் வித்யாப்யாஸத்திற்குப் புரோஹிதரிடம் போவதில்லை. இப்போது நமக்குத் தெரிந்த புரோஹிதர் 'பண்ணி வைக்கிற வாத்தியார்'தான். ஆதிநாளில் குருகுலத்தில் படிப்பு முடித்து வந்து, விவாஹம் பண்ணிக் கொண்டவனுக்கும் வேதகர்மாக்கள் - சின்ன இஷ்டிகளிலிருந்து பெரிய யாகங்கள் வரையிலானவை - சொல்லிக் கொடுத்துப் பண்ணிவைப்பதற்கு ஒரு குரு இருக்கத்தான் செய்தார். இப்போது எல்லாம் தேய்ந்து கல்யாணம், அபரகார்யம் (உத்தரக்ரியை) , ஆவணியாவட்டம், பூணூல் கல்யாணம் இப்படிச் சிலது பண்ணுவிக்க ஒருத்தரை வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்தான் இப்போது கொஞ்சத்தில் கொஞ்சம் நமக்கு குருஸ்தானம். அந்தந்தச் சடங்காவது நாம் 'ஆசார்யமுகமாக'ப் பண்ணுவதற்கு அவர்தான் இருப்பதால் அந்த ஸ்தானம். அவரும் முன்னதாக, 'புரோ', அகத்துக்கு வந்து, எப்போது அப்பா ச்ராத்தம், எப்போது வரலக்ஷ்மி வ்ரதம் என்று சொல்லிவிட்டுப்போகிறார். ஆனால் அது அகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 'ஹித'மாயிருக்குமா என்பது ஸந்தேஹம்!

ஒரு விஷயத்தில் அநேகப் புரோஹிதர்கள் ரொம்பவும் ஹிதர்களாக இருப்பதாகக் கேள்வி - க்ருஹஸ்தர்கள் எத்தனை அசாஸ்த்ரீயமானதையும் 'சாஸ்த்ரோக்தம்' என்ற பொய் ஜோடனைக்குள்ளே பண்ண ஆசைப்பட்டாலும், அவர்கள் மனஸு படியே, இன்னுங்கூட தைரியம் கொடுத்தும், பண்ணிவைப்பது, அவர்கள் இஷ்டப்படி, ஸெளகர்யப்படி கர்மாக்களைக் குறைத்துப் பண்ணுவது, வேளை, காலம் தப்பிப் பண்ணுவது என்பதிலெல்லாம் ரொம்ப ஹிதமாயிருப்பதாகக் கேள்வி.

முன்னாள் புரோஹிதர் எதுதான் நிஜமாகவே ஹிதமோ அதையே கேட்கவும் ஹிதமாகச் சொல்வார். 'சொல்கிறவர்' என்றால் சொல்லி அதோடு விட்டு விடுகிறவரில்லை. தாம் சொன்னபடி (சிஷ்யன்) செய்யும்படியாகவும் தூண்டிவிடுவார். அந்த சக்தி அவருக்கு இருந்தால்தான் 'குரு' என்ற பெரிய பெயர் பொருந்தும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவின் 'பயங்கர'ப் பொறுப்பு!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சீடன் முயற்சியும், குருவின் அருளும்
Next