வேதத்தில் 'வழிகாட்டி'குரு

வேதத்தில் 'வழிகாட்டி' குரு

வேதத்திலும் - அதாவது 'வேதம்' என்றே பாடசாலைகளில் சொல்லிக்கொடுக்கும் ஸம்ஹிதை பாகத்திலும் - இந்த 'ஐடியா' இருக்கிறது. அநேக இடங்களில் இருக்கலாமானாலும், குறிப்பாக என் கவனத்திற்கு வந்த ஒன்றைச் சொல்கிறேன்.

பொதுவாக இன்னொன்று (வேதத்திலிருந்து வேறொரு சான்று) சொல்வதுண்டு. 'அஸ்ய வாமஸ்ய' என்று ஸ¨க்தம் ப்ரஸித்தமானது. நீளமான ஸ¨க்தம். ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி, பராமாத்ம தத்வம் முதலானவற்றை அறிவாளிகளுக்கும் அநுபவிகளுக்குமே புரிகிற ஸங்கேத பாஷையில் சொல்லும் ஸ¨க்தம். 'ஏகம்தான் ஸத்வஸ்து;அதைத்தான் ஞானிகள் பலவகையாக, பல தெய்வமாகச் சொல்கிறார்கள்' என்ற மந்த்ரம், முண்டகோபநிஷத்தில் வருகிற ஜீவாத்ம - பரமாத்ம பட்சிகளைப் பற்றிய மந்த்ரம், நாத தத்வம் ஸ¨ட்சம தத்வத்திலிருந்து நாலு நிலைகளில் மாறி மாறியே (நாலாவதாக) நாம் வாக்கால் உச்சரிக்கும் சப்தமாகிறது என்ற ப்ரஸித்தமான மந்த்ரம், அம்பாள் ஆவாஹனத்தில் சொல்லும் கௌரீ மந்த்ரம் முதலானதெல்லாம் இந்த ஸ¨க்தத்தில் வருகிறவைதான்.

அதிலே ஆரம்ப மந்த்ரம் ஒன்றில், "நான் ஞானமில்லாதவன். ஞானம் படைத்த ரிஷிகளிடம் உபதேசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று வருகிறது. குருமுகமாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு சிஷ்ய வாக்காக வருகிற இதையே ச்ருதி ப்ரமாணமாகச் சொல்வார்கள்.

நான் காட்ட வந்த மேற்கோளில் இன்னும் தெளிவாகவே குரு வழிகாட்டித்தான் சிஷ்யன் தெரிந்து கொள்கிறான் என்று வருகிறது.

அது இந்த்ரனைப் பற்றிய ரிக்வேத ஸ¨க்தங்களில் ஒன்று. ஏழாவது அஷ்டகத்தில் வருகிறது. கவஷர் என்ற KS கொடுத்திருக்கும் ஸ¨க்தம். அதில், "'அக்ஷேத்ரவித்', அதாவது இடம் தெரியாதவன் 'க்ஷேத்ராவித்'திடம், அதாவது இடம் தெரிந்தவனிடம் கேட்டுக்கொள்கிறான். இடம் தெரிந்தவனால் வழி தெரிவிக்கப்பட்டு, அப்படியே போய்ச் சேர்கிறான்" என்று 'மறை' என்பதற்கேற்க மறைமுகமாகவே, ஆசார்யனிடமிருந்து சிஷ்யன் ஸாதனா மார்கம் தெரிந்து கொள்வதைச் சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மம் என்ற பரம ஸத்யந்தான் போய்ச் சேர வேண்டிய லக்ஷ்யமான இடம். அந்த இடத்தை அறிந்தவன் குரு. அறியாதவன் சிஷ்யன். இவன் அவரிடம் லக்ஷ்யத்தை அடைகிற ஸாதனா மார்க்கத்தை உபதேச க்ரமமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அங்கே போய்ச் சேருகிறான்' - இதுதான் மந்த்ர தாத்பர்யம். இதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.

அப்புறம், 'ரொம்ப முக்யமான விஷயத்தை மறைத்துச் சொல்லப்போய் அதை ஒரேயடியாய் Iv பண்ணிவிடப் போகிறார்களே' என்று கருணைகொண்டு, வெளிப்படையாகவே, "இதுதான் உபதேசத்தின் 'பத்ர'மான - அதாவது, மங்களமான - மஹிமை" என்றும் தெரிவித்திருக்கிறது. 'உபதேசம்' என்பதற்கு இங்கே வருகிற வார்த்தை 'அநுசாஸனம்' என்பது. (அது) இன்றைக்கு வரை பழக்கத்திலுள்ள வார்த்தை.

பீஷ்மர் சரதல்பத்தில் (அம்புப் படுக்கையில்) இருந்து கொண்டு

பாண்டவாளுக்கு உபதேசித்த விஷயங்கள் விஸ்தாரமாக இரண்டு பர்வாக்களாக (பர்வங்கள் என்ற பிரிவுகளாக) பாரதத்தில் இருக்கின்றன. அவற்றில் முதலாவது சாந்தி பர்வா. இரண்டாவது 'அநுசாஸன பர்வா' என்றே பெயர். அதில்தான் 'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' கூட வருகிறது. சட்டம் போடுவது, உத்தரவிடுவது, அட்வைஸ் பண்ணுவது எல்லாமும் 'அநுசாஸன'த்தில் அடங்கும்.

அப்படி குரு கொடுக்கும் உபதேச அநுசாஸனத்தைப் பரம மங்களமானது - பத்ரம் - என்று வேதமே ஸ்தோத்ரிக்கிறது. 'மங்களம்' என்று நாம் சொல்கிற இடங்களில் வேத - இதிஹாஸ புராணங்கள் 'பத்ரம்' என்றே சொல்லும்.

உபதேசம் மங்களமானது என்பது எதனால் என்றும் (இந்த வேத) மந்திரம் தெரிவிக்கிறது. 'ஸ்ருதி' என்கிற நீரோட்டத்தில் எப்படித் தடையில்லாமல் நேராக ஒரு வழியில் போகிறோமோ அப்படி உத்தம லக்ஷ்யத்தில் சேர்க்கும் நேரான மார்க்கத்தை உபதேசத்தால்தான் ஒருத்தன் தெரிந்து கொள்கிறான். அதனால் அது 'பத்ரம்' என்கிறது.

'நேர்' என்பதற்கு இங்கே உள்ள வார்த்தை 'அஞ்ஜனம்' என்பது. அதற்கு 'நேர்' என்பதோடு 'நேர்மை' என்றும் அர்த்தம், (சிரித்து) straight மட்டுமில்லை, forward -ம்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பதிவிரதமும், குருவிரதமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவை 'க்ஷேத்ரஜ்ஞ'னாக
Next