ஸர்வமும் உபதேசிப்பதற்குச் சான்று

ஸர்வமும் உபதேசிப்பதற்குச் சான்று

இதெல்லாம் இருக்கட்டும். குரு தனக்குத் தெரிந்த ஸர்வமும் சிஷ்யனுக்கு உபதேசித்து விடுவார், அதாவது அப்படிச் சொல்லவேண்டியது அவர் கடமை என்று உபநிஷத் காட்டுகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தோமே, இதை இந்த ஆறு சிஷ்யர்கள் மாதிரியே இன்னொரு சிஷ்யனும் வேறே ஒரு விதத்தில் தெரிவிப்பதாகவும் இன்னொரு உபநிஷத்தில் வருகிறதை முன்னேயே சொன்னேன் - ச்வேதகேது கதையில்தான்.

குருவுக்கே கர்வம் உதவாது, அவர் விநய ஸம்பன்னராக இருக்கணுமென்று இப்போதுதான் பார்த்தோம். சிஷ்யனுக்கோ விநயந்தான், ஒரு பத்னிக்குப் பாதிவ்ரத்யம் (கற்பு நோன்பு) மாதிரி அத்தனை முக்யம். அப்படியிருந்தும் 'வித்யா கர்வம்' என்று ரொம்பக் காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்களே, அப்படியும் இரண்டொருத்தர் எந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் அந்தப் பிள்ளை, ச்வேதகேது, மண்டைக் கனத்தோட தகப்பனாரிடம் திரும்பி வந்து சேர்ந்தான். பார்த்தமாத்திரத்தில் பிள்ளையாண்டான் 'வித்வத்தில் தனக்கு நிகரில்லை' என்று அஹங்கரித்திருக்கிறானென்று தகப்பனாருக்குத் தெரிந்துவிட்டது. அவனிடம் வபையாக ஒரு கேள்வி அவர் கேட்டார். "எந்த உபதேசம் பெற்றுக்கொண்டால் கேள்விக்கு அப்பாற்பட்டது கேட்கப்பட்டதாகுமோ, எண்ணுவதற்கு இயலாதது எண்ணப்பட்டதாகுமோ, அறிவுக்கு எட்டாதது அறியப்பட்டதாகுமோ, அந்த உபதேசம் கேட்டுக்கொண்டாயோ?" என்று கேட்டார். ப்ரஹ்மவித்யையின் ஸாரத்தைத் தெரிந்த கொண்டானா என்பதையே இப்படிக் கேட்டார். தெரிந்து கொண்டிருந்தால் அவன் கர்வியாக ஆகியே இருக்க மாட்டான். இது அவனுக்கு உறைக்கணும் என்றே கேட்டார்.

'ப்ரஹ்மவித்யை கற்றுக்கொண்டாயா?' என்று நேராகக் கேட்டிருந்தால், அத்தனை வருஷம் படித்தவன்... 'ஸகல வேதங்களையும் அத்யயனம் பண்ணினவன்' என்று உபநிஷத் அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது, அப்படிப்பட்டவன்... ப்ரஹ்ம தத்வம் பற்றியும் படித்துத்தான் இருந்திருப்பானாகையால், "கற்றுக்கொண்டேன்" என்றே சொல்லியிருப்பான். அப்படிவிடாமல், தான் அதன் ஸாரத்தை அறியவில்லை என்று அவன் 'ரியலைஸ்' பண்ணி கர்வத்தை விடணும் என்றே இப்படி indirect -ஆகக் கேட்டார்.

கர்வியானாலும் அவன் புத்திமான். வித்யையில் ஆசையுள்ளவன். ஆகையினால் 'இப்படியும் ஒரு வித்யையா? கேட்கவும், நினைக்கவும், அறியவும் முடியாததைக் கேட்டு, நினைத்து, அறியும்படிச் செய்யும் வித்யையா? தெரிஞ்சுக்காமப் போனோமே இப்பவாவது இவர் கிட்டேயிருந்து தெரிஞ்சுக்கணும்' என்று நினைத்தான். அதனால் பொய், கிய் பண்ணாமல், தான் அதைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நிஜத்தைச் சொல்கிறான். ஆனால் அப்போதும் தன்மேல் குற்றம் சேராமல் - தனக்கு யோக்யதை இல்லாததால்தான் அந்த வித்யையை குருமார் சொல்லிக் கொடுக்கவில்லை போலிருக்கு என்று சொல்லாமல் - "அந்த குருமார்களுக்கே அது தெரியாமல் இருந்திருக்கணும்.

