பெண்களின் பாண்டித்யம்;அக்கால-இக்கால மாறுபாடு

பெண்களின் பாண்டித்யம் அக்கால - இக்கால மாறுபாடு

பழங்காலத்தில், ஆசார்யாள் புது ஜீவன் ஊட்டி ஸ்தாபித்த வைதிக வாழ்க்கையில் புருஷர்கள் உத்யோகத்துக்குப் போய் ஸம்பாதிக்கவில்லை. க்ருஹத்திலேயே இருந்து கொண்டு விடிவதற்கு முன்னாலிருந்து ஒன்று மாற்றி ஒன்றாக அநுஷ்டானங்கள் செய்வதற்கே அவர்களுக்குப் பொழுது ஸரியாயிருக்கும். ஸம்பாவனை, மான்யம், குரு தட்சிணை முதலியவற்றிலிருந்தே அவர்களுடைய எளிய வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைத்துவந்தது. புருஷர்கள் இப்படி ஸதாவும் அநுஷ்டானபரர்களாக இருந்ததால் ஸ்த்ரீகளும் ஸதா அவர்கள்கூட இருந்துகொண்டு பல விதங்களில் அந்த அநுஷ்டானாதிகளுக்காக ஸேவை செய்யவே அவர்களுக்கும் பொழுது ஸரியாயிருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்குப் பாண்டித்யம் அடியோடு அவச்யமில்லாமலும், பாண்டித்யத்தால் அவர்களுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லாமலும் இருந்தது.

ஆனால் நம் காலத்தில் புருஷர்கள் நாள் பூராவும் - day- time என்பது பூராவும் - ஆஃபிஸில் வேலை செய்தே ஸம்பாதிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவதற்கில்லை என்ற அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.

ஆக, இப்போது புருஷர்களுக்கு ஆபிஸ், அது போக மிஞ்சியுள்ள நேரத்தில் அரட்டை, பொழுதுபோக்கு என்று ஒரு தினுஸாக ஆகிவிட்டது. இதனால் மத ஸம்பந்தமான நம்முடைய ஏராளப் புஸ்தகங்கள் உள்பட ஆத்மாவையோ, புத்தியையோ, மனஸையோ வளர்த்துக் கொடுக்கிற எதையுமே - நல்ல இலக்கியம் உள்பட எதையுமே - அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.

இதைக் கவனிக்கும்போது இதற்கு நிவாரணம் ஆசார்யாள் சொன்னதற்கு ஒரு தினுஸில் மாறுதலாகப் போனால்தான் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. இப்படி நான் சொல்வதே பொதுவாகப் பார்த்தால் மஹா பாபம்தான், பரம அபசாரமும்தான். அது எனக்குத் தெரியாமலில்லை. அவர் காலம், நம் காலம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை அநுஸரித்து, என்றைக்கும் சாச்வதமான தர்மத்தை மாற்றுவது துளிக்கூட முறையேயில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும் புருஷர்கள் ஆபீஸ் போய்த தானாக வேண்டும் என்று ஆனதில் ஸ்த்ரீகள் நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்பதைக் கவனிக்கிறபோது இன்றைக்கு அவரே இருந்தால் என்ன சொல்லியிருப்பாரென்று என் அடி மனஸிலிருந்து பிரார்த்தித்துப் ப்ரார்த்தித்து, யோஜித்து யோஜித்துப் பார்க்கிறபோது தோன்றுகிறதோ அதையே துணிந்து சொல்கிறேன் இன்றைக்கு Day - time பூராவும் வீட்டிலே இருக்கிற ஸ்த்ரீகளுக்கு யஜ்ஞாதி அநுஷ்டானங்களில் ஸஹாயம் பண்ணுகிற கார்யமில்லை. வீட்டு நிர்வாஹத்தில் அவர்கள் பல கார்யம் செய்ய வேண்டியிருந்தாலும், கார்யம் செய்ததில் களைத்து விச்ராந்தி செய்து கொண்ட பிற்பாடும் அவர்களுக்குப் பொழுது மிச்சம் இருக்கிறது. அது வீணிலோ, வம்பிலோ போகாமலிருக்க வேண்டுமானால்

அதற்கு வழிதான் ஆசார்யாள் அன்றைக்குச் சொன்னதற்கு வித்யாஸமான

ஒன்றாகத் தெரிகிறது. அதாவது, இன்றைக்கு ஸ்த்ரீகள்தான் தங்களுக்கு மிஞ்சும் பொழுதையெல்லாம் நம்முடைய இதிஹாஸ - புராணங்கள், ஸ்தோத்ரப் புஸ்தகங்கள், அது மட்டுமில்லாமல் உசந்த காவ்யங்கள் ஆகியவற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பண்ண முடியும் என்பது.

