விநயத்தோடு நில்லாமல் உண்மையைத் தெரிவிப்பது

விநயத்தோடு நில்லாமல் உண்மையைத் தெரிவிப்பது

"தெரிஞ்சா சொல்றேன்" என்று ஒரு குரு தன்னிடம் வந்த ஆறு சிஷ்யாளிடம் விநயத்தோடு சொன்னார் என்றேன். அது 'ப்ரச்னோபநிஷத்' ஆரம்பம். அப்புறம் அவர், அவர்கள் ஒவ்வொருத்தரும் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஸம்பூர்த்தியாகப் பதில் சொல்லியிருக்கிறார். இப்படி ஆறு ஸெக்ஷன்கள். ஒவ்வொரு ஸெக்க்ஷனுக்கும் 'ப்ரச்னம்' என்றே பேர் கொடுத்திருக்கிறது.

'ப்ரச்னம்' என்றால் கேள்வி. problem என்பதை 'பிரச்னை' என்றே தமிழ்நாட்டில் அரசியல் பேச்சாளர்களும், பத்திரிக்கையாளர்களும் சொல்லி இப்போது பொது ஜனப் புழக்கத்திலேயே அந்த வார்த்தை வந்துவிட்டதாகத் தெரிகிறது. 'எப்படிச் சமாளிப்பது?' என்று கேள்விக் குறி போட்டுக் கொண்டு நிற்பதைத்தானே problem என்பது? ஆகையினால் அது 'ப்ரச்னம்'. அதுவே தமிழ் மொழி வழக்கில் 'பிரச்னை' ஆகிறது. ஆனால் 'prasnai' என்று சொல்லாமல் 'பிரச்சனை' ('Prachchanai') என்கிறார்கள்!அதுதான் என்னமோபோல் இருக்கிறது.

இப்படி ஆறு கேள்விக்கும் விளக்கமாகப் பதில் கொடுத்த ஆறாம் ப்ரச்ன முடிவில், உபநிஷத் முடிகிற இடத்தில் KS - குரு - ஆரம்பத்தில் 'தெரிஞ்சா சொல்றேன்' என்றவர் - அதே 'ஹ்யுமிலிடி'யுடன் "இந்த அளவுக்கே நான் பரப்ரஹ்மத்தைத் தெரிஞ்சுண்டது" என்று சொல்கிறார்.

ஆனால் 'ஹ்யுமிலிடி'யிலே இவர் அப்படிச் சொல்லப்போக, அந்த சிஷ்யாள் அதுவே நிஜமோ, இன்னும் என்ன தெரிந்து கொள்ளவேண்டுமோ, அதற்காக இன்னும் யார்கிட்டே போகணுமோ என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாதல்லவா? அந்த மாதிரி அவர்களுக்கு ஸந்தேஹம், சஞ்சலம் வராமலிருப்பதற்காகவும், பெற வேண்டிய உபதேசம் அத்தனையும் பெற்று க்ருதார்த்தராகிவிட்டோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு ஏற்படுவதற்காகவும் அவர் முடிந்த முடிவாக, "இதுக்கு மேலே ஒண்ணுமில்லை" என்றும் சொல்கிறார்.

விநய ஸம்பத் குருவுக்கும் லக்ஷணம் என்றால், அவருடைய முக்யமான கார்யமோ சிஷ்யாளின் குழப்பத்தை - ப்ரச்னையை- தீர்ப்பதுதானே, பகவான் அர்ஜுனனுக்கு அதைத்தானே பண்ணினார்? 'விஷாத யோகம்' என்றே முதல் அத்யாயமாகப் பேர் கொடுத்திருக்கிற அர்ஜுனனுடைய குழப்பப் படலத்திற்கு முடிவு கட்டத்தானே அப்புறம் பதினேழு அத்யாயம் உபதேசம் பண்ணினார், அப்படியிருக்கும்போது தம்முடைய விநயத்தினால் தாமே சிஷ்யாளுக்குப் புதுக் குழப்பத்தை உண்டாக்கிவிடக்கூடாதென்றே ப்ரச்நோப நிஷத் முடிவிலே, KS அழுத்தங்கொடுத்து, "இதுக்கு மேலே எதுவுமில்லை" என்றார்.

அப்போதுதான் அந்த சிஷ்யாள், "எங்கள் அவித்யைக்கு அக்கரை சேர்த்த தாங்களே எங்களுடைய பிதா" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வேதசிரஸுக்கே சிரஸான உபதேசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஈடு செய்ய முடியாதது குரு உபதேசம்
Next