'நூனம்' - 'நிச்சயம்' அப்படித்தான் இருக்கணும்" என்கிறான்!

இப்படிச் சொல்கிற அவன் வாயிலிருந்தேதான் அக்கால குருமாரின் உத்தம லட்சணமும் அப்போது வந்து விடுவதாகப் பார்த்தோம் - "அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஏன் சொல்லிக் கொடுக்காமல் இருக்கவேண்டும்?" என்கிறானே, அதுதான்!

அவன் அப்படிச் சொன்னானென்றால் அதற்குக் காரணம் ஏற்கெனவே அப்பாக்காரர் அப்படிச் சொல்லி அது அவன் உள்மனஸில் தோய்ந்திருந்ததுதான். இது என்னுடைய ஊஹம். அந்த 'ஏற்கெனவே' கதை என்னவென்றால், முன்னத்யாயத்திற்குப் போகணும். முதலில் ச்வேதகேதுவுக்கு அப்பாவே கொஞ்சம் கற்றுக்கொடுத்துவிட்டு, அப்புறமே அவனை வேறே பல ஆசார்யர்களிடமும், வித்வத் ஸதஸுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று இங்கே தெரியவருகிறது. அப்படி அவன் ப்ரவாஹணர் என்கிற ராஜ ரிஷியின் ஸதஸுக்குப் போகிறான். ராஜரிஷி அவனிடம் 'பித்ருலோக - தேவலோக ஸமாசாரம் தெரியுமா?' என்ற மாதிரி ஐந்து கேள்விகள் கேட்கிறார். அவனுக்கு அந்த ஐந்து விஷயமும் உபதேசம் ஆகவில்லை. எப்பவுமே அவனுக்கு கர்வம் ஜாஸ்தி அதனால், தான் எல்லாம் தெரிந்தவன் என்கிற மாதிரி ஒரு 'இம்ப்ரெஷ'னை அவருக்கு (ராஜரிஷிக்கு) உண்டாக்கியிருந்தான். அதனால் இப்போது அவர் கேட்ட ஐந்து கேள்விக்கும் இவனுக்குப் பதில் தெரியவில்லை என்றதும் இவனைக் கொஞ்சம் ஹேளனமாகப் பேசிவிடுகிறார். கர்வியானதால் அவன் மானபங்கப்பட்டுக் கொண்டு, மனஸ் குமுறிக்கொண்டு பிதாவிடம் திரும்பி வந்து, "ஏதோ எல்லாம் கத்துக்குடுத்துட்ட மாதிரி என்னமா என்னை அனுப்பி வெச்சே!ஏன் முழுக்கக் கத்துக் குடுக்கலை?" என்று கோபமாகக் கேட்கிறான். அவர் சாந்தமாகப் பேசி ராஜஸதஸில் நடந்த ஸங்கதிகளைத் தெரிந்து கொள்கிறார். அப்போது, "ராஜா கேட்டது எனக்கு நிஜமாகவே தெரியத்தான் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஒனக்கு ஏன் சொல்லாம இருந்திருக்கப் போறேன்?" என்கிறார்.

அதுதான் அவன் மனஸில் ஊறி, அப்புறமும் அவன் யாராரிடமும் போனானோ, அவர்களெல்லாரும் மனஸைத் திறந்து சிஷ்யாளுக்குச் சொல்லித் தருகிறதைப் பார்த்து இன்னும் உறுதிப்பட்டு, அப்புறம் அப்பாவிடமே அவர் சொன்னதையே மற்ற குருமார் விஷயமாகத் திருப்பிச் சொல்லவைத்திருக்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவின் விநயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வேதசிரஸுக்கே சிரஸான உபதேசம்
Next