அவர்களுடைய பொழுது நல்ல விதமாகக் கழிவதற்கு இது வழி என்பது மாத்திரமில்லை. எத்தனையோ யுகத்துக்கு முன்னாலிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து வந்துள்ள நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு உயிரூட்டுகிற புஸ்தகங்கள் நம் காலத்தில் செத்துப் போய் விட்டன என்ற பெரிய பழி, மஹத்தான களங்கம் நமக்கு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இப்படி ஸ்த்ரீகளாவது அவற்றைப் படித்துப் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டு ரட்சித்துக் கொடுப்பதுதான் வழி.

இப்படித் தாங்கள் படித்தறிந்ததன் ஸாராம்சத்தை அவர்கள் புருஷமார்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் நம்முடைய ஸமய கலாசாரத்தில் ஒரு அபிருசியை ஏற்படுத்தவேண்டும். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ள ப்ரியப்படாதவனாக இருந்தாலும், பெண்டாட்டி சொல்கிறாள் என்றால் எவனும் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

நம்முடைய புராதனமான, புனிதமான இலக்கியச் செல்வம் என்பது நம் காலத்தோடு கொள்ளை போகாமலிருக்க வேண்டுமானால் அதற்கு இப்படி ஸ்த்ரீகள் பண்டிதைகளானால்தான் முடியும் என்று ப்ரத்யட்ச வய்வஹாரத்தில் ஏற்பட்டிருப்பதால்தான் துணிந்து சொன்னேன்.

ஆசார்யாள், பாண்டித்யம் என்கிறதை வேதத்தில் பாண்டித்யம் என்றே கருதி, வேதாத்யயன அதிகாரம் ஸ்த்ரீகளுக்கு இல்லாததால்தான் அவர்கள் பாண்டித்யம் பெறுகிறதற்கில்லை என்று சொன்னார். நானும் இப்போது வேதத்தில் கை வைக்கவில்லை. ஸ்த்ரீகளை வேதங்கள் படிக்கும்படியாகச் சொல்லவில்லை. வேதம் தவிர்த்து இதிஹாஸ - புராண - ஸ்தோத்ர - காவ்யாதிகள்தான் படித்துத் தெரிந்து கொள்ளச் சொல்கிறேன்.

இதை பாபமாகவோ அபசாரமாகவோ நினைக்காமல், இதற்கு ஆசார்யாள் ஆசீர்வாதம் பண்ணுவார் என்ற நம்பிக்கையுடனேயே சொல்கிறேன்.

ஆசார்யாள் பெயரிலுள்ள இந்த மடத்து த்வாராவே (மூலமாகவே) இப்படிப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்கு எந்த விதமெல்லாம் உதவி செய்யலாமோ, இன்ஸென்டிவ் கொடுக்கலாமோ அவ்வளவும் அவருடைய ஆசீர்வாதத்துடனேயே செய்ய வேண்டுமென்று எனக்கு இருக்கிறது.

மொத்தத்தில் விஷயம் பெண்கள் உத்யோகத்துக்குப் போகாமல் க்ருஹிணிகளாகவே இருந்து கொண்டு க்ருஹ ஸம்ரக்ஷணம் செய்வதே ச்ருதி - ஸ்ம்ருதிகளின் வழிப்படியான ஸ்த்ரீ தர்மம். அதற்கு அநுகூலமாகவே ஆசார்யாள் அவர்களுக்குப் பாண்டித்யம் வேண்டியதில்லை என்று சொன்னது. இப்போது (நான்) சொல்கிறதும் அவளுடைய க்ருஹிணி தர்மத்துக்கு விரோதமில்லை. அவளை உத்யோகத்துக்குப் போகச் சொல்லவில்லை. உத்யோகத்துக்குப் போகிற புருஷன் கோட்டைவிட்ட கலாசார செல்வத்தை அவளாவது ஸம்ரிஷித்து

தரட்டும், அவள் வழியாகவே அவனுக்கும் அது கொஞ்சம் போகட்டும் என்றே சொல்கிறேன்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பெண்டிரும் பிரம்மவித்தையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பெண்டிருக்கு ஆசார்யாள் தரும் உயர்வு
Next