உபநிஷத்தில் 'வழிகாட்டி'குரு

உபநிஷத்தில் 'வழிகாட்டி' குரு

வழி தெரியாதவனுக்கு அதைச் சொல்பவர் என்பதைக் கதாரூபமாகவே ஒரு உபநிஷத் கொடுத்திருக்கிறது- சாந்தோக்யோபநிஷத். 'கண்ணைக் கட்டிக் காட்டிலே விடறது' என்கிறோமே, அதையே ஸம்பவமாகச் சொல்கிற கதை.

கந்தார தேசம் ( Gandhara ) என்று ஒன்று. காந்தாரம் என்று சொல்வதுண்டு. அந்த தேசத்தைச் சேர்ந்தவன் தான் த்ருதராஷ்ட்ரனின் பத்னியான காந்தாரி - Gandhari ; Kandhari இல்லை. இங்கே நாம் தப்பாக ரீணீ-வை ளீணீ-ஆக்கின மாதிரி அப்புறம் அந்த தேசத்திலேயே பண்ணித்தான் Gandhara -த்தை Kandahar (காண்டஹார்) ஆக்கி விட்டார்கள் என்கிறார்கள். அப்படியானால் அது Partition -க்கு (பாகிஸ்தான் பிரிவினைக்கு) முன்னாலிருந்த முழு இந்தியாவுக்கு வெளியிலே உள்ள ஆஃப்கானிஸ்தான் என்றாகிறது. சில ஆராய்ச்சிக்காரர்கள், அது இல்லை கந்தாரம், தற்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட வடகோடிப் பகுதியான பெஷாவரைச் சுற்றியிருக்கும் பிரதேசந்தான் ஆதி கால கந்தாரம் என்கிறார்கள். அது இருக்கட்டும்.

அந்த தேசத்தில் ஒரு பணக்காரன். அவனை ஒரு கொள்ளைக்காரன் 'கிட்னாப்' பண்ணி அவனுடைய கண்ணைக் கட்டிக் காட்டுக்கு இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளை அடிக்கிறான். கொலை பண்ணாமல் கொள்ளையாடு நிறுத்திவிடுகிறான். அப்புறம் அவனை அந்த நடுகாட்டில் விட்டுவிட்டு ஒடியே விடுகிறான். எந்தப் பக்கம் போனால் ஊர் வரும் என்றே தெரியாத பணக்காரன் - பணத்தைப் பறிகொடுத்து இப்போது 'பாப்ப'ராகி விட்டவன் -நாலு திசையும் திரும்பித் திருப்பி, ஸஹாயத்க்கு யாராவது வரமாட்டார்களா என்று, பாவம், லபோ லபோ என்று கத்துகிறான். "என்னைத் திருட்டுப்பய கண்ணைக் கட்டி இங்கே இழுத்துண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டானே!காப்பாத்த யாருமில்லையா, இல்லையா?" என்று கத்துகிறான்.

அப்போது ஒரு வழிப்போக்கன் அநத்ப் பக்கம் வருகிறான். அவன் அந்த ஆஸாமியுடைய கண்கட்டை அவிழ்த்துவிட்டு, கந்தார தேசத்திற்கு அவன் திரும்பிப் போவதற்கு இன்ன திசையிலே போய் அப்புறம் இன்ன, இன்ன திசையிலே திரும்பணும் என்று தீர்க்கமாக எடுத்துச் சொல்கிறான். அதைக் கேட்டு ஆஸாமியும் வழி தெரிந்து கொள்கிறான்.

அந்தப்படியே போய், காடு முடிந்துவிட்டு நாட்டுப் பகுதியை அடைகிறான். நாட்டுப் பகுதியில் கிராமங் கிராமமாக விசாரித்துக்கொண்டே நடையைக்கட்டி முடிவாக கந்தாரம் போய்ச் சேருகிறான்.

