மஹான்களுக்கும் பல குருமார்

மஹான்களுக்கும் பல குருமார்

நம்முடைய அத்வைத ஸம்பிரதாயத்தில் நாம் நம் ஆசார்யாள் பகவத்பாதாளுக்கு அடுத்தபடியாக நமஸ்காரம் பண்ணக் கடமைப்பட்டிருப்பவர் வித்யாரண்ய ஸ்வாமிகள். அவருக்கு வேதாந்த குருமார்களாகவே சங்கரானந்தர், பாரதி தீர்த்தர், வித்யா தீர்த்தர் என்று மூன்று பேர் இருந்திருப்பது அவரே தம்முடைய வெவ்வேறு புஸ்தகங்களில் ஆரம்பித்தில் சொல்லியிருக்கும் குரு வந்தன ச்லோகங்களிலிருந்து ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அத்வைத சாஸ்த்ரம் முறையாகப் படிப்பவர்களெல்லாம் இன்றைக்கும் அவச்யமாகப் படிக்கும் 'பஞ்சதசீ' என்ற புஸ்தக ஆரம்பத்தில் அவர் சங்கரானந்தருக்கு குரு வந்தனம் செலுத்தியிருக்கிறார். வித்யாரண்யாள் பூர்வாச்ரமத்தில் கர்நாடக ராஜ்யாதிபதிகளான ஹரிஹரனுக்கும், புக்கராயனுக்கும் குருவாக, மந்த்ரியாக இருந்தவர். அப்போது மாதவாசார்யர் என்று அவருக்குப் பெயர். ராஜாங்கத்தில் அவர் வஹித்த உயர்ந்த ஸ்தானத்தினால் அந்தப் பெயரும் அவர் பிற்காலத்தில் வித்யாரண்ய ஸ்வாமிகள் (என்னும் துறவியாக) ஆனவிட்டும் பழக்கத்தில் இருந்து வந்தது. ஸ்தானத்தால் மட்டுமில்லை, அந்த ஸ்தானத்திலிருந்த கொண்டு அவர் நம்முடைய மதத்திற்குச் செய்திருக்கிற உபகாரம் அல்ப ஸ்வல்பமானதில்லை. ஆசார்யாள் எழுபத்திரண்டு துர்மதங்களை நிராகரணம் பண்ணி அத்வைத வேதாந்தத்தை முடிவாகக் கொண்ட வேத மதத்தை நிலை நாட்டினார் என்றால், வித்யாரண்யாளோ மந்த்ரி மாதவாசார்யராக இருந்தபோது வடதேசத்திலிருந்து தட்சிணத்திலேயும் புகுந்து ஆக்ரமித்துக் கோவில்களைத் தரைமட்டமாக்கி வந்த துருக்க மதஸ்தரை முடிறியடிக்கவும், ஹிந்து மத்திலேயே அத்வைத வித்யைக்கு மாறாக கர்நாடகத்தில் பெருக்கப் புறப்பட்ருந்த த்வைத  ¢ஸித்தாந்தம், வீர சைவ ஸித்தாந்தம் ஆகியவற்றை ஒரு எல்லைக்குள் உட்படுத்தவும் பரமோபகாரம் செய்தவர். தம்முடைய ஸஹோதரரான ஸாயணர் என்பவரைக் கொண்டு வேதம் அத்தனைக்கும் பாஷ்யம் எழுதுவித்து அதற்குத் தாமும் Co-author என்கிற மாதிரி நிறைய ஸஹாயம் செய்து நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு ஈடில்லாத கைங்கர்யம் செய்தவர். மந்த்ரி என்பதால் மதியமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து ஹரிஹரனையும், புக்கராயனையும் நல்லபடி தூண்டிவிட்டு வழிகாட்டி வைதிக ஹிந்து ஸாம்ராஜ்யம் ஏற்படுத்தித் தழைக்கும்படிச் செய்தவர். ஆகையினால் மாதவாசார்யர் என்ற பெயரும் பஹ§ஜன - வித்வத்ஜன ப்ரஸித்தமாக இருந்தது. அந்தப் பெயரிலேயே வழங்குகிற வித்யாரண்யாளின் புஸ்தகங்கள் சிலவும் இருக்கின்றன. அவற்றிலிருந்து பாரதி தீர்த்தர் என்ற ஸந்நியாஸ ச்ரேஷ்டரும் அவருடைய இன்னொரு குரு என்று தெரிகிறது. குறிப்பாக இப்போது என் நினைவுக்கு வருகிற அப்படிப்பட்ட ஒரு புஸ்தகம் மாதவாசார்யரின் - மாதவ வித்யாரண்யாளின் - 'ஜைமிநீய ந்யாயமாலா விஸ்தரம்'. "பாரதீ தீர்த்த யதீந்த்ர க்ருபாம் அவ்யாஹதாம் லப்த்வா" என்பதாக, தாம் அந்த ஸ்வாமிகளின் இடையறாத க்ருபையை அடைந்ததை அந்தப் புஸ்தக ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்.

