குரு; ஆசார்ய

குரு; ஆசார்ய

ஆனாலுங்கூட, ஸெகன்டரியாகவே தர்மத்தைச் சொல்லி, முக்யமாக ஸெக்யுலர் ஸப்ஜெக்ட்டுகளையே ஒருவர் போதித்தார் என்றால் அவருக்கு போதகர்களில் ஸெகன்டரி இடமே தர்மசாஸ்திரத்தில் கொடுத்திருக்கிறது.

'குரு'. 'ஆசார்யர்' என்ற வார்த்தைகளுக்குப் பல தினஸாக லக்ஷணம் சொல்லும்போது, ஆசார்யர் என்பவரைவிட குருவுக்கு ஏற்றம் கொடுத்துச் சொல்வதுண்டு. ஆனால் இன்னொரு அர்த்தத்தில் குருவை விட ஆசார்யருக்கே ஏற்றம் தந்திருக்கிறது. 'மநு ஸ்ம்ருதி'யிலேயே அப்படித்தான் இருக்கிறது. சம்பளத்தை எதிர்பார்க்காமல் வேத - வேதாந்தங்கள் கற்றுக்கொடுப்பவர் 'ஆசார்யர்', சம்பளத்துக்காக வேதவித்யா போதனை தருபவர் 'உபாத்யாயர்' என்று சொல்லிவிட்டு, அப்புறம் இவர், தான் காசு ஸம்பாதிப்பதற்காகச் சொல்லிக் கொடுக்கிறாரென்றால் சிஷ்யன் காசு ஸம்பாதிப்பதற்காகவே ஸெக்யுலர் ஸப்ஜெக்ட்கள் சொல்லித் தருகிறவறே 'குரு' என்றும் அதில் இருக்கிறது. இந்த டெஃபனிஷன் சிஷ்ட ஸமூஹம் (மேன்மக்கள்) உள்பட லோகத்தால் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டது என்று சொல்ல முடியாது. எல்லாவிதமான போதகர்களுக்கும் 'குரு' என்று பேர் கொடுப்பதாகவும், 'குரு'வை உச்சஸ்தானத்தில் வைத்துக்கொண்டாடுவதாகவும் பஹ§ காலமாக இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் டெக்னிகலாகப் பாகுபாடுகள் பண்ணி வார்த்தை போட வேண்டும் என்கிறபோது தர்மம், பக்தி, ஞானம் சொல்லிக் கொடுத்துப் பரலோகத்திற்கு வழிகாட்டுபவரை 'ஆசார்யர்' என்றும், கொஞ்சம் moral instruction - உடன் இஹலோக ஜீவனத்திற்கு வழிகாட்டுபவரை 'குரு' என்றும் சொல்கிற வழக்கும் சில விஷயஜ்ஞர்களிடம் இருந்து வந்திருக்கிறது. பலவிதமான போதகர்களுக்கும் 'குரு' என்று பொதுப் பெயர் கொடுத்து அப்படிப்பட்ட குருக்களில் பரலோகத்திற்கு வழிகாட்டும் 'ஆசார்ய'னே சிரேஷ்டமானவன் என்பார்கள்: "ஆசார்ய : ச்ரேஷ்டா குரூணாம்."

'ஆசாரம்' என்பதான, வழிவழியாக வந்துள்ள சாஸ்த்ரீய ஒழுக்கத்திற்கும் 'ஆசார்ய' என்பதற்கும் ஸம்பந்தம் இருப்பது அந்த வார்த்தைகளின் சப்த ஒற்றுமையிலிருந்து எவருக்கும் தெரியும். சாஸ்த்ரீய ஒழுக்கத்தை, இன்னும் அதற்கு மேலே ஆத்ம சாஸ்த்ர லக்ஷியமான அநுபவத்தையே தன்னுடைய ஜீவித உதாரணத்தால் லோகத்திற்குக் கண்கூடாகக்காட்டுகிறவனே பூர்ணமான ஆசார்யன்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மதச்சார்பற்ற பாடங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அத்யக்ஷகர்;அத்யாபகர்
Next