நிகழ்கால இழிநிலை

நிகழ்கால இழிநிலை

இக் காலத்தில் - அதிலும் 'ஸ்வதந்திரம்' என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் காலத்திற்குள்தான் - ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டும் சரக்கு ஏற்றுகிறதே கல்விமுறை என்றாகிவிட்டது. ஸ்வதந்திரத்திற்கு முந்தி வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்த கல்வி திட்டம் நம்முடைய வாழ்முறையைப் பாழ்படுத்தி அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே நம்மை ஆக்குகிற உத்தேசத்துடன், ஆனாலும் அப்படித் தெரியாமல் ஏதோ நம்மை ரொம்ப முன்னேற்றிவிடுகிற ஒன்றாக அவர்களால் மிகவும் தந்திரமாக வகுக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆட்சி முடிந்து ஸ்வராஜ்யம் வந்தபின் அந்த முறை மாறவேண்டும் என்று ஆசைப்பட்டோம். மாறவும் மாறிற்று. எப்படியென்றால், முன்னைவிட மோசமான கல்வி முறையாக!இதில் கல்வியும் இல்லை, முறையும் இல்லை. ஏன் நிஜமாகவே மூளைக்காவது சரக்கு ஏற்றுகிறார்களா என்றால் அதுவும் கேள்வியாகத்தானிருக்கிறது!யோக்யதாம்சம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி ஜாதி, பணபலம், மிரட்டல் என்கிறவற்றை வைத்துக் கல்வி, பட்டம் என்றால் வேறே எப்படி இருக்கும்? லஞ்சத்தை லஞ்சம் என்று அஸல் ரூபத்திலும், டொனேஷன் என்ற பெயரிலும் கொடுத்து அட்மிஷன் பெறுவது, பாஸ் போடப் பண்ணுவது, மிரட்டி உருட்டியுங்கூடப் பாஸ் போடப் பண்ணுவது, இப்படி மாணவன் பண்ணுவதற்கு வாத்தியார்களும் மானேஜ்மெண்டும் இடம் கொடுத்து, ஸலாம் போடுவது, போதாக்குறைக்கு கவர்மென்டே வேறு பண்ணுகிற பேதம் - எந்த வரம்பில் நின்றால் முறை என்கிறதை யோஜித்துப் பார்க்காமல் வோட்டைப் பற்றியே யோஜனை பண்ணிக் கொண்டு, நாளுக்கு நாள் ஜாஸ்தியாக்கிக் கொண்டிருக்கும் ரிஸர்வேஷன்' - என்று ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இந்த தேசத்தில் தர்ம ந்யாயமான கல்வி முறை நடக்கிறதா, நடக்குமா என்பதே கேள்வியாயிருக்கிறது!'குரு', 'சிஷ்யர்' என்று ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ லக்ஷணங்கள் - யோக்யதாம்சங்கள் - கொடுத்து ஏற்பட்டிருக்கும் பெயர்களுக்கும், தற்போது பெருகி வரும் டீச்சர்கள் - ஸ்டூடன்ட்கள் இருக்கிற விதத்திற்கும் எங்கேவுக்கு எங்கேயோவாக இருக்கிறது!நெடுங்காலமாக இருந்து வந்த ஒரு உன்னதமான கலாசாரம் இப்படி ப்ராணாபத்தாக அரிபட்டுக்கொண்டே போய், தேசத்தின் வருங்கால ப்ரஜைகளை நல்லவர்களாவதற்கு எந்த ஏற்பாடுமே இல்லாதபோது, அதை சீர்ப்படுத்த வேண்டும் என்ற ப்ரக்ஞையே அரசாங்கத்திற்கு இருக்கிறதாகத் தெரியாததுதான் எல்லாவற்றையும் விட ரொம்பவும் கவலை தருவதாக இருக்கிறது. ராஜாங்கத்திற்கு -டில்லியில் இருப்பது, ஸ்டேட்களில் இருக்கிறவை எல்லாவற்றுக்குந்தான் - திரும்பின பக்கமெல்லாம் பிரச்னையாயிருக்கிறதென்பதும் வாஸ்தவந்தான். இருந்தாலும் வருங்காலத்திற்கே விதை முதல் கல்விதானே? அதற்கு தந்து ஸரிப்பண்ண வேண்டுமோ, வேண்டாமோ? அப்படியில்லாமல், இருக்கிறதும் இன்னும் சீர் கெட்டுப்போகப் பண்ணிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ரொம்பக் கவலையாயிருக்கிறது. உங்களையும் கவலைப்படுத்துவது தவிர இந்தப் பேச்சால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா, தெரியவில்லை தற்கால சாந்தியாகவாவது நம் கவலையைப் போக்கிக்கொள்ள இதுவரை பார்த்த

பூர்விகர்கள் கதைக்கேதான் போகணும்...


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மூளை வளர்ச்சியும் இதய வளர்ச்சியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  தற்கால ஆசிரியர்மார்களுக்கு
Next