'ஜீவன் முக்தி விவேகம்' என்கிற புஸ்தகாரம்பத்திலேயும் முடிவிலேயும் வித்யாதீர்த்தர் என்கிற யதிச்ரேஷ்டரை 'வித்யாதீர்த்த மஹேச்வரர்' என்று

சிறப்பித்துச் சொல்லி வந்தனம் செலுத்தியிருக்கிறார்.

பன்னிரண்டு முக்யமான உபநிஷத்துக்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் தெரிவிப்பதாக 'அநுபூதி ப்ரகாசிகா' என்ற புஸ்தகம் அவர் எழுதியிருக்கிறார். அதில் ஒவ்வொரு அத்யாய முடிவிலும் 'வித்யாதீர்த்த மஹேச்வர'ரைச் சொல்லி, அவரிடம் ஒவ்வொரு விதமான அநுக்ரஹத்தை ப்ரார்த்திக்கிறார். அவற்றிலொன்றில் வித்யாதீர்த்தரைத் தம்முடைய 'முக்ய குரு' என்று சொல்லியிருக்கிறார். பல குரு தமக்கு உண்டு. அவர்களில் இவரே முக்யம் என்று சொல்வதாகத்தானே அர்த்தம் ஏற்படுகிறது?

இவர்களெல்லாம் ஸந்நியாஸ குருக்கள். அது தவிர ஸர்வஜ்ஞ விஷ்ணு என்பவரையும் தம்முடைய குருவாகச் சொல்லியிருக்கிறார் - எல்லா மத ஸித்தாந்தங்களையும் நடுநிலையோடு எடுத்துச்சொல்லி அவர் எழுதியிருக்கும்

'ஸர்வ தர்சன ஸங்க்ரஹம்' என்ற 'டைஜஸ்'டில்.

தத்தாத்ரேயர் ரொம்பப் பெரியவர். வேதாந்தத்திலும் குரு, ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்திலும் குரு, யோக ஸித்தர்களுக்கும் குரு என்று இருப்பவர். த்ரிமூர்த்தி ஸ்வரூபமானவர். அவர் தமக்கு இருபத்துநாலு குருக்கள் என்று சொல்வதாக பாகவதத்தில் வருகிறது. ஆனால் அப்படி அவர் மண்ணு, காற்று, ஸமுத்ரம் முதலிய அசேதனங்கள், சிலந்தி, விட்டில்பூச்சி, குளவி, தேனீ முதலிய பூச்சிகள், யானைகள் முதலிய ம்ருகங்கள், வேடன், தாஸி என்று நாம் யாரையெல்லாம் குருவாக - சிஷ்யனாகக்கூட - நினைக்கமாட்டாமோ அப்படி இருபத்து நாலு பேருக்கு குருஸ்தானம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு அம்சத்தைத் தாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு அதனாலேயே அவர்களை குரு என்று சொல்கிறார்.

ஆகக்கூடி, அவர் ஸஹஜமாகத் தமக்கு இப்படி அநேக குருமாரைச் சொல்வதிலிருந்தே அது ஸதாசாரத்தில் இருந்து வந்த வழக்கந்தான் என்று தெரிகிறதல்லவா?


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஒரே குருவா?பல குருமாரும் உண்டா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பதிவிரதமும், குருவிரதமும்
Next