குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்

குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்

அல்லது... ஒரு பெரிய விஷயத்திற்கே இங்கே 'எவிடென்ஸ்' கிடைப்பதாகவும் சொல்லலாம். வழி காட்டுகிறவர் என்றே நினைக்கப்பட்டு ஆச்ரயிக்கப்படும் ஒருவர் வழிகாட்ட முடியாதவர் என்று தெரிந்தபோது, தீர விசாரிக்காமல் இப்படிப்பட்ட ஒருவரிடம் வந்தோமே என்பதில் வெட்கப்பட்டுக் கொண்டே அந்தக் கோஸல ராஜபுத்ரன் அவருடைய திக்குக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதாவது குருவின் யோக்யதாம்சங்களை நன்றாக உறுதிப்படுத்தித் தெரிந்து கொண்ட பிறகே அவரை ஆச்ரயித்து உபதேசம் கோர வேண்டும், அப்படிப் பண்ணாமல் குரு வரணம் பண்ணிவிட்டு ஒருத்தரிடம் வந்து அவரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்தால் திக்குக்கொரு நமஸ்காரம் பண்ணிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான் என்று ஆகிறது. கற்றுக்கொள்ள வருகிறவனின் யோக்யதாம்சத்தை குரு நன்றாகச் சீர்தூக்கிப் பார்த்துவிட்டே சிஷ்ய ஸ்வீகரணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்பது போலவே, கற்றுக்கொள்ளப் போகிறவனும் அவருடைய யோக்யதையை நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகே அவரை குருவாக வரிக்க வேண்டும் என்ற பெரிய விஷயம் இங்கே வருகிறது.

'குருவிடம் பூர்ண சராணாகதி சிஷ்யன் பண்ணுவதே முக்யம், அதுவே அவன் தர்மம், கடமை. அவர் எப்படி இருந்தாலும் இவன் அவரைத் தியாகம் பண்ணப்படாது. பதி எப்படி இருந்தாலும் பத்னி அவனைத் தியாகம் பண்ணாமல் சரணாகதையாக இருக்கவேண்டுமென்பது போலத்தான் இதுவும்' என்றெல்லாம் சொல்லுவதற்கு முரணாக இங்கே இருக்கிறதே என்ற பெரிய கேள்வியும் எழும்புகிறது....

'தேசிகன்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தேன். அது ரொம்ப தூரம் எங்கெங்கேயோ போய்விட்டது. 'வழி சொல்கிறவன், திசை காட்டுகிறவன்' என்று பாஷ்யம், பிரஸங்கம் பண்ண ஆரம்பித்து (சிரித்து 'அதிகப்ப்ரஸங்க'மாக திசை தப்பி, வழியை விட்ட எங்கேயோ போனமாதிரி... இல்லை, இதெல்லாமும் குரு - சிஷ்யாள்-தான். அதில் ஒரு பெரிய கேள்வி. 'கேள்வி கேட்காமல், யோக்யதையை பார்க்காமல் (குருவிடம் சிஷ்யனின்) சரணாகதியா? யோக்யதை பார்த்தே (குரு) வரணம், இல்லை என்று தெரிந்தால் த்யாகம் செய்வதா?

யோக்யதையை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் குரு என்று ஒருத்தரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அப்புறம் அவரிடமேதான் சரணாகதி என்று இருக்கவேண்டும் - அவர் வேறே மாதிரியெல்லாம் தெரிந்தால்கூட (அவரிடம் சிஷ்யனாகச் சென்றவன்) மனஸ் கொஞ்சங்கூட மாறாமல் அவரிடமேதான், அவரே சரண்யர் (புகலிடமானவர்) என்று இருக்கவேண்டும் - இதுதான் பதில்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தெரியாததை ஒரு போதும் சொல்லாதவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவும் சீடராகும் உயர்பண்பு
Next