"இந்த மாதிரிதான் ஆசார்யனைப் பெற்ற ஒருவன் அறிவு பெறுகிறான்" என்று உபநிஷத்தல் முடித்திருக்கிறது. "ஆசார்யனைப் பெற்றவன்தான் அறிவு பெறமுடியும்" என்பது உள்ளர்த்தம் என்று தெரிந்துகொள்ளும்படியாக வாசகம் இருக்கிறது.

இப்படி உபநிஷத் கதை - Parable; அதாவது படிப்பினை உள்ள கதை.

கதையில் 'இந்த மாதிரி' என்று சொன்னது எதை? அந்த மாதிரி வாழ்க்கையில் ஆசார்யனால் அறிய உண்டாகிறது என்றால் எப்படி?

உபநிஷத் அதை விளக்கிச் சொல்லவில்லை. கதை சொல்லிவிட்டு, 'அந்த

மாதிரி ஆசார்யவான் அறிவு பெறுகிறான்' என்று மட்டும் 'க்ரிப்டிக்'காகச் சொல்லி முடிந்து விடுகிறது.

நான் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிப் பார்க்கிறேன்:

'எந்த மாதிரி' என்றால் கிட்னாப் ஆன ஆஸாமி அப்புறம் வழிப்போக்கன் ஊருக்கு வழி சொல்லத் தெரிந்துகொண்டு அங்கே திரும்பிப் போய்ச் சேர்ந்தானல்லவா, 'அந்த மாதிரி' ப்ரஹ்மமாக இருக்கப்பட்ட நிலையிலிருந்து மாயையினால் கிட்னாப் செய்யப்பட்டு ஒரு ஜீவன் ஸம்ஸாரக் காட்டிற்குக் கடத்தப்படுகிறான். கொள்ளைக்காரன் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி மாயை இவனுடைய ஞானத்தைப் பறிமுதல் பண்ணிவிடுகிறது. அஞ்ஞானத்தினால் இவனுடைய அறிவுக் கண்ணைக் கட்டிப்போட்டுவிடுகிறது. ஆனால் ஒரு பெரிய வித்யாஸம் - அதோடு திருட்டுப் பயல் ஓடிவிட்ட மாதிரி மாயை ஓடாது!

'ஸம்ஸார காட்டிலிருந்து மீண்டு மறுபடி எப்படி மோட்ச பதம் - அதுதான் கதையில் வந்த சொந்த ஊரான கந்தாரம் - சேர்கிறது? வழி தெரியவில்லையே!இதற்கு யார் வழி சொல்லுவார்கள்?' என்று ஜீவன் நாலா திசையிலும் முயற்சி பண்ணிப் பார்க்கிறான். புத்தியால் பலவிதமாகவும் யோஜித்துப் பார்க்கிறான் என்று அர்த்தம். மோட்ச தாஹம், ஞான தாஹம் ஜீவனுக்கு வந்துவிட்டதோ இல்லையோ? அப்படி வந்தாலும் அவன் ஸ்வய புத்தியால் அதைத் தணித்துக்கொள்வதற்கு ஈச்வரன் விடுவதில்லை. தன்னுடைய அநுக்ரஹத்திற்கே, Channel என்கிறார்களே அப்படி வடிகாலாக குரு என்னும் ஒருத்தரை அனுப்பி வைத்தே அந்த தாஹத்தைத் தணிப்பான்.

உபநிஷத் கதையில் காட்டிலே போன வழிப்போக்கன்தான் அந்த குரு.

குரு - ஆசார்யர் - வருகிறார். அஞ்ஞானக் கண் கட்டை அவிழ்த்துவிட்டு, ஜீவன் ப்ரஹ்மமாகவே இருந்த ஸ்வஸ்தானமான, சொந்த ஊரான, மோட்சத்திற்கு ஞானமார்க்கம் என்ற வழியைச் சொல்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வழிகாட்டும் 'தேசிகர்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஒரே குருவா?பல குருமாரும் உண்டா?
Next