உபாத்தியாயர்

உபாத்தியாயர்

இக் காலத்தில், நமக்குத் தெரிந்த குரு, ஆசார்யர் எல்லாம் ஸ்கூலில், காலேஜில் பாடம் சொல்லித் தரும் டீச்சர்தான். அவரை 'வாத்தியார்' என்று சொல்கிறோம். நமக்குக் கர்மாக்கள் பண்ணி வைக்கிற சாஸ்திரிகளையும் 'வாத்தியார்' என்கிறோம். இவரைப் 'புரோஹிதர்' என்றும் சொல்கிறோம். 'வாத்தியார்', 'புரோஹிதர்' என்ற வார்த்தைகள் பற்றிக் கொஞ்சம்...

'உபாத்யாயர்' என்பது திரிந்துதான் 'வாத்தியார்' என்று ஆகியிருக்கிறது. குருவுக்கு தக்ஷிணை தர வேண்டும் என்று ஸத்ஸம்ப்ரதாயத்தில் இருக்கிற போதிலும் நிஜமான குரு என்பவர் அதை நினைத்து டீச் பண்ணுகிறவரில்லை. அவர் ரேட்ஃபிக்ஸ் பண்ணிவைத்து அந்தப்படிவசூலித்தே மாணவனை வகுப்புக்கு அநுமதிப்பவர் இல்லை. வித்யை பரவவேண்டுமென்ற நோக்கத்திலேயே சொல்லிக் கொடுப்பவர்தான் 'குரு', 'ஆசார்யர்', 'அத்யாபகர்', 'அத்யக்ஷர்' என்றெல்லாம் கூறப்படுகிறவர். அப்படியில்லாமல் சம்பளத்திற்காகவே சொல்லிக் கொடுக்கிறவர்தான் 'உபாத்யாயர்' என்று ஒரு டெஃபனிஷன் உண்டு. இங்கே பலவிமான டீச்சர்களில் 'இன்ஃபிரிய'ரான (தாழ்வான) இடம் பெறுபவராகவே 'உபாத்யாய'ரைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால் வேறே ஒருவிதமான 'டெஃபனிஷன்' அவருக்கும் உசந்த இடமே கொடுக்கிறது. அது என்னவென்றால், 'உபேத்ய தஸ்மாத் அதீயத இதி உபாத்யாய:' என்பது.

இந்த டெஃபனிஷனில் ஒரு ட்ராமாவையே அடைத்து வைத்திருக்கிறது Factual -ஆக மட்டும் அர்த்தம் பண்ணாமல் கதாபாத்ரங்களைக் காட்டி அவர்கள் மூலமாக அர்த்தம் தெரிவிக்கும் டெஃபனிஷன்!

ஒரு நல்ல குருவை - சம்பளத்தையே நினைத்துச் சொல்லித் தருகிற ஒருத்தர் இல்லை, உத்தம குரு ஒருவரை - ஒரு பிதா தன்னுடைய புத்ரனுக்குக் காட்டி அவரிடம் குருகுலவாஸத்தில் விடுவதற்கு முன் புத்ரனிடம் சொல்லும் வாசகமாக இதை டெஃபனிஷன் காட்டுகிறது.

'உபேத்ய' என்றால் 'கிட்டே போய் இருந்துகொண்டு' - குருவைக் காட்டி 'இவரிடம் போய்க் கூட இருந்து கொண்டு குரு குல வாஸம் பண்ணிக்கொண்டு' என்று அப்பாக்காரர் சொல்கிற வார்த்தை. 'தஸ்மாத்': 'இவரிடமிருந்து'; 'அதீயத': கற்றுக்கொள்ளு', 'இவரோடு வாஸம் பண்ணி இவரிடமிருந்து வித்யையைக் கற்றுக் கொள்' என்ற பித்ருவாசகமாக, அந்தப் பிதா, அவருடைய புத்ரன், அவன் அடையவேண்டியஆசார்யன் என்ற மூன்று பாத்திரங்களை வைத்து ஒரு குட்டி ட்ராமாவாக இந்த டெஃபனிஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருபாலன் எவர்கிட்டே போயிருந்து கொண்டு, அதாவது ஸொந்த வீட்டில் வஸிப்பதை விட்டு குருகுலவாஸம் பண்ணி, வித்யாப்யாஸம் பெறணுமோ அவரே 'உபாத்யாயர்' என்று இதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'ஆசார்ய'பதச் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வழிகாட்டும் 'தேசிகர்